Advertisement

அத்தியாயம் பத்தொன்பது :

சூழ்நிலைகளின் கைப்பாவைகள் தான் நாம்!!!

அன்று மாலை தான் பத்மநாபன் ரஞ்சனியின் வரவேற்பு… நாட்கள் வேகமாக ஓடின.

ஈஸ்வரும் பணத்திற்கு வெகுவாக முயன்று கொண்டிருந்தான். “ஓரிருவர்  ஓகே வாங்கிக்கொள் எவ்வளவு வேண்டுமானாலும் ஆனால் எங்களுக்கு என்ன லாபம்” என்று கன்சர்னின் ஷேர் கேட்டனர்.

“அது எப்படி முடியும்…?” அதுவரையிலும் அவனின் எண்ணம் ஈஸ்வர் பைனான்ஸ் அவனது… அவன் அடையாளம்… அதில் வேற்றாளுக்கு பங்குகள் கிடையாது… அதை விட முடியாது என்பது போலத் தான்…

முரளி வேறு ஒரு பக்கம், “உன்னை சிரமப்படுத்திக் கொள்ளாதே! பணத்தை வாங்கிக் கொள்” கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தான் என்று சொல்ல முடியாமல் கெஞ்சிக் கொண்டு இருந்தான்.

“டேய்! சொன்னா கேள்றா” என்று…

பணம் ஒரு பக்கம்…. இன்னம் அஸ்வின் என்ன செய்வானோ…. என்று ஒரு பக்கம்.. மனம் ஒரு நிலையில் இல்லை.

வரவேற்பு மிகுந்த பொருட்செலவில் மிகுந்த பிரம்மாண்டமாய் தான் ராஜாராம் ஏற்பாடு செய்திருந்தார். திருமணம் வீட்டினருக்கு தெரியாமல் நடந்த குறையை இதன் மூலம் நிவர்த்தி செய்ய விரும்பினார்.

அது மட்டுமன்று ஈஸ்வருக்கும், உங்கள் பெண்ணை நாங்கள் எவ்வளவு நன்றாக வைத்துக் கொள்வாம் என்று அதன் மூலம் காட்ட விரும்பினார்.

அந்தோ பரிதாபம் ஈஸ்வருக்கு வரவேற்பிற்கு வரும் எண்ணமே இல்லை என்று அவருக்கு எப்படி தெரியும்.

ஈஸ்வர் வீட்டில் மிக நெருங்கிய சொந்தங்களை மட்டுமே அழைத்து இருந்தனர். பெரிய அளவில் அழைக்கவில்லை. ஈஸ்வரின் ஒப்புதல் இல்லாமல் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.

வீட்டினர் அவனின் முகத்தைப் பார்ப்பது, எப்படிக் கேட்பது என்பதாக மாற்றி மாற்றி அவனைப் பார்த்து சென்று கொண்டிருந்தனர். யார் முகத்திலும் சுரத்தில்லை.

காலையில் வந்த ஜகனின் அக்கா சத்யா அவனிடம் வந்து “விஷ்வா, நாம அவளுக்கு என்ன செய்யப் போறோம்” என்றார்.

“என்ன? என்ன செய்யணும்?”

“ம்! சீர் செய்யணும் டா”

“நம்மளால எதுவும் முடியாதுன்னு தான் அவ போய்க் கல்யாணம் பண்ணிகிட்டா! இப்ப நம்ம என்ன செய்ய? ஒன்னும் செய்ய வேண்டாம்! இப்ப நம்ம செய்யற நிலைமைல இல்லை!”

“அப்படி எல்லாம் சொல்லக் கூடாதுடா? அவளுக்குப் பண்ணின நகை அப்படியே தானே இருக்கும்! அதையாவது கொடுப்போம்”

“இல்லை! அதெல்லாம் விக்கப் போறோமோ? வைக்கப் போறோமோ? அதெல்லாம் பேசாதீங்க..”

“நம்ம பண்ணலைன்னா நமக்கு ரொம்ப அசிங்கம்”

“எல்லாம் குடுத்துட்டோம்னா அப்புறம் நம்மக் கிட்ட பணம் செலுத்தினவங்களுக்கு பணம் குடுக்க முடியாம போனா அது இன்னும் அசிங்கம்” என்றான் நிர்தாட்சண்யமாக.

யாரும் அவனிடம் பேச முடியவில்லை… இதில் இன்னும் அவன் வருவானா இல்லையா என்று யார் கேட்பது…

அதன் காரணம் யாராலும் ஒரு உற்சாகத்தோடு இருக்க முடியவில்லை,

ஈஸ்வர் வரவில்லை என்றால் எல்லோருக்கும் பெரிய பிரச்சனை என்று காட்டிக் கொடுத்துவிடும். ஈஸ்வருக்கு விவரம் தெரிந்த நாளாக வீட்டின் எல்லா நிகழ்வுகளிலும் அவன் தான் முன் நிற்பான். அதுவும் “டேய், அண்ணா!” என்ற ரஞ்சனியின் அழைப்பு விசேஷ வீடுகளில் இன்னம் பிரசித்தம். அவன் இல்லாத நிகழ்வு வீட்டினரால் யோசிக்கக் கூட முடியவில்லை.

இப்போதே பலப் பல கேள்விகள்… ஏதோ ஒன்று கூறி சமாளித்தனர். தங்கள் பெண்ணை அவர்களால் என்றும் விட்டுக் கொடுக்க முடியாது.

அவன் எப்பொழுதும் போல அலுவலகம் கிளம்பிக் கொண்டு இருந்தான்.

கிளம்பும் நேரம் ராஜாராமும் கமலம்மாவும் வந்தனர். இதுவரை ராஜாராம் அவர்கள் வீட்டிற்கு வரவில்லை. எல்லா விஷயத்தையும் அவரின் அப்பாவும் கமலம்மாவும் தான் பேசி முடிவு செய்தனர். அதுவும் அவனில்லாத நேரம் தான் வந்தனர். அதனால் யாரையும் சந்திக்கும் வாய்ப்பு இல்லை. இப்போது அவன் கிளம்பு முன்னர் வந்திருந்தனர்.

