Advertisement

அத்தியாயம் முப்பத்தி இரண்டு :

உண்மை அறிந்தவர் உன்னை கணிப்பாரோ                                                               மாயையே –மனத்                                                                                                     திண்மையுள் ளாரைநீ செய்வது                                                                        மொன் றுண்டோ மாயையே                                                                                                                                                       ( பாரதி )

சங்கீத வர்ஷினி கல்லூரியில் சேர்ந்து முதல் வருடமே முடியப் போகும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. செய்வதற்கு எந்த வேலையும் இல்லாமல் எந்த பரபரப்பும் இல்லாமல் வாழ்க்கை மெதுவாகச் செல்வது போலத் தான் அவளுக்கு எண்ணம்.

பீ எஸ் சி விஷுவல் கம்யுனிகேஷன்ஸ் சேர்ந்திருந்தாள். பள்ளியில் படிக்கும் சமயம் நிறையத் தோழர் தோழிகள்.. அவர்கள் எல்லோரும் தொழில் முறைப் படிப்பை தேர்ந்து எடுத்து இருக்க.. இவளும் ஒன்றிரண்டு பேரும் இதைச் சொல்லியிருக்க.. இறுதியில் இதில் சேர்ந்தது வர்ஷினி மட்டும் தான்.

ராஜாராம் மட்டுமல்ல வீட்டினர் எல்லோரும் ஏக மனதாக இதைத் தான் விரும்பினர். சிறு வயதில் இருந்தே கொடைக்கானல் ரெசிடென்ஷியல் பள்ளி.. அதுவும் பலர் பல வருடமாக அங்கே இருந்து படிப்பவர்கள். வர்ஷினியும் எல்லோரிடமும் விரைவில் சிநேகிதம் செய்து கொள்ளும் இயல்பினள்.. வீட்டினரிடம் மட்டும் தள்ளி நிற்பாள்.

அதனால் பள்ளி வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தாள்.. இந்த வருடமாக வீட்டினர் அவளை எவ்வளவு நன்றாய் கவனித்தாலும் அதிகம் அவர்களுடன் ஒட்டுதல் இல்லை.

லீவிற்கு மட்டுமே வந்து செல்வாள்.

ஆதலால் இப்போது வீட்டில் இருக்கட்டும் என்று ராஜாராம் பிரியப்பட, மீண்டும் ஹாஸ்டல் போகிறேன் என்று சொன்னவளை விடாமல் வற்புறுத்தி சென்னையில் இருபாலரும் படிக்கும் மிகப் பெரிய பாரம்பர்யம் வாய்ந்த கல்லூரியில் சேர்த்து விட்டனர்.

ஒரு வருடம் முடியப் போகிறது, ராஜாராமின் உடலை நோய்கள் ஆள ஆரம்பித்து, இப்போது அவர் படுக்கையில்… ஆறு மாதம் என்று சொன்ன அவரின் உயிரை வீட்டினர் தங்களின் சிறந்த கவனிப்பால்.. இதுவரையிலும் இழுத்துப் பிடித்து தான் இருந்தனர்.

வீட்டினர், அப்பா, அம்மா, இரண்டு அண்ணன்கள், அண்ணிகள் என்று எல்லோரும் வர்ஷினியிடம் நன்றாகப் பேசினாலும் பழகினாலும், இவளை இழுத்துப் பிடித்தாலும்.. இவளும் எல்லோரிடமும் நன்றாகப் பேசினாலும், நன்றாக இருக்க முற்பட்டாலும்.. இது என்னுடைய வீடு என்ற எண்ணம் வரவில்லை.. எல்லோரிடமும் மிகுந்த மரியாதை வைத்திருந்தாலும் பாசம் இருந்தாலும்.. ஒரு ஒட்டுதல் குறைவு தான்.. சிறு வயதில் இருந்தே அப்படியே வந்து விட்டது.

அத்தனை பேர் சுற்றி இருந்தாலும் தனிமை தான். இதில் என்ன ஒரு விஷயம் என்றால், அந்தத் தனிமை அவளுக்கும் புரிந்தது போக்கும் வழி தான் தெரியவில்லை.

