Advertisement

அத்தியாயம் இருபத்தி ஏழு :

கொடிது கொடிது துரோகம் கொடிது!!!                                                 துரோகிகளை ஒன்றும் செய்ய இயலாத இயலாமை                             கொடிதினும் கொடியது!!!

ஈஸ்வர் “பார்த்து விடலாம், முடித்து விடலாம்” என்று நினைக்க..

பார்த்தது மட்டுமே அவன் முடித்தது ஐஸ்வர்யா… எப்படி அவளிடம் சொல்வது என்று யோசித்தபடி ஈஸ்வர் இருக்க… அவளைப் பார்த்தவுடனே தெரிந்து விட்டது. எதுவும் சொல்ல அவசியமில்லை, எல்லாம் முடிந்த தோற்றம் தான் அவளிடம்.

வந்து அமர்ந்த உடனே காஃபி சொல்லி விட்டான்… பேசக் கூட முடியுமோ என்ற அளவுக்கு அவ்வளவு சோர்வு..

அமர்ந்தவள் தான், ஐஸ்வர்யா எதுவும் பேசவில்லை.. ஈஸ்வரும் பேச முயலவில்லை.. விரோதிகளை விட துரோகிகள் இன்னும் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.. அவனுக்கே அது தெரியும், அவன் செய்த துரோகமும் தெரியும்.

காபி வந்துவிட.. “குடி ஐஷ்!” என்றான்.

“கால் மீ ஐஸ்வர்யா, அண்ட் நாட் ஐஷ்!” என்றாள் நிமிர்வாகவே..

ஈஸ்வர் பதில் எதுவும் சொல்லாமலிருக்க..

“எப்படி இப்படி முடிஞ்சது, விஷ்வான்றவரை இப்படி யோசிச்சதே இல்லை.. இப்படியும் நீங்க இல்லை! ஏன் இப்படி மாறிட்டீங்க..? அந்தப் பொண்ணு கிட்ட என்ன அட்ராக்ட் பண்ணினது.. ஏதாவது காரணம் எல்லாம் சொல்லாதீங்க! உங்க பிரச்சனைகள் பணம் அது இதுன்னு! கண்டிப்பா உங்க மனசு அந்தப் பொண்ணு மேல….” என்று சொல்ல ஆரம்பிக்கும் போதே…

“சங்கீத வர்ஷினி!” என்று அவளின் பெயரை எடுத்துக் கொடுத்தான்.

அவனை வெறித்து ஒரு பார்வை பார்க்க சளைக்காமல் பதில் பார்வை பார்த்தான். “ஐ கேன் சென்ஸ் சங்கீத வர்ஷினி. அவ மேல உங்க மனசு போயிடுச்சு இல்லையா!” என்றாள்.

பதில் பேசாமல் தான் இருந்தான்..

“அப்படி ஒன்னும் என்னை விட அழகு எல்லாமில்லை! ஜஸ்ட் அந்த ஏஜ் குரிய சார்மிங், அழகாவும் இருக்கா அவ்வளவு தான்.. காலையில இருந்து கண்ணாடியை அத்தனை முறை பார்த்துட்டேன்.. எது உங்களை அவ்வளவு அட்ராக்ட் பண்ணியிருக்கும்னு, எனக்கு தெரியலை! எது? என்று அவனிடமே கேட்டாள்.

“நிஜம்மா தெரியலை?” என்றான்.

அவளுக்கே நம்பிக்கை இல்லாத போதும் மனதின் ஒரு மூலையில் ஒரு ஆசை,  ஒரு வேண்டுதல், அப்படியெல்லாம் அந்தப் பெண்ணுடன் எதுவுமில்லை, என்று ஈஸ்வர் சொல்லி விட மாட்டனா என்று.

அவனைப் பார்த்தவுடனேயே தோன்றிவிட்டது.. சொல்ல மாட்டான் என்று.. அதைக் கொண்டு தான் “நீ என்ன சொல்வது என்னை வேண்டாம் என்று, நீ எனக்கு வேண்டாம்!” என்று அவளாகப் பேச ஆரம்பித்தாள்.