இந்த ஈஸ்வர் வரவேற்பானோ இல்லையோ என்று வீட்டினர் தயங்கி நிற்க, சௌந்தரி பாட்டி தான் “விஷ்வா” என்று குரல் கொடுத்தார்.

எதற்குக் கூப்பிடுகிறார் என்று தெரியாமல் மேலே இருந்து எட்டிப் பார்த்தவன், இவர்களைப் பார்த்ததும் நொடிப் பொழுதும் தாமதிக்கவில்லை, “வாங்கப்பா! வாங்கம்மா!” என்று இறங்கி வந்தான்.

“ஹப்பா!” என்று அனைவரும் விடுதலை பெற்றவர்களாக, ரூபா தண்ணீர் கொண்டு வர ஓட, நமசிவாயம் “உட்காருங்க சம்மந்தி” என்று சொல்ல, அங்கே உயிர்ப்பு வந்தது.

“உடம்பு எப்படி இருக்குப்பா?” என்று சம்ப்ரதாயமாக ஈஸ்வர் கேட்க, “பரவாயில்லை” என்றார். ஆனால் அவன் முன்பு பார்த்ததற்கு இன்னம் இளைத்து இருந்தார்.

அவர் அமர்ந்தவர் ஈஸ்வரையும் அருகில் அமருமாறு கைக் காட்ட அமர்ந்தான். அதுவே சொன்னது தன்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறார் என்று.

அமர்ந்ததும் மெதுவான குரலில், “நடந்தது எதுன்னாலும் விட்டுடு, வீட்டுக்கு வா, கண்டிப்பா ரிசப்ஷன்க்கு வரணும்..” என்றார்.

“இப்படி எல்லோரும் வருந்தி வருந்தி கூப்பிட்ற அளவுக்கு நான் முக்கியமில்லை! நீங்க இதை நல்லபடியா நடத்துங்க!”

“நீ முக்கியமில்லையா? யார் சொன்னது? உன்னைப் பார்த்து தான் உங்க வீட்டை பத்தி எனக்கு ஒரு பிரமிப்பே. கண்டிப்பா உன் தங்கை நல்லா இருப்பா… பத்து நல்லா பார்த்துக்குவான். நான் எப்படியோ என் பசங்களை எந்த வகையிலும் குறை சொல்ல முடியாது” என்றார் நேரடியாகவே.

“அதுல எல்லாம் எனக்கு ஒரு சந்தேகமும் இல்லைப்பா, என்னோட கோபம் யார் மேலயும் இப்போ இல்லை. ரஞ்சனி மேல மட்டும் தான்” என்றான் அவனும் நேரடியாக, “அதுக் கூட என்கிட்ட சொல்லலைன்னு தான்”.

“எதுன்னாலும் பரவாயில்லை! ரிசப்ஷன் வரணும்.. வராம இருந்துடாத… நம்மளோட இத்தனை நாள் பழக்கதுக்காக, என் பையனோட கல்யாணம்ன்னு நினைச்சு வா.. இந்தக் கோபம் எல்லாம் ஒன்னுமில்லை! நாளடைவுல போயிடும்.. அப்புறம் நீயே நினைப்ப.. போகாம விட்டுட்டோம்னு” என்றார்.

அவர் அவ்வளவு கேட்கும் போது அவனால் மறுக்க முடியவில்லை, “வருகிறேன்” என்றான்.

குடும்பத் தளைகள் தன்னை சுழலாய் இழுக்கக் கண்டவன், முதன் முறையாக நானும் பொறுப்பற்ற பிள்ளையாய் இவ்வுலகில் இல்லாமல் போனேனே என்று வருந்தினான். ஏதோ ஊர் உலகத்திலேயே அவன் தான் பொறுப்பான பிள்ளை என்பது மாதிரி. அந்த நாளின் முடிவில் நானா இப்படி என்று அவனே வருந்தப் போவது தெரியாமல்.

ராஜாராமிற்கு தெரியவில்லை இப்படி வருந்தி அவனை அழைத்து தன் பெண்ணின் வாழ்க்கையில் பெரிய சிக்கலை உண்டு செய்யப் போகிறார் என்று.

அவர் கிளம்பும் சமயம்.. “வீட்ல இருக்குறவங்க சீர் செய்ய ரொம்ப விருப்பப்படறாங்க. எனக்கு அரைகுறையா செய்ய விருப்பமில்லை.. திடீர் திருமணம் எதிர்ப்பார்க்கலை.. கொஞ்சம் சமயம் கொடுத்தீங்கன்னா..” என்று ஈஸ்வர் இழுக்க..

“நீங்க உங்க பொண்ணுக்குச் செய்யப் போறீங்க. எல்லாம் உங்க விருப்பம் தான்” என்றார் கமலம்மா… அதையே ராஜாராமும் உணர்த்த.. தலையசைத்து அதை ஏற்றான். மரியாதை கொடுப்பதிலும் அவனை மிஞ்ச முடியாது… மரியாதையின்றி நடப்பதிலும் அவனை மிஞ்ச முடியாது.

சில தின அவகாசம் என்பதால் பெரிய மண்டபங்கள் எதுவும் கிடைக்க வில்லை.. அதனால் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் தான் திருமண வரவேற்பு..

ஹோட்டலின் வாயிலில் ஜண்டை மேளத்துடன் ஆரம்பித்தது வரவேற்ப்பு.

ஹோட்டலின் ஒரு புறத்தில் திறந்த வெளியில் தான் வரவேற்ப்பு.

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மேடை போடப்பட்டு அங்கே மணமக்கள் இருந்தனர். ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக சேர்கள். வண்ண விளக்குகள் அந்த இடத்தை தேவலோகமாய் காட்டியது, அங்கிருந்த மக்களின் நடை உடை பாவனைகளும் அப்படித் தான் இருந்தது.

அங்கு இருந்த ஏற்பாடுகளில், கவனிப்பில் ஈஸ்வர் வீட்டினரின் மன சுணக்கங்கள் குறையத் துவங்கின. உறவுகளும் எதுவும் பேச வாய்ப்பில்லாமல் எல்லாம் சிறப்பாக இருந்தது. முக்கியமாக மாப்பிள்ளை பெண்ணின் பொருத்தம். பத்மநாபன் வசீகரிக்கும் தோற்றத்துடன் கம்பீரமாக இருந்தான். தங்கள் இனம் இல்லை என்பது குறை, அதை அப்போதைக்கு பேச விடாமல் அங்கே எல்லாம் சிறப்பாக இருந்தது.

