Advertisement

அத்தியாயம் இருபத்தி மூன்று :

சூதாய் இருந்தால் என்ன?                                                                                                     அது தீதாய் இருந்தால் என்ன?

எல்லோரும் பார்வையும் வர்ஷினியைத் துளைத்தது. பத்மநாபனது “நான் படித்துப் படித்து சொன்னேனே கேட்டாயா?” என்று குற்றமே சாட்டியது.

ஈஸ்வரின் மனம் வேகமாகக் கணக்குப் போட்டது.. “இது சீ சீ டீ வீ படங்கள் அல்ல, ஏனென்றால் எல்லாம் தெளிவான கலர் படங்கள்… யாரோ எடுத்து இருகின்றனர்”.

எடுத்து உடனே கிளம்பிவிட்டனர்.. அவர்கள் இருவரும் ரூமில் இருந்து வெளியே வரும் வரை இல்லை என்று புரிந்தது.

படங்களில் எல்லாம் ஈஸ்வர் தான் வர்ஷினியை பார்த்திருந்தான். வர்ஷினி பார்ப்பது போல இல்லை.

அவளை யாரும் தவறாகப் பார்ப்பதை க்ஷணமும் விரும்பாதவன்.. “இதுல அவ தப்பு எதுவும் இல்லை… தனியா போறா அந்த நேரத்துல, யாரும் கூட இல்லைன்னு நான் போனேன். அது இப்படி வரும்னு கொஞ்சமும் யோசிக்கலை..” என்றான் தாழ்ந்த குரலில் அங்கிருப்பவர்களுக்கு மட்டும் கேட்குமாறு.

“என்னோட பிரச்சனையில அவளையும் இழுத்து விட்டுடேன் போல” என்றான்.

“என்னவோ எல்லோரும் தன்னைப் பார்த்து பேசுகிறார்களோ” என்று யோசித்தவள் மெதுவாக மாடியை விட்டு இறங்கி வர..

“அவளுக்குத் தெரிய வேண்டாம்” என்றான் அவசரமாக ஈஸ்வர்.. ராஜாராமை பார்த்து.

அதற்குள் வர்ஷினி இறங்கி வந்திருக்க.. “என்னப்பா எல்லோரும் என்னையே பார்க்கறீங்க?” என்றாள். கண்களில் ஒரு இனம் புரியாத கலக்கம்.

“ஒன்னுமில்லைடா.. சும்மா பேசிக் கிட்டே பார்த்தோம்” என்றார்.

“தாசண்ணாவை ஏன் அடிச்சீங்க?”

அவருக்கு சட்டென்று என்ன சொல்வது என்று தெரியவில்லை.

“அது என்ன பேப்பர் எல்லோரும் பார்த்தீங்க..?”

எல்லோரும் மௌனமாகத்தான் நின்றனர். அவர்கள் எல்லோரும் நிற்கும் போது தான் பேசுவது.. அதிகப் பிரசிங்கித்தனம் என்று தோன்ற ஈஸ்வர் அமைதியாக இருந்தான்.

“ஒன்னுமில்லைன்னு சொல்றேன்ல பாப்பா” என்று ராஜாராம் அதட்ட..

“இப்போ நீங்க என்னை ஏன் அதட்டுறீங்க? என்ன விஷயம்?” என்று வர்ஷினி கேட்ட விதம், ராஜாராமின் அதட்டலுக்கு ஈடு கொடுத்தது. கலக்கம் எல்லாம் மறைந்து எனக்கு என்ன என்று தெரிந்தே ஆக வேண்டிய பிடிவாதம்.

“அதுதான் அப்பா ஒன்னுமில்லைன்னு சொல்றாங்க தானே.. சும்மா இல்லாததை சொல்லுங்கன்னு சொன்னா? என்ன சொல்வாங்க?” என்று பத்மநாபன் இடையில் வர..

“நீங்க யாரும் எப்பவும் என்கிட்டே எதுவுமே சொல்றது இல்லை.. அப்பாக்கு உடம்பு சரியில்லாத போது கூட அப்படித் தான்” என்று அவனிடமும் வார்த்தையாடினாள்.

