Advertisement

அத்தியாயம் பதினைந்து :

தடைகள் நிற்பதற்கு அல்ல! தாண்டுவதற்கு!

அப்பா தான் முதலில் ஈஸ்வரை அழைத்து விஷயத்தைச் சொன்னார், கேட்டவனுக்கு நன்கு புரிந்தது இது அஸ்வினின் வேலை என்று.

ஆனால் யாருடைய வேலை என்றெல்லாம் இனி யோசிக்க நேரமில்லை. ஏதாவது செய்தாக வேண்டும், அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லியாக வேண்டும்.

அலுவலகத்திற்கு விரைந்தான். ஆபிசிலிருந்து எல்லோரும் கிளம்பும் நேரம், இந்த செய்தி கேள்விப்பட்டு ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருக்க,

அப்பாவும் ஜகனும் அங்கு தான் இருந்தனர்.

பீ ஏ விடம் “ஒரு பிரஸ் மீட் ஏற்பாடு செய்ங்க. அப்படியெல்லாம் எதுவுமில்லைன்னு சொல்லணும். முக்கியமா எந்த சேனல்ல இந்த நியூஸ் வந்ததோ அவங்களைக் கண்டிப்பா கூப்பிடுங்க” என்றான்.

“ஜகன் நீ எல்லா பிரான்ச் மனேஜர்ஸ்க்கும் கூப்பிட்டு அப்படி எல்லாம் எதுவுமில்லை, ஒரு ப்ரெஸ் மீட் ஏற்பாடு செஞ்சு இப்போ சொல்ல போறோம் யார் வந்தாலும் தைரியமா பதில் சொல்ல சொல்லு, பயம் வேண்டாம் சொல்லு!”

பிறகு அங்கிருந்த ஊழியர்களிடம் “ஜகன் சர் போன் பண்ணி சொல்லுவார், ஆனா எல்லாருக்கும் சொல்ல நேரம் ஆகும். நீங்க ஒரு நாலு பேர் சொல்லுங்க”

“இன்னும் ரெண்டு பேர் எல்லோருக்கும் மெயில் பண்ணுங்க, இன்னும் ரெண்டு பேர் பேக்ஸ் பண்ணுங்க எப்படியாவது தொடர்புல சொல்லுங்க”.

“அப்பா! தெரிஞ்சவங்க யார் போன் பண்ணினாலும் அப்படியெல்லாம் எதுவும் இல்லை! இது யாரோ வேண்டாதவங்க செஞ்ச வேலைன்னு சொல்லுங்க” என்று விரைவாக எல்லோருக்கும் ஆணைகள் பிறப்பித்தான்.

பீ ஏ விடம் “பிரஸ் ஆளுங்க வர்றவங்களை ரொம்ப நல்லா கவனிக்கணும்! அவங்களுக்கு டின்னர் அரேஞ் பண்ணுங்க, டின்னர் அருமையா இருக்கணும். கவனிப்புல யாருக்கும் ஒரு குறையும் வைக்க கூடாது”.

இத்தனையும் அவன் சொல்லும் போதே ஆஃபிஸின் ஒரு கண்ணாடி உடையும் சத்தம்!!!!

அவன் சொல்லச் சொல்ல வேலைகளை செய்ய முயன்று கொண்டிருந்த எல்லோரும் பயத்தோடு அப்படியே நின்றனர்.

ஈஸ்வரின் உள் மனது நிச்சயமாக சொன்னது, மக்கள் யாரும் இவ்வளவு விரைவாக செயல்பட்டுக் கல் எரிய மாட்டர். இதுவும் அஸ்வினின் வேலை தான் என்று.

“யாருக்கும் எதுவும் ஆகாது பயம் வேண்டாம்” என்றான்.

பின்பு வெளியே வந்து பார்த்தான். பத்து பேருக்கும் மேல் கலாட்டா செய்ய ஆயத்தமாக இருந்தனர். இரண்டு செக்யுரிட்டிக்கள் இருந்த இடத்தில் இருந்து கத்திக் கொண்டு இருந்தனர். பைனான்ஸ் ஆஃபிஸ் என்பதால் அவர்களிடம் துப்பாக்கி இருந்தது.