அந்த தனிமையைப் போக்க புதுப் புது நண்பர்கள்.. தோழிகளும் இருந்தனர், தோழர்களும் இருந்தனர். அதுவும் வர்ஷினியிடம் இருக்கும் பணம் அவளின் வயதிற்கு மிக மிக அதிகம்… அவளிடம் கணக்கு கேட்பவர் கிடையாது.. நண்பர்களுக்கு உதவிகளும் செலவுகளும் அள்ளி வழங்க, அதற்காகவும் கூட அவளைச் சுற்றிப் பெரிய கூட்டம்.

தொழில் இரண்டு பங்காகப் போடப்பட்டு வர்ஷினிக்கு ஒரு பங்கும், முரளிக்கும் பத்மநாபனுக்கும் சரிசமமாக மற்றொரு பங்கும் பிரிக்கப்பட்டு இருக்க.. அதே மாதிரி தொழில் மூலம் வந்த சொத்துக்கள் பிரிக்கப்பட்டன.

மற்ற இதர சொத்துக்கள் எல்லாம் முரளிக்கும் பத்மநாபனுக்கும் தான்.. வர்ஷினி எனக்கு இது போதும் என்று விட்டாள். வேறு எதையும் வாங்கிக் கொள்ள ஒப்பவில்லை. இதில்லாமல் கமலாம்மாவிற்கும் சில சொத்துக்கள், தாத்தாவிற்கும் இருக்கும் சொத்துக்கள் எல்லாம் ஆண் மக்களுக்குத் தான்.

இது எல்லாம் சேர்த்தாலும் வர்ஷினிக்கும் இருக்கும் சொத்துகளை விட அவர்களது தனித்தனியாக பார்த்தால் குறைவு தான்.

ஆனாலும் முரளிக்கோ பத்மனாபனுக்கோ வருத்தமில்லை. எல்லாம் வர்ஷினி பிறந்த பிறகு அவளின் பேரில் ஆரம்பித்த தொழிலினால் தான்.. அதன் பிறகு கிடைத்த ஹைவேஸ் டோல் கேட் டெண்டரினால் தான்.. அதன் பிறகு உதித்த மற்ற தொழில்களினால் தான் என்று அவர்களின் மனதில் ஆழப் பதிய வைத்து இருந்தார் ராஜாராம்.

அவர்களின் ஆழ் மனதிலும் அவர்கள் பிறந்து வளர்ந்த வடசென்னையின் புழுதி நிறைந்த கசகசவென்ற ஜனத்திரள் கொண்ட அவர்களின் வீடு இருந்த பகுதி அழியாச் சித்திரமாய் இருந்தது. அங்கேயே இருந்திருந்தால் அது வேறு, இப்போது அந்த வாழ்க்கையை அவர்களால் நினைக்க முடியாது.

ஆதலால் வர்ஷினிக்கு அவ்வளவு சொத்துக்கள் போனதில் எந்த வருத்தமும் இல்லை.. முரளிக்கு மனதின் ஓரத்தில் இருந்த சிறு மனக்கசப்பும் மறைந்து இருந்தது.

ஆம்! கமலம்மா பேரில் இருந்ததை ராஜாராம் ஆண்மக்களுக்கு மாற்றி இருந்தார். ஈஸ்வர் அவரிடம் பேசிய பிறகு யோசித்து இருந்தார். ஆண் மக்கள் மேல் எந்த குறையுமில்லாத பொழுது இந்தச் சொத்துக்களைக் கொண்டு அவர்களின் குணங்கள் மாறுவதை அவர் விரும்பவில்லை.

அதே சமயம் வர்ஷினியினது எதையும் குறைக்க வில்லை. எல்லாம் செம்மையாகச் செய்து விட்டார். ஆனாலும் இன்னும் உலக வாழ்க்கையில் இருந்த ஏதோ ஒரு பற்று அத்தனை தொந்தரவுகள் இருந்த போதும் டாக்டர்கள் இன்னும் ஒன்றும் செய்ய முடியாது என்று விட்ட போதும், உயிரை வைத்து இருந்தார்.

