Advertisement

அத்தியாயம் முப்பது :

சில கணக்குகளுக்கு விடை வரவே வராது, அதன் சூத்திரம் அறியும் வரை!!!  வாழ்க்கையும் சில சமயங்களில் அப்படித்தான்!!!

வர்ஷினியும் அப்படித்தான் ஈஸ்வரை ஆதியும் அந்தமுமாக ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

கமலம்மா தான் முதலில் எழுந்தவர்.. வர்ஷினியைப் பார்த்தும் “என்னடாம்மா? என்ன இங்க இருக்க?” என்று பதட்டமாகக் கேட்க,

“ஒன்னுமில்லைம்மா! சும்மா இங்க இருக்கணும் தோணினது!”

“இரு வர்ஷினி,  இரு, மத்தபடி ஒன்னும் பிரச்சனையில்லையே! முகமெல்லாம் சோர்ந்து இருக்கு!”

“அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா!” என்று அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே.. ராஜாராம் விழிக்க..

“என்ன பாப்பா, இங்க இருக்கீங்க?” என்றார் அவருமே,

ஏனென்றால் எப்பொழுதும் அவர்கள் இருவரும் இருக்கச் சொன்னால் கூட இருக்க மாட்டாள், “நான் போறேன் பா” என்று  விடுவாள்..

“ஐயோ! என்னப்பா மாத்தி மாத்தி இதையேக் கேட்கறீங்க? தனியா இருக்க ஒரு மாதிரி இருந்தது, அதான் இங்க வந்தேன், போகட்டுமா!” என,

“வேண்டாம்! வேண்டாம்!  நீ இரு,” என்றவர், “கமலா, பாப்பா முகமே வாடி இருக்கு, போ! போய் குடிக்க எதாவது கொண்டு வா” என அவர் செல்லவும்,

“என்ன பாப்பா, ஏதாவது பிரச்சனையா?” என்றார் தணிவாக,

“இல்லைப்பா?” என்றாள்.

“நிச்சயமா, இல்லை தானே!”

“இல்லை! இல்லை! இல்லவே இல்லை!” என ஸ்திரமாக சொல்ல.. அப்போது தான் சற்று சமன் பட்டார்.

“நானே உங்க எல்லார் கிட்டயும் பேசணும்னு இருந்தேன், சொத்துக்களை பத்தி”

“நான் வரும் போது நீங்களும் ஈஸ்வரும் என்ன பேசிட்டு இருந்தீங்க!”

“அதுவா நம்ம பணம் கொடுத்தோம் இல்லையா? அதுக்கு பதிலா ஈஸ்வர் ஃபைனான்ஸ் பங்கை ரஞ்சனிக்கு எழுதிக் கொடுக்கறோம்னு சொன்னான், நான் வேண்டாம் சொன்னேன்!”

“ஏன் வேண்டாம் சொன்னீங்க?”

“அவங்க திரும்பக் கொடுக்கணும்னே நான் எதிர் பார்க்கலை.. உதவி தான் செஞ்சோம், முரளி ஃபிரண்ட்ன்னு. இப்போ உங்க அண்ணியோட அப்பா வீடும், பணம் மெதுவா குடுக்கட்டும்!”

“அப்போ பணம் வேண்டாம் சொல்றீங்களா?”

“குடுத்துடுவாங்க எப்படியும்! எனக்குத் தெரியும்! அதெல்லாம் ஒரு வாய் வார்த்தைக்குச் சொல்றது.. எவ்வளவு பேரோட தொழில் பண்ணியிருக்கேன். எனக்குத் தெரியாதா, ஈஸ்வர்காக மட்டும் தான் கொடுத்தேன்! அவன் குடுத்துடுவான்!”

“சரி! ஆனா இப்போ பங்கு குடுத்தா, ஏன் வேண்டாம் சொல்றீங்க?”

“ஏற்கனவே இஷ்டமில்லாம இந்தக் கல்யாணம் நடந்து இருக்கு! இப்போ எல்லாம் சரியா இருக்குன்னாலும் இப்போ சொத்தையும் வாங்கினா அது நல்லா இல்லை இல்லையா? அதுவும் ஜகன்கும் ரஞ்சனிகும் சரிசமமா பங்கு.. இது முதல்லயே ஈஸ்வர் சொன்னது தான்!”

“நடுவுல தான் நீ மாத்தி மாத்தி பேசினியா? கொடுக்கவா? வேண்டாமா? யோசனை! அப்புறம் நீ ஒன்னும் இல்லை சொன்ன.. சரின்னு தான் கொடுத்தேன்”

“கொடுத்த முடிச்ச பிறகு எப்படியும் மறுபடியும் இதைப்பத்தி பேசுவாங்க தெரியும்.. யோசிச்சேன், ஈஸ்வர் மட்டும் ஏன் கடனுக்காக சொத்தை இழக்கணும்.. எனக்கும் அதே எண்ணம் தான்.. அதுவுமில்லாம முரளி ஒத்துக்கவே கூடாதுன்னு என்கிட்டே சொல்லியிருக்கான்” என்றார்.

“என்னமா ஈஸ்வர்க்கு பார்த்து பார்த்து பண்றாங்கடா” என்ற தோன்ற ஒரு கசந்த முறுவல் வர்ஷினியின் முகத்தில்.

