Advertisement

அத்தியாயம் இருபத்தி ஆறு :

காதல் என்பதா?                                                                                                              காமம் என்பதா?                                                                                                                           இரண்டுக்கும் மத்தியில் இன்னொரு உணர்ச்சியா!!!

முயன்று கடினப்பட்டு சமன்பட்டவன்.. “ஒன்னுமில்லை! நீ சொல்லு” என்றான். ரஞ்சனிக்கும் எல்லாம் சொல்லி முடித்து விடும் ஆவேசம்…

“சும்மா யாராவது மிரட்டினா நான் பயந்துடுவேணா சொல்லு.. ரொம்ப டு தி கோர் இருந்தது.. நம்ம ஃபைனான்ஸ் கம்பனியை இழுத்து மூட வெச்சிடுவேன்னு சொன்னான்.. ஜகன் அண்ணா அந்த கிரிகெட் கேம்ப்ளிங்ல இருந்த ஆதாரம் எல்லாம் குடுத்துடுவேன்னு சொன்னான்.. ஏதாவது செஞ்சு நானே அவன் கிட்ட என்னைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்கற மாதிரி வெச்சிடுவேன்னு சவால் விட்டான்”.

“போடா! உன்னால முடிஞ்சதை பண்ணிக்கோடான்னு நானும் சொன்னேன்!

“அன்னைக்கு காலையில இருந்து நம்ம இடத்துல நடந்த பிரச்சனையை சேம்பிள் பாருன்னு நம்ம பில்டிங்கல கண்ணாடி உடைக்கறதை காட்டினான்.. கண்டிப்பா உங்களால பணம் குடுக்க முடியாதுன்னு சேலஞ் பண்ணினான்”.

“அதுவரைக்கும் கூட நீங்க எப்படியோ சமாளிச்சிடுவீங்கன்னு நம்பிக்கை இருந்ததால கூலா தான் இருந்தேன்… பட் அன்னைக்கு ரொம்ப பயந்துட்டேன்… அதுவும் டீ வீ ல ஸ்க்ரோல் வேற… நம்மளை இன்னும் என்ன பண்ணுவேன்னு தெரியாது நீயே என்கிட்டே வர்ற மாதிரி செய்வேன்னு திரும்பத் திரும்ப சொல்றான்”

“யோசிச்சுப் பாரு! எல்லோரும் எவ்வளவு டென்ஷன்ல இருக்கீங்க.. நான் போய் இவன் ட்ரபிள் பண்றான்னு சொன்னா நீ அன்னைக்கு இருந்த கோபத்துல கொன்னு போட்டிருப்ப.. அதுவுமில்லாம அப்புறம் ஐஷும் நீயும் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்”

“நீயே என்கிட்டே வர்ற மாதிரி செய்வேன்னு அத்தனை தடவை சொல்றான் ஏதோ ஹிஸ்டீறிக் பேஷன்ட் மாதிரி.. அவன் முன்னாடி தைரியமா கட்டினாலும் உள்ள ரொம்ப பயந்துட்டேன்..”

“அன்னைக்கு யாரையும் பார்க்க முடியாம தூக்க மாத்திரை போட்டு தூங்கிட்டேன்.. காலையில வர்ஷினி எனக்கு ஃபோன் செஞ்சு அண்ணா சாரி கேட்க சொன்னாங்கனு நடந்த விஷயம் சொன்னா..  அவங்க நமக்கு ஹெல்ப் பண்றாங்கன்னு சொல்லி பொண்ணு கேட்டாங்களாம்..”

“நீ கோபத்துல பொண்ணு குடுக்க மாட்டோம்னு சொல்லி ஹெல்பும் வேணாம் சொல்லிடியாம்”

“எனக்கு அப்போ தோணினது எல்லாம் ஒன்னு தான்.. அவங்க நமக்கு ஹெல்ப் பண்றாங்க.. நம்ம இந்த பிரச்சனையில இருந்து கம்ப்ளீட்டா வெளில வந்துடுவோம்.. இன்னொன்னு அவன் சொன்ன மாதிரி நானே அவனை தேடி போற சூழல் அவன் கிரியேட் பண்ணிட்டா? எனக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னா நானே போ மாட்டேன் தானே..  அதுதான் தான் என் மைண்ட்ல ஓடிட்டே இருந்தது. எஸ் என்ன ஆனாலும் நான் அவன் கிட்ட போகக் கூடாது. அது என் மனசுல ஓடினது”

“இதை நான் யார் கிட்ட சொல்ல முடியும்… இந்த கல்யாணம் எனக்காக எனக்காக மட்டும் தான்”

“அப்போ அந்த டைம்ல எனக்கு அது சரியா பட்டுச்சு.. உன்கிட்ட சொன்னா நீ அவனைக் கொல்லக் கூட தயங்கமாட்டா.. அப்படி ஒரு சிக்கல் என்னால உனக்கு வர்றதை நான் விரும்பலை..”