ஆனாலும் போன முறை இங்கே சந்தித்த போது அஸ்வின் செய்த பிரச்சனைகளால் தங்களுக்குள் இனி சரிவராது என்று அவள் நினைத்த போதுக் கூட.. “எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்” என்பது போல அவன் தானே நம்பிக்கை கொடுத்தான்.. நினைக்க நினைக்க ஆற்றாமை பொங்கியது.

“காஃபி குடி!” என்றான் திரும்பவும்.

“உங்களுக்குக் கொஞ்சம் கூட மனசு உதைக்கலையா?” என்றாள்.

“உதைக்கலை!” என்றவன், “ஏன்னா இதை விட பெரிய தப்பெல்லாம் பண்ணிட்டேன். அதுக்கு முன்னாடி இது ஒன்னுமில்லை..” என்றவன்,

“வேணும்னு பண்ணலை! தெரிஞ்சும் பண்ணலை..! பட் எல்லாமே என்னை மீறி தான். போராட முடியலை! விட்டுடேன்!”

“அதோடவும் போராட முடியலை.. உன்னை ஏமாத்துற ஃபீலிங் கூட இன்னும் என்னைக் கொல்லுது.. சோ! இதுக்கு ஒரு எண்டு கார்ட் போட்டுடலாம் நினைச்சேன். முடிஞ்சா என்னைப் புரிஞ்சுக்கோ!” என்றான் ஒரு தீர்க்கமான பார்வையோடு.

“இனி புரிஞ்சு என்ன செய்ய.. என்னால எதுவும் யோசிக்க முடியலை! இன்னும் நம்பக் கூட முடியலை..!”

“கத்துவ! ரொம்ப ஆர்ப்பாட்டம் பண்ணுவ! திட்டுவ! ஏன் சாபம் கூட விடுவன்னு நினைச்சேன்! இப்படி உன்னை எதிர்பார்க்கலை!” என்றான்.

“நீங்க என்கிட்டே காதல் சொன்னிங்க தான்! ஆனா என்னை எப்பவும் புரிஞ்சிக்க முயற்சி பண்ணினதேயில்லை.. நீங்க என்கிட்டே காதல் சொன்னப்போ அதுல காதல் இருந்தது. ஆனா இப்போ உங்களை பார்த்தவுடனே எனக்கு தோன்றது அது இல்லை..”

“இல்லாத ஒன்னைப் பிடிச்சி வெச்சு என்ன பண்ண முடியும்.. என்னோட முட்டாள் தனத்துக்கு என்னை நானே தான் பனிஷ் பண்ணிக்கணும்! பண்ணிக்குவேன்!” என்றாள் தீர்மானமாக.

“என்ன பனிஷ்மென்ட்?” என்று ஈஸ்வர் கேட்கவில்லை, கொடுத்துக் கொள்ளாதே என்றும் சொல்லவில்லை.. அவனுக்குத் தெரியும் அது என்ன என்று..

ஆம்! யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டாள்.. ஆனால் இது உடனே முடிவு செய்யும் விஷயம் அல்ல… காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..

இப்போது தான் எது சொன்னாலும் ஐஸ்வர்யாவின் எண்ணம் வலுப்படும்.. எதுவும் சொல்லாமல் விட்டால் “ஈஸ்வர் இப்படி செய்யாதே என்று கூடச் சொல்லவில்லை அவனுக்காக நான் தண்டனை கொடுத்துக் கொள்வதா!” என்று உதைக்கத் துவங்கும் என்று அமைதியாகத் தான் இருந்தான்.

அவனால் முடிந்தது கடவுளிடம் வேண்டுவது. ஆம்! உளமார வேண்டினான்! “என்னுடைய தவறுகளுக்கு இவளுக்கு ஏன் தண்டனை? ஒரு நல்ல வாழ்க்கையை ஐஸ்வர்யாவிற்கு அமைத்துக் கொடு கடவுளே..”