எல்லாம் ஓடியாடி பார்க்கவில்லை, ஓரே இடத்தில் அமர்ந்து ராஜாராம் எல்லாம் கவனிக்க, தாத்தா வந்த விருந்தினர்களை வரவேற்க, முரளியும் ஷாலினியும் பம்பரமாய் சுழன்று எல்லாவற்றையும் மற்ற நெருங்கிய உறவினர்களோடு கவனித்தனர்.

மேடையில் இருந்த ரஞ்சனியின் கண்கள் விஷ்வா வருகிறேன் என்று சொன்னானாமே வருவானா? இல்லையா? என்று தான் மனதில் ஓட்டிக் கொண்டிருந்தாள்.

திருமணமானது முதல் ரஞ்சனி மனைவியாய் அமைந்ததில் மிகுந்த சந்தோஷத்தில் இருந்த பத்மநாபன், இன்றைய ரஞ்சனியின் அலங்காரத்தில் ஒரு பரவசத்தில் இருந்தான்.

வருபவர்களையும் பார்த்தபடி மனைவியையும் பார்த்தபடி இருந்தான். அதை உணரும் நிலையில் இல்லை ரஞ்சனி. ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஒரு வார்த்தைக் கூட அதிகப்படியாய் இருவரும் பேசிக் கொள்ளவில்லை, பேச இடமும் ரஞ்சனி கொடுக்கவில்லை, என்ன ஏது அதோடு பேச்சுக்கள் நின்று விடுகின்றன.

அதுவும் இரவில் போர்த்திய போர்வை சற்றும் அசங்காமல் முழுதாக மூடிக் கொண்டு முகத்தைக் கூட காட்டாமல் அவள் உறங்கும் விதம் பத்மனாபனுக்கு சிரிப்பு தான் வரும். அவள் உறங்கிய பிறகு முகத்தை மூடியிருப்பதை மட்டும் விலக்கி அவள் தடையின்றி சுவாசிக்க ஏதுவாய் செய்து தான் அவன் உறங்குவான்.

அவனாக பேச வேண்டும் என்று நினைத்தாலும், ஒரு தயக்கம் தானாக வந்து அமர்ந்து விடுகின்றது. இப்போதைக்கு அவள் மனைவி என்பதே அவனுக்கு போதுமானதாய் இருந்தது.

இன்று மணப்பெண் அலங்காரத்தில் ஜொலித்தாள். பார்வைத் தானாக நிமிடத்திற்கு ஒரு முறை ரஞ்சனியைத் தழுவி மீண்டது.

ஈஸ்வர் வீட்டினர் வந்ததில் இருந்து பிரணவியைத் தூக்கிக்கொண்டு வர்ஷினி சுற்ற, அவளின் பின்னோடு சரணும் சுற்றிக் கொண்டு இருந்தான்.

குழந்தைகள் இருவரும் வர்ஷினியோடு இருப்பதால்… ரூபா வந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்தாள்.

மேடையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்த ஒரு பொருளைக் காட்டி சரண் ஏதோ கேட்க, “வா” என்று அவனை அழைத்துக் கொண்டு மேடையேறினாள் வர்ஷினி. ஏறும் அவளைத் தான் பத்மநாபனும் ரஞ்சனியும் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

அன்று தான் முதன் முதலில் புடவை உடுத்தி இருந்தாள் வர்ஷினி, அண்ணனின் திருமண வரவேற்பு என்பது ஒரு புறமிருக்க அன்று அவளின் பதினெட்டாவது பிறந்த நாள்.

ஒரு ரோஜா வண்ண பட்டுப் புடவை அவளை பாந்த்தமாய் தழுவி இருந்தது. புடவையில் பெரிய பெண்ணாய் தெரிந்தாள்.

அவள் மேலே வந்ததும் அத்தையிடம் பிரணவி தாவ முயல, ரஞ்சனியும் கை நீட்ட, “வேண்டாம் அண்ணி! உங்க தலையில இருக்குற அந்தச் சுட்டி எல்லாம் பிச்சு எடுத்துடுவா” என்றாள் பெரிய மனுஷியாய் வர்ஷினி.

ரஞ்சனிக்குத் தானாக புன்னகை மலர.. “நிஜம்மா இப்போ தான் என் தலையில இருக்குற எல்லாத்தையும் பிச்சு எடுத்தா, நான் பாருங்க தலை எல்லாம் கலைஞ்சு மறுபடியும் பின்னினேன்”.

“இப்போ என் கழுத்துல இருக்குற நகை எல்லாம் பிச்சிட்டு இருக்கா, இவனுக்கு உங்க பின்னாடி இருக்குற அந்த கார்லண்ட் வேணுமாம். நான் காட்டிட்டு மட்டும் போறேன்” என்று சொல்லும் போதே,

ரஞ்சனியின் கண்கள் ஒரு இடத்தில் நிலைக்க, தன் பேச்சில் அண்ணி கவனம் செலுத்தாமல் யாரை பார்க்கிறாள் என்று வர்ஷினி பார்வையைத் திருப்ப பத்மநாபனும் அங்கே பார்க்க, அங்கே ஈஸ்வர் இருந்தான்.

கவனமாக மேடையை பார்க்காமல் வேறெங்கோ பார்த்துக் கொண்டு, முரளி அவனைப் பார்த்து வேகமாக அவனிடம் விரைந்து “வாடா” என்று சந்தோஷமாக வரவேற்க, மெலிதான புன்னகை ஈஸ்வரின் முகத்தில்.

க்ரீம் கலர் பேன்ட், வைட் கலர் ஷர்ட் என்று ஒரு ஃபார்மல்ஸ் அவ்வளவே, அதற்குள் அவர்களின் உறவுகள் பலர் வந்திருக்க, அவர்களை வரவேற்கும் அவசியத்தை உணர்ந்தவனாக எல்லோரிடம் பேசத் துவங்கினான்.

