Advertisement

அத்தியாயம் பதினாறு :

உன் முடிவுகளை நீ எடுக்கலாம்! அடுத்தவர் முடிவையும் நீ எடுக்கலாம்! அது அவர் விரும்பும் வரை மட்டுமே!  

அன்று இரவு உறங்கி எழுந்தவன், நேராக அப்பாவிடம் தான் வந்தான். “வேற யாரவது நமக்குப் பணம் கொடுப்பாங்களா அப்பா”

“ஏன்பா? முரளி அப்பாக்கிட்ட பேசறேன்னு சொன்ன! அவங்க குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களா” என்றார் அதிர்ச்சியாக.

“அப்படி எதுவும் இல்லைப்பா! அவங்க குடுக்கறேன்னு தான் சொல்றாங்க! ஆனா எனக்கு வாங்க இஷ்டமில்லை” என்றான் சலிப்பாக.

“ஏன்? ஏன் விஷ்வா?”

“பொண்ணு கேட்டாங்கப்பா! ரஞ்சனியை முரளி தம்பிக்கு” என்று விஷயத்தை சொன்னான்.

“என்ன?” என்று அதிர்ந்து விழித்தார். அவரும் இதை எதிர்பார்க்கவில்லை.

“என்ன திமிர்ப்பா அவனுங்களுக்கு? பணமே திரும்ப குடுக்காதீங்கன்னு சொல்றானுங்க! பொண்ணு குடுத்தா போதும்னு சொல்றாங்க! நம்ம பொண்ணு என்ன அவ்வளவு ஈசியா!” என்று கோபப்பட்டான்.

நமஷிவாயதிற்குமே முரளி வீட்டினர் அப்படி பேசியதில் கோபம் தான் வருத்தம் தான், ஆனாலும் அவர் வேறு சொன்னார். “அது அப்படியில்லை விஷ்வா! நம்ம பொண்ணு குடுக்க மாட்டோம்னு தெரியும், எப்படியாவது நம்மைப் பொண்ணு குடுக்க வைக்கணும்னு ஒரு ஆர்வத்துல சொல்லியிருப்பாங்க! கண்டிப்பா நம்மையோ நம்மப் பொண்ணையோ ஈசியா நினைச்சு இல்லை” என்று விளக்கம் கொடுத்தார்.

“எதுன்னாலும் அப்படிக் கேட்டது தப்பு…” என்று அவனின் பிடியிலேயே நின்றவன், “வேற யாரவது இருக்காங்களா”

“எனக்குத் தெரிஞ்சவங்க எல்லாரையும் உனக்கும் தெரியும்! எனக்கு யார் குடுப்பா இவ்வளவு பெரிய அமௌன்ட்ன்னு எனக்கு தெரியலை. அதையும் விட யார் கிட்டயும் பணம் குடுங்கன்னு என்னால போய் நிற்க முடியாது”

“இத்தனை வருஷமா என்ன பிசினெஸ் பண்ணுனீங்க” என்ற வார்த்தை வர துடித்ததை முயன்று அடக்கி வெளியே சென்றான்.

“யார்? யார்?” என்ற யோசனை மனதில் ஓட ஆரம்பித்தது.

அந்த யோசனை மட்டுமே மனதினில், வேறு ஞாபகமே இல்லை, காலையில் ஆஃபிஸ் விரைந்து விட்டான். எல்லா ப்ரான்சஸிற்கும் தகவல் சென்று விட்டதா என்று பார்க்க.

அவன் செல்லும் வரை அங்கே தாஸ் இருந்தான்.

“நன்றி தாஸ்” என்றான் மீண்டும்.

“அய்ய சாரு? எதுன்னாலும் கூப்பிடுங்க” என்று சொல்லி, “வீட்டுக்குப் போயிட்டுக் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்” என்று சொல்லி சென்றான்.

தாஸ் இருந்ததினால் சுரேஷ் வெளியில் வரவில்லை, ஆனால் அவனும் அங்கு தான் இருந்தான்.

“நீங்க பாருங்க தல, எவனும் எந்த கலாட்டாவும் பண்ணாம நான் பார்த்துக்கறேன்” என்றான்.