“அதோட என்னால எல்லா பிரச்னையும் தீர்க்க முடியும்னு எனக்கு ஒரு ஃபீல்.. பத்து இஸ் நாட் பேட் எனக்குத் தெரியும்.. அவரைக் கல்யாணம் பண்ணினா எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடும்ன்னு நினைச்சேன்..”

எல்லாம் சொன்னவள் உடனே “எல்லாம் அப்படியே இருக்கு, இன்னும் அதிகமாகிட்டேப் போகுது” என்று தேம்பித் தேம்பி அழுதவள்,

“இப்போ அவனை அரஸ்ட் பண்ணிடாங்கலாம் திரும்ப வந்து நம்மை ஏதாவது பண்ணிட்டான்னா எனக்கு பயமா இருக்கு” என்று சொல்லிக் கொண்டே அழ…

இவளை என்ன செய்வது என்பது போல பார்த்திருந்தான்..

அஸ்வின் எப்படி தங்களுக்கு இவ்வளவு எதிரியானான் புரியவேயில்லை.. ரஞ்சனியும் அவனின் டார்கெட்டாக இருந்திருக்கிறாள் என்பது அவனுக்கும் அதிர்ச்சியே.. ஆனால் அதை அவளின் முன் காட்ட முடியாது. இனி யோசித்தாலும் என்ன பயன்?

ரஞ்சனியின் அன்றைய நிலை… அண்ணனாக யோசிக்கப் பிடிக்கவில்லை.. ஆனால் இனி பத்து பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இருந்தது. என்னை எவ்வளவு சரியாக எனக்கே தெரியாத போது கணித்திருக்கிறான்.

எதுவாகினும் இனி திருமணம் பிடிக்கவில்லை என்ற வார்த்தை முற்றிலும் தவறானது. ஆனால் தன்னைத் தவிர வேறு யாரிடமும் சொல்ல மாட்டாள் என்பது நிச்சயம்..

ஆதலினும் இந்த எண்ணமே தவறு..

“ரஞ்சனி அழாத.. முதல்ல நான் சொல்றதை கேளு” என்றான்.

அப்போதும் அவள் அழுதபடியே இருக்க.. “இங்கே பாரு! பாரு என்னை முதல்ல” என்று அதட்ட. கண்ணீரோடு பார்த்தவளிடம், “கண்ணைத் துடை முதல்ல கண்ணைத் துடை” என்றான்.

துடைத்தாலும் பெருகும் கண்ணீரோடு அவள் இருக்க.. “நடந்ததை யாராலும் மாத்த முடியாது ரஞ்சனி… கல்யாணம் பிடிக்கலைன்ற வார்த்தை தப்பு… நீ என்ன அவ்வளவு சுயநலவாதியா.. இல்லை.. டோன்ட் பீ எமோஷனல்.. பத்து ரொம்ப நல்ல பையன் புத்திசாலிக் கூட.. நல்லா படிச்சிருக்கான்.. நல்ல வசதி.. குட் லுக்கிங்.. ஒரு குறையும் கிடையாது…”

“ஆனா அவன் உன்னைத் தப்பா சொல்றான்… அதுவும் பொண்ணுங்க விஷயத்துல.. அதுவும் யாரை உன் ஃப்ரண்டோட தங்கை” சொல்லும் போதே குரலே சொன்னது அவளால் தாள முடியவில்லை என்று.

ஆம்! சிறு வயதில் இருந்து ரஞ்சனி அப்படிதான்.. ஈஸ்வர் அவளின் அண்ணன் என்ற கர்வமே உண்டு அவளுக்கு. யாரும் ஒரு வார்த்தை ஈஸ்வரை சொன்னால் உடனே சண்டைக்கு கிளம்புவாள். அப்படி ஒரு பிணைப்பு. அதனால் தான் சொல்லாமல் கொள்ளாமல் ரஞ்சனி திருமணம் செய்து வந்து நின்ற போது ஈஸ்வரால் தாள முடியவில்லை.