தன்னைப் பார்ப்பானா என்று ரஞ்சனி பார்க்க, பார்க்கவேயில்லை. மெலிதாக கண்களில் நீர் நிறைந்தது.

அதைப் பார்த்திருந்த வர்ஷினி “அண்ணி! உங்க அண்ணா பார்ப்பாங்களான்னு நீங்க பார்த்து அழ, உங்க மேக் அப் கலைஞ்சு என் அண்ணா பயந்து ஓடிடப் போறாங்க! அழாதீங்க! டோன்ட் பீ எமோஷனல்!” என்று சொல்ல,

அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் ரஞ்சனி இல்லை… அதற்குள் வாழ்த்துவதற்காக எல்லோரும் மேடை ஏற ஆரம்பித்தனர்.

அவசரமாக வர்ஷினியிடம் “விஷ்வாவை இங்கே வரச் சொல்றியா?” என்றாள் ரஞ்சனி.

“சரி” என்பது போல தலையசைத்து வர்ஷினி இறங்க, அவளை நூல் பிடித்து சரணும் இறங்கினான்.

குழந்தைகளுடன் ஈஸ்வர் இருந்த இடம் நோக்கி வர்ஷினி செல்ல, அதற்குள் கமலம்மா கூப்பிட, “இருங்கம்மா வர்றேன்!” என்று சொல்லி அவன் இருந்த இடம் நோக்கி சென்றாள்.

யாரிடமோ ஈஸ்வர் மும்முரமாக பேசிக் கொண்டு இருந்தான். வர்ஷினியைக் கவனிக்கவில்லை. அவனுடைய இறுகிய தோற்றம் வர்ஷினியை தயங்கச் செய்தது. இயல்பாக அருகில் செல்ல முடியவில்லை.

சரணிடம் “சித்தப்பா கூப்பிடு” என்று சொல்ல, அவன் சென்று ஈஸ்வரின் சட்டையைப் பிடித்து இழுத்தான். யார் என்று ஈஸ்வர் பார்க்க.. சரண்.

“என்ன சரண்” என, “அக்கா கூப்பிடறாங்க” என்றான்.

“யார்” என்று ஈஸ்வர் பார்க்க அங்கே வர்ஷினி பிரணவியைத் தூக்கி  வைத்துக் கொண்டு…

பின்னிருந்த வண்ண விளக்குக்குகள் அவனின் பார்வைக்கு அவளை தேவதையாக காட்டியது. காக்ரா சோலி, ஜீன்ஸ், பேகி, ஸ்கிர்ட் என்று வித விதமான உடைகளில் அவளைப் பார்த்திருக்கிறான். இன்னம் புடவையில் பார்த்ததில்லை.

புடவையில் இருந்த வர்ஷினியிடமிருந்து அவனால் பார்வையைத் திருப்ப முடியவில்லை. ரோஜா வண்ண புடவைக்கும் அவளின் நிறத்திற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதன் மேல் இருந்த நகைகளும் தெரியவில்லை.

சற்று தூரத்தில் இருந்ததினால் கண்கள் தெரியவில்லை. அதனால் அவன் பார்வை கண்களில் நிலைக்கவில்லை, உடல் முழுவதுமே ஓடியது.

அந்தோ பரிதாபம்! எதுவுமே தெரியவில்லை, புடவை ஒரு சிறு பாகத்தையும் வெளியே காட்டவில்லை. முதல் முறை புடவை கட்டுவதால் கனமான புடவைக் கட்டவில்லை, சாஃப்ட் சில்க் தான் கட்டியிருந்தால்! அது எங்கேயும் நழுவி விடாதபடி எல்லா இடத்திலும் சேஃப்டி பின் குத்தி இருந்தாள்.

கொழுக் மொழுக் என்று இருந்த அவளின் உடல்வாகு தான் தெரிந்தது. பேசிக் கொண்டு இருந்தவரிடம் “இதோ வந்துடறேன்” என்று சொல்லியபடி அவளின் அருகில் போனான்.

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான் கள்வெறி கொள்ளுதடி! உன்னைத் தழுவிடிளோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி என்ற கவியின் வரிகள்….. தொட்டால் தான்!

ஆனால் தொடாமலே அந்த உணர்வுகள் அவனுள்.. ஒரு ஊடுருவும் பார்வையோடு அவளைப் பார்த்தான்.

உடைகள் தடைகளாகிப் போயின!!!

 

அத்தியாயம் இருபது :

அடங்காமலே அலைபாயுதே!….. மனம் அல்லவா!!!

சுற்றிலும் கசகச வென்று உறவுகள்.. ஆங்காங்கே பேசியபடி, சிரித்தபடி… ஒரு பக்கம் பஃபே உணவு ஆரம்பிக்க.. உறவுகள் அந்த இடத்தை நோக்கி சிலர்… மேடையை நோக்கி சிலர்… என்று கலைய ஆரம்பித்தனர்.

தூரத்தில் அமர்ந்திருந்த ராஜாராம் மகளின் மேல் ஒரு பார்வையை வைத்திருக்க, அவளை நோக்கி ஈஸ்வர் செல்வதை பார்த்திருந்தார்.

ஈஸ்வரின் ஊடுருவும் பார்வை ஒரு வித அச்சத்தை மனதிற்கு கொடுத்தது… அருகில் வந்து பார்த்தது பார்த்தபடி நின்றான், பேசவில்லை. கையில் இருந்த பிரணவி அவனை நோக்கித் தாவினாள்.

அவளைக் கையில் வாங்க முற்பட, வர்ஷினியும் அவளைப் பிடித்தபடி நிற்க, “ப்ரணியை விடு ” என்றான்.

வர்ஷினி பிடியைத் தளர்த்த, பிரணவியை ஏந்திக் கொண்டவன், “எதுக்கு கூப்பிட்ட?”

“அண்ணி! உங்களை மேல கூப்பிட்டாங்க” என்றாள்.

“சரி” என்பது போல ஒரு தலையசைப்பு அவ்வளவே, பிறகு அப்படியே நின்று கொண்டிருந்தான்.