“தூரப் போங்க! ஏதாவது கலாட்டா செய்தா சுட்டுடுவோம்” என்பது போல

அவனின் அப்பா அப்படியே ஸ்தம்பித்து நிற்க, “அப்பா! ஒன்னும் ஆகாது! பயப்படாதீங்க நான் சொன்ன வேலையைச் செய்ங்க” என்றான்.

“ஜகன்! நீ எல்லா பிரான்ச்க்கும் சொல்லு. எதையும் நிறுத்தாதீங்க! நான் பார்க்கிறேன்”

பீ ஏ அதற்குள் ஃபோன் எடுத்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு அழைத்து சொல்லிக் கொண்டு இருந்தார்.

ஈஸ்வரும் நேரடியாக சென்னை கமிஷனர்க்கு அழைத்து விஷயத்தைச் சொன்னான். அவரும் உடனே அந்த ஏரியாவின் சர்கிள் இன்ஸ்பெக்டரை இடத்திற்கு அனுப்புவதாக சொன்னார்.

செக்யிரிடியிடம் இன்டர்க்காமில் அழைத்து “சும்மா மிரட்ட மட்டும் செய்ங்க, நீங்க யாரையும் தக்காதீங்க” என்று சொல்லி உடனே சுரேஷிற்கு அழைத்து, “ஆளுங்களை கூட்டிட்டு இங்க உடனே வா” என்றான்.

பம்பரமாய் சுழன்றான். இப்படி சூழ்நிலைகளை பயமில்லாமல் விவேகமாய் எதிர்கொள்ளும் திறமை மிகச் சிலருக்கே வரும். அது இயல்பாய் ஈஸ்வரிடம் இருந்தது. எல்லோர் முகத்திலும் பதட்டமும் பயமும் இருக்க அவன் முகத்தில் அது கடுகளவும் இல்லை.

ஈஸ்வர் முகத்தில் தெரிந்த தைரியம் எல்லோரையும் பயத்தை விட்டு அவரவர் வேலையை பார்க்க வைத்தது.

அங்கிருந்த மூன்று பெண் ஊழியர்களை பார்த்து “வீட்டுக்குப் ஃபோன் செஞ்சு சொல்லுங்க! உங்களை வீட்டுக்குப் பத்திரமா அனுப்பறது என்னோட பொறுப்பு, யாரும் பயந்து உங்களை தேடி இங்க வர வேண்டாம்” என்று.

சிறு சிறு விஷயத்தையும் கவனத்தில் எடுத்தான்.

எல்லாம் முடித்து தான் ரூபாவிற்கு அழைத்தான், “வீட்ல நியூஸ் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்! எல்லோரும் பத்திரமா இருக்கோம்! வீட்டுக்கு வர நேரம் ஆகும்! எல்லோரும் வீட்ல தானே இருக்கீங்க!”

“ரஞ்சனி வெளில போனா! அவ தான் இன்னும் வீட்டுக்கு வரலை…” நேரம் அப்போது ஏழு,

“எங்கே போனா?”

“ஹாஸ்பிடல் போறேன்னு சொன்னா, பேர் எதுவும் சொல்லலையே”

“வந்துடுவா! எதுக்கும் நான் அவளுக்கு ஃபோன் பண்றேன்! நீங்களும் வந்தா உடனே என்னோட அவளை பேச வைங்க” என்றவன் ரஞ்சனிக்கு அழைக்க அவளின் போன் நாட் ரீச்சபிள் என்றது.

இவ்வளவு நேரமாக வராத பயம் மனதில் வந்தது. வெளியே போய் எங்கே என்றும் பார்க்க முடியாது. அவன் அந்த இடத்தை விட்டு செல்ல முடியாது.

அது நேரம் வரையிலும் பிரச்சனைகள் அணிவகுத்து நின்ற போது கூட அவன் கடவுளை அழைக்கவில்லை, தங்கை தொடர்பில் இல்லை என்றதும் கடவுளை அழைத்தான்.