அதுவரை திடமாக இருப்பதாக தான் காட்டிக் கொண்டு இருந்தாள்.. இந்த ஈஸ்வரின் பார்வையில் உடைந்தவள்.. “ஏன் இவ்வளவு பரிதாபமா என்னைப் பார்க்குறீங்க? நீங்க பார்க்காதீங்க!” என வெடித்தவள்.. “கடவுள் கிட்ட வேண்டிக்குவேன் என்னை மாதிரி ஒரு வலியும் வேதனையும் உங்களுக்கு வேண்டாம்னு. ஆனா அந்த மாதிரி நீங்க அனுபவிச்சா ரொம்ப சந்தோஷப்படுவேன்” என்று கண்ணீர் வழிய அவள் சொல்லும் போது..

ஒரு பயம் தான் ஈஸ்வருக்கு தோன்றியது..

“இன்னும் இருந்தேன்னா இன்னும் ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பேன்.. நல்லாயிருங்க!” என்று அவள் சொல்லிய விதமே நீ நன்றாக இருக்க மாட்டாய் என்று சொல்லியது.

கண்களை துடைத்துக் கொண்டே அவள் செல்லப் போக..

“முடிஞ்சா என்னை மன்னிச்சிடு!” என்றான்.

“பார்த்தீங்களா! எவ்வளவு சுயநலம் நீங்க? உங்களை மன்னிக்கறதா முக்கியம், உங்களை நான் மறக்கறது தான் முக்கியம்! ஏன் உங்களுக்கு அப்படி நினைக்க தோணலை.. ஈசியா நீங்க மாறிட்டீங்க இல்லை! அதுதான் உங்களுக்கு இது பெரிய விஷயமா தோணாது..!”

“எனக்கு அது மட்டும் தான் இப்போதைக்கு விஷயம்.. அந்தப் பொண்ணையும் இப்படி விட்டுடாதீங்க!” என்றாள்.

“விடறதா?  நாங்க எப்போ சேர்ந்தோம், விடறதுக்கு! அது அவ்வளவு ஈசி இல்லை.. இது உனக்கு புரியாது!”

“எனக்கு இது எதுக்கு புரியணும்! தேவையே இல்லை. நான் இந்த உலகத்துல தனி மனுஷி! எல்லோருமே காட்டிட்டீங்க! அக்கா, அண்ணா, அப்பா, ரஞ்சனி, இப்போ நீங்க..” சொல்லும் போதே உடைந்து விட்டாள்.

“அவ கல்யாணம் கூட எனக்கு லேட்டா தான் தெரியும்.. அவ சொல்லவேயில்லை.. எவ்வளவு க்ளோஸ் தெரியுமா நாங்க? சொல்லலை!.. என்னவோ ஏதோ அவளோட பெர்சனல்ன்னு தான் பேசாம இருந்தேன்.. உங்க கிட்ட கூட நான் பேசலை.. நல்லா பேசிட்டிருந்த எல்லோரும் அப்படியே பேசறது கூட இல்லை.. நான் தனியா தான் ஆகிட்டேன்!”       ஒரு பெரிய கேவல் வெடித்தது.

“நீ தனி கிடையாது ஐஷ்!” என்றவன் “ஐஸ்வர்யா” என்று மாற்றி.. அவளை சமாதானம் செய்ய முயலும் போதே, அதைக் கேட்பதற்கு அவள் இல்லை நடக்க ஆரம்பித்து விட்டாள்.

“நீ உன்னுடைய பாவங்களை அதிகப் படுத்திக் கொண்டிருக்கிறாய்” என்று ஈஸ்வரின் மனது அவனுக்கு சொன்னது.