“நான் போகவா?” என்று வர்ஷினி கேட்க,

“போ” என்பது போலத் தலையசைப்பு..

குழந்தையை வாங்குவதா? வேண்டாமா? சரணை உடன் அழைத்து செல்வதா? என்று குழப்பம்.. அது முகத்திலும் தெரிந்தது. கண்களும் பிரதிபளித்தது.

அவன் குழந்தையை நீட்டவில்லை.. அந்தக் கண்களை பார்த்து நிற்க, திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றாள்.  சென்றவள் அப்பாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

மனதிலும் ஒரு சஞ்சலம்… என்னவென்று தெரியவில்லை… என்ன பார்வை அவன் பார்வை என்று ஆராய முயன்றாள்.

வர்ஷினி சென்றதும் அவனின் கவனம் எல்லாம் மேடையை நோக்கித் திரும்பியது.

அங்கே இன்னம் நிறைய பேர் இருக்க… இவனுக்குப் போக விருப்பமில்லை… ஆனாலும் இது அவர்களின் தினம்… அதில் தன்னால் ரஞ்சனிக்கு மன சுணக்கம் வேண்டாம் என்று அறிவு நினைத்தது… மனம் போகவேண்டாம் என்றது.

மனதிற்கும் அறிவிற்கும் இடையில் போராட ஆரம்பித்தான். ஏற்கனவே நிறைய மனதிற்குள் போராடி தான் இந்த வரவேற்ப்பிற்கு கிளம்பி வந்திருந்தான்.

“நீ மட்டும் உலகம் அல்ல! உன்னைச் சுற்றி எல்லோரும் இருக்கிறார்கள்!” என்று சொல்லிக் கொண்டு.

இத்தனை நேரம் வர்ஷினி குழந்தைகளைப் பார்க்க, இப்போது இவன்… அவர்களை வைத்திருப்பதால் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டான். யாரையும் தேடித் போய் பேசும் அவசியமின்றி. எல்லோரும் அவனை தேடி வந்து பேசிப் போனர்.  முரளியும் வந்து வந்து பார்த்துப் போனான்.

கிட்ட தட்ட ஒரு மணி நேரம் அவர்களுடன். வீட்டினர் வந்து பார்த்து குழந்தையைக் கேட்க, இருக்கட்டும் என்று விட்டான். ஓரளவிற்கு கூட்டம் குறைய ஆரம்பித்தது. ரூபா வந்தவள் “அவளுக்கு பசிக்கும் கொடு! சாப்பிட வைக்கிறேன்!” என்று குழந்தையை ஏறக்குறைய பிடிங்கியவள்…

“நீ மேல போ விஷ்வா” என்றாள்.

“ம்! போறேன்! நீ போ!” என்று அவளிடம் எரிந்து விழுந்தான். அம்மா ஈஸ்வரிடம் மேலே போகலாம் என்று அழைக்க வந்தவர், இவன் இப்படி பேசியதை பார்த்து எல்லோர் முன்னிலும் சத்தம் போட்டு விடக் கூடாதே என்று பயந்து திரும்ப போய் விட்டார்.

இத்தனை நேரம் ஆட்கள் இருந்ததால் ஒன்றும் தெரியவீல்லை இப்போது ரஞ்சனி மீண்டும் அண்ணனை தேட.. அவளின் பார்வை போகும் திக்கை அறிந்து, யோசியாமல் பத்மநாபன் மேடையை விட்டு இறங்கி ஈஸ்வரின் அருகில் வந்தான்.

எங்கே இறங்கி போகிறான் என்று எல்லோரும் பார்க்க… ஈஸ்வரின் அருகில் வந்தவன்… “மேல வாங்களேன்… உங்களை ரொம்ப தேடுறா… அவ செஞ்சது சரியோ? தப்போ? ப்ளீஸ்! வாங்க!” என்று மணமகனே கேட்க…

எல்லோரும் தங்களை பார்ப்பதை வேறு உணர்ந்தவன்.. எழுந்து “வாங்க”  என்று பத்துவுடன் மேலே செல்ல… எல்லோரும் நிறைவாய் பார்த்து இருந்தனர்.

ஈஸ்வர் அருகில் வந்ததும் தானாக ரஞ்சனியின் கண்கள் மீண்டும் கலங்க… அவள் கண்கள் கலங்குவதை விரும்பாதவன்… “அழுது! உன் கண்ல இருக்குற மை எல்லாம் கலைஞ்சு, மாப்பிள்ளை பயந்து ஓடிடப் போறார்!” என்றான்.

“மேக் அப் இல்லாத என் முகத்தை பார்த்துட்டார்! ஓடலை!” என்று ரஞ்சனி கண்களில் நீரோடு புன்னகைக்க முயன்று சொல்ல…

“அழுகையை நிறுத்து! நிஜம்மா பயந்துடுவார்!” என்றான் திரும்பவும்,

“சாரி!” என்று ரஞ்சனி ஆரம்பிக்கும் போதே.. “ஷ்” என்று உதட்டில் கைவைத்து மிரட்டியவன்.. “பேசாதே” என்றான்.

கீழேயிருந்த அம்மாவைப் பார்த்து கையசைக்க… அவர்கள் வர.. எல்லோரையும் வரச் சொல்லி புகைப் படம் எடுத்தான். ரஞ்சனிக்குப் பேசும் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை.

ஏதோ இந்த மட்டிலும் வந்தானே என்று ரஞ்சனியும் பின்பு அமைதியாகி விட்டாள்.

பின்பு வீட்டினர் எல்லோரும் உணவு உண்ணச் செல்ல.. ஈஸ்வர் பேருக்கு ஏதோ கொறித்து விட்டு ஜகனிடம் எல்லோரையும் அழைத்து வீட்டிற்கு போகுமாறு சொல்லி, ஹோட்டலின் உள் புறம் சென்றான்.

வர்ஷினிக்கு ரெஸ்ட் ரூம் போக வேண்டும் போல ஒரு உந்துதல். கமலம்மாவிடம் சொல்லிவிட்டு மேலே அவர்களுக்கு ஒதுக்கியிருந்த ரூமிற்கு அதன் சாவியை எடுத்துக் கொண்டு அவளும் சென்றாள்.