ஐஸ்வர்யாவிற்கு அழைத்தான், அவளுக்கு இன்னம் விஷயம் தெரியவில்லை…. அவள் ரூமின் உள் படித்துக் கொண்டு இருந்தாள், வீட்டிலும் ஹாலில் சீரியல் மட்டுமே ஓடிக் கொண்டு இருந்தது.  அஸ்வினும் பிரகாசமும் வீட்டிலேயே இல்லை. அதனால் அவளுக்கு எதுவும் தெரியவில்லை .

இவன் ஃபோன் என்றதும் பரபரப்பாக எடுத்தவள், “ஹல்லோ” என்க,

“ரஞ்சனி எங்கே போயிருக்கா” என்றான் எடுத்தவுடனே.

“எனக்குத் தெரியாது! என்கிட்டே எதுவும் சொல்லலை!

“ஏதோ ஹாஸ்பிடல் சொன்னாலாமே ரூபா கிட்ட! எந்த ஹாஸ்பிடல் போக வாய்ப்பிருக்கு”

“எனக்கு எந்த ஐடியாவும் இல்லை! ஏன்? என்ன அச்சு? ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க?” என்று அவள் கேட்க,

“என்ன தான் செஞ்சிட்டு இருக்க நீ? உன்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னாவது தெரியுமா, இந்த பிரச்சனை முடியட்டும் அப்புறம் இருக்குடி உங்கப்பனுக்கும் உங்கண்ணனுக்கும்”

என்ன பேசுகிறான் என்று புரியாத போதும் மீண்டும் ஏதோ பிரச்சனை என்று புரிந்தது. மனதில் கவலைகள் மீண்டும் அழுத்த துவங்கின.

“ரஞ்சனி ஃபோன் நாட் ரீச்சபிள்! அவ ஃபிரண்ட்ஸ் யாரையும் எனக்கு கால் பண்ணி பேசற அளவுக்குத் தெரியாது! உன்னைத் தான் தெரியும்! யார் கிட்டயாவது கேளு! கேட்டு சொல்லு!” என்று அதட்டிக் கத்தி வைத்தான்.

“தங்கைக்காகப் பேசுகிறான்! நானும் காணாமல் போனாலாவது என்னை தேடுவானா?” மனம் வெகுவாக ஈஸ்வரின் அக்கறைக்காக காதலுக்காக ஏங்கியது.

அப்பாவும் அஸ்வினும் என்ன செய்திருக்கிறார்கள்! அவளின் தைரியமே ஈஸ்வர் தானே! இந்த அஸ்வின் செய்த வேலையால் அவன் என்னை விட்டு விலகி விடுவானோ! கடவுளே எந்த பிரச்சனையும் ஈஸ்வருக்கு வராமல் பார்த்துக் கொள்! இந்த பிரச்சனைகளை சரி செய்து விடு” என்று வேண்டியது.

அப்பாவும் அஸ்வினும் செய்ததற்கு இவளுக்கு ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி, முன்பு போல அக்காவிடமோ ரஞ்சனியிடமோ பேச முடியவில்லை. ஒரு வார்த்தை ஈஸ்வர் ஆறுதல் சொல்லியிருந்தாலோ இல்லை சகஜமாக பேசியிருந்தாலோ இவள் இயல்பு நிலை வந்திருப்பாள்! அவன் பேசுவதே இல்லை!

முதலில் ரஞ்சனியை அழைக்க, அவளுக்கு சுவிச் ஆஃப் என்று வர, மற்ற நெருங்கிய தோழிகளுக்கு அழைக்க ஆரம்பித்தாள்.

இங்கே ஈஸ்வருக்கு மெதுவாக பதட்டம் ஏற ஆரம்பித்தது. தலையில் கை வைத்து ஐயோ என்று அமர்ந்த சமயம், அவன் தோளில் ஒரு கை விழ, நிமிர்ந்து யார் என்பது போல பார்த்தான்…

முரளி!!!