கமலா தான் நிலைமையைக் கையாண்டார்.. “அவங்க ஏதோ முக்கியமா பேசிட்டு இருக்காங்க… இதுல நீயேன் இப்ப திடீர்ன்னு.. வா! வா! நீ வா!” என்று அவளைக் கை பிடித்து இழுக்க..

நேராக தாஸிடம் சென்றவள்.. “தாசண்ணா! ஏதாவது இருந்தா சொல்லிடுங்க! அப்பா ஏதோ பாப்பான்னு என்னைப் பத்தி தான் உங்க கிட்ட பேசினார்” என்று கைநீட்டி அவள் பேசிய விதம் ஏதோ விட்டால் தாஸை அடித்து விடுவாள் போல இருந்தது.

“ஒன்னுமிலைங்க பாப்பா” என்றான் அவனும்..

“என்ன பாப்பா! நீங்க கை நீட்டிப் பேசறீங்க! உள்ள போங்க!” என்று ராஜராம் அதட்ட.. பத்மநாபன் “நீ வா!” என்று அவளை மேலே இழுத்துப் போனான்.

அதுவரை வர்ஷினி ஈஸ்வரைப் பார்க்கவில்லை.. போகும் போது வர்ஷினி ஈஸ்வரைப் பார்த்த பார்வை “ஏதாவது வெளிய வந்தது உன்னை என்ன செய்வேன் பார்” என்று ஸ்பஷ்டமாக மிரட்டியது. ஆனால் மிக சில நொடிகள்..

பார்வையை திருப்பியவள் பத்மநாபனிடம் “கையை விடுங்க அண்ணா.. நான் போயிக்கறேன்!” என்று அவனையும் அதட்டி கையை விடுவித்து சென்றாள்.

அப்போது அந்தக் க்ஷணம் விஷயம் அவளுக்கு தெரிய வேண்டாம் என்றே எல்லோரும் நினைத்தனர்.

அதையும் விட “இதுல அவ தப்பு எதுவும் இல்லை” என்று ஈஸ்வர் ஒப்புக் கொடுத்த விதம்.. கூடவே அவளுக்குத் தெரிய வேண்டாம் என்று அவளுக்காகப் பார்த்தது ராஜாரமிற்கு அவன் மேல் இன்னும் மரியாதையை அதிகப்படுத்தியது.

வர்ஷினி சென்றதும்.. “இப்படி ஆகும்னு எனக்குத் தெரியாது… தெரிஞ்சிருந்தா உங்க யாரையாவது கூப்பிட்டு விட்டிருப்பேன்” என்று கை குவித்து மன்னிப்பு கேட்டான்.. நடந்த இந்த நிகழ்வு, கூடவே அவனின் செய்கை.

“அட நீ என்னப்பா… நீ என்ன தெரிஞ்சா செஞ்ச?” என்று முரளியின் தாத்தா சமாதானம் செய்ய..

அதுவரை பேசாதிருந்த நமசிவாயம் “என்ன விஸ்வா? நம்மைச் சுத்தி இவ்வளவு பிரச்சனை இருக்கும் போது கவனமா இருக்க வேண்டாமா.. பொண்ணுங்க விஷயம் இப்படி பண்ணிட்டியே?” என்று மகனை கடிந்தார்.

தலைக் குனிந்து தான் நின்றான். ஈஸ்வர் அப்படி நிற்பதை பார்த்ததும்.. “எவனாயிருந்தாலும் தொலைச்சிடலாம்!” என்று முரளி கோபமாகப் பேச,

“வேண்டாம்!” என்றான் ஈஸ்வர் உடனே…

“இது யாரோ எனக்கு வேண்டாதவங்க செஞ்ச வேலை.. இதனால நம்ம டென்ஷன் ஆகறோம்னு தெரிஞ்சா மேல மேல செய்வாங்க… திரும்ப திரும்ப வர்ஷினியை இழுக்கலாம்.. அதனால இந்த விஷயத்தை நம்ம பெருசு பண்ண வேண்டாம். நம்மை பாதிச்ச மாதிரி காட்டிக்க வேண்டாம்!”