அதைப் பார்த்ததும் “என்ன பாப்பா?” என்று மீண்டும் அப்பாக் கேட்க..

“பணம் குடுக்கறதே பெரிய விஷயம்! இதுல ஈஸ்வர்காக எவ்வளவு கன்சிடர் பண்றீங்க”

“அப்போ வேண்டாம் சொல்றியா?”

“இல்லைப்பா! நான் அப்படி சொல்லலை! எல்லோரும் அவருக்கு எவ்வளவு பார்க்கறீங்க சொன்னேன்.. ஆனா ஏன் வேண்டாம் சொல்றீங்க.. அது நீங்க சொல்லக்  கூடாது” என்றாள் பளிச்சென்று.

“என்ன பேசுகிறாள்?” என்று ராஜாராம் பார்க்க,

“அப்பா! அவங்க, அவங்க பொண்ணுக்குக் குடுக்கறாங்க. உங்களுக்கு இல்லை! அதை நீங்க ஏன் வேண்டாம்னு சொல்லணும்! சொல்லக் கூடாது.. வேணும்னா அதை ரஞ்சனி அண்ணி சொல்லட்டும்! என்னவோ பண்ணட்டும்? நீங்க சொல்லாதீங்க. ரஞ்சனி அண்ணிக்கு வர்ற சொத்தை நீங்க ஏன் வேண்டாம் சொல்றீங்க!” என்றாள்.

இதில் இப்படி ஒரு கோணமா என்று யோசைனையாகப் பார்த்தவர்.. “ஆனா ரஞ்சனியும் அப்படி தானேம்மா சொன்னா!”

“சொல்லியிருக்கலாம் பா! அது அவங்களே சொல்லிக்கட்டும்! நீங்க சொல்லாதீங்க! நாளைக்கு என்ன நடக்கும் யாருக்கும் தெரியாது! உங்களுக்குக் கொடுத்தா நீங்க வேண்டாம் சொல்லலாம். அவங்களுக்குக் குடுக்கும் போது நீங்க சொல்லக் கூடாது!” என்றால் கட்டளை போலவே..

“நாளைக்கு இவரால நமக்கு சொத்து வரலைன்னு அண்ணி நினைச்சிடக் கூடாது இல்லையா.. ப்ளீஸ், தப்பா எடுக்காதீங்க! நமக்கு நம்ம எல்லைகள் தெரியணும்பா.. எனக்குச் சொல்லுங்க, முரளிண்ணாக்கு பத்துண்ணாக்கு சொல்லுங்க.. நாங்களே கேட்ப்போமா இல்லையா சொல்ல முடியாது!” என்ற போது கமலம்மா வந்து விட…

பேச்சை நிறுத்தி விட்டாள்.

அப்போது சரியாக முரளி அப்பாவைப் பார்க்க வந்தவன்..

அங்கே வர்ஷினி இருப்பதைப் பார்த்து.. “வர்ஷி இங்க என்ன பண்ற?” என்று கேட்க..

“ஷாலினி அண்ணி, பத்து அண்ணா, ரஞ்சனி அண்ணி, தாத்தா, எல்லோரையும் கூப்பிட்டு விடுங்க” என்று வர்ஷினி சீரியசாகச் சொல்ல,

“எதுக்கு?” என்றான் முரளி.

“பின்ன, எல்லோரும் இந்தக் கேள்வியையே கேட்கறீங்க! எல்லோருக்கும் ஒரே பதிலா சொல்லிடறேன்!” என்றால் சலிப்பாக.

“ஏன் வர்ஷி, அப்செட்டா பேசற?” என்று கேட்க,

“இதுவும் எல்லோரும் கேட்கறீங்க?” என்று சிணுங்கினாள்.

“அப்படி தெரிஞ்சா, அப்படித் தான் கேட்போம்!” என்று முரளி சொல்லும் போதே பத்து வந்தவன்..

“வர்ஷி இங்க என்ன பண்ற?” என்று கேட்க,

தலையில் கைவைத்தவள் வேகமாக எழ.. வெளியே போகப் போகிறாள் என்று உணர்ந்து முரளி கையை பிடித்து “உட்காரு!” என்று அமர்த்தினான்.

“உட்காரு பாப்பா!” என்று அப்பாவும் சொல்ல,

“எதுக்கு கோபம் வர்ஷ் குட்டிக்கு!”  என்று பத்து அருகில் அமர்ந்தான்.

“அதுவா என் தங்கை பெரிய பொண்ணு ஆகிட்டா! அவளுக்கு கல்யாணம் பேசலாமா?” என்று முரளி சொல்ல,

எல்லோரும் அவனையேப் பார்த்தனர். அதுவும் வர்ஷினி முகத்தில் அவ்வளவு அதிர்ச்சி.. ராஜாராம் நான் நினைப்பது இவனுக்கு எப்படி தெரியும் என்று யோசனையோடு பார்க்க,

“டேய்! சின்னப் பொண்ணு டா அவ! என்ன பேசற?” என்றான் பத்து.

முரளி பேசவுமே அது ஈஸ்வர் என்று வர்ஷினிக்குத் தோன்றியது, இதைத் தன்னிடம் கேட்கத் தான் நேரில் பார்க்கக் கேட்டிருப்பான் என்று க்ஷணத்தில் யூகித்தாள்.