உள்ளே விரைந்தவன் எல்லா பிரான்ச் ஆட்களுடன் தனித்தனியாக பேசினான். கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் அதே வேலை, அவனுள் தீயாக இந்த விஷயங்கள் கனன்று கொண்டிருந்தது. பணம் எப்படி சரி செய்வது என்றும் ஒரு பக்கம் ஓடியது, ஒரு பக்கம் சொத்துக்களின் மதிப்பு கணக்கிட ஆரம்பித்தான், ஒரு பக்கம் ஷேர்ஸ் ஸ்டாக் செக் செய்தான், அதன் மதிப்பைக் கணக்கிட்டான்.

அப்பா வந்தாரா? ஜகன் என்ன செய்தான்? எதுவும் பார்க்கவில்லை. எல்லாம் அவனின் பொறுப்பு, அவனின் கடன் என்பது போலத்தான் வேலை செய்து கொண்டிருந்தான்.

காலையில் ரஞ்சனியின் தொலைபேசி அடித்ததோ, அதில் வர்ஷினி அவளிடம் பேசியதோ, பத்து அண்ணா உங்கக் கிட்ட சாரி கேட்க சொன்னாங்க என்று சொன்னதோ, ரஞ்சனி எதற்கு என்று கேட்டதோ, வர்ஷினி தனக்குத் தெரிந்த மாதிரி விஷயத்தை சொன்னதோ, உங்க பத்து அண்ணா கிட்ட நான் பேசணுமே என்று ரஞ்சனி சொன்னதோ, எதற்கு என்று வர்ஷினி கேட்டதற்கு, பேசணும்னு மட்டும் சொல்லு, பேசறதும் பேசாததும் அவர் முடிவு பண்ணட்டும் என்று சொன்னதோ…

ஈஸ்வருக்கு தெரியவே தெரியாது!!!

ஒருவரிடம் பெரிய தொகை கேட்பது என்றால் கஷ்டம், அதை பகிர்ந்து கேட்கலாமா என்று ஈஸ்வரின் யோசனை ஓடும் போதே அவனின் தொலைபேசி அடித்தது.

நேற்று வந்த பத்திரிகை ஆட்களில் ஒருவர் அழைத்து “சர், இப்போ உங்க அண்ணன் கிரிகெட் பெட்டிங்ல இருந்திருக்கார்ன்னு செய்தி வந்திருக்கு” என்றார்.

எதிர்பார்த்திருந்தான், ஆனால் இவ்வளவு விரைந்து இல்லை. சமயம் கொடுக்காமல் இந்த அஸ்வின் அடிக்கிறான் என்று தோன்றியது, இப்படி ஒரு எதிராளியை வென்றால் தானே அது வெற்றி என்றும் தோன்றியது.

முகத்தில் ஒரு புன்முறுவல் கூட, “நீங்க என்ன சார் செய்யப் போறீங்க” என்றான்.

“நாங்க போடலை, யாரோ வேணும்னு செய்யற மாதிரி தான் தோணுது. ஏன்னா நேத்து தான் அப்படி புரளி கிளப்பினாங்க” என்றார்.

“எஸ் சர்! நீங்க சொல்றது உண்மை தான்! இது எங்களுக்கு எதிரா நடக்கற சதி! யாரோ புரளியைக் கிளப்பறாங்க” என்று அவரின் வார்த்தைகளையேத் திரும்ப படித்தான்.

“நாங்க போடலைன்னாக் கூட வேற யாராவது போடா வாய்ப்பிருக்கு”

“அது உண்மையில்லை சர், யாரவது போட்டாப் பார்த்துக்கலாம். நீங்க சொன்னதுக்கு ரொம்ப நன்றி” என்று சொல்லி, அவரிடம் நல்ல மாதிரி சில வார்த்தைகள் பேசி அவன் தொலைபேசியை வைத்த போது மனதின் ஓரத்தில் கவலைதான்.

இந்த ஜகன் மாட்டிக் கொள்வானோ, பணமும் போய் விட்டது! இதில் அவனும் மாட்டினான் என்றால், என்ன சொல்ல? ஏதாவது ஆதாரம் இருக்குமா என்று ஜகன் அவனுடன் பகிர்ந்த விவரங்களை வைத்து யோசிக்க ஆரம்பித்தான்.