“நாங்க என்ன அரசியல்வாதியா இல்லை நடிகரா.. எதுவும் இல்லை… எத்தனை பேருக்கு எங்களைத் தெரியும்.. இதை பெருசு பண்ண வேண்டாம்.. உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது கேட்டா..

வர்ஷினி மாடலிங் பண்றா சொல்லிடுங்க… நீங்க யார்கிட்டயும் தயங்கி பேச வேண்டாம்” என்றவன்..

“இப்போதைக்கு திரும்ப இந்த மாதிரி எதுவும் வராம பார்த்துக்கறது தான் முக்கியம். எவன்னாலும் எங்க போயிடப் போறான்… பார்த்துக்கலாம்.. நான் பார்த்துக்குவேன்” என்றான் தீவிரமாக..

“திரும்ப திரும்ப ஏதாவது செஞ்சு மாட்டிக்காத” என்று அவனை அதட்டிய முரளி… “கண்ணுக்குத் தெரியாதவன் கிடையாதே நம்ம எதிரி.. யாரு அந்த அஸ்வின்.. எங்க வீட்டுப் பொண்ணை எல்லாம் இழுத்துட்டான் இல்லை.. அவங்க வீட்ல பொண்ணுங்க இல்லையா?”, என்று சொல்ல.

“முரளி!” என்று ஈஸ்வர் கத்த… “முரளிண்ணா  நீங்க எதுவும் பண்ணக் கூடாது!” என்றாள் ரஞ்சனியும் உடனே. ஜகன் நமஷிவாயம் இருவர் முகத்திலும் கூட பதட்டம்.

முரளி அவர்களைப் பார்க்க.. “ரூபாவோட தங்கைடா.. ரஞ்சனிக்கு ரொம்ப க்ளோஸ் பிரெண்ட்.. அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா திரும்ப நாம தான் போய் நிற்கணும்…” என்று ஈஸ்வர் சொல்ல,

“அவ எங்கள்ள ஒருத்தி முரளிண்ணா, அவளுக்கு எதுவும் ஆகக் கூடாது” என்றாள் ரஞ்சனியும்.

“அதுதான் அந்த அஸ்வின் உங்க கிட்ட விளையாடறான்… நீங்க அவங்களை எதுவும் பண்ண மாட்டீங்கன்னு” என்று முரளி சொல்ல..

“யாரும் எதுவும் பண்ண வேண்டாம். என் பொண்ணு விஷயம் எனக்குப் பார்த்துக்க தெரியும். எல்லாம் அவங்க அவங்க வேலையை பாருங்க” என்று சொன்ன ராஜாராமின் குரலில் அவ்வளவு தீவிரம்…

“சின்னப் பசங்க விளையாட்டு இல்லைன்னு நான் காட்டுறேன்!” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

அவர்களின் பணத்தைப் பற்றிய பேச்சு வார்த்தை முடியவில்லை. இப்போது அதை பேசவும் முடியவில்லை. “இன்னொரு நாள் வர்றோம்!” என்ற ஈஸ்வர் மீண்டும் “சாரிப்பா” என்றான்.

அவனின் கேடுகெட்ட செயலை நினைத்து அவன் வருந்திக் கேட்க.. ராஜாராமிற்கு என்னவோ தன்னால் அந்த செய்தி வந்து விட்டது என்று அவன் அவ்வளவு வருத்தப் படுகிறான் என்று தோன்றியது. ஆனாலும் ஈஸ்வர் முகத்தைப் பார்த்தால் அவனே குற்றம் செய்த ஒரு தோற்றம் குழம்பிப் போனார். ராஜாராம் மிகுந்த புத்திசாலி ஏதோ ஒன்று இதையும் மீறி இருப்பதாக தோன்றியது.

ஒரு மௌனமான சூழல்..

ஈஸ்வர் தன் செயலை நினைத்து வெட்க.. அது தெரியாத அனைவரும்.. இந்நிகழ்வுக்காக வருந்துகிறான் என்று நினைத்தனர்.

நின்புகழ் நின்னை மறைத்த நின்செயல் நின்னைக் கொல்லும்!!!