“ஒருத்தங்க பொண்ணுக் கேட்டாங்க!” என்று முரளி ஆரம்பிக்கும் பொழுதே,

“யார் கேட்டாலும் வேண்டாம் அண்ணா! எனக்குக் கல்யாணம் செஞ்சுக்கற அளவுக்கு பக்குவமும் இல்லை, விருப்பமும் இல்லை!”

“இரு வர்ஷி, யார் கேட்டாங்கன்னு..” என்று முரளி சொல்லும் பொழுதே,

“யார் கேட்டிருப்பாங்கன்னு எனக்குத் தெரியும்! அது வேண்டாம்!”

“உனக்குத் தெரியாது” என்று அவன் மீண்டும் பேச,

“எனக்குத் தெரியும்! வேண்டாம்!” என்று சொல்லி எழுந்து போய் விட்டாள்.

முரளி திரும்பத் திரும்ப பேசவுமே, “ஈஸ்வர்” என்று ராஜாராம் அனுமானித்தார்.. பத்துவும் கமலம்மாவும் புரியாமல் விழித்தனர்.

“யார்?” என்று பத்து ஆரம்பிக்கும் பொழுதே திரும்பவும் புயல் போல உள்ளே வந்தவள்.. “அப்பா, நீங்க சம்மதிக்கக் கூடாது! அப்படி சம்மதிச்சாலும் நான் செஞ்சுக்க மாட்டேன்!” என்று சொல்லிப் போய் விட்டாள்.

“யாருடா? என்ன நடக்குது? யார் கல்யாணத்துக்குக் கேட்டா?” என்று பத்து கேட்க,

முரளி பதில் சொல்லும் முன்னேயே “ஈஸ்வர்” என்று ராஜாராம் சொல்லவும்,

“என்ன ஈஸ்வரா?” என்று அதிர்ந்து எழுந்தே நின்று விட்டான் பத்து.

அப்பாவிற்கு தெரிகிறதா என்று குழம்பிய முரளி.. “அப்பா!” என்று ஆரம்பிக்க,

“பாப்பா தான் வேண்டாம் சொல்லறாளே! விட்டுடுவோம்! எனக்கு என்னவோ அவ பேசிட்டு போறதை பார்த்தா சம்மதிக்க வைக்க முடியும்னு தோணலை!” என்றார் ராஜாராம்.

ஈஸ்வர் கேட்டானா? என்ற ஆச்சர்யத்தில் இருந்த கமலம்மா, “ஏன் வேண்டாம்? ஈஸ்வர் மாதிரி மாப்பிள்ளை எங்க தேடினாலும் நம்ம பாப்பாக்குக் கிடைக்காது! அவ சின்னப் பொண்ணு புரியாம பேசறா!”

“அப்படிச் சொல்லுங்கம்மா! ஈஸ்வர்ரை என்னை விட நல்லா யாருக்குத் தெரியும்! அவனைக் கல்யாணம் பண்ணப் போற பொண்ணு குடுத்து வைச்சவ, ஏன் அது நம்ம வர்ஷினியா இருக்கக் கூடாது?” என்று முரளி சொல்ல..

“முரளி நீ நிஜமாத் தான் சொல்றியா! ஈஸ்வர் எல்லாம் ஆணவம் பிடிச்சவன்.. குலப் பெருமையை பிடிச்சிட்டு தொங்கறவன்! அவன் வர்ஷினியை எப்படிக் கேட்பான்.. என்னால நம்ப முடியலை!” என பத்து சொல்லவும்,

“பிடிச்சிருக்கு சொல்றான்!” என்று முரளி சொல்ல,

“பிடிச்சே இருந்தாலும் நம்ம வர்ஷினியைப் பிடிச்சிருக்குன்னு சொல்றதைக் கூட விரும்ப மாட்டான்! கர்வி அவன்!” என,

“டேய்! உனக்கு ஈஸ்வர் மச்சான்டா”

“யார் இல்லைன்னு சொன்னா! ஆனாலும் என்னால நம்ப முடியலை!”

“நீ இப்படி பேசுவன்னு தெரிஞ்சோ என்னவோ ரஞ்சனி கிட்டக் கூட சொல்லாம என்கிட்டே சொல்லியிருக்கான் போல.. உனக்கு சம்மதமா இல்லையா…?”

பத்துவிற்கு பெரும் குழப்பம்.. கண்டிப்பாக ஈஸ்வர் பெஸ்ட் சாய்ஸ் தான். ஆனால் என்னவோ அவனால் நம்ப முடியவில்லை.

“எப்படிடா உன் தம்பியாயிருந்தும் என் கிட்ட பழகறதுக்கே அவன் எவ்வளவு யோசிச்சான்.. சில சமயம் பேசுவான், சில சமயம் அப்படியே போய்டுவான்.. பேசறதுக்கே யோசிக்கறவன் எப்படி, அதுவும் வர்ஷினியைக் கல்யாணம் பண்ணக் கேட்பான்?”

முரளிக்கும் பத்துவிற்கும் வாக்குவாதம்!!!