பின்பு ஜகனுடன் பேச சென்றவன் எல்லாம் அலசி ஆராய்ந்தான். ஈஸ்வருக்கு தெரிந்த வரை மாட்டுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

அதன் பின்பும் தோன்றியது மாட்டினாலும் அதனால் பெரிதாக என்ன வந்துவிடும்! ஒன்றுமில்லை… நமது அமலாக்கப் பிரிவு விசாரித்து… ஆராய்ந்து… அறிக்கைச் சமர்ப்பித்தாலும்… கேஸ் நடக்கும் அல்லவா? பார்த்துக் கொள்ளலாம்! பயமில்லை! என்று நினைத்தான். அதையே ஜகனிடமும் சொல்லிக் கொடுத்தான்.

“எதுக்கும் பயப்படாத! யார் கேட்டாலும் இல்லைன்னு சொல்லு! அப்படியே மீறி எதுவும் வந்தா அஸ்வின் எனக்கு அப்போ ரொம்ப க்ளோஸ் என் மனைவியோட தம்பி, எவ்வளவு க்ளோஸ்னா என் பண விவகாரம் முழுவதும் அவன் தான் பார்த்துகிட்டான், சோ ஏதாவது நடந்து இருந்தா அது அவன் தான் செய்திருப்பான். நான் இல்லைன்னு சொல்லு! பயம் வேண்டாம்!”

“செஞ்சிட்ட! இனி அதுல இருந்து தப்பிக்கிற வழி பார்! பயம் வேண்டாம்!” என்று திரும்பத் திரும்ப தன் அண்ணனுக்குச் சொன்னான்.

“எதுவாகினும் நான் உன்னுடன் இருக்கின்றேன்” என்ற நம்பிக்கையை அண்ணனுள் விதைத்தான்.

“என்னால் எல்லாம் சரியாக்க முடியும்” என்று அவனுக்குள் அவனேயும் விதைத்துக் கொண்டான்.

பின்பு மீண்டும் அவர்களால் எவ்வளவு பணம் புரட்ட முடியும், வைக்க முடிந்த சொத்துக்கள், விற்க முடிந்த சொத்துக்கள், வீட்டில் பெண்களிடம் இருக்கும் நகைகளின் மதிப்பு வரை அத்தனையும் ஆராய்ந்தான்.

அன்று மாலை மீண்டும் முரளி அவனைப் பார்க்க வந்தவன், அவனின் அப்பா பேசியதற்கு மன்னிப்பு கேட்டு, அதற்கும் பணத்திற்கும் யாதொரு சம்மந்தமுமில்லை என்று கூறிப் பணத்தை கொடுக்கிறோம் வாங்கிக் கொள் என்று கூற,

முரளிக்காக “சரி, யோசித்துச் சொல்கிறேன்!” என்ற வார்த்தையைக் கூறினான், ஆனால் நிச்சயம் பணம் வாங்கும் எண்ணம் அவனிடம் சிறிதுமில்லை. எந்த நிலை வந்தாலும் பணம் வாங்குவது இல்லை என்ற அவனின் முடிவில் மிகவும் தெளிவாக இருந்தான்.

அவனுக்கு ஒரு விஷயம் புரியவில்லை! எல்லாவற்றையும் தூக்கி அவன் தலைமேல் அவனாகப் போட்டுக் கொள்ளலாம், ஆனால் உண்மையில் எல்லோரும் தானே பொறுப்பு.

எல்லோர் மனதிலும் கவலை இருக்கக்கூடும். எல்லோரும் பயத்திலும் இருக்கக்கூடும், கிடைக்கும் பணத்தை மறுத்து, வேறு எப்படி சமாளிக்கலாம் என்ற தைரியம் இவனுக்கு இருக்கலாம், ஆனால் எல்லோரும் அப்படியே இருப்பர் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

“அவர்கள் உதவுவார்கள்! நாம் ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்! திரும்பக் கொடுத்துவிடலாம்! அதை விட்டு ஏன் இன்னும் எல்லாவற்றையும் சிக்கலாக்க வேண்டும்” என்ற எண்ணம் தான் மற்றவர்கள் மனதில் உதிக்கக் கூடும் என்று அனுமானிக்க வேண்டும்.

“நான்! என் சொல் மட்டுமே! என் செயல் மட்டுமே!” என்ற எண்ணம் ஆகாது. மகிழ்ச்சியில் இந்த எண்ணம் சரியாகக் கூட இருக்கலாம். கஷ்டத்தில் இந்த எண்ணம் எப்படி சரி வரும். சரி வராது என்பதை விட, அப்படி நாமும் நினைக்கக் கூடாது என்று ஈஸ்வர் உணர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால் அது தான் மனித மனங்களின் இயல்பு.