ஈஸ்வர் ஜகனுடனும் அப்பாவுடனும் வீடு திரும்பினான். நிச்சயம் வேறு புகைப் படங்கள் இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது.. இருந்தால் அதைத் தான் அவர்கள் போட்டிருப்பர் என்றும் தோன்றியது.

அஸ்வினை துவம்சம் செய்ய வேண்டும் என்ற ஆத்திரம் கிளர்ந்தாலும்.. இப்போதைக்கு வேண்டாம் பொறு.. நான் நினைப்பதை விடவும் அவன் பெரிய கிரிமினல் என்றே தோன்றியது.

இப்போதைக்கு கேட்கப் போய் அவன் மீண்டும் வர்ஷினியை இழுத்து விட்டாள்.. அவனால் வர்ஷினியை எதிர்கொள்ள முடியாது. அதனால் அமைதியானான். அதுவுமன்றி ராஜாராம் பார்த்துக் கொள்வார் என்றும் தோன்றியது.

இங்கே ராஜாராமிடம் “அப்பா அவகிட்ட விஷயத்தை மறைக்க முடியாதுப்பா… அவ ஃபிரண்ட்ஸ்க்கு தெரிஞ்சா சொல்லிடுவாங்க.. நிறைய ஃபிரண்ட்ஸ் கூடப் பேசறா பழகறான்னு நம்ம தான் இந்த லீவ் வரை நீ அமைதியா இருக்கணும்.. இது உன்னோட டைம், உன்னோட ஸ்பேஸ்ன்னு, அதை இதை சொல்லி கண்ட்ரோல் செஞ்சிருக்கோம்”.

“நீ அவங்களுக்கு அடிக்ட் ஆகற அப்படின்னு ஒரு வார்த்தையை நான் உபயோகிச்சதால தான், நான் யாருக்கு அடிக்ட் இல்லை, என்னால பேசாம இருக்க முடியும்ன்னு சொல்லி இப்போ பேசாம இருக்கா”,  என்றான் பத்மநாபன்.

“விடுடா பார்த்துக்கலாம்.. எவ்வளவோ நடக்குது, இது ஒரு விஷயமில்லை… இப்போ விஷயமெல்லாம் யாரும் திரும்ப இந்த மாதிரியோ இல்லை இதை விட மோசமாவோ பண்ணிடக் கூடாது..” என்று தாஸை பார்த்த பார்வை..  “நடந்தது நீ தொலைஞ்சடா” என்று மிரட்டியது.

மேலே சென்ற வர்ஷினிக்கு ஏதோ தன்னிடம் எல்லோரும் எதையோ மறைப்பது போன்ற உணர்வு..

மனது சோர்வாக உணர்ந்தது..

இத்தனை நாட்கள் பள்ளியியில் இருந்த போதோ ஹாஸ்டலில் இருந்த போதோ தனிமை உணர்ந்ததில்லை, ஏனென்றால் அவளின் நட்பு வட்டம், எப்போதும் சுற்றி யாராவது இருப்பர்.

இப்போது ஈஸ்வருடனான அவளின் விஷயம், இது அவளுடைய மிகவும் பர்சனல்! யாரிடமும் இதை பகிரவும் மாட்டாள்! ஆனால் வேறு பேசினால், ஆட்கள் இருந்தால், மனது திசை திரும்பும். இப்போது அதற்கும் வழியில்லை.

இத்தனை பேர் அவளைச் சூழ்ந்திருக்க…  தனிமையாய் இருந்தும் உணராத தனிமையை முதல் முறையாக உணர்ந்தாள். வலித்தது! எங்கென்றே தெரியாமல் வலித்தது! உடலா! உள்ளமா! தெரியவில்லை.

அமைதியாகப் படுத்துக் கொண்டாள்.

யார் வந்து பார்த்த போதும் விழிக்க வில்லை. யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை. மதிய உணவும் உண்ணவில்லை.. “அப்பா கூப்பிடறாங்க” என்று மாற்றி மாற்றி அம்மா அண்ணி அண்ணன் என்று யார் வந்த போது வரவில்லை, பதிலும் பேசவில்லை.

இரவு வரை ரூமை விட்டு வெளியில் வரவில்லை. எப்போதும் இப்படி எல்லாம் செய்ய மாட்டாள்.