ராஜாராம் தடுக்கவில்லை! ஒருவன் நிறைகளைச் சொல்ல, ஒருவன் குறைகளைச் சொல்ல, அவர் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்.

அவரின் வீடே ஒரு பதட்டத்தில் ஆழ்ந்தது.. தாத்தாவும் கமலாம்மாவும் கொடுக்கலாம் என்று சொல்ல.. வர்ஷினி அவளின் ரூமின் உள்ளே சென்றவள் தான் வரவேயில்லை.

எல்லோரையும் விட ரஞ்சனிக்கு விஷயம் தெரிந்ததும் “என்ன?” என்று அமர்ந்தவள் தான் அப்படியே அமர்ந்து விட்டாள். என்ன விஷ்வாவா?  இருக்கவே இருக்காது! அவன் வர்ஷினியை நிச்சயமாகக் கேட்டிருக்க மாட்டான்!” என்று அவள் சொன்ன பாவனையில்,

“ஐயோ! வீட்டினர் பார்த்தால் என்ன ஆவது? இவளுக்கு ஈஸ்வர் வர்ஷினியைத் திருமணம் செய்வதில் விருப்பமில்லையா?” என்று பத்து அவளை அவசரமாக ரூமின் உள் கை பிடித்து இழுத்துச் செல்ல..

அது கூட ரஞ்சனிக்குத் தெரியவில்லை.. அவள் உச்ச பட்ச அதிர்ச்சியில் இருந்தாள். அவளின் முன் தெரிந்தது எல்லாம் ஐஸ்வர்யாவின் முகம் தான்.

ஈஸ்வர் இருந்தது அவன் எப்பொழுதும் குடிக்கும் ஸ்டார் ஹோட்டலின் பார் தான்.. மாலை ஆகும் முன் வந்தவன் இரவு வரை இருக்க.. எங்கே இவன் எழுந்து போவதாக காணோம் என்று அங்கே ரெகுலராக இருக்கும் பையன் யோசித்தாலும் ஈஸ்வரின் முகம் பார்த்து அவன் அருகில் செல்ல முயலவேயில்லை. அவ்வளவு சீரியசாக இருந்தது.

அவனுக்கு முரளியையும் தெரியும்.. ரெகுலர் என்பதால் பழக்கமே.. அவனின் மொபைலில் இருந்து ஃபோன் அடித்தான்.

“முரளி சார், உங்க ஃபிரண்டு சாயந்தரம் நாலு  மணில இருந்து இங்க தான் இருக்கார்!” என்று அவன் சொன்ன போது மணி ஒன்பதுக்கும் மேல..

“என்ன?” என்றவன் வேகமாக காரை எடுத்துக் கொண்டு சென்றான். அப்போது தான் உணவு உண்ண அமர்ந்தவன், அதையும் மறந்து ஷாலினியிடம் சொல்ல வேண்டும் என்பதையும் மறந்து சென்றான்.

அப்போதுதான் உணவு உண்ண கீழே இறங்கிக் கொண்டு இருந்தாள் வர்ஷினி.

ரஞ்சனி உணவு உண்ணவில்லை.. ஈஸ்வரின் போன் சுவிச் ஆஃப் என்று வந்தது. அவன் வீட்டிற்கும் இன்னும் செல்லவில்லை.. ஐஸ்வர்யா வின் நம்பர் நாட் இன் யூஸ் என்று வந்தது. அஸ்வின் பொருட்டு தான் நிறைய நாட்களாக ஐஸ்வர்யாவிடம் பேசாதது பலமாகத் தாக்க, அப்படியே படுத்துக் கொண்டாள்.

பத்து “என்ன?” என்று கேட்டதற்கு வாயேத் திறக்கவில்லை.

ஈஸ்வரிடம் பேசாமல் என்ன என்று சொல்ல முடியும். முரளி மாற்றிச் சொல்ல வாய்ப்பே இல்லை.

கணக்குகளின் சூத்திரங்கள் தெரிந்தாலும், விடை சரியாக வந்தாலும் செயல் முறைகள் வரிசையாக இல்லாவிட்டால் அதன் மதிப்பீடு குறைந்து விடும்!!! வாழ்க்கையும் சில சமயங்களில் அப்படிதான்!!!  

 

அத்தியாயம் முப்பத்தி ஒன்று :

உனது விழியில் எனது பார்வை!!!

முரளி பார் சென்ற போதும் ஈஸ்வர் அங்கே தான் இருந்தான். “என்னடா பண்ற இங்க ஈவ்னிங்ல இருந்து?”

“எவன் சொன்னான் நான் இங்க இருக்கேன்னு?”

“யாரோ சொன்னாங்க, வீட்டுக்குக் கிளம்பு!”

“ப்ச்! போகப் பிடிக்கலை!”

“சொன்னாக் கேளு, எழுந்துரு!” என்று அதட்டி அவனைக் கைப் பிடித்து எழுப்பினான்.

“டேய், நான் என்ன ஸ்டெடி இல்லைன்னு நினைச்சியா?” என்று அவனிடம் முறைத்து நிற்க…

“நீ எவ்ளோ குடிச்சாலும் ஸ்டெடி தான். எனக்குத் தெரியும், கிளம்பு முதல்ல, என்ன பண்ணிட்டு இருக்க நீ!” என்று முரளியும் முறைக்க..