“முதலில் இவளை அண்ணன் என்ற மாயையில் இருந்து விடுவிக்க வேண்டும்.. நான் ஒன்றும் அவ்வளவு நல்லவன் இல்லையே.. எனக்காக எனக்காக என்று இவளின் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள.. பத்துவின் புறம் இவள் மனது திரும்ப வேண்டும்..”

“நண்பனின் தங்கை.. மனது போனால் என்ன செய்ய முடியும்… நான் என்ன போ போ என்றா சொன்னேன்.. போகவேண்டாம் என்று என்ன சொன்னாலும் போகிறது.. நான் என்ன செய்வேன்?” என்று தான் ஈஸ்வருக்கு அப்போது தோன்றியது..

“சொல்லிட்டுப் போறான்! அது நிஜமாக் கூட இருக்கலாம் இல்லையா?”

“என்ன?” என்று அதிர்ந்து பார்க்க..

“எஸ்! வர்ஷினி அழகா இருக்கா.. சோ நான் அவளை சைட் அடிச்சு இருக்கலாம்.. மே பீ பாய்ஸ் சைட் பாய்ஸ்க்கு தானே தெரியும். அதனால பத்து அப்படிச் சொல்லியிருக்கலாம்.. உன்னை யாரவது தப்பா பார்த்தா நான் கண்ணை நோண்டிடுவேன் இல்லையா?”

“சும்மா பார்க்கறதுக்கும் தப்பா பார்க்கறதுக்கும் வித்தியாசம் இருக்கு விஷ்வா”

“எஸ்! நான் தப்பா தான் பார்த்தேன்! பார்க்க மட்டுமில்லை நடக்கவும் செஞ்சேன்!” என்று கத்த வேண்டும் போல ஒரு உந்துதல்.. இந்த நல்லவன் வேஷம் வேண்டாம் என்று தோன்றியது.. உள்ளுக்குள் தின்ன ஆரம்பித்தது..

அந்தக் க்ஷணத்தில் தங்கையாக மட்டும் இல்லாமல் இருந்தால் நிச்சயம் சொல்லியிருப்பான்.. தங்கை என்ற உறவை முன்னிட்டே மாற்றினான்.

“அதுதான் நானும் சொல்றேன்” என்று சொல்லிப் பேச்சையே மாற்றினான். “இது சும்மா இல்லை, அவன் உன்னோட கணவன்.. உனக்கு அவனைப் பிடிச்சு தான் ஆகணும்.. கல்யாணம்ன்றது வாழ்க்கையில ஒரு முறை தான் ரஞ்.. உனக்கு அப்படித்தான் இருக்கணும்!” என்றான் ஸ்திரமாக.

“எப்பவும் நீ உன்னை, என்னை, நம்ம வீட்டை, நம்ம பைனான்ஸ், இப்படியே நினைச்சிட்டு இருக்க.. இனி நீ அதிகமா நினைக்க வேண்டியது பத்துவை தான்”

“பணத்துக்காக என் தங்கையை இவங்க கல்யாணம் பண்ண கேட்பாங்களான்றது தான் என் கோபம்… அது உண்மைன்னு ஆக்கிடாத… கல்யாணம் அந்த சமையத்துல எதுக்காக வேணா நடந்திருக்கலாம். அதுல இனிமே நீயும் பத்துவும் மட்டும் தான்.. அவன் கிட்ட என்ன சொல்லி உடனே கல்யாணம் பண்ணின?”

“அது! அது! ஃபைனான்ஸ்ல ரொம்ப ப்ராப்ளம் இருக்கு. ஆனாலும் நீ பணம் வாங்க மாட்ட! இப்ப நம்ம கல்யாணம் நடந்தா அப்புறம் வேற வழியில்லாம வாங்கிப்பன்னு சொன்னேன். அப்புறம் இந்த அஸ்வின் தான் நம்ம ஃபைனான்ஸ்க்கு எல்லா பிரச்சனையும் கொடுக்கிறான். அவனையும் மிரட்டி வைக்கணும்ன்னு சொன்னேன்!”