“ஒன்னுமில்லைன்னு சொல்றோம்! எவ்வளவு பிடிவாதம்!” என்று தான் எல்லோர் மனதிலும் தோன்றியது.

தாத்தா ஒரு படி மேலே போய் மகனிடம்.. “ராஜா நீ இல்லாத ஒரு சூழ்நிலையில இவளை சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்.. பேசாம இவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிடு..”

“அப்பா அவ சின்னப் பொண்ணு!”

“என்ன சின்னப் பொண்ணு! அதுதான் ப்ளஸ் டூ முடிச்சிட்டா, பதினெட்டு வயசாகிடுச்சு, இவ இவ்வளவு பிடிவாதம் பிடிக்கும் போது யாரு இவளைப் பார்த்துக்குவா.. கூடப் பொறந்தவங்களையே இந்தக் காலத்துல யாரும் பார்த்துக்கறது இல்லை” என்றார்.

“ரெண்டு பசங்களுக்கும் கடமையை முடிச்சிட்ட.. இவளுக்கும் முடிச்சிடு… யார் பேச்சையும் கேட்பான்னு தோணலை!” என்றார்.

அப்படி ஒன்றும் பிடிவாதம் பிடிப்பவள் எல்லாம் இல்லை வர்ஷினி, தன் உணர்வுகளைக் கூட யாரிடமும் அதிகம் காட்ட மாட்டாள். அந்த வயதில் இருக்கும் மற்ற பிள்ளைகளை விட இவள் எவ்வளவோ பிடிவாதம் குறைவு தான்

முதல் முறையாக பிடிவாதம் ஒன்றைக் காட்ட.. அது இப்படி திரிய ஆரம்பித்தது.

பிடிவாதம் பிடிக்காத பெண்ணை, பிடிவாதம் என்று சொல்லி, அவளின் பிடிவாதத்தை அதனின் அதிகப்படியான எல்லைக்கு கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.

இரவு உணவிற்கு கீழே இறங்கி வந்தவளிடம்… “இத்தனை பேர் கூப்பிடறாங்க! அது என்ன வராம அவ்வளவு பிடிவாதம்!” என்று வேறு தாத்தா கேட்க..

அவர் என்ன பேசினாலும் ஒரு வார்த்தைக் கூட எதிர்த்து பேசாத வர்ஷினி, “என்ன? என்ன பிடிவாதம் பிடிச்சேன்?” என்று அவரிடம் எதிர் கேள்வி கேட்க..  அந்த பாவனையிலும் ஒரு எதிர்ப்பு.

பத்மநாபன் உடனே “என்ன வர்ஷினி இது” என்க,

“என்ன, என்ன? அவர் கேள்வி கேட்டார், நான் பதில் சொன்னேன்!” என்றாள் அலட்சியமாக..

அது அவனுக்கு கோபத்தைக் கொடுக்க… திரும்ப கோபமாக அவன் பேச போக.. பத்மநாபனிடம் ஒற்றை விரல் வாயின் மேல் வைத்து பேசாதே என்று ராஜாராம் சைகைக் காட்ட.. அமைதியானான்.

“பாப்பா நம்ம வெளில போகலாமா?” என்றார் ராஜாராம்.

“வெளிலயா எங்க?” என்றவள் கூடவே, “உங்களுக்கு உடம்பு சரியில்லை! வேண்டாம்!” என்றாள்அவரைப் பார்த்தவாரே.

“நான் நல்லா இருக்கேன் போகலாம்!” என்று அவர் சொல்ல..

“இல்லை! நீங்க டையர்டா தெரியறீங்க” எனச் சொல்ல.. அப்போது தான் எல்லோரும் அவரை ஊன்றி கவனித்தனர். ஆம்! ராஜாராம் களைப்பாகத் தான் தெரிந்தார்.

“அப்பா வேண்டாம்!” என்று மகன்கள் சொல்ல, பார்வையால் எல்லோரையும் அடக்கியவர்.. “போகலாம் பாப்பா!” என்றார்.

“சரி! சாப்பிட்டுட்டு போகலாம்! பசிக்குது!” என்று அவள் சொல்ல.. அடுத்த நிமிடம் மகளின் முன் தட்டோடு கமலாம்மா நிற்க…

அவசரமாக அள்ளி வாயில் போட்டுக் கொண்டவள் “போகலாம்!” என்றாள்.