அதன் பிறகே கிளம்பினான்.

பில் செட்டில் செய்ய வேண்டும் என்ற ஞாபகம் கூட இல்லை.. அந்தப் பையன் “பில்!” என்று தயங்கி நிற்க..

எவ்வளவு என்று கேட்டு.. அதைக் கொடுத்து, அந்தப் பையனுக்கும் தனியாக ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்து, முரளி ஈஸ்வருடன் வெளியே வந்தான்.

“உன்னை நான் வீட்ல விடறேன் நீ ஓட்டாதே!” என்று சொல்லி.. ஈஸ்வரை வீட்டில் விட்டு அவனின் கார் எடுத்தே வீடு வந்து சேர்ந்தான்.

அடுத்த நாள் காலையில் பால்கனியில் இருந்து ஈஸ்வரின் காரை பார்த்த இரு பெண்களின் மனதிலும் குழப்பம். ரஞ்சனி ஈஸ்வர் வந்திருக்கிறானோ என்று வேகமாக வர.. அவன் இங்கே வந்திருக்கிறானா என்று வர்ஷினிக்கும் யோசனை.

அவள் அவளின் ரூம் கதவை திறந்து மேலே இருந்து பார்க்க.. “முரளிண்ணா விஷ்வா வந்திருக்கிறானா?” என்று ரஞ்சனி கேட்பது தெரிய.. நின்று கவனித்தாள்.

“இல்லை ரஞ்சனி! நான் அவன் கார் எடுத்துட்டு வந்தேன்”

“எப்போ? எங்கேயிருந்து? நான் நேத்து இருந்து அவன் கிட்ட பேச முயற்சி பண்றேன்? அவன் நைட் பத்து மணி வரை வீட்டுக்கே போகலை”   என்று அவள் கேட்க,

முரளி தயங்க..

“பார்ல பார்த்தீங்களா?”  என்று ரஞ்சனி கேட்பது தெரிய..

யாரும் கவனிக்கும் முன் ரூமின் உள் சென்றாள். மனதினில் இந்த ஈஸ்வர் விஷயத்தை முடித்து விட வேண்டும் என்ற உத்வேகம். “நான் என்ன எப்போதும் அவனை நினைத்துக் கொண்டிருக்கிறேன்? ஒருவன் என்னை மனதளவிலும் இவ்வளவு தொந்தரவு செய்வதா?”

“என்ன தைரியம் முரளிண்ணாவிடம் பெண் கேட்டிருக்கான்! ஒரு வேலை இந்த சினிமாவில் காட்டுவது போல என்னிடம் மிஸ் பிஃஹேவ் செய்ததால் அதை சரி செய்ய திருமணம் செய்ய நினைக்கிறானோ?” என்ற யோசனைகள் தான்.

அதையே அவனிடம் நேரடியாக கேட்கவும் செய்தாள். ஆம்! ஈஸ்வரும் வர்ஷினியும் அன்று மதியமே சந்தித்து இருந்தனர்..

பார்க்க நினைத்த வர்ஷினி ஒன்றும் செய்யவில்லை.. ஈஸ்வரின் கைபேசிய உயிர்பிக்க சிறிது நேரத்திலேயே அது அடித்தது. ஏதோ ஒரு எண் யோசனையாக எடுக்க..

“ஹல்லோ”, என்றது ஈஸ்வரின் குரலே.

“எங்கே பார்க்கலாம்?” என்ற வர்ஷினியின் இறுகிய குரலைக் கேட்டவன்..

“என்ன வரப்போகிறதோ?” என்ற சஞ்சலம் தோன்றினாலும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகம் இருக்க..

“நீ சொல்” என அவனும், “நீ சொல்” என அவளும்,

இறுதியில் ஒரு உணவகத்தின் பெயர் சொன்னவன், “மதியம் அங்கே பார்க்கலாமா?” என,

“ஓகே! எங்க இருக்குன்னு தாஸ் அண்ணாக் கிட்ட சொல்லிடுங்க!” என,

“என்ன தாஸ் கிட்டயா?”

“பின்ன என்னை யாரு கூட்டிட்டு வருவா.. அப்பா அனுப்ப மாட்டாங்க! வெளில பர்ச்சேஸ் போறேன் சொல்லி தான் வரணும்”

“என் போன் உன்கிட்ட இருக்கு. யார் நம்பரும் இல்லை.. உன் ஃபோன்கே மெசேஜ் பண்றேன். அவன் கிட்ட காட்டிடு!”  என்ற அவர்களின் சம்பாஷணையை தொடர்ந்து இப்போது எதிர் எதிரே அமர்ந்திருந்தனர்.. தாஸ் வெளியில் நின்றிருந்தான். அப்பாவிடம் சொல்லக் கூடாது என்று மிரட்டி வைத்திருந்தாள்.

எதிரில் இருந்த வர்ஷினியின் முகத்தை பார்த்திருந்தான். அவளின் முகத்தில் ஒரு சிநேக பாவனையும் இல்லை சிரிப்பும் இல்லை.. ஏன் கோபமும் இல்லை முறைப்பும் இல்லை. அவ்வளவு இறுக்கமாக அமர்ந்திருந்தாள். முக்கியமாக கறுப்புக் கண்ணாடி, அவளின் கண்களை பார்க்க முடியவில்லை.