ஈஸ்வருக்கு என்னவோ தோற்று விட்ட உணர்வு. எப்போதும் எல்லா விஷயத்திலும் தன்னை முன்னிறுத்தியே பழக்கப்பட்டவன்.. இப்போது பின் செல்வது போன்ற உணர்வு…

“ஏன் கஷ்டப்படுத்திக்கணும், இத்தனைப் பேர் கிட்ட பணம் கேட்கணும்!  அவங்க தான் குடுக்கறேன்னு சொல்றாங்கள்ள! இப்போ பார் அவரா வந்து உன்னைக் கூப்பிடறார்.. உன்னை ரொம்பவும் மதிக்கிறார்! வாங்கிக்கலாம்!” என்று அப்பா சற்று வற்புறுத்திக் கேட்டார்.

அதுவே சற்று மனவுளைச்சலை தோற்றுப் போன உணர்வை கொடுத்தது. இப்போது தங்கையை பார்க்கவும், என் மேல் நம்பிக்கையற்று போனாளே என்ற உணர்வு அதிகம் தாக்கியது.

ஹோட்டலின் மற்றொரு புறம் இருந்த பாரை நோக்கி கால்கள் சென்றன, உள்ளே சென்றவன் ஆர்டர் கூடச் செய்து விட்டான். ஆனால் குடிக்கவும் மனமில்லை.. குடிக்காமலேயே பணத்தைக் கொடுத்து எழுந்து விட்டான்.

பாரிலிருந்து வெளியே வந்து சிறிது தூரம் ஹோட்டலின் உள்ளேயே நடந்து வரவும் ஒரு திருப்பத்தில் வர்ஷினி தனியாக லிஃப்டிற்கு நிற்பது தெரிந்தது.

இவள் ஏங்கே இங்கே தனியாக நிற்கிறாள் என்று பார்த்து நின்றான்… மிகவும் பெரிய ஹோட்டல், அதுவும் அது உள்வாயில், அங்கே அந்த சமையத்தில் யாருமில்லை.

வெளியே இருக்கும் திருமண வரவேற்ப்பு இரைச்சலுக்கு சற்றும் சம்பந்தமின்றி உள்ளே அமைதியாக இருந்தது. அந்த இடத்தில் சற்று மங்கிய ஒளி கூட.. மீண்டும் தேவதையாய் தெரிந்தாள்.

ஒரு நான்கைந்து அடி தூரம் தான். சுவற்றில் சாய்ந்து கைகளைக் கட்டியபடி அவளையேப் பார்த்து நின்றிருந்தான்.

எல்லாம் மறந்து போனது ஈஸ்வருக்கு… இதுவரை இருந்த தோற்றுக் கொண்டிருக்கிறேன் என்ற உணர்வு… தங்கையின் வரவேற்ப்பு… எல்லோரும் வெளியில் இருக்கிறார்கள்… இதையெல்லாம் விட… இன்னொரு இவளையும் விட அழகான பெண்ணிடம் காதல் சொல்லியிருக்கிறோம்… அவளைத் திருமணம் செய்ய வாக்குறுதி கொடுத்திருக்கிறோம்… எல்லாம்!!!

ஒரு உந்துதல் வர்ஷினிக்கு… திரும்பிப் பார்க்க… ஈஸ்வர் அவளைப் பார்த்து நின்றிருப்பது தெரிந்தது.

முதல் முறையாக புடவை கட்டியதில் சற்று பெரிய பெண்ணாய் உணர்ந்ததாலோ என்னவோ ஈஸ்வரின் பார்வையின் வித்தியாசத்தை படிக்க முற்பட்டாள்.

அதுவும் அவன் நின்றிருந்த தோற்றம் வர்ஷினியைக் கவர்ந்தது என்று கூடச் சொல்லலாம்…

ஈஸ்வரைப் பார்க்க… விழி எடுக்காது அவளைப் பார்த்திருந்தான். “இவன் என்னை ஆர்வமாய் பார்க்கிறானோ? சைட் அடிக்கிறானோ?” என்று அவளுக்கு உரைக்க… “என்னையா பார்க்கிறாய்” என்று ஒரு பார்வை அவளிடம் வெளிப்பட்டது.

“நீ ரொம்ப அழகா இருக்க.. ரொம்ப என்னை அட்ராக்ட் பண்ற.. உன்னோட அந்தக் கண் கடல் மாதிரி ரொம்ப அழகு” என்றான் அவனையும் மீறி…

“என்னையா சொல்கிறான்? அதுவும் என்னிடமா?” என்ற ஒரு பிரமிப்பு… ஒரு இனிய படபடப்பும் கூட… ஏன் என்று சொல்லத் தெரியவில்லை… அவளின் முகம் சற்று நாணச் சிவப்பை தாங்கியது…

“நீ… உன் டிரஸ்… உன் ஜ்வல்ஸ்… எல்லாம் டிஃபாரன்ஸ் தெரியலை! யு லுக் ப்ரெட்டி ரோஸ்” என்றான்.

ஒரு அழகான கம்பீரமான ஆண்மகன் தன்னிடம் இப்படிச் சொல்ல சற்று தடுமாறிப் போனாள்.

அதற்குள் லிஃப்ட் வந்திருக்க… அதிலிருந்து வெளியே வந்த ஒரு ஆண் வர்ஷினியைப் பார்த்தபடி போக… இவள் அதனுள் போக.. “எங்க போற?” என்றான்.

“ரூம்க்கு?”

“எதுக்கு இப்போ தனியாப் போற?”

எப்படி சொல்வது என்று தெரியாமல் “போகணும்” என்றாள்.

“இங்க யாருமே இல்லை! தனியா போகாத! நானும் வர்றேன்!” என்றபடி அவனும் லிஃப்டினுள் நுழைந்தான். படபடப்பாக இருந்தது அவளுக்கு.. தனியாக பலமுறை அவனுடன் பேசி விட்டாள்… இப்போது ஏதோ ஒரு உணர்வு, சற்று பயம் கூடத் தோன்றியது, ஈஸ்வரின் பார்வை வீச்சினில்.