“போய் மாத்திட்டு போ வர்ஷினி!” என்று ஷாலினி சொல்ல.. ஒரு த்ரீ ஃபோர்த்ஸ் பேன்ட், டீ ஷர்டில் இருந்தாள்.

“அண்ணி! திஸ் இஸ் ஓகே!” என்று வர்ஷினி கிளம்ப,

எங்கே போகிறார்கள் இவர்கள் என்று வீடு மொத்ததமுமே பார்த்தது. யாரிடமும் எங்கே போகிறார் என்று ராஜாராம் சொல்லவில்லை..

தாஸ் காரை ஓட்ட… கிளம்பினர்.

கடற்கரையில் கார் நிறுத்தி தாஸ் அகன்றுவிட..

“என்னப்பா?” என்ற மகளைப் பார்த்து..

“இது இன்னைக்கு பேப்பர்ல வந்தது!” என்று ராஜாராம் மகளிடம் பேப்பரை நீட்ட…

அதைப் பார்த்த வர்ஷினியின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி..

வேகமாக செய்தியை படித்தாள், வேறு எதுவும் படங்கள் இருக்கிறதா என்று பார்த்தாள். பின்பு தந்தையை எறிட்டவள், “காலையில எல்லோரும் இதைதான் பார்த்தாங்களாப்பா”

“ஆம்” எனத் தலையாட்ட..

“damn shit” என்றவள் தலையைப் பின்புறமாக சாய்த்துக் கண்களை மூடிக் கொள்ள..

“யாரும் உன்னைத் தப்பா நினைக்கலை” என்று அவசரமாக ராஜாராம் விளக்கம் சொல்ல..

“ஏன் நினைக்கலை? நேச்சுரலி இந்த மாதிரி ஒரு நியூஸ், எங்க பேர் போடலைன்னாலும் ஃபோட்டோவோட இருக்குது… நானும் ஃபங்க்ஷன் நடக்கற இடத்துக்கே வராம திரும்பப் போயிட்டேன்.. ரெண்டு பேருக்குள்ள ஏதோ இருக்குன்னு அப்போ ஏன் நினைக்கலை” என்று கேட்டாள்.

“அதுக்கு தான் பாப்பா, உங்களை இங்கே கூட்டிட்டு வந்திருக்கேன்.. என்ன நடக்குது உங்களுக்குள்ள..?”

மகள் என்ன கேள்வி இது என்பது போல பார்க்கவும்..

“இந்த ஃபோட்டோ பார்த்தவுடனே.. இது உனக்குத் தெரியணும்னு அவசியமில்லை. இது என்னோட தப்புன்னு சொன்னான்.. அதாவது உன்னை யாரும் எதுவும் சொல்லிடக் கூடாதுன்னு ஒரு துடிப்பு. நான் பார்த்தேன்”.

“ஓஹ்! ஈஸ்வர் சொன்னதால தப்பில்லைன்னு நினைச்சிடாங்களா!” என்றாள் அவரையே தீர்க்கமாக பார்த்தபடி..

“அச்சோ, பாப்பா! யாரும் உன்னை தப்பா நினைக்க மாட்டாங்க! அதை விடு! ஒரு வேலை அந்த போட்டோ அவனே கொடுத்திருப்பானோ!”

“சே! சே! மாட்டாங்கப்பா!” என்றாள் உறுதியாக.

“அப்போ என்ன தான் நடக்குது! காதலா? அப்படியேதாவது உங்களுக்குள்ள இருக்கா” என்று மீண்டும் கேட்க,

“இல்லைப்பா..” என்பது போல தலையசைத்தவள்,

“கண்டிப்பா நல்லதா எதுவும் நடக்கலை! ஆனா அதை என்னால யார்கிட்டயும் சொல்ல முடியாதுப்பா! its my very personal paa!” என்றாள் அவரையேப் பார்த்தபடி.

மகளின் இந்த பதிலில் திகைத்து அவளைப் பார்த்தார் ராஜாராம்.

Advertisement