அவனைப் பார்த்தும் மனதில் ஒரு ஆசுவாசம் எழுந்தது மறைக்க முடியாத உண்மை! ஆனாலும் தோளில் இருந்த கையை எடுத்து விட முற்பட,

இன்னும் தோளை அழுத்தமாக பற்றியவன், “எதுன்னாலும் அப்புறம் சண்டை போடு! திட்டு! அடி! என்ன வேணா செய், இப்போ போகச் சொல்லாதே, பிரச்னையை மட்டும் பாரு, மீறிப் போக சொன்னாலும் நான் போக மாட்டேன்!” என்றான் குரலிலும் அழுத்தத்தைக் காட்டி.

ஈஸ்வர் திரும்பத் தலையைப் பிடிக்க, “சொல்லு! என்ன செய்யணும் சொல்லு, என்னோட தாஸ் வந்திருக்கான்! வெளில இப்ப எந்த பிரச்சனையும் இல்லை”

“ஷாலினியோட அப்பா கமிஷனருக்கு ரொம்ப க்ளோஸ், இங்க வந்து பார்த்ததுமே நான் அவரை விட்டு பேசச் சொன்னேன்! இன்னேரம் பேசியிருப்பார்!” என்றான்.

இது எதற்குமே பேசவில்லை ஈஸ்வர்.

“இன்னும் என்ன சொல்லு? ஏன் இப்படி இருக்க? இதெல்லாம் ஒன்னுமில்லை! பார்த்துக்கலாம்!” என்று முரளி சொல்ல.

“ரஞ்சனி எங்க இருக்கான்னு தெரியலை” என்றான்.

“என்னடா? என்ன சொல்ற?” என்று முரளி அதிர,

“ஹாஸ்பிடல் போறேன்னு சொல்லிட்டுப் போயிருக்கா! எந்த ஹாஸ்பிடல்ன்னு தெரியலை! ஃபோன் நாட் ரீச்சபிள்! இப்ப சுவிட்ச் ஆஃப்! பயமாயிருக்கு!” என்று சொல்லியே விட்டான். இந்த சென்னை சிட்டில எங்கே போய்த் தேடுவோம்” என்றான் கலக்கமாக.

“இந்த ப்ராப்ளம் இருக்குறதுனால உனக்கு பயம் கொடுக்குது. ஃபோன் சார்ஜ் இல்லாம சுவிட்ச் ஆஃப் ஆகியிருக்கும். அப்படி அவ பயந்த பொண்ணு கிடையாது, ஜாக்கிரதையா தான் இருப்பா, வந்துடுவா! நீ இங்க என்னவோ பாரு!” என்றான்.

ஈஸ்வருக்கு அந்த தருணத்தில் முரளியின் வார்த்தைகள் அவ்வளவு மன வலிமையைக் கொடுத்தது. நிமிர்ந்து அவனைப் பார்த்தான், எவ்வளவு கேவலமாக திட்டி வந்தேன் ஒன்றுமே சொல்லாதது போல வந்து நிற்கின்றான்.

இன்றைய சூழலில் அவர்கள் மேலே! நான் கீழே தான்! வரவேண்டும் என்ற அவசியமே இல்லை! வந்து நிற்கின்றான் என்று தோன்ற, அதனைக் கண்களிலும் பிரதிபலிக்க,

“உன்னை விட்டெலாம் நீயே துரத்தினாலும் போக மாட்டேன்! ரஞ்சனி வந்துடுவா! அவ வெளில போனா வீட்டுக்கு வர நேரம் ஆகிடுச்சா”

“சில சமயம் ஒன்பது மணி கூட ஆகும்!”

“அப்போ என்ன? இப்ப தானே மணி ஏழு, ஒன்னும் ஆகாது! எழுந்துரு!” என்று சொல்லும் போதே போலிஸ் இன்ஸ்பெக்டர் வர, அவரிடம் பேசினார்கள்.

அதற்குள் பிரஸ் ஆட்களும் வர ஆரம்பித்தனர்… அவர்களை கவனிக்க சென்றாலும் முகத்தில் ஒரு உற்சாகமின்மை! அது அவனை நன்கு அறிந்த அவனின் ஊழியர்களிடமும் ஒரு தொய்வைக் கொடுத்தது.