இவன் இப்போது தான் என்னை பார்க்கிறானா? இல்லை முன்பிருந்தா? என்ற எண்ண ஓட்டமும் ஓடியது. அவளுக்கு தெரியவில்லை. அவனுடன் தனியாக இருப்பது ஒரு மாதிரி பதட்டத்தை அவளுள் விதைக்க ஆரம்பித்தது.

லிஃப்ட் நிமிடத்திற்குள் மூன்றாவது மாடி வந்து விட வெளியே வந்தனர். அங்கிருந்த ரூமின் கதவை திறந்தவள்… அவனை எப்படி வெளியே நிற்க சொல்வது என்று தடுமாறினாள்.

உள் அழைப்பது சரி போல தோன்றவில்லை. அந்த அளவு ஒரு அசௌவ்கரியம் அவனிடம் உணர்ந்தாள்.

“ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் வந்துடறேன்” என்றாள் தயங்கியபடி… அதுவே சொன்னது “நீ இங்கே இரு” என்று.

நீல நிறக் கண்கள் அவனோடு கவிதை பேசியது போல ஒரு தோற்றம். அதனை பார்த்தபடி “ஓகே” என்றான். அவனுக்கு அது ஒன்றும் தப்பாக தோன்றவில்லை, உள் செல்ல அவனும் நினைக்கவில்லை. அவளோடு இருப்பதை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

அந்த ஊடுருவும் பார்வை ஒரு தடுமாற்றத்தை பயத்தைக் கொடுத்தது வர்ஷினிக்கு.

அவன் இருக்கும் போது ரூமின் கதவைத் தாளிட்டு செல்வது சரி போல தோன்றாததால் அப்படியே சற்று திறந்த வாக்கில் வைத்துச் சென்றாள்.

ஈஸ்வர் வெளியில் நிற்கின்றான் என்பதே ஒரு பதட்டத்தைக் கொடுத்தது.  வேகமாக சென்று வந்தாள்.. ரெஸ்ட் ரூமில் இருந்து வரும் போது வர, வர கதவையும் அவள் மூட, அதில் வர்ஷினியின் புடவை முந்தானையின் தலைப்பு மாட்டியது.

அதைக் கவனிக்காமல் வர்ஷினி எட்டு எடுத்து வைக்க, அதில் புடவை இழுபட்டு… அவள் முந்தானையில் குத்தியிருந்த பின் வந்து விட.. அது கீழே நழுவியது… அந்த இடத்தில் புடவையும் சற்று கிழிந்தது.

அது அவளையும் அறியாமல் “அச்சோ” கத்த வைக்க… மெலிதாக தான் இருந்தாலும்…

அந்த இரவின் நிஷப்ததில் ஈஸ்வரின் காதில் அது தெளிவாக விழுந்தது. “என்னவோ?” என்று உள்ளே வந்தான்.

அவன் பார்த்தது புடவை கதவில் சிக்கி இருக்க… கதவை திறக்க முற்படாமல், பதட்டத்தில் புடவையை பிடித்து இழுத்துக் கொண்டிருந்த வர்ஷினி தான்.

ஆடையின் உள் இருக்கும் தெரிந்தும் தெரியாத பாகங்களில் ஈஸ்வரின் மனமும் சிக்கியது. அருகில் செல்ல முயலாமல் வர்ஷினி என்ன செய்கிறாள் என்று பார்த்து நின்றான்.

முன்பே சுற்று புறம் மறந்துவிட்டான். இப்போது தன்னையும் மறக்க ஆரம்பித்தான்.

அவளையேப் பார்த்தபடி நிற்க, மீண்டும் ஒரு உந்துதல் திரும்பி பார்த்தவள் ஈஸ்வர் நிற்பதை பார்த்ததும் பதட்டத்தில் அப்படியே திரும்பி கீழே அமர்ந்து மீண்டும் புடவையை இழுத்தாள். முடிந்தவரை தன்னை மறைத்துக் கொண்டாள்.

ஈஸ்வர் மெதுவாக அருகில் சென்று கதவை திறந்தான், புடவை எளிதாக வந்தது. அவசரமாக எடுத்து அதை தன் மேல் போட்டுக் கொண்டு வர்ஷினி எழ முயல..

எழுவதற்காக கை நீட்டினான். மிகவும் சங்கோஜமாக உணர்ந்த்தவள், ஈஸ்வரின் கை பற்றாமல் எழ முயன்றாள்.

அனிச்சையாக சற்றும் யோசியாமல் ஏதோ உரிமைப்பட்டவன் போல, வர்ஷினியின் கையை அவனாக பிடித்து, அவளை எழ சற்று இழுத்தவன் எழ எழ இடையில் கை கொடுத்தான்.

இதை எதிர்பார்க்காத  வர்ஷினி பயத்தில் விழி விரிக்க.. அந்த நீல நிறக் கண்கள் அருகில் அவனின் மிக அருகில்… அதில் தன்னிலை மறந்து மூழ்கி விருப்பமாக தன்னைத் தொலைக்க ஆரம்பித்தான்.

அவள் திமிறி விலக முற்பட, இந்த முறை அந்தக் கண்கள் தன்னை விட்டு விலக விட விரும்பாதவன்… உன்னை விடேன் என்பது போல பிடியை இறுக்கினான்.

விடுங்க என்ற வார்த்தைக் கூட வர்ஷினியின் வாய் மொழியாக வரவில்லை.

உச்ச பட்ச அதிர்ச்சியில் இருந்தாள்.. ஈஸ்வரிடம் இருந்து இப்படி ஒரு செய்கையை கனவிலும் நினைத்தது இல்லை.

இன்னும் வேகமாக திமிறி அவனைத் தள்ள முயல.. இன்னும் இன்னும் அவனின் பிடி இறுகியது.

அந்தக் கண்களின் பாவனைகளில் தன்னை முழுவதுமாக மறந்தான்…  அவனின் உடல் முழுவதுமே வர்ஷினியின் உடலோடு ஒட்டி இருந்தது. அங்கங்கள் ஒன்றோடு ஒன்று மோதி நின்றன, அழுத்தங்கள் கொடுத்தன, சண்டையிடத் துவங்கின. ஈஸ்வருக்கு விருப்பமான சண்டை.. வர்ஷினிக்கு சற்றும் விருப்பமில்லாத சண்டை.