மெல்லிய புன்னகையுடன் “பத்துக்கு உங்க கல்யாணம் நடந்தாலும் நான் பணம் வாங்க மாட்டேன்னு தெரியும்.. ஆனாலும் அதைக் காட்டிக்காம கல்யாணம் செஞ்சிருக்கான்னா உன்னை பிடிச்சதுனால, அந்த சேன்ஸ் மிஸ் பண்ண இஷ்டப் படாததுனால.. அவனுக்கு உன்னை பிடிச்சிருக்கு, இதை மட்டும் மனசுல வை… உனக்கும் அவனைப் பிடிக்கும்.. எனக்கு உன்னோட டேஸ்ட் தெரியும்டா.. கண்டிப்பா உனக்கு அவனை பிடிக்கும்”

“வேற எதையும் நினைக்காத ஓகே..” என்றான் சிறு பிள்ளைக்கு சொல்வது போல..

“இன்னம் சொல்றேன், நிறைய ப்ராப்ளம்ஸ் வரலாம்.. எது வந்தாலும் நீ பத்து கூட தான் நிக்கணும்…” சொன்னவனுக்கு நிச்சயம் எதுவும் முடியப் போவதில்லை என்று தோன்றியது.

அண்ணன் சொன்னதற்கு “இருப்பேன்” என்பது போல தலையசைத்தவள், “இந்த அஸ்வினை அரஸ்ட் செஞ்சிருக்காங்களாமே. எதுக்கு அவன் எங்கேன்னு தெரியலையாமே? ஐஷ் சொன்னா!”

“தெரியலை? உன் மாமனார் தான் செஞ்சிருக்கணும்.. வர்ஷினியை இழுத்தா சும்மா விட்டுடுவாரா என்ன?”

“என்ன?” என்று அவள் விழி விரிக்க..

“எஸ்! அவர் தான்! நம்ம கைல எதுவும் இல்லை.. இப்போதைக்கு அவனால எந்தப் பிரச்சனியும் வராது.. நீ அமைதியா உன் வேலை பார்..”   என்றான்.

மனது ஈஸ்வருக்குத் தெளிவாக சொல்லியது, இப்போது இல்லை என்றாலும் பின்னால் கண்டிப்பாக வரும் என்று. ஆனால் அதைச் சொல்லி ரஞ்சனியை பயப்படுத்த விரும்பவில்லை. வரும் போது பார்த்து தான் ஆக வேண்டும் என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டான்.

ஒரு வழியாக ரஞ்சனியை சமாதானம் செய்து கிளப்பி விட்டான். ஆனால் அதன் பிறகு ஒரு பொட்டு உறக்கமில்லை அவனுக்கு.. மனது அலைபாய துவங்கியது…

வர்ஷினியின் நினைவு பொங்கியதில் இருந்து வேண்டும், அவள் நிச்சயம் வேண்டும் என்று மனது பிடிவாதம் பிடிக்கத் தொடங்கியது. இவ்வளவு நாட்களாக குற்ற உணர்ச்சியில் தவித்த மனம்.. இப்போதும் தவிக்கும் மனம்… இருந்தாலும்.. ஒரு புறம் “நான் என்ன எல்லோரிடமுமா நடந்தேன், காதல் சொன்ன பெண்ணிடம் கூட  இப்படி நடந்ததில்லை” என்று நியாயபடுத்தத் துவங்கியது.

கிட்ட தட்ட இரண்டு நாட்கள்.. அலைபுருதல் நிற்கவில்லை.. என்ன செய்த போதும்… எதிலும் கவனம் செல்ல வில்லை. கண்களில் அவளைப் பார்த்தாலாவது மனது சமன்படுமா அவளைப் பார்க்கலாமா என்று அவளின் வீடு இருந்த புறம் காரை செலுத்தி, ராஜாராம் ஏற்கனவே சந்தேகத்தில் இருக்கிறார் இன்னம் பிரச்சனை வளர்க்காதே என்று சொல்லி முயன்று திருப்பியிருந்தான்.

ஒரு முறை அல்ல பலமுறை… ஏதாவது சைக்கியாட்றிஸ்ட் சென்று பார்க்கலாமா நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற எண்ணம் தான்.