“எதுக்கு இப்போ இவ்வளவு இறுக்கமா இருக்க” என்று ஈஸ்வர் ஆரம்பிக்க,

“பேசறதுக்கு முன்னாடி ஒரு கண்டிஷன்! என்னோட கண்ணாடியைக் கழட்டக் கூடாது!” என்று தான் பேச ஆரம்பித்தாள்.

“அது ரொம்ப கஷ்டம்! எனக்கு உன் கண்ணைப் பார்த்தே ஆகணும்!” என்று ஒரு மென்னகையோடு சொல்ல.. அந்த புன்னகை அந்த பாவனை கடுப்பின் உச்சிக்கு இட்டு சென்றது.

“முதல்ல இப்படி என் முன்னாடி சிரிக்காதீங்க! இட் இரிடேட்ஸ் மீ எ லாட்.. அது எப்படி கொஞ்சம் கூடக் குற்ற உணர்ச்சி இல்லாம சுத்த முடியுது! மத்தவங்க கிட்ட எப்படியோ என் முன்னாடி இப்படி வராதீங்க! உங்களைப் பார்க்கும் போது எரிச்சலா வருது. உங்க கிட்ட  கெஞ்சியாவது என்னை விட்டுடுங்க சொல்லணும் இருந்தேன். ஆனா இப்போ பார்க்கும் போது நான் எதுக்கு கெஞ்சணும் தான் தோணுது!” என்றாள் ஆத்திரத்துடன்.

“என் மனசுல குற்ற உணர்ச்சி இல்லைன்னு தெரியுமா?” என்று விளையாட்டுத்தனத்தைக் கை விட்டு ஈஸ்வரும் தீவிரமாக திருப்பிக் கேட்க,

“அப்போ உங்க மனசுல இருக்குற குற்ற உணர்ச்சிக்காகத் தான் என்னைக் கல்யாணம் பண்ண அண்ணாக் கிட்ட கேட்டீங்களா?” தீர்க்கமாகக் கேட்டாள்.

“இல்லை! அப்படி இல்லை!” என்று ஈஸ்வர் சொல்ல,

“அப்போ செஞ்ச தப்பை சரி செய்யக் கல்யாணம் பண்ண நினைக்கிறீங்களா?”

“கண்டிப்பா இல்லை!”

“தென், எதுக்கு இந்தக் கல்யாணம்?”

“அது!” என்று ஈஸ்வர் பேச ஆரம்பிக்கும் முன்னரே, அவனுக்குப் பேச இடமே கொடுக்கவில்லை.

“நீங்க என்கிட்டே இல்லீகலா பண்ணினதை லீகலைஸ் பண்ணப் போறீங்க! அப்படிதானே!” என்று வார்த்தைகளை சாட்டையாய் சுழற்றினாள்.

என்ன பதில் சொல்வது என்றே ஈஸ்வருக்குத் தெரியவில்லை. ஸ்தம்பித்து அமர்ந்தான்.

“நீங்க முறை தவறி நடந்ததை முறையாக்க இந்தக் கல்யாணம் இல்லையா?” என்று வர்ஷினி திரும்பவும் நிதானமாகச் சொல்லி பேச ஆரம்பித்தாள்.

வார்த்தைகள் அற்று அவளைப் பார்த்தான்.

“என்னால உணர முடியுது! உங்க மொபைல் பார்த்த பிறகு, எதோ ஒரு வகையில் நான் உங்களை டிஸ்டர்ப் பண்றேன். அதுதான் என்கிட்டே இப்படி ஒரு பிஃஹேவியர். அதுக்காக இப்போக் கல்யாணம் பண்ண கேட்கறீங்க! ஆனா அது பாசிபிள் இல்லை..” என்றவளைப் பார்த்து,

“நீ என்னை டிஸ்டர்ப் பண்ற தான், ஆனா அதை விட உன் கண் இந்த ப்ளூ ஐய்ஸ்..” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே,

“அதனால தான் இந்தக் கண்ணாடி..” என்றாள்.

“நீ கண்ணாடி போட்டிருந்தாலும் அந்தக் கண் என் கண் முன்னாடி இருக்கும்.. எப்பவும் நான் வேண்டாம்னு நினைச்சாலும், உன் ஞாபகம் தான்.. என்னால ஒன்னும் பண்ண முடியலை.. அன்னைக்கு நடந்தது கண்டிப்பா வேணும்னு செய்யலை. என்னை மீறி நடந்தது. சாரி! ரொம்ப சாரி! நீ எப்படி மன்னிப்பு கேட்க சொன்னாலும் கேட்கறேன்” என்றான் பணிந்து.

“அன்னைக்கு நடந்ததை விட்டுடு .. ஜஸ்ட் உங்கப்பா கொண்டு வந்திருக்குற மாப்பிள்ளையாப் பாரு, பிடிக்க வாய்ப்பிருக்கு! மோசமானவன் தான். ஆனா மன்னிக்கக் கூடிய அளவுக்கு மோசமானவன்”

“எனக்கு புரியுது இந்த மாதிரி கட்டாயப்படுத்தறது தப்புன்னு. ஆனா எனக்கு வேற வழி இல்லை!” என்று சற்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசிக் கொண்டே போக..