ஆனால் வேறு வழியில்லை! முடித்து தான் ஆகவேண்டும்! கட்டுப் பாட்டை மீறி மனது வேறு பெண்ணிடம் பாயும் போது, இவளுக்கும் நம்பிக்கை கொடுப்பது.. இப்போது முடித்துக் கொள்ளலாம் என்று செய்யும் துரோகத்தை விட பல மடங்கு அதிகம். துரோகம் செய்வது என்பது முடிவான பிறகு, அதை குறைத்தாவது செய்யலாம் என்று நினைப்பது ஒன்றும் நல்லதனம் இல்லை தான், ஆனாலும்… மனது?

வெகு நேரம்… “சர், க்ளோஸ் பண்ணனும்!” என்று அந்தக் கடைக்காரர் சொல்லும் வரை அமர்ந்து தான் இருந்தான். இன்னும் வர்ஷினியுடன் எப்படி தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது.. அவனுடைய வளர்ப்பில் பெண்ணுடன் தொடர்ப்பு என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே சாத்தியம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை!

ஏற்கனவே ஒரு பெரும் தவறை செய்திருக்கிறான்.. ஆனால் நிச்சயம் அதைச் சரி படுத்த அல்ல திருமணம்! அவள் வேண்டும் என்பதற்காகத் தான் திருமணம்.. ஆம்! சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்பது போல.. அப்பா உங்களை கல்யாணம் செய்யச் சொல்றார் என்று சொல்லித் திருமணம் எனும் வழியை அவனுள் புகுத்தியதும் வர்ஷினி தான்.

அவள் பேசிய பிறகு மனதின் ஒரு ஓரத்தில் செய்து கொண்டால் என்ன என்று ஒரு எண்ணம் ஓடிக் கொண்டே தான் இருந்தது.

வர்ஷினியின் பிறப்பை, வளர்ப்பை, நீ ஒரு ஆளா என்பது போல பார்த்த தன் பார்வையை, ஏன் ராஜாராமை எப்படி தைரியமாக மகள் என்று காட்டிக் கொள்கிறார் என்று நினைத்த நினைப்பெல்லாம் எங்கே போயிற்று என்று அவனுக்கே தெரியவில்லை.

யோசனைகள் ஓட ஆரம்பித்து… நிற்காமல் ராத்திரி பகல் என்று ஓடிக் கொண்டு இருந்தது.

ஈஸ்வர்  நினைத்தது உண்மை என்று இரண்டு நாட்களில்  ராஜாராம் நிருபித்தார்.

அஸ்வின் பிரச்சனையை ஒரு முடிவுக்கு வந்ததும்.. “ஈஸ்வர் ஃபைனான்ஸ்ல பணம் எவ்வளவு குடுக்கணும்னு கேளு முரளி” என்று மகனிடம் சொன்னார். அவர் நேரடியாக ஈஸ்வரிடம் பேசவில்லை.. ஈஸ்வரையும் பேச அனுமதிக்கவில்லை. எல்லாம் முரளி மூலமாக..

ஒரு வாரம் இந்த வேலைகள் தான்! யாருக்கும் மூச்சு விட நேரமில்லை. பிரச்சனைகள் குறையக் குறைய.. வர்ஷினியை எப்படி அணுகுவது என்று அவனின் மண்டையை உடைக்க ஆரம்பித்தது.

வர்ஷினி அவனின் மனதில் விஸ்வரூபம் தான் எடுத்து நின்றாள்.

எல்லாம் முடித்து நிமிர்ந்த போது..

ஈஸ்வர் அவர்களின் பைனான்ஸ் பங்குகளை ஜகனிற்கும் ரஞ்சனிக்கும் பிரித்து எழுதப் பிரியப்பட்டான், அதை முரளியிடம் சொல்ல.. அவன் ராஜாராமிடம் சொல்ல… அப்போதுதான் அவர்கள் மொத்த குடும்பத்தையுமே தன் வீட்டிற்கு வரவைத்தார்.

எல்லோரையுமே  முறையாக முரளியையும் ஷாலினியையும் விட்டு அழைத்தார்..