ஐஸ்வர்யாவின் ஞாபகம் எங்குமே வரவில்லை. இதற்கு பல முறை அவளின் தொலைபேசி அழைப்பு.. அது வரும் நேரம் மட்டுமே அவளின் ஞாபகம்.. அந்த ஃபோனை கட் செய்யும் போது அவளின் ஞாபகங்களும் கட் செய்தான்.

அஸ்வின் காணமல் போன தினத்தில் இருந்து ஐஸ்வர்யா பலமுறை ஈஸ்வருக்கு அழைத்து விட்டாள் என்ன என்று தெரிந்து கொள்ள.. அவன் எடுக்கவே இல்லை.

வர்ஷினி மனது முழுவதும் ஓடிக் கொண்டிருக்க.. ஐஸ்வர்யாவிடம் சாதரணமாக பேசுவது கூடத் தவறு போல உணர்ந்தான்.  ஒருவகையில் தான் அவளுக்கு இல்லை என்று தெரியப் படுத்த நினைத்தான். தன்னைக் கெட்டவனாக நினைத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டான்.

மனது ஒரு புறம் அவனிடம் தெளிவாக சொன்னது “நீ கெட்டவன் தான்.. அதில் என்ன சந்தேகம் உனக்கு!” என்று

“ஆம்! நான் கெட்டவன் தான் சுயநலவாதி தான்.. ஐஸ்வர்யா எனக்கு வேண்டாம். அவளுக்கு உண்மையாக இருக்க முடியாது என்று புரிந்து விட்டது.. இனி யாருக்கு நான் நல்லவனாய் இருக்க வேண்டும்.. தேவையில்லை.. நடப்பது நடக்கட்டும்!.. என் மனதை கட்டுப் படுத்த முடியவில்லை”

“முடியாத விஷயத்துடன் போராடாதே! விட்டுவிடு!” கட்டவிழ்த்து விட்டான்!!!

ஐஸ்வர்யா ரஞ்சனியிடம் பேச அவளுக்கும் தெரியவில்லை. சமீபகாலமாக ஈஸ்வர் ஐஸ்வர்யாவிடம் பேசவேயில்லை.. ரஞ்சனியும் பட்டும் படாமலும் தான் பேசுகிறாள்.. என்னவோ தனித்து நின்று விட்டடது போல ஐஸ்வர்யாவிற்கு ஒரு தோற்றம்.

இந்தப் பிரச்சனைகள் எல்லாம் வந்த பிறகு அஸ்வினிடம் சரியாக பேசுவதில்லை. அவனும் பேசுவதில்லை இவளும் பேசுவதில்லை ஆனாலும் உடன் பிறந்தவன் அல்லவா.. முன்பானால் அவனே எங்கேயோ போய் விட்டான்.. இப்போது அவனைக் காணவில்லை.

இரண்டு நாட்களாக தவித்த தவிப்பு.. அந்த பேப்பர் செய்தியில் முடிவிற்கு வந்தது.

அஸ்வினை ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்திருந்தனர். ஒரு வருடத்திற்கு வெளியே வர முடியாத பிரிவில் புழல் சிறையின் மறுநாள் அடைக்கபட்டிருந்தான். இரண்டு நாட்கள் கழித்து பத்திரிக்கையில் ஒரு மூலையில் அஸ்வின் படத்தோடு வெளியே வந்திருந்தது. பெரும் பாலானோர் கண்களுக்கு தெரியவில்லை.. ஆனால் குடும்பத்தினருக்கு தெரியும் தானே…

ஒரு வருடத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது என்று விட்டனர்.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்ற பழமொழி இப்படி தான் திரிந்து வந்ததோ..

ஆனால் தவிப்புகள் தொடர ஆரம்பித்தது.. அந்த பேப்பர் செய்தியை காட்டியது அவளின் தந்தை..

“ஏன் இப்படி? யாரு செஞ்சா?” என்று சோர்வாக ஐஸ்வர்யாவின் அம்மா கேட்க..

“ரூபா வீட்ல செய்யலை !ஆனா அவங்க புது சம்மந்தி செஞ்சிருக்கான். தோ! இந்த பேப்பர் பாரு! இதுதான் காரணம்!” என்று ஈஸ்வரும் வர்ஷினியும் இருந்த பேப்பரை தூக்கிப் போட்டார்…

“இது வர்றதுக்கு காரணம் நம்ம அஸ்வின் போல, அதனால தான் இப்படி ஆகிடுச்சு..”