“அப்போ நீங்க உயிரோட இருக்க! என்னை சாக சொல்றீங்களா?” என்றாள்.

“என்ன பேசற நீ?” என்று அதிர்ந்தான்.

“கொஞ்சம் நான் பேசறதை புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க! நான் எல்லார் மாதிரியும் கிடையாது.. எல்லாம் இருந்தும் என்கிட்ட எதுவும் கிடையாது.. என்னை சுத்தி இருக்குறவங்க என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கறாங்க. குறை சொல்லவே முடியாது. தப்பு அவங்க கிட்ட இல்லை. என்கிட்டே எனக்கு அவ்வளவா யாரோடையும் ஒட்டுதல் வரலை”

“இப்போதான் கொஞ்சம் சகஜமா பேசறேன்! முன்ன எப்பவும் தனியா இருக்கத் தான் இஷ்டப்படுவேன்! அதனால எனக்கு என்னை ரொம்பவும் லவ் பண்ற ஒருத்தங்க, எப்பவும் என் பின்னாடியே சுத்திட்டு இருக்குறவங்க.. என்னை மட்டுமே பார்த்துட்டு இருக்குறவங்க.. அவங்களுக்குன்னு ஒரு ஐடன்டிடி இருக்குறவங்க.. அதனால என்னோட கடந்த காலம் யாருக்கும் ஞாபகம் வர விடாம எனக்கு ஒரு ஐடன்டிடி கொடுக்கறவங்க.. இப்படித் தான் வேணும்”

“நீங்க முன்ன என்னை எப்படி பார்த்தீங்க! இப்போ என்னை எப்படி பார்க்கறீங்க! எனக்கு வித்தியாசம் தெரியுது.. இது திடீர்ன்னு வந்தது! திடீர்ன்னு போயிடுச்சுன்னா.. நான் எங்க போவேன்? என்னால திரும்பவும் தனியா ஒரு வாழ்க்கை யோசிக்க முடியாது. இப்போவே பல பேர் என்னை சுத்தி இருந்தாலும் சில சமயம் தனியா இருக்குற மாதிரி ஒரு உணர்வு!” என்று பேசும் போதே அவளின் கண்கள் கலங்க, தன்னை அறியாமல் கண்ணாடியைக் கழற்றி கண்களை துடைத்தாள்.

“நீங்க என்கிட்டே நடந்துகிட்டது ஒரு சின்ன சலனமா கூட இருக்கலாம். இதை பிடித்தம்னோ காதல்னோ எடுத்துக்கிட்டு வாழ்க்கை முழுசும் பணயம் வைக்க வேண்டாம். ஒரு தப்பு நடந்து போச்சு! விட்டுடுங்க! அதுக்காக அதையே பிடிச்சிட்டு இருக்காதீங்க..”

“இதையும் விட நீங்க பெரிய தப்பு என்கிட்டே பண்ணியிருந்தாலும் நான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டு இருக்க மாட்டேன்!”

“நான் இன்னும் ஒரு கல்யாணத்துக்கு, ஒரு கமிட்மென்ட்க்கு ரெடி இல்லை.. உங்களோட அந்த நடத்தைக்காக வேண்டாம்னு சொல்றேன்னு நினைக்காதீங்க.. அதுக்காக இல்லை.. நான் இப்போதைக்கு கல்யாணத்துக்குத் தயார் இல்லை!” என்று தீர்மானமாக முடித்தாள்.

“நான் இருக்கின்றேன் உனக்காக!” என்று வர்ஷினியை அணைக்க ஒரு பேராவல் அவள் பேசப் பேசவே. முயன்று கட்டுப் படுத்தி அமர்ந்து இருந்தான்.

“அப்போ நான் காத்திருக்கட்டுமா?”

“அது உங்க விருப்பம்! ஈஸ்வர்ன்ற உங்களை நிறைய முறை பார்த்துட்டே இருந்திருக்கேன்.. இன்னம் யார் கிட்டயும் நமக்குள்ள நடந்ததை எக்ஸ்போஸ் பண்ணவும் தோணலை! சொல்லப் போனா உங்ககிட்ட என்னை பற்றி நானே பேசின அளவு வேற யார் கிட்டயும் பேசினதே இல்லை! இப்படி இருந்தும் உங்களை எனக்கு கல்யாணம் பண்ண தோணலை”

“இப்போ தான் நான் எய்டீன்! எதிர்காலத்துல என்னோட மனநிலை எப்படி இருக்கும்னு தெரியாது! ஆனா மாறும்னு எனக்குத் தோணலை” என்று வர்ஷினி சொல்ல சொல்ல… அவளின் கண்களை பார்த்தவன்.

“நானும் மாறுவேன்னு எனக்குத் தோணலை.. எனக்கு உன்னைப் பார்த்துக்கிட்டே உன்னோட இருக்கணும்னு தான் இப்போ இருக்கு! எப்போவும் இருக்கும்னு நினைக்கிறேன்.. நானும் இதை பிடித்தம்னோ காதல்னோ கொண்டு வரலை! இது என்னன்னு எனக்குத் தெரியலை!” என்றான் அந்த நீல நிறக் கண்களை பார்த்துக் கொண்டே.