ஆனால் அதில் தவறி விட்டான் ஈஸ்வர், தான் எது சொன்னாலும் தன் வீட்டினர் கேட்டுக் கொள்வர் என்று நினைத்தான், அவனின் எண்ணம் எல்லாம் தவிடு பொடியாகப் போவது தெரியாமல்.

இப்படி யோசனைகள் வேலைகள் என்று இருந்தவன் வீடு வரும் போது நேரம் இரவு பதினொன்றையும் கடந்து இருந்தது. ஜகன் அவனோடு தான் இருந்தான் “நீ எது செய்தாலும் சரி” என்பதுப் போல.

ஜகன் தனித்து நிர்ப்பது அரிது. அதனைக் கொண்டே முன்பு அஸ்வினை சார்ந்து இருந்தான். இப்போது ஈஸ்வரை!

அவர்கள் வீடு வந்த போது ரூபா மட்டுமே விழித்து இருந்தாள், ரஞ்சனியின் ஞாபகம் அப்போது தான் வந்தது. அவர்களுக்குச் சாப்பாடு எடுத்து வைக்க ரூபா முயல, “நான் சாப்பிட்டுக்கறேன், நீங்க சாப்பிடுங்க” என்று கணவன் மனைவிக்கு தனிமைக் கொடுத்து விலகி மாடி ஏறினான்.

இன்று ரஞ்சனியின் ரூம் கதவு தாளிடப்பட்டு இருந்தது. விளக்குகள் எரிவது போலவும் தெரியவில்லை. மெலிதாக தட்டினான், விழித்து இருந்தால் ரஞ்சனி வந்துத் திறக்கக் கூடும் என்று!

அது திறக்கவில்லை என்றதும் உறங்கிவிட்டாள் போல என்று நினைத்து தனது ரூம் சென்றவனுக்கு தன்னிடம் நேற்று மாலையில் இருந்து ரஞ்சனி பேசவில்லை என்று ஞாபகத்திற்கு வந்தது.

இத்தனை பிரச்சனைகள் தங்களை சுற்றி ஓடிக் கொண்டிருக்க, நான் டாக்டர்க்கு படிச்சாலும் பிசினெஸ் கூடப் பார்ப்பேன் என்று சொல்லிக் கொண்டு இருப்பவள், எப்படி இதைப் பற்றிய விஷயங்களை கேட்காமல் போனால் என்று மனதிற்குள் நெருடியது.

இரண்டு நாட்களாக சரியாக உறங்காத தன்மை, சிறிது நேரமும் மூளைக்கு ஓய்வு கொடுக்காதது, ஒய்வுத் தேவை என்று கெஞ்ச, எதுவாகினும் நாளை பார்க்கலாம் என்று முடிவு எடுத்தான்.

நாளை இனி எதுவுமே நான் பார்க்க வேண்டாம் என்று முடிவெடுக்க போவது தெரியாமல்.

காலையில் எப்பொழுதும் போல எழுந்து வந்தவன், ரஞ்சனி என்ன செய்கிறாள் என்பது போல அவளின் அறையைப் பார்த்தான். அவள் இல்லை.

“எங்கேம்மா ரஞ்சனி?” என்று கேட்டுக் கொண்டே இறங்கினான்.

“பிரண்ட் யாருக்கோ கல்யாணமாம்! ஆறு மணிக்கேப் போயிட்டா” என்றார்.

அப்பொழுது நேரம் ஒன்பதை தாண்டி இருந்தது. “எப்போ வருவா? நான் ரெண்டு நாளா அவளைப் பார்க்கலை! பார்த்துட்டு தான் ஆபிஸ் போகணும்” என்றவன் ஜகனையும் தந்தையையும் பார்த்தான். இருவரும் தயாராகி இருந்தனர்.

“நீங்க போங்க! நான் ரஞ்சனியைப் பார்த்துட்டு வர்றேன்” என்று சொன்னவன், தொலைபேசியை எடுத்து அவளுக்கு அழைக்க, அது ஹாலில் ஒலித்தது.

“ஃபோன் எடுக்காம போயிருக்கா? என்னமா நீங்க? அதைக் கூடப் பார்க்கலையா” என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.