அந்த நேரம் ரூபா அவனை அழைத்தாள், விரைந்து உயிர்பிக்க, “ரஞ்சனி வந்துட்டா, ஃபோன் சார்ஜ் இல்லாம சுவிட்ச் ஆஃப் ஆகிடுச்சாம்! ஹாஸ்பிடல்ல இருந்து வந்தது, குளிக்கப் போயிருக்கா” என்று சொன்னதும் ஈஸ்வரின் மனநிலை அப்படியே மாறியது!

“தேங்க்ஸ் ரூப்ஸ்!” என்றவன், அதை வைத்து “ரஞ்சனி வந்துட்டா” என்றான் முரளியைப் பார்த்து சிறு புன்னகையுடன்.

அதுவே சொன்னது, இன்னம் எது வந்தாலும் ஈஸ்வர் எதிர் கொள்வான் என்று…

ஐஸ்வர்யாவிற்கு ரஞ்சனி வந்து விட்டால் என்று ஒரு மெசேஜ் அனுப்பினான்.

“நீ அவங்களை கவனி, நான் இங்க இருக்கேன்! தாஸ் வெளில இருக்கான்! போலிஸ் இருக்கு! கூலா ஹேண்டில் செய்!”

“ம்ம்!” என்று தலையாட்டிய படி கான்பரன்ஸ் ஹால் செல்ல, இப்போது அவன் முகத்தில் இருந்த தெளிவு ஊழியர்களிடமும் பிரதிபலிக்க ஆரம்பித்தது.

“இது தவறாக யாராலோ தனிப்பட்ட விரோதம் காரணமாக பரப்பிவிடப்பட்ட செய்தி! இது உண்மையல்ல! எல்லோருக்கும் குறித்த நேரத்தில் கண்டிப்பாகப் பணம் திரும்பக் கொடுக்கப்படும்! யாரும் நம்பாமல் உடனே பணம் வேண்டும் மென்றாலும் வாங்கிக் கொள்ளலாம்! ஆனால் அந்த ஷரத்தில் குறிபிட்டு இருந்த படி செலுத்தியப் பணத்தில் பாதி தான் வரும்” என்றான்.

திரும்பவும் விரிவாக சொன்னான் “சொன்ன தேதியில் பணம் வாங்கினால் இரட்டிப்பு பணம்! அதற்கு முன் வாங்கினால் செலுத்திய பணத்தில் பாதி என்பது தான் விதி முறை! அதில் எந்த மாற்றமும் இல்லை!”

“இதை நம்பாமல் யாராவது ஏதாவது அங்கங்குள்ள பிரான்ச்சில் கலாட்டா செய்தால், அதனால் நிறுவனத்திற்கு இழப்பு! அதனை முன்னிட்டு பணம் கொடுப்பதில் தாமதம் ஆகலாம்…”

“அதனால் அதிக நாட்கள் இல்லை! இன்னம் நாற்பது நாட்களே உள்ள நிலையில் யார் எந்த செய்தி பரப்பினாலும் நம்பாமல் அமைதியாக இருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றான்.

அதே சமயம் கூட மற்றுமொரு வார்த்தையும், பணத்திற்குத் தான் மட்டுமே முழு பொறுப்பு! அதனால் குழுமத்தில் உள்ள வேறு யார் இருந்தாலும் விலகினாலும் பயம் கொள்ளாமல் தன்னை மட்டுமே நம்புமாறு சொன்னவன்,

தன்னுடைய அலைபேசி எண்ணையும் கொடுத்தான். யாருக்கு எந்த சந்தேகங்கள் என்றாலும் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு சொன்னான்.

ஏனென்றால் மனதின் ஒரு புறம் ஏதோ ஒன்று சொல்லியது ஜகன் விஷயத்தையும் அஸ்வின் இழுப்பான் அல்ல இந்த மாதிரி தவறான செய்தியைப் பரப்பக் கூடும். அதனை முன்னிட்டே அந்த வாக்கியங்களை சேர்த்துச் சொன்னான்.