எதற்கு என்று ஈஸ்வருக்கு பெரும் சந்தேகம்.. நிச்சயமாக மனது நல்ல விதமாக சொல்லவில்லை. ஏனென்றால் பணம் கொடுக்கும் போது கூட அவனிடம் பேசவில்லை. “அப்பாக் கிட்ட சில விஷயம் கேட்கணும்” என்று முரளியிடம் சொன்ன போது கூட.. “என்கிட்டே சொல்லுடா! நான் கேட்டு சொல்றேன்!” என்று தான் முரளி சொன்னான்.

ராஜாராம் வேண்டுமென்றே தான் தள்ளி நிறுத்தினார்.. மகள் கெட்ட விதமாய் சொல்லாத போதும் நல்ல விதமாய் சொல்ல வில்லையே. எப்படி எதுவுமே இல்லாதது போல சகஜமாய் நடப்பது. சற்று தள்ளியே வைப்போம் என்று தான் முரளி மூலமாகவே எல்லாம் செய்தார்.

ஐஸ்வர்யாவை எப்படி எதிர்கொள்வது என்ற ஒரு உளைச்சல்! பணப் பிரச்சனை ஒரு உளைச்சல்! வர்ஷினியிடம் நடந்து கொண்ட ஒரு குற்றவுணர்ச்சி எல்லாம் சேர்ந்து ஈஸ்வரை செயலிழக்க வைத்திருந்தது!

முதல் இரண்டும் முடிந்து விட்டது..

வர்ஷினியுடனான தொடர்பை அவனே எப்படியாவது புதுப்பிக்கவோ, தக்க வைத்துக் கொள்ளவோ நினைக்கும் வேளையில் இனி என்ன நிறுத்தக் கூடும் அவனை! ராஜாராமா..? நிச்சயம் இல்லை..!

வெகு தினங்களுக்குப் பிறகு தோற்றத்தில் அக்கறை எடுத்துத் தயாரானான். மனதிலும் ஒரு இறுமாப்பு, “நாளுக்கு ஒரு பொண்ணோட இருந்தார் அவர், நான் அவர் பொண்ணு பின்னாடி மட்டும் தானே போறேன்! தப்பா பார்த்தாலும் தப்பான உறவுக்கு நினைக்கலையே? என்ன செய்வார் பார்த்துடலாம்..?” என்ற எண்ணம்.

முகத்தில் எப்போதும் இருக்கும் கம்பீரம், திமிர், எல்லாமே மீண்டு இருந்தது.

“ஹேய் விஷ்வா! என்ன இன்னைக்கு பளபளன்னு இருக்க! என்னை விட அதிக நேரம் கண்ணாடி முன்னாடி நின்னயா?” என்று ரூபா கூட கிண்டல் செய்தாள்.

எல்லோரும் கிளம்ப, எப்போதும் போல பெரியம்மாவும் பாட்டியும் கிளம்பவில்லை.. “கிழவி… நீங்க வரலையா? ரஞ்சனி வீட்டை நீங்க பார்க்க வேண்டாமா..?”

“நான் எங்கயும் வர்றது இல்லையேடாப்பா?”

“இன்னைக்கு வாங்க!”

“ஏன்? இன்னைக்கு என்ன?”

“சும்மா தான் வாங்க! நமக்கு அவங்க எவ்வளவு பெரிய உதவி பண்ணியிருக்காங்க! வாங்க! கிளம்புங்க! பெரியம்மாவையும் கிளப்புங்க! பெரியப்பா வளர்த்தது சரியாம காப்பாத்தியிருக்காங்க!” என்று சொல்லி அனைவரையும் கிளப்பினான்.

முதல் முறையாக வீட்டினர் அனைவருமே வந்திருக்க.. ரஞ்சனிக்கு அவ்வளவு மகிழ்ச்சி முகத்தில்.. முகம் ஒரு புன்னகையை, மலர்ச்சியைத் தானாகப் பூசிக் கொண்டது. அது இன்னுமே அவளின் முகத்திற்கு அழகை கொடுக்க..

“பாருடா! அவங்க வீட்டு ஆளுங்களைப் பார்த்ததும் என் மனைவி இன்னும் அழகாயிட்டா.. முகத்துல ஒரு ஸ்பெஷல் லைட் எரியுது” என பத்துவின் எண்ணம் ஓடியது.