“அது உங்க இஷ்டம்! நான் சொல்றதை சொல்லிட்டேன்.. இது உங்க மொபைல்!” என்ற படி அவள் எழ..

“சங்கீத வர்ஷினி” என்ற அவளின் பெயரைச் சொன்னான். அவள் நிற்கவும்..

“உலகத்திலேயே மாபாதகமான செயல்ன்னு நம்ம இதிகாசங்கள் சொல்றது பிறன்மனை நோக்குதல்.. அப்படி ஒரு சூழ்நிலை எனக்கு வரவிடமாட்டன்னு நினைக்கிறேன்” என்றான் ஆழ்ந்த குரலில்.

வர்ஷினிக்குப் புரியவில்லை, “அப்படின்னா?”

“அப்படின்னா உனக்கு வேற ஒருத்தரோட மேரேஜ் ஆகிட்டாலும்.. நீ அவனோட குடும்பம் நடத்தினாலும், நான் உன்னைப் பத்தி நினைக்கிறது.. உன்னைத் தூக்கறது.. இப்படி? இதுக்கு மேல முறையற்ற வார்த்தைகள் எதுவும் உன்கிட்ட சொல்ல எனக்கு மனசில்லை”

அந்த நீலக் கண்கள் அவனை கலவரமாக பார்க்க…

“உனக்கும் வேண்டாம்! எனக்கும் வேண்டாம்! நான் ஒரு சான்ஸ் எடுக்கறேன்.. உன்னைப் பார்க்காம இருக்க முழுசா ட்ரை பண்றேன்..  அட்லீஸ்ட் சில மாசமாவது.. உன்னோட நினைவுகள் குறையுதான்னு பார்க்கலாம்!”

“நீ சொல்ற மாதிரி சலனம்னா கண்டிப்பா குறையவாவது செய்யும்! பிடித்தம், காதல், இது எல்லோரும் சொல்றது தான்!  ஆனா இந்த உணர்வுகள் குறையாத, என்னால முடியாத பட்சத்துல வந்துடுவேன்.. அண்ட் ஐ ப்ராமிஸ் நீ நினைக்கிற மாதிரி ஒரு வாழ்க்கையை என்னால குடுக்க முடியும்..”

“இல்லைன்னாலும் ஒன்னும் பண்ண முடியாது.. நான் வாழ்றதுக்காக உன்னை சாகடிக்க போறேனோ என்னவோ?”

“இதுதான் நடக்கும்னு சொல்ல முடியாது, ஒரு வேலை நான் உன்னை மறந்துட்டா நீ தப்பிக்கலாம் இல்லை நான் இந்த உலகத்துல இல்லாம போயிட்டாலும் தப்பிக்கலாம்”

“ஆனா எனக்குத் தோணுது பேபி.. உன்னை ஹேண்டில் பண்ண  என்னைத் தவிர யாராலையும் முடியாதுன்னு.. நீ நிஜமாவே ப்ரில்லியன்ட்.. என்னை நல்லா அனலைஸ் செஞ்சிருக்க!”

“இப்போ நீ பேசின பிறகு எனக்கு இன்னும் நீ வேணும் என்னோடன்ற உணர்வு ரொம்ப அதிகமாகிடுச்சு.. வேறா எவனாவது இருந்தா நீ பேசினதுக்கு சரின்னு தான் சொல்வான். ஆனா எனக்கு இன்னும் இன்னும் நீ தான் என் வாழ்க்கையில வரணும்னு தோணுது”

“நான் சொன்னேன் தானே நீ போ! நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் போ!” என்றான்.

“ஹப்பாடா” என்ற உணர்வு தோன்றிய போதும், நம்பாமல் பார்த்து நின்றாள் வர்ஷினி.

“இன்னம் கொஞ்சம் நேரம் நின்னா நடக்கறதுக்கு நான் பொறுப்பில்லை”

“ஏன்? என்ன செய்து விடுவாய்?” என்று கண்களால் ஒரு கேள்வியை தாங்கி நிற்க..

“உன்னை இழுத்துட்டு யாருமில்லாத இடத்துக்கு போகணும்னு தோணுது. மறுபடியும் ஒரு முறை என்னால உன்னோட ரிஸ்க் எடுக்க முடியாது. இப்படிப் பார்க்காத வர்ஷினி.. நான் போறேன்!” என்று சொல்லியபடி,

சங்கீத வர்ஷினி என்ன உணர்வு என்று வரையறுக்க முடியாமல் பார்த்தது பார்த்தபடி நிற்க,

ஈஸ்வர் என்கின்ற விஷ்வேஷ்வரன் செல்ல ஆரம்பித்தான்.

என் கண்ணீர் என் தண்ணீர்                                                                           எல்லாமே நீ அன்பே..
என் இன்பம் என் துன்பம்
எல்லாமே நீ அன்பே..
என் வாழ்வும் என் சாவும்
உன் கண்ணின் அசைவிலே!!!

யாருக்காவும் எதற்காகவும் நிற்ப்பதில்லை காலமும் நேரமும் தனி மனித வாழ்க்கைப் பயணமும்!!!

(முதல் பாகம் முற்றும்)

 

Advertisement