பிறகு வந்திருந்த எல்லோரிடமும் இன்முகமான பேச்சு, சிலருடைய தோற்ற மற்றும் பேச்சு ஈர்ப்பு அவர்கள் சொல்வதை மறு பேச்சின்றி ஏற்றுக் கொள்ள வைக்கும். அப்படி ஒரு ஈர்ப்பு ஈஸ்வரிடம் இருந்தது.

பின்பு ஒரு அறுசுவை விருந்து, அதன் பின் அவர்களின் ஃபைனான்ஸ் சார்பாக வீ ஐ பீ களுக்கு கொடுக்கும் பரிசுப் பொருட்கள்!

அதன் பிறகு “ப்ளீஸ்! யாரவது இந்த மாதிரி எங்களைப் பத்தி, ஐ மீன் எங்க ஃபைனான்ஸ் செயல்பாடு பத்தி நியூஸ் கொடுத்தா ஒரு வார்த்தை என்கிட்டே கேட்டுட்டு போடுங்க”,

“எங்க மேல இருக்குற காழ்புணர்ச்சினால பணம் கொடுத்துக்கூட செய்தி கொடுக்கலாம், ஆனா இது மக்கள் சம்பத்தப்பட்ட விஷயம்! சோ இந்த மாதிரி தவறான செய்தி பரவாம இருக்குறது, நம்ம தார்மீக கடமை. ஆனா அதையும் மீறி பண லாபம்ன்ற ஒரு விஷயம் நடுவுல நின்னா அதையும் நான் தரத் தயாரா இருக்கேன்”

“தயவு செய்து பணத்தால விஷயத்தை விலைக்கு வாங்கறோம்னு நினைக்க வேண்டாம்.. அப்படி ஒரு விஷயம் இடையில் வரும் போது தான் சொல்றேன், மற்றபடி எல்லா தொழில்லையும் எப்படியாவது பண லாபம் இருக்கும்! அப்படி எதுவும் அதிகம் இல்லாத தொழில்! நீங்க உங்க மன த்ருபத்திக்காக செய்யும் தொழில்! நான் அதை மதிக்கிறேன்!” என்றான்.

அவர்களும் பிறகு மாற்றி மாற்றிக் கேள்விகள் கேட்க எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதில் சொன்னான்.

ஓரளவு அவன் பேச்சில் எல்லோரும் கன்வின்ஸ் ஆனர். அடுத்த ஒரு மணிநேரத்தில் எல்லா சேனல்களில் மறுப்புச் செய்தி, அடுத்த நாள் காலை பேப்பர்களிலும் அப்படி எதுவும் இல்லை என்ற செய்தி வருமாறு பார்த்துக் கொண்டனர்.

இப்படியாக ஊழியர்கள் வீடு செல்லும் போது மணி பன்னிரண்டு! இவர்கள் வீடு கிளம்பும் போது மணி ஒன்று! அதுவரையிலும் முரளி அவனோடு தான் இருந்தான்.

முரளி அவனோடு இருந்தாலும் அவர்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. கிளம்பும் போது முரளி பேச முற்பட, “ப்ளீஸ்! எதுவும் பேசாதடா!” என்றான் ஈஸ்வர். பிறகு முரளி பேச முயற்சிக்கவில்லை.

ஆனால் இதை மட்டும் சொன்னான், “மீடியான்றதுனால உடனே தகவல் தெரிஞ்சு வந்துட்டேன்! எதுன்னாலும் கூப்பிடுடா! சொல்லாம விடாத!” என்றான்.

ஈஸ்வர் ஒரு தலையசைப்பை “சரி” என்பது போல கொடுக்கும் வரை அந்த இடத்தை விட்டு நகரவில்லை.

“நான் இன்னைக்கு நைட் இங்க இருக்கேன் சார்” என்று தாஸ் அவனின் ஆட்களுடன் அங்கேயே தங்கிக் கொண்டான்.  அதுவரையிலும் உடை பட்ட கண்ணாடியை மாற்றி இருந்தனர்.

“தேங்க்ஸ் தாஸ்” என்றான் மனமார்ந்து.