அவர்கள் வந்ததுமே மேலேயிருந்து வர்ஷினி பார்த்து விட்டாள்.. ஆனாலும் கீழே இறங்கக் கூடாது என்று நினைக்க.. பிரணவியும் சரணும் அதை தவிடு பொடி ஆக்கினர்.

பிரணவியை ரூபாவிடம் இருந்து ரஞ்சனி ஆசையாக வாங்க.. “அக்கா! எங்கே?” என்று சரண் ரஞ்சனியின் சுரிதாரின் துப்பட்டாவைப் பிடித்து இழுத்தான்.

நமசிவாயமும் ஜகனும் மாற்றி மாற்றி ராஜாராமிடமும் தாத்தாவிடமும் நன்றி சொல்ல.. கமலம்மா ஈஸ்வரின் அம்மாவிடம் பேச.. ரூபா ஷாலினியிடம் பேச..

ஈஸ்வர் இன்னும் வந்திருக்கவில்லை.. “நான் பாட்டியோடவும் பெரியம்மவோடவும் வர்றேன்! அவங்க இன்னும் கிளம்பலை! நீங்க போங்க!” என்று மற்றவர்களையும் அனுப்பி இருந்தான்.

ராஜாராம் தன்னைத் தவிர்த்திருக்க முதல் ஆளாகப் போய் நிற்க மனமில்லை.. பாட்டியுடனும் பெரியம்மாவுடனும் பேச வேண்டி இருந்தது. பின் தங்கி விட்டான்.

ஈஸ்வர் இன்னம் வந்திருக்காததால் வர்ஷினி விரைந்து கீழே இறங்க.. அவளைப் பார்த்ததும் பிரணவி அவளிடம் தாவினாள். “தோடா! இதைப் பாரு இந்தக் குட்டியை” என்று ரஞ்சனி சலுகையாக குறைபட..

“என்னோட ஃபிரண்ட்ஸ் அண்ணி இவங்க!” என்று சொல்லி வர்ஷினி அவளைக் கொஞ்ச..

அந்த இடமே கலகலப்பாகியது. ஈஸ்வர் வீட்டினரை அப்பா குடும்பத்தோடு வரச் சொல்லியிருக்கிறார் என்றதும் அவனைப் பார்க்க வேண்டுமே என்ற ஒரு டென்ஷன் இருந்தது.

அன்று பேசியது தான் ராஜாராம் ஈஸ்வரை பற்றி, அதன் பிறகு எதுவும் வர்ஷினியிடம் பேச வில்லை.. சரி மறந்து விட்டார் என்று நிம்மதியாக தான் இருந்தாள். அவளின் அப்பா மறக்கவே மாட்டார் என்று அவளுக்குப் புரியவில்லை.

ஈஸ்வர் நல்லவனா கெட்டவனா என்று அவரின் மனம் ஊசலாடிக் கொண்டிருந்தது தான் நிஜம். ராஜாரமிற்கு தெரிந்த வரை ஈஸ்வர் குறை சொல்ல முடியாதவன்.. ஆனால் அன்று பார்த்த போது அவனின் முகத்தில் ஒரு குற்ற உணர்ச்சி, மகளும் மாற்றி மாற்றி ஏதோ உளறினாள். முற்றிலும் மனதில் சஞ்சலம்.

நேற்று தான் திரும்ப “நம்ம அவங்களுக்கு இவ்வளவு பணம் கொடுத்திருக்கோம்” என்று சொல்ல.. என்ன சொல்வது என்று அவளுக்கு தெரியவில்லை. இப்போது அண்ணியின் குடும்பம் வேறு, “ஓஹ்!” என்றதுடன் நிறுத்திக் கொண்டாள்.

மேலே அந்தப் பேச்சை வளர்க்க இஷ்டப்படவில்லை. திரும்பவும் தான் எதுவும் உளறி விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தாள்.