“இப்போ என்னைக் கூப்பிட்டு மிரட்டி அனுப்பியிருக்கான். உன் பையனை கொல்லாம விட்டனேன்னு சந்தோஷப்படு.. அவன் வெளிய வந்தா சொல்லி வைன்னு மிரட்டுறான்” என்றார் சோர்வாக அவரும்.

ராஜாராம் பேசிய பேச்சுக்களில் பயந்து விட்டார் என்பது தான் உண்மை.. ஈஸ்வரை அவனின் வீட்டினரை தெரியும் என்பதால் பயம் இருந்தாலும் அவ்வளவாக இல்லை. இப்போது மிகுந்து பயந்து இருந்தார்.

“அவனைக் கொல்றது எனக்கு பெரிய விஷயம் கிடையாது! செஞ்சிருக்க முடியும்.. ஒரு வாய்ப்பு கொடுக்க நினைச்சு தான் இதை மட்டும் செஞ்சேன்னு சொல்றான்..”

“அவன் வெளில வந்தும் ஏதாவது செஞ்சான்.. அடுத்த நிமிஷம் செத்துப் போவான்.. என் ஆளுங்க எப்பவும் இனிமே அவன் மேல ஒரு கண்ணு வெச்சிருப்பாங்கன்னும் சொல்றான். பணபலமும் இருக்கு அரசியல் பலமும் இருக்கு..”

எதுவும் யாரும் செய்ய முடியாது என்று அவர் பார்த்த வக்கீல்கள் அனைவரும் கையை விரித்து தான் விட்டனர்.

கண்டிப்பாக இனி அஸ்வின் ஒரு வருடம் ஜெயில் தான் இருக்க வேண்டும் என்ற உண்மை அவரை நன்றாகத் தாக்கியது.

ஆனால் அப்பாவும் அம்மாவும் பேசிய எதுவும் ஐஸ்வர்யாவின் காதுகளில் விழவில்லை.. அந்த போட்டோக்களை பார்த்தபடி வெறித்து அமர்ந்திருந்தாள்…

எப்படி அந்தப் பெண்ணை ஈஸ்வர் பார்த்துக் கொண்டிருக்கிறான்.. அவனே நேரில் வந்து இல்லை என்றாலும் கண்டிப்பாக அது உண்மையில்லை என்று ஐஷ்வர்யாவிற்கு நன்றாக தெரிந்தது.

“என் பின்னால் எப்படி சுற்றினான். நினைக்க கண்களில் நீர் மறைத்தது, என்னை சுற்றி என்ன நடக்கிறது, எதுவும் தெரியாமல் நான் இருக்கிறேன். நான் என்ன முட்டாள் பெண்ணா?” நினைக்க நினைக்க ஆற்றாமை பொங்கியது.

ஆனால் அவளுக்குத் தெரியவில்லை ஈஸ்வர் நான் வர்ஷினியை பார்க்கவில்லை என்று சொல்லப் போவது இல்லை என்று.

அந்தப் படங்களை பார்த்த பிறகு ஈஸ்வரை பார்த்தே ஆக வேண்டும் போல ஒரு உந்துதல்.. “நான் இந்த காஃபி ஷாப்பில் வெயிட் செய்வேன்.. எவ்வளவு நேரமானாலும் நீ வராமல் போக மாட்டேன்” என்று தொடர்ந்து மெசேஜ் அனுப்ப..

“பார்த்து விடலாம்! முடித்து விடலாம்!” என்ற எண்ணம் தான் ஈஸ்வருக்கும்..

“வருகிறேன்!” என்று பதில் அனுப்பினான்.

நல்லவனாய் இருந்த நிலை மாறி தடம் புரண்ட பிறகு..  இப்போதைக்கு வர்ஷினி அவன் வாழ்வில் வேண்டும் என்று தான் தோன்றியது. ஏதாவது செய்யாவிட்டால் பைத்தியமாகி விடுவோம் என்றே தோன்றியது.  நல்லவனாய் வேடமிடலாமா? கெட்டவனாகவே இருக்கலாமா? என்பது மட்டுமே அவனுள் இருக்கும் கேள்வி.. ராஜாராமை எப்படி அணுகுவது..?

செய் அல்லது செத்து மடி!!!   

 

Advertisement