ஒரு வழியாக அப்போதைய பிரச்சனைகள் முடிந்து வீட்டிற்கு வந்தான். அந்த நேரத்திலும் பாட்டி குழந்தைகள் தவிர யாரும் உறங்கவில்லை. அம்மா, பெரியம்மா, ரூபா என்று அனைவரும் விழித்து தான் இருந்தனர்.

“ரஞ்சனி எங்கே?” என்றான் முதல் கேள்வியாக.

“தூங்கப் போயிட்டா” என்று அம்மா சொல்ல,

மனதில் ஒரு நெருடல்! இப்படி பிரச்சனைகள் ஓடும் போது எப்படி தூங்க செல்வாள் என்பது போல, அதை முகத்திலும் காட்ட

“இந்த விஷயம் கேள்விப்பட்டு தலைவலி சொன்னா, போய் படுன்னு நான் தான் அனுப்பினேன்” என்று அம்மா சொன்னார்.

“சரி, தூங்குங்க!” என்று எல்லோரிடமும் சொல்லி, மேலே சென்றான். ரஞ்சனியின் ரூமில் லைட் எரிவது தெரிந்தது. ரூம் கதவை தள்ளிப் பார்க்க அது திறந்து கொண்டது. உள்ளே சென்றான், ரஞ்சனி ஆழ்ந்த உறக்கத்தில், லைட் எரிந்து கொண்டிருந்தது ஏ சீ போடவில்லை, சரியாகப் போர்த்திக் கொள்ளவில்லை, முகமும் மிகவும் சோர்வாக தெரிந்தது.

லைட்டை அணைத்து, ஏ சீ போட்டு, போர்வையை நன்றாகப் போர்த்தி, சத்தம் செய்யாமல் கதவை மூடி வந்தான்.

ரஞ்சனி இவனைப் பார்க்கக் கூடாது என்று தூக்க மாத்திரைப் போட்டு தூக்கத்தை வரவழைத்துக் கொண்டு தூங்குகிறாள் என்று அவனுக்கு தெரியாதே!

எப்படி என் தங்கையை அவர்கள் அப்படிக் கேட்கலாம், பண கஷ்டம் என்ற உடனே அவர்களுக்கு எவ்வளவு தைரியம் என்ற எண்ணம் தான் திரும்பவும்.

“இதில் நீயேனடா வர்ஷினியை இழுத்தாய்!” என்று மனது ஒரு பக்கம் சாட, “அதோடு விட்டேன்” என்று சந்தோஷப்படு என்று இன்னொரு மனம் விளக்கம் கொடுக்க,

அவன் “இங்கே வா” என்று அழைத்ததும் யோசியாமல் வந்து நின்ற வர்ஷினியின் முகம் கண் முன்னே….

முரளி சொன்னது போல சமயம் பார்த்து கேட்டிருந்தால் கூட பெண் கொடுக்கிறானோ இல்லையோ யோசித்தாவது இருப்பான்.

முரளியை தெரிந்த நாளாக பத்மநாபனையும் தெரியும் தானே! அவனின் நல்ல குணங்கள் தெரியும் தானே! அவர்கள் கேட்ட விதம் எதையுமே சிந்திக்க விடவில்லை.

எப்போதும் எல்லாவற்றையும் ரஞ்சனியிடம் ஈஸியாக பகிர்ந்து கொள்வான். வீட்டில் எல்லோரையும் விட, அப்பா, அம்மாவை விட அவளிடம் ஒட்டுதல் அதிகம்.

இன்னும் இரண்டு நாட்களில் அந்தத் தங்கையோடு சண்டை இட போகிறான்! இனி உனக்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லப் போகிறான்! அவளோட பேசாமல் இருக்க போகிறான் என்று அவன் நினைத்தானா என்ன?

ஒரு சில நிமிடங்கள்! நினையாத பிரிவு உறவுகளுக்குள்! பலர் நம்முள் இதை கடந்திருப்பர்! உறவுகள் அன்னியமாகி விடுகின்றனர்!   

 

 

Advertisement