இன்று அவர்கள் எல்லோரும் வருகிறார்கள் என்று தெரிந்ததும் ஒரு டென்ஷன் இருந்தது. ஈஸ்வரைப் பார்க்க வேண்டுமே என்று.. தப்பு செய்தது அவன், எனக்கு எதற்கு அவனைப் பார்க்க பயம்.. தெரிந்த கெட்ட வார்த்தைகள் எல்லாம் மனதில் தோன்றியது.

“குழந்தையைக் கைல வெச்சிருக்க, டோன்ட் டூ திஸ்” என்று அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ஈஸ்வர் அவனின் பெரியம்மா மற்றும் பாட்டியுடன் வர..

“அய்யோடா! என்ன இது?” என்று தான் அவனைப் பார்த்த க்ஷணம் வர்ஷினிக்குத் தோன்றியது. முரளி அண்ணனின் திருமணத்தில் பார்த்த போது இருந்த தோற்றத்தை விட இன்னும் வசீகரமாய் தான் இருந்தான்.

ஏனென்றால் சமீபமாக பார்த்த போதெல்லாம் ஓய்ந்த கவலையான தோற்றம் தான். அவள் மண்டையை உடைத்த அன்று தான் கொஞ்சம் நீட்டாய் இருந்தான். அதையும் அவனின் செய்கையால் கெடுத்துக் கொண்டான்.. அதன் பிறகு பார்க்கவே இன்னும் பரிதாபமாக இருந்தான்.

இன்று “அம்மாடி! எதுக்கு இவ்வளவு சார்மிங்கா ட்ரெஸ் பண்ணியிருக்கான்.. கொஞ்சம் கூட தப்பு செஞ்சோம்ன்ற ஃபீலிங்கே காணோம்” என்ற படி வர்ஷினி “ங்கே” விழி விரித்து அவனைப் பார்த்தாள்..

“விஷ்வா!” என்று ரஞ்சனி வேகமாக அருகில் விரைந்தவள் “வாங்க பாட்டி, வாங்க பெரியம்மா” என்று அவர்களையும் அழைக்க..

ஈஸ்வரின் கண்கள் வேகமாக எல்லோரிடமும் சென்று மீண்டாலும் வர்ஷினியிடம் சில நொடிகள் மீள முடியாமல் சிக்குண்டு, முயன்று திரும்பி அப்பா அமர்ந்திருந்த இடம் நோக்கி சென்றான்.

இதில் மனதில் பெரிய ஆராய்ச்சி வேறு! வேறு என்ன? ஹ ஹ அவளது என்ன உடை என்பது போல…  பின்னே முகம், கை விரல்கள், பாதங்கள் மட்டும் தானே தெரிந்தது. நீண்ட அங்கி போன்ற ஒரு உடை! இது என்ன உடை?

“வா ஈஸ்வர்!” என்று ராஜாராமும் தாத்தாவும் வரவேற்றனர். ராஜாராமின் பார்வையும் ஆச்சர்யமாகத் தான் அவனைப் பார்த்தது.. அன்று பார்த்த ஈஸ்வருக்கும் இன்று பார்த்த ஈஸ்வருக்கும் ஆயிரம் வித்தியாசம்.

நன்றாய் இருந்த காலத்திலும் யாரைப் பார்த்தாலும் அளவோடு சிரித்து, அளவோடு பேசும் இறுக்கங்கள் தளர்ந்து இருந்தது.. அவனின் முகம் கண்கள் எல்லாமே வசீகரமாய் இருந்தது. அன்று பார்த்த தயக்கம் குற்ற உணர்ச்சி ஒன்றுமில்லை.

வர்ஷினியை பார்க்க.. அவளும் ஆச்சர்யமாய் தான் ஈஸ்வரை பார்த்து இருந்தாள். பின்பு பார்வையை அவள் திருப்பிக் கொண்டதும் குழந்தைகளிடம் பேச ஆரம்பித்ததையும் பார்த்தார். ஆச்சர்யம் மட்டுமே அவளின் பார்வையில் கோபம் வெறுப்பு போல எல்லாம் ஒன்றுமில்லை.