உணர்வுகள் பேச்சுக்களும் மட்டுமே இருந்தது. குழந்தையைப் போல அவரின் அப்பாவும் கமலம்மாவும் முரளியும் பத்மநாபனும் பார்த்துக் கொண்டனர்.

வர்ஷினியும் தினமும் அவருடன் நேரம் கழிப்பாள். ஆனால் பணிவிடைகள் செய்யும் அளவிற்கு எந்தத் தேவையும் இல்லை.. அதற்கான அவசியமும் இருந்ததில்லை.

இப்படியாக வீட்டில் குடும்பத்தினருடன் இருந்தாலும், ஒரு தனித் தீவாக இருந்தாள்.. அந்தத் தனிமையை போக்க நிறைய நண்பர்கள்.. நண்பர்களோடு நிறைய சுற்றுதல், பார்டீஸ் போகுதல், ஆட்டம், பாட்டம் என்று இருந்தாலும் வாழ்க்கை அவளுக்கு மிகவும் மெதுவாகத் தான் சென்றது.

“பாப்பா போகலாமா?” என்றபடி தாசண்ணா போனில் அழைத்திருக்க..

“இன்னும் பத்து நிமிஷம் தாசண்ணா” என்றாள். இந்தப் பத்து நிமிஷம் நான்கு முறை சொல்லியாகிவிட்டது. கல்லூரி முடிந்து இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது.

தோழர்களுடன் அரட்டை என்று ஈடுபட்டு இருந்தாள். தாசிற்கு பொறுமை பறந்து கொண்டிருந்தது.. அவனால் வர்ஷினியை சமாளிக்க முடியவில்லை. எந்த நேரம் யாரோடு பேசுகிறாள், பழகுகிறாள், தெரிவதேயில்லை. சமீபகாலமாக மனதினில் ஒரு பயம். யாரிடம் சொல்வது என்றும் தெரியவில்லை. ஐயா உடல்நிலை சரியில்லாத நிலையில் படுத்த படுக்கையாய் இருக்க.. வேறு யாரிடமும் சொல்ல முடியவில்லை.

அப்பாவிடம் குறை சொன்னாலே சண்டை பிடிப்பவள், வேறு யாரிடமாவது சொல்லி “நீ என்னோடு வேண்டாம்!” என்று  சொல்லிவிட்டால் இன்னும் கஷ்டமாகிவிடும். அதன் பொருட்டே அமைதி காத்தான்.

தாஸின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வர்ஷினி இல்லவே இல்லை.. அவளிஷ்டம் தான் எல்லாமே.. “இது சரியில்லை பாப்பா” என்று அவளிடம் சொன்னால், அவள் பார்க்கும் ஒற்றைப் பார்வையில் தாசின் வாய்த் தானாக பூட்டுப் போட்டுக் கொள்கிறது. அவனும் தான் என்ன செய்வான்? அவன் வேலையாள், வர்ஷினியைப் பார்த்துக் கொள்ளும் வேலை மட்டுமே இப்பொழுது.

எனக்கு இந்த வேலை வேண்டாம், என்னால் இவர்களைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்று எங்காவது ஓடிவிட வேண்டும் போலத் தோன்றியது. எஜமான விசுவாசம் தடுத்தது.

தாசின் யோசனைகள் ஓடும் பொழுதே வர்ஷினி வந்து விட்டாள். கேட்டால் திட்டுவாள் என்று தெரியும் ஆனாலும் கேட்டான் “யார் பாப்பா அவங்க? புதுசா இருக்காங்க! நான் பார்த்தது இல்லையே! உங்க கிளாஸ் ஸா?” என்றான்.

“இல்லை, தாசண்ணா! எங்க காலேஜ்!”

“யார் என்னன்னு தெரியாம, இப்படிப் புது ஆளுங்க கூட இவ்வளவு நேரம் பேசாதீங்க பாப்பா!

“எனக்குத் தெரியாதா தாசண்ணா! நான் சின்னக் குழந்தை இல்லை! எனக்குத் தெரியும்.. நீங்க காரை எடுங்க..” என்று காரில் ஏறி அவள் காரின் கதவை சாத்திய விதமே.. ஹப்பா என்றானது தாஸிற்கு!