“உன் தங்கச்சி என்ன சின்னப் பொண்ணா, நீ அம்மாவைத் திட்டுற? அவ எடுத்துட்டுப் போக வேண்டாமா” என்று சௌந்தரி பாட்டி பதில் பேச,

“ஆமாம்! பேச மட்டும் செய்ங்க! யாரும் எதையும் கவனிக்காதீங்க!” என்று சொல்லிக் கொண்டே ஐஸ்வர்யாவை அழைத்தான், தோழியின் திருமணம் என்றால் கண்டிப்பா ஐஸ்வர்யாவும் உடன் சென்றிருப்பாள் என்ற எண்ணத்தோடு,

அவள் எடுத்ததும் “எங்க இருக்கீங்க?”

“வீட்ல!”

“ரஞ்கிட்ட கொடு!”

“அவ இங்க வரலையே”

“கல்யாணத்துக்கு நீ போகலையா?”

“யாருக்குக் கல்யாணம்” என்று அந்தப் புறம் ஐஸ்வர்யாக் கேட்க,

“எந்தக் கல்யாணத்திற்கு சென்றிருக்கிறாள்” என்ற குழப்பத்தோடு வாயிலை பார்த்தவனின் கண்கள் அப்படியே நின்றது.

அங்கே திருமண கோலத்தில் பத்மநாபனும் ரஞ்சனியும்!!!

அவனின் கையில் இருந்த தொலைபேசி உடலின் தொய்வினால் பிடியில் இருந்து நழுவி, கீழே விழுந்து அதன் பாகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறியது.

ரஞ்சனியும் ஈஸ்வரைத் தான் பார்த்து இருந்தாள். அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர், கூட யாருமில்லை.

சௌந்தரி பாட்டியும் பார்த்தவர் “ரஞ்சனி” என்று அதிர்ந்து சத்தமாக பேர் சொல்ல,

உள்ளிருந்தவர்கள் என்னவோ ஏதோவென்று பதறி வந்தனர்.

அவர்களின் அம்மா அதைப் பார்த்ததும் “டீ…. ரஞ்சனி…. என்ன காரியம் செஞ்சிருக்க?” என்று கத்தினார்.

யாருக்கும் பத்மநாபனை தெரியவில்லை, எங்கோ பார்த்தது போல இருந்தாலும் சட்டென்று ஞாபகம் வரவில்லை. அங்கு அவனை நன்கு தெரிந்தது ஈஸ்வருக்கும் ரூபாவிற்கும் மட்டும் தான். ஹாஸ்பிடலில் பத்மநாபனை ரூபா பார்த்திருந்ததால் அவளின் ஞாபகத்தில் இருந்தது.

நமஷிவாயதிற்கு தன் மகள் இப்படி செய்தாளா? நம்பாமல் அப்படியே நின்றிருந்தார். ஈஸ்வரும் அப்படியே நிற்க, சித்தப்பாவும் அப்படியே நிற்க, ஜகனிற்கு தான் என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் மனைவியைப் பார்த்தான்.

ரூபா தான் ரஞ்சனியை நோக்கி, “காதலிச்சீங்கன்னா ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே ரஞ்சனி, நமக்கு இவங்க என்ன தெரியாதவங்களா? ஏன் இப்படி பண்ணிட்ட?” என்றாள்.

காதல் மட்டுமே இந்த திருமணத்தின் அடிப்படையாக இருக்க முடியும் என்பது ரூபாவின் எண்ணம்.

“யாரு? யாரு இவங்க?” என்று பெரியம்மாவும் பாட்டியும் பதறிக் கேட்க, ஈஸ்வர் ஃபிரண்ட் முரளியோடத் தம்பி” என்று ரூபா சொல்லவும், எல்லோரும் இப்போது ஈஸ்வரைப் பார்த்தனர்.

நமஷிவாயமும் ரஞ்சனி பத்மநாபனை இஷ்டப்பட்டால் போல, அதனால் தான் அவர்கள் பெண் கேட்டிருக்கிறார்கள் என்று நினைத்தார்.

ஈஸ்வரின் பார்வை ரஞ்சனியை விட்டு அகலவில்லை. என்ன சொல்வது என்று தெரியவேயில்லை. ஒரு வேலை பணம் கொடுக்கிறோம் உங்களின் பிரச்சனைகளில் இருந்து வெளியே கொண்டு வருகிறோம் என்று நேரடியாக அவளிடமே முரளி வீட்டினர் பேசி இந்த திருமணதிற்கு சம்மதம் வாங்கிவிட்டனரா?