ஒன்றுமே இல்லையா? நான் தான் ஏதோ இருக்கிறது என்று நினைத்தேனா? பெரிதாக பிரச்சனை ஒன்றும் இல்லை போலவே என்று அவருக்கு தோன்றியது.

அவரிடம் மரியாதை நிமித்தம் “எப்படி இருக்கீங்கப்பா?” என்று கேட்டவன்.. அதன் பிறகு முரளியிடம் பேச அமர்ந்து விட்டான்.. யாரையும் பார்க்கவில்லை.. மனதிற்குள் “அவளைப் பார்க்காதே! பார்க்காதே! அவங்கப்பன் உன்னை தான் பார்த்துகிட்டு இருப்பான்” என்று அவன் மனதில் ஜபித்துக் கொண்டிருந்தது அவனுக்கு மட்டும் தானே தெரியும்.

ரஞ்சனி பத்துவிடம் “நீங்க இன்னும் எங்க அண்ணாக் கிட்ட பேசலை!” என்று குறைபட..

“அதான் முரளி பேசறான் தானே”

“முரளிண்ணா பேசினா, நீங்க வாங்க கூட சொல்ல மாட்டீங்களா?”

“அவர் என்னைப் பார்க்கவேயில்லை” என்று சொல்லிக் கொண்டே ஈஸ்வரின் அருகில் சென்று “வாங்க” என்று சொல்ல..

பத்மநாபனை பார்த்து சிநேகமாய் புன்னகைத்து, இரண்டொரு வார்த்தைகள் பேசி மீண்டும் முரளியிடம் திரும்பி விட்டான்.

ஈஸ்வர் தன்னிடம் நன்றாய் பேசியது போல இருந்தாலும்.. ஏதோ குறைந்தது பத்துவிற்கு. எப்போதுமே திமிராய் தான் பார்ப்பான் ஈஸ்வர். ஆனால் இது அது அல்ல! இது வேறு! பத்துவிற்கு புரியவில்லை.

பத்துவிற்கு புரியாதது ஈஸ்வரின் பார்வை..

அது தெளிவாக சொன்னது ஒன்று தான்! “என்னைக் கண்டு பிடிச்சு என்னைக் குறை சொல்ற அளவுக்கு நீ பெரியாளாடா.. என்ன பண்றது நீ என் தங்கை புருஷனாகிட்ட. ஏன்? எனக்கு இவ்வளவு தொல்லை கொடுக்கற அஸ்வின் கூட என்னோட இந்தப் பக்கத்தை கண்டிருக்க மாட்டான்.  என்கிட்டே இருந்து தள்ளி நிக்க சொன்னியாமே, நீ எவ்வளவு தான் உன் தங்கையை என்கிட்டே இருந்து தள்ளி வெச்சாலும் அவ எனக்கு தான்!” என்றது.

சொல்லியவனின் பார்வை வர்ஷினியிடம் நிலைக்க… “இவள் மறுப்பாளே! இவளை எப்படி ஒத்துக் கொள்ள வைக்க?”

அந்த நீல நிறக் கண்கள் தன்னைப் பார்க்க மனம் ஏங்கியது!!!

“சரியா? சரியில்லையா? நடக்குமா? நடக்காதா? நடந்தாலும் நிலைக்குமா? நிலைக்காதா? தன்னுடைய அவளோடான இந்த உணர்வுக்கு பெயர் என்ன.. இது எப்போதும் தன்னிடம் இருக்குமா இல்லை தன்னுடைய இச்சைகள் தீர்ந்த பிறகு குறைந்து விடுமா?”  என்று போராட ஆரம்பித்தான்.

குறையுமா? குறையாதா? நடக்கும் பட்சத்தில் தானே தெரியும்?

உயிரை உயிரால் உள்ளே குடைந்து
உயிரின் உயிரை உணரும் முயற்சியா!!!

Advertisement