தாஸின் பயமே அதுதான்! தெரியாத பெண் என்றாலும் பரவாயில்லை! யார் எப்படி என்று தெரிந்தும் ஏன் பழகுகிறாள் என்பது தான்!

“உலகம் நிறை குறை நிறைஞ்ச மனுஷங்க வாழுற இடம் தாஸண்ணா, எல்லோரும் நமக்கு பிடிச்ச மாதிரி இருப்பாங்க இல்லை நல்லவங்களா மட்டும் இருப்பாங்கன்னு சொல்ல முடியாது! அவங்கவங்களை அவங்கவங்களா பார்க்கணும்! உங்களுக்கு பிடிச்சதை அவங்க கிட்டத் தேடக் கூடாது. உங்களுக்குப் பிடிச்ச மாதிரி அவங்க ஏன் இருக்கணும்” என்பாள்.

“பாப்பா! என்னை விட்டுடுங்க!” என்று தாஸ் தான் கதறும் படி ஆகிவிடும். கலர் கலர் தலை, காதில் ஒரு கடுக்கன்.. அவன்களும் அவனின் உடைகளும்.. தாஸ் அங்கே இருப்பது எல்லோருக்கும் தெரியும்.. யாரும் அவளை எதுவும் செய்து விட முடியாது.. ஆனாலும் இந்த சிநேகிதங்கள் தேவையற்றது என்பது தாஸின் எண்ணம்.

மேல் தட்டு நட்புக்கள் இருக்கின்றன.. நடுத்தர நட்புக்கள் இருக்கின்றன.. இந்த அடித்தட்டு நட்புக்கள் வேறு.. அடித்தட்டு நட்புக்களுக்கு காசு செலவு செய்யக் கணக்கே பார்க்க மாட்டாள். என்ன உதவி என்றாலும் செய்வாள்.

கார் சிறிது தூரம் செல்ல ஆரம்பித்ததுமே “தாஸண்ணா!” என்றாள்.

“சொல்லுங்க பாப்பா!”

“என்னோடவே இருக்கீங்க.. என் கிளாஸ் ரூம் உள்ள வர்றதில்லை அவ்வளவு தான்.. யார் என்னை என்ன செய்துட முடியும்.. இனிமே இப்படிப் பேசாதீங்க!” என்றாள் கறாராக.

“யார் என்னை என்ன செய்திட முடியும்?” என்ற கேள்வியை தாஸிடம் முன் வைத்த போது அவளையும் மீறி ஈஸ்வரின் ஞாபகங்கள்.. மொத்த குடும்பமும் அருகில் இருக்கும் போதே அவனிஷ்டபடி நடந்தான் என்று சிந்தனைகள் ஓட..

தாஸிற்கும் ஈஸ்வரைப் பற்றிய சிந்தனைகள் தாம்.. வருடமாயிற்று தாஸ் ஈஸ்வரைப் பார்த்து.. என்ன செய்கிறான் என்று யாருக்கும் தெரியாது. இங்கே சென்னையில் இல்லை. தாஸை ஒரு முறை தன்னிடத்திற்கு அழைத்தவன் சொன்ன வார்த்தைகள் இவை…

“தாஸ்! வர்ஷினியைப் பத்திரமா பார்த்துக்கோ. அவ என்ன செய்யறான்னு யாராலையும் கணிக்க முடியும்னு எனக்குத் தோணலை.. அவங்கப்பா ஒரு வேளை கணிக்கலாம். ஆனா அவர் இப்போ உடம்பு சரியில்லாதவர்.. முரளிக்கோ, பத்துக்கோ அவ்வளவு புத்திசாலித்தனம் பத்தாது” என்று முரளியை வைத்துக் கொண்டே சொன்னான்.

“நெருப்புன்னு தெரியாம கை சுட்டுக்கிற குழந்தைக் கிடையாது.. நெருப்புன்னு தெரிஞ்சே சுட்டுக்குவா? என்ன ஆகுதுன்னு பார்ப்போம்னு அலட்சியம்.. பத்திரமா பார்த்துக்கோ!”