இப்போது கண்கள் மட்டுமல்ல, வர்ஷினியின் உடலின் பாகங்கள் எல்லாமும் ஒரு மயக்கத்தைக் கொடுக்க, புதிதாக உணரும் பெண்மை.. முதன் முதலாக உணர்வுகளுக்கு ஆட்ப்பட்டு உணரும் பெண்மையும் கூட.. சொர்கத்தை காண முயன்று கொண்டிருந்தான்.

ஆனால் அதற்கு சற்றும் பொருந்தாமல் வர்ஷினி நரகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள். புதிதாக ஒரு ஆண்.. மறுக்க மறுக்க பிடியை இறுக்கி கொண்டு.. அவனின் உடல் முழுவதும் தன் மேல் படர்ந்து கொண்டு… தன்னையும் அவன் மேல் படற வைத்துக் கொண்டு..

அதுவும் ஒரு பிரமிப்போடு முதல் நாளிலிருந்து தான் பார்த்தவன்… இப்படி ஒரு செய்கையை கற்பனையிலும் அவனிடம் இருந்து வரும் என்று நினைத்துப் பார்த்திராதவள்..

நரகத்தை உணர்ந்தால் என்றாள் அது மிகையல்ல..

கைகளை வைத்து எவ்வளவு தள்ளினாலும் அசைக்க கூட முடியவில்லை

மனம் தளர்ந்தது… போராட முடியவில்லை.. அவள் தளர.. தளர… ஈஸ்வரின் கைகள் அவளின் உடலில் அத்து மீற ஆரம்பித்தது.

உடலின் மறைத்த பாகங்கள் அனைத்தையும் தொட முயன்றான்.. தொடவும் செய்தான்.

முத்தமிட முயலவில்லை.. அவளைக் கலைக்கவில்லை… வேறு வகையிலும் முன்னேறவில்லை… சிறந்த சிற்பியாய் அவளைத் தன் கை கொண்டு செதுக்க முற்பட்டான்.. ஒரு கை அவளை விடாது பிடித்திருக்க… மற்றொரு கையால் எல்லாம்… உடை மேலே எல்லாம் நடந்து கொண்டிருக்க.. சேலையின் உள் நுழைந்து… அவளின் வெற்றிடையில் கை ஜாலங்கள் செய்ய முற்பட்டு, அந்த ஸ்பரிசம் இன்னும் மயக்கத்தைக் கொடுக்க… எல்லைகளைக் கடக்க முயல…

முற்றிலுமாக தளர்ந்தவள், கண்களை இறுக்கமாக மூடி அதை சகிக்க முற்பட்டாள். அவளின் கண்கள் மூடிய நொடி, முகம் காட்டிய அசூயையான பாவனை…

ஈஸ்வருக்கு மாய வலை அறுபட.. “ஐயோ! என்ன செய்கிறேன் நான்?” என்று அவன் உணர்ந்த நொடி, அவனின் கைகள் தளர மனது ஓலமிடத் துவங்கியது.

கைகளின் தளர்ச்சியை வர்ஷினி உணர்ந்த நொடி.. தற்காப்பு கலையில் தேர்ந்தவள் என்பதால் தன் கால்களை அவனின் கால்களுக்கு இடையில் செலுத்தி தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தட்டி விட்டாள்.

இதை ஈஸ்வர் எதிர்பார்க்கவில்லை. ஒரு மாதிரி அவன் தளர்ந்து இருந்ததினால் அப்படியே நெடுஞ்சாண் கடையாக பின்புறம் சாய்ந்தான்.  தரையில் தலை பட்டு பலமான அடி…

“அம்மா” என்ற கத்தல் அவனிடமிருந்து.

இவை எல்லாம் மிக சில நிமிடங்கள் மட்டுமே…   ஆனால் நடந்தது நடந்தது தானே… அதிர்ந்து…. விழுந்த ஈஸ்வரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நடந்த நிகழ்வுகள் இப்போது தான் அவளின் கண்களில் கண்ணீரை வர வைக்க ஆரம்பித்தன.

நீரோடு அவனைப் பார்த்து நிற்க.. ஈஸ்வரின் தலையில் பலமான அடி… தலையில் ரத்தம் வர ஆரம்பித்தது.

விழுந்த பின்னும் கூட வர்ஷினியை தான் பார்த்திருந்தான். சில நொடிகள் அவளும் பார்த்திருக்க, அவனும் பார்த்திருக்க… வர்ஷினியின் கண்களில் கண்ணீரை பார்த்தவனின் கண்கள் மன்னிப்பை யாசிக்க…

கூடவே “சாரி” என்றான் வாய் மொழியாக.

அப்போதும் எழ முயலவில்லை.. முயன்றாலும் முடிந்திருக்குமா தெரியவில்லை. தலையில் இருந்து ரத்தம் வழிந்து இப்போது அவனின் வெண்ணிற சட்டையை பின்புறம் நனைக்க ஆரம்பித்தது. ஈஸ்வரை பார்த்து நின்றிருந்தாலும் வர்ஷினிக்கு அது தெரியவில்லை.

“நீயா இப்படி?” என்று இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் வர்ஷினி பார்த்திருந்தாள். உடலில் அவன் பிடித்திருந்த.. கொடுத்திருந்த… அழுத்தங்களும் வலித்தது.

வர்ஷினி பார்த்திருக்க.. பார்த்திருக்க.. “தூக்கி விடேன்” என்பது போல ஈஸ்வரின் கைகள் அவளை நோக்கி நீண்டது.

மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்!

வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்!

 

மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்!

இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்!

 

தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்!

தாயே இங்கு நீயே வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்!

 

மனதில் உனது ஆதிக்கம்! இளமையின் அழகு உயிரை பாதிக்கும்!

விரகம் இரவை சோதிக்கும்! கனவுகல் விடியும் வரையில் நீடிக்கும்!

 

ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி!

ஆனி வேர் வரையில் ஆடி விட்டதடி!

 

காப்பாய் தேவி! காப்பாய் தேவி!!!

 

Advertisement