அப்போது நான் எதற்குமே லாயக்கில்லை என்று ரஞ்சனி நினைத்து இந்த வேலையை செய்து விட்டாளா என்று அவளையே பார்த்திருந்தான்.

அவனால் தாளவே முடியவில்லை… நேற்று முன்தினம் அவர்களின் வீட்டில் அப்படிப் பேசி வந்திருந்தான். பணத்தைக் கொண்டு என் தங்கையை விலைக்கு வாங்குகிறீர்களா என்று கேட்டு வந்தான்.

இப்போது திருமணம் செய்து அவள் நிற்கிறாள்! என்ன சொல்ல? பத்மநாபனைப் பார்த்தான். அவனும் ஈஸ்வரைத் தான் பார்த்து நின்றான்.

கண்களில் ஒரு தயக்கமோ இப்படி செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றி தைரியமான பார்வை. அந்தப் பார்வையைக் கொண்டே ஈஸ்வர் அனுமானித்தான் திருமணம் ரஞ்சனியின் முடிவே!

“ஏன்? இப்படிப் பண்ணின?” என்று ரூபா திரும்பவும் கேட்க,

“எங்களுக்குப் பிடிச்சிருந்தது, இவர் வீட்ல பொண்ணு கேட்டாங்க! விஷ்வா முடியாது சொன்னான்! அதனால எனக்கு வேற வழியில்லை!” என்று மனப்பாடம் செய்து வைப்பதை ஒப்பிப்பது போல சொன்னாள்.

வீட்டினர் எல்லோரும் ஏன் சொல்லவில்லை என்பது போல ஈஸ்வரை பார்த்தனர்.

“ஏண்டா? ஏண்டா எங்கக்கிட்ட நீ சொல்லலை?” என்று அம்மா மலர் ஈஸ்வரை சத்தமிட,

பெரியம்மாவும் பாட்டியும் கூட, “நீ ஏன் எங்கக் கிட்ட சொல்லலை! அவளை இப்படி ஒரு முடிவு எடுக்க வெச்சிட்ட” என்று கேள்வி கேட்க,

“உனக்குப் பிடிச்சிருந்ததா…..? உனக்குப் பிடிச்சிருக்குன்னு என்கிட்ட சொன்னியா….? நான் வேண்டாம்னு சொன்னேனா…?” என்று ஈஸ்வர் தீர்க்கமாகப் பார்த்து, ஆத்திரம் அடக்கியக் குரலில் கேட்க.. கேட்க,

அதுவரை தைரியமாக எல்லாம் செய்து வந்த ரஞ்சனியால் ஈஸ்வரின் பார்வையைச் சந்திக்க முடியவில்லை, கண்கள் கலங்க ஆரம்பித்தது.

பத்மநாபனும் “ஏன் இவள் ஈஸ்வரை இழுக்க வேண்டும்? எனக்கு பிடிச்சிருக்கு நீங்க சம்மதிக்க மாட்டீங்கன்னு சொல்லலை” என்று மட்டும் சொல்லியிருக்க கூடாதா, ஈஸ்வரை ஏன் கோபப்படுத்த வேண்டும் என்று தான் தோன்றியது. ஏற்கனவே திமிர் பிடித்தவன்,

கலங்கிய கண்களோடு “விஷ்வா” என்று ஈஸ்வரை நோக்கி ரஞ்சனி  அடியெடுத்து வைக்க,

“பேசாதே” என்பது போல உதட்டின் மேல் கைவைத்து காட்டினான். அவனால் ஆத்திரத்தில் பேசவே முடியவில்லை.

ரஞ்சனி அப்போதும் ஏதோ பேச வர,  “பேசாத!!!” என்று கர்ஜித்தான். அந்தக் குரலில் ரஞ்சனி அப்படியே நிற்க,

“பிடிச்சிருந்ததுன்னு பொய் சொல்லாத” என்று அடிக்குரலில் சீறியவன், ரஞ்சனியை நோக்கி வேகமாக எட்டு வைக்க,

ரஞ்சனியின் கண்களில் இருந்து விரைந்து கண்ணீர் இறங்கியது. ஈஸ்வர் வந்த வேகத்திற்கு எங்கே ரஞ்சனியை அடித்து விடுவானோ என்று பத்மனாபன் ரஞ்சனியின் கைப் பிடிக்க,

அந்த செயல் ஈஸ்வரை அப்படியே தேக்கியது. “ஓஹ்! இனிமே உங்க மனைவி…. என்னோட தங்கையில்லை” என்றான் சொல்லும் போது அவனின் குரலில் அவ்வளவு வருத்தம்.