அதுவரைக்கும் தாஸிற்கு எதுவும் தோன்றியதில்லை.. அன்றிலிருந்து ஒரு பயம் ஏன் ஈஸ்வர் அப்படிச் சொல்ல வேண்டும் என்று.. முரளிக்கோ பத்துவிற்கோ அவனின் அய்யாவின் புத்திசாலித்தனம் கிடையாது என்பது அவனின் எண்ணம் கூட.. ஈஸ்வர் மேல் எப்போதும் ஒரு பிரமிப்பு தாஸிற்கு உண்டு. அவன் அப்படிச் சொல்லிவிடவும் ,அன்றிலிருந்து இன்னும் அலர்ட் தான்.

“என்ன யோசிச்சிட்டு ஓட்டறீங்க தாசண்ணா?” என்ற வர்ஷினியின் குரல் நடப்பிற்கு கொண்டு வந்தது.

“என்னங்க பாப்பா?” என,

“சும்மா பிரேக் போடறீங்க, மூவ் பண்றீங்க, எரிச்சலா வருது! என்ன டிரைவிங் இது! ஓரமா நிறுத்துங்க, நான் ஓட்டறேன்!” என்றவளின் குரலை மீற முடியாமல் இறங்கினான். எப்போதும் டிரைவிங்கை ரசிக்கும் வர்ஷினியினால் இதை சகிக்க முடியவில்லை.

சில சமயம் இப்படி ஆவது தான். சொல்லப் போனால் வர்ஷினி கார் ஓட்டுவது தான் தாஸிற்கு நல்லது! ஏனென்றால் சாலையை மட்டும் பார்த்து ஓட்டுவாள். இல்லை என்றால் அக்கம் பக்கம் வேடிக்கை பார்த்து வரும் பொழுது ஏதாவது நடந்தால் “தாஸண்ணா நிறுத்துங்க! என்னன்னு பாருங்க!” என்று அவனை ஒரு வழியாக்கி விடுவாள்.

அதனால் வர்ஷினி ஓட்டட்டும் என்று விட்டுவிடுவான். இப்போதும் விட்டுவிட , வர்ஷினி லாவகமாக சாலையில் கவனத்தை வைத்து அனுபவித்து ஓட்டினாள், ஆனாலும் அதிலும் வேகம்..

“பாப்பா இவ்வளவு வேகமா ஓட்டாதீங்க!” என்று தாஸ் சொல்லச் சொல்ல வீடு வந்து விட்டது.

“என்ன பாப்பா நீங்க?” என்று சொல்லிக் கொண்டே வேகமாக இறங்க.. அப்போது பத்து, அவனின் காரை எடுத்துக் காத்திருந்தான் ரஞ்சனிக்காக.

ஆம்! என்ன வேலை இருந்தாலும் ரஞ்சனியின் பிக்கப் ட்ராப் பத்துவின் வேலை..

பத்துவை பார்த்ததும், “ஹாய் அண்ணா, இன்னும் அண்ணி வரலையா?” என்று கேட்டபடி அருகில் வந்தாள்.

ஆம்! இப்போது ரஞ்சனி எம் டி தோல் மருத்துவம் படிக்கின்றாள். மாலை வேளைகளில் ஒரு ஹாஸ்பிடல் போகின்றாள். மொத்தத்தில் அவளை மிகவும் பிசியாக வைத்துக் கொள்கின்றாள். வீட்டில் இருக்கும் நேரம் குறைவு.. இரவு நேரங்களில் மட்டும் தான் வீட்டில் இருப்பது போல பார்த்துக் கொள்வாள். விடுமுறை நாட்களில் அம்மா வீட்டிற்கு சென்று விடுவாள்.

ஈஸ்வர் இல்லாத இடத்தை நிரப்ப முயன்று கொண்டிருந்தாள்.  எல்லாம் எனது என்ற மகன் எதுவும் வேண்டாம் என்ற பிறகு அப்பா அம்மா மிகவும் மனம் விட்டு இருந்தனர்.

அதனால் பத்து தான் எப்போதும் அவளைக் கல்லூரியில் விடுவது, அழைத்து வருவது, பின்னர் மாலை விடுவது, அழைத்து வருவது. அந்த தருணங்களை மிகவும் விரும்புவான்.

“அண்ணியைக் கொண்டு போய் விடத் தான் வர்றீங்க, அப்புறம் எதுக்கு அவங்களுக்கு முன்னாடி வந்து கார்ல உட்கார்ந்துக்கறீங்க, போங்கண்ணா போங்க!” என்றபடி பத்து பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பாராமல் சென்று விட்டாள்.

தாஸ் தான் பரிதாபமாக நின்று கொண்டிருந்தான்.

“ஏன் இவ்வளவு நேரம் தாஸ்?”

“அதுங்க சார், பிரண்ட்ஸ் கூட பேசிக்கிட்டு லேட் பண்றாங்க.. நீங்க கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றான்.

“சரி நான் பேசறேன்” என்று பத்துவும் சொன்னான்.

“நாள் முழுசும் பாப்பாவோட இருக்குறேன், ஐயாவோட இருந்தேன், எப்பவும் அந்த வேலை இந்த வேலைன்னு பரபரப்பா சுத்துவேன், இப்போ ஒன்னுமே செய்யாம சும்மா இருக்குற மாதிரி இருக்கு..பாப்பாவை பார்த்துக்கறேன் கூட எதாவுது வேற வேலையும் குடுங்களேன்” என்றான்.

“உங்க அய்யாவோட விலை மதிப்பில்லாத பொருள் வர்ஷினி! அதுதான் உன்கிட்டே விட்டிருக்கார், எனக்கு புரியுது, இப்போ அவர் கிட்ட யாரும் பேச முடியாது இல்லையா.. உன்னாலயே சமாளிக்க முடியலை.. நீ கூட இருக்கேன்ற தைரியத்துல தான் நாங்க அவங்க அவங்க வேலையை பயமில்லாம பார்க்குறோம்”

“இருந்தாலும் ரொம்ப சிநேகிதம் சார்.. நான் சொன்னாலும் கேட்கறது இல்லை!”

“திரும்பவும் நான் பேசறேன்” என்று பத்து சொல்லும் போதே ரஞ்சனி வந்து விட்டாள்.

அழகான ரஞ்சனி இன்னும் இன்னும் பத்துவின் கண்களுக்கு அழகாகத் தெரிந்தாள். இதற்கு அங்கிருந்து அவள் செல்லும் ஹாஸ்பிடல் ஒரு பத்து நிமிட பயணம் அதற்காக இவன் அதிகமான தூரத்தைக் கடந்து வருவான்.

“இன்னைக்கு எங்க காலேஜ்ல..” என்று ஆரம்பித்து ரஞ்சனி பேசிக் கொண்டே வர, பத்துவிற்கு சலிப்பாகத் தான் இருந்தது. ஆனால் ரஞ்சனியும் வேறு என்ன பேசுவாள், படிப்பு, ஹாஸ்பிடல் என்று தான் அவளின் உலகத்தைக் கொண்டு செல்கிறாள், இதில் அவன் தனக்காகத் தான் வருகிறான் என்று கூடப் புரியாதவளா என்ன? அதற்காக தான் உற்சாகமாக காட்டிக் கொள்கிறாள், பேசவும் செய்கின்றாள். ஆனால் இதைத் தவிர இப்போது அவளுக்கு வேறு வருவது இல்லையே, அவளும் தான் என்ன செய்வாள்.

பத்துவிற்கும் பேச்சை வளர்க்கத் தெரியாது. ஒரு வருட திருமண வாழ்க்கை இருவருக்கும் என்ன கொடுத்திருக்கிறது என்று சொன்னால் இருவருக்குமே சொல்லத் தெரியாது.

மிகுந்த மன அழுத்ததில் இருந்தாள்.. யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்வதில்லை.. அதைக் கண்டு கொள்ளும் அளவிற்கு இன்னும் பத்துவிற்கு தெரியவில்லை.

ஏனென்றால் திருமணம் ஆனா நாள் முதலாக ரஞ்சனியை இப்படி தானே பார்க்கின்றான்.

பத்து மௌனமாகக் கார் ஓட்ட.. ரஞ்சனியும் விடாமல் வளவளத்தாள்.

                        நீ ! நான் ! நாம் ?

 

 

 

 

Advertisement