“ஏன் இப்படி பேசறீங்க? பொண்ணுங்களுக்குக் கல்யாணம் ஆனா அண்ணன் தங்கை உறவு இல்லைன்னு ஆகிடுமா?” என்றான் பத்மநாபன்.

“மத்தவங்களுக்கு எப்படியோ? இனிமே எனக்கு அப்படித்தான்!” என்று பத்மநாபனை நோக்கிச் சொன்னவன்.

ரஞ்சனியை நோக்கி “என்னை நம்பலைல நீ… பிடிச்சிருக்குன்னு பொய் சொல்ற… ஏதோ ஒரு வகையில இந்த ப்ரச்சனை தான் காரணம்! இல்லைன்னு சொல்லாத! எனக்குத் தெரியும்… நான் இதைத் தீர்க்கற அளவுக்கு லாயகில்லைன்னு நினைச்சிட்ட… என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லணும்னு தோணலை… இவன் யாருன்னே உனக்கு தெரியாது கல்யாணம் செய்துகிட்ட” என்று பேசப் பேச…

ரஞ்சனி அவன் அருகில் வர முயல…

“அங்கேயே நில்” என்பதுப் போல… ஒற்றை விரல் நீட்டிக் கை காட்டினான்.

அது வெளியே செல் என்பதுப் போன்ற ஒரு அர்த்தத்தைக் கொடுத்தது. வெளியே சென்றுவிட்டால் எல்லா பிரச்சனைகளும் அப்படியே தான் இருக்கும், பிறகு தன் திருமணதிற்கு எந்த அர்த்தமும் இல்லை என்று உணர்ந்த ரஞ்சனி…

“அதை நீ சொல்லாத! இது உன் வீடு மட்டுமில்லை, எனக்குக் கூட இதுதான் வீடு! என்னோட அப்பா அம்மா இங்க தான் இருக்காங்க! அவங்க சொல்லட்டும்!” என்று கலங்கிய கண்களோடு ஆவேசமாகப் பேசினாள்.

இத்தனை நாள் சீராட்டி பாராட்டி வளர்த்த மகள்! அவளை வெளியே போ என்று சொல்ல அங்கே யாராலும் முடியவில்லை! ஏன் ஈஸ்வர் கூட அப்படி சொல்லவில்லை! ரஞ்சனி தான் தவறாக அர்த்தம் செய்து அதற்கு பேசிக் கொண்டிருந்தாள்.

நமஷிவாயம் தனது அம்மாவையும் அண்ணியையும் மனைவியையும் பார்த்தார்.

“எதுன்னாலும் முதல்ல உள்ளக் கூப்பிடு… இனியும் இதைப் பெருசாக்கி நம்ம மானத்தை நாமளே வாங்க வேண்டாம். அவளோட நமக்கு தொடர்பு வேணுமோ இல்லையோ, அவ வாழ வேண்டியப் பொண்ணு, அப்படியேத் திரும்ப அனுப்ப வேண்டாம்” என்று வீட்டின் மூத்த பெண்மணியாகப் பாட்டிச் சொல்ல…

ஈஸ்வரின் பேச்சினால், ஏதோ ஒரு வகையில் தங்களின் பிரச்சனைகளை முன்னிட்டுத் தான் இந்த திருமணம் என்று அம்மாவும் பெரியம்மாவும் ரூபாவும் தெரிந்து கொண்டதால் யாரும் ஆட்சேபிக்க வில்லை.

ஜகன் சித்தப்பா என்ன சொல்கிறார் என்று பார்த்து நின்றான்.

“உள்ள வாங்க” என்று மணமக்களைப் பார்த்து அவர் சொல்ல…

க்ஷணத்தில் ஈஸ்வர் அந்த வீட்டில் இருந்து அன்னியப்பட்டு நின்றான்.

வாழ்வின் பொருளென்ன? நீ வந்த கதை என்ன?

Advertisement