Advertisement

அத்தியாயம் பதினான்கு :

சொல்லும் வார்த்தைகள் சில சமயம் அதன் உண்மையான அர்த்தத்தை உரைப்பது இல்லை!!!

ராஜாராமின் மனதில் மகனின் விருப்பத்தை  நிறைவேற்ற ஒரு உறுதி பிறந்தது. யாரிடமும் கலந்து ஆலோசிக்கவில்லை. பத்மநாபன் வேண்டாம் என்று சொன்ன போதும், திருமணம் பற்றி பேச முடிவெடுத்தார்.

ஈஸ்வர் முரளியின் நெருங்கிய நண்பன், அவனிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் ஈஸ்வரின் வீட்டினரைப் பற்றி என்று தோன்றவில்லை.

பணப் பிரச்சனை இருப்பதால் அதில் உதவினால் எல்லாம் சுபமாக நடந்து விடும் என்று அவராக மனதில் நினைத்துக் கொண்டார். உலகில் பணம் முக்கியம் என்றாலும் எல்லாவற்றையும் பணம் என்ற அளவுகோலால் அளக்க முடியாது என்று தெரியவில்லை.

ஈஸ்வரும் அப்படியே என்று அவருக்கு புரியவில்லை. இவரின் மக்கள் புழுதியில் புரண்டு இன்று பணத்தில் புரளுகின்றனர். அவன் பணத்தில் தானே புரண்டான். அதனால் அவனுக்கு பணம் முக்கியமில்லை.

“நீ இங்கே இருந்து தான் வந்தாய்” என்று மக்களுக்கு உண்மையை அவர் சொல்லும் போது அந்த உண்மை மற்றவர் மனதிலும் இருக்கும் என்று அவருக்குப் புரியவில்லை.

காதல் திருமணத்தில் தான் திருமணம் என்பது ஆணிற்கும் பெண்ணிற்கும். பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணம் இரு குடும்பங்களின் சங்கமம். ஆதியில் இருந்து எல்லாம் அலசப்படும். பாரம்பர்யம் மட்டுமல்ல முக்கியமாக பெற்றோரின் குணம்.

ராஜாராம் பணத்தை மட்டுமே பிரதானமாக நினைத்தார். தன்னுடைய பலகீனங்களை நினைக்கவில்லை.

மாலையே “ஈஸ்வரை வரச் சொல்லு” என்றார் முரளியிடம்.

“பணம் குடுக்கறோமா பா” என்ற அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் “வர சொல்லு” என்று மட்டும் சொல்ல,

அவர் சொன்ன பாவனையே மேலே கேட்காதே என்று உணர்த்தியது.

முரளி அப்படியே ஈஸ்வரிடம் சொன்னான். “வரச் சொன்னார் டா! பணம் குடுக்கறீங்களா கேட்டதுக்கு ஒன்னும் சொல்லலை”

ஈஸ்வரும் மாலைச் சரியாக வந்து விட்டான்.

அவர் அலுவலக அறைக்கு அழைத்து வரச் செய்தார். யாரும் அவருடனும் இல்லை. எல்லாம் ஹாலில் தான் இருந்தனர். நேரடியாக “ரஞ்சனியை எங்க பத்மநாபனுக்கு கல்யாணம் செய்து கொடுப்பீங்களா?” என்று கேட்க…

ஈஸ்வருக்கு ஒன்றுமே புரியவில்லை. இவர் என்ன பேசுகிறார்? இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. இவர்கள் வேறு ஆட்கள். அவர்கள் வேறு ஆட்கள். நித்தமும் வீட்டில் காலையில் எழுந்ததில் இருந்து இரவு உறங்கும் வரை அத்தனை சாஸ்தரங்கள் சம்ப்ரதாயங்கள் அனுஷ்டானங்கள் என்று பார்ப்பார்.

வீட்டினர் ஒவ்வொருவரின் ரத்தத்தில் ஊறியது. காலையில் பிரம்ம முகூர்த்ததில் விழிக்க வேண்டும் என்று ஆரம்பித்தால், ராகு காலம், எம கண்டம், நல்ல நேரம், சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி, பௌர்ணமி அமாவாசை, இப்படி ஏதாவது ஒன்று தினமுமே. அவர்களின் பழக்க வழக்கம் முற்றிலும் வேறு.

பாட்டி எடுத்ததிற்கெல்லாம் சகுனம் நல்ல நேரம் என்று பார்ப்பார். வீட்டு வேலையாட்கள் கூட அவருக்கு திருப்தி ஆனால் தான். தொழில் வேறு, வீட்டில் அவரின் ஆலோசனையோ சம்மதமோ இல்லாமல் எதுவும் நடக்காது.

வேறு இனத்தில் திருமணமா சாத்தியமேயில்லை.

முரளி வீட்டினரை இவனுக்கு தெரியாதா என்ன, இவர்கள் முற்றிலும் வேறு ஆட்கள். கடவுளை கையெடுத்து வணங்குவர், அது மட்டுமே செய்வர். தவறென்று சொல்ல முடியாது.  ஆனால் ஈஸ்வரின் வீட்டினருக்கு ஒத்து வராது.

இது எல்லாவையும் கூட பின்னுக்கு தள்ளும் விஷயம் ராஜாராம்! இப்படி தன் மகள் என்று தைரியமாக வர்ஷினியை இவர் வீட்டினில் வைத்திருக்கலாம். ஆனால் முறையாக பிறந்தவள் அல்லவே! தாய் யார் என்று இதுவரை யாரிடமும் சொல்லியது இல்லை. இரண்டாவது மனைவிக்கு பிறந்தவள் என்று கூட சொன்னதில்லை.

இவரின் மக்கள் நல்லவர்களே! நாளை இவர் போல் மாறிவிட்டால், எப்படி இந்த வீட்டில் பெண்ணைக் கொடுக்க முடியும்.

அதுவும் இவர்களின் பாரம்பர்யம் ராஜாராம் வீட்டினர் எந்த வகையிலும் அருகில் வரவே முடியாது.

எவ்வளவு உயரமான இடத்தில் இருந்தாலும் ஒரு விஷேஷம் மட்டுமல்ல ஒரு இறப்பு என்றால் கூட இந்த மாதிரியான ஆட்களை சபையில் எப்போதும் ஈஸ்வரின் வகையறா ஆட்கள் அனுமதிக்கவே மாட்டர். அவர்கள் பாட்டிற்கு வந்து ஒரு ஓரமாக அமர்ந்து போக வேண்டியது தான். அவர்களின் ஆட்கள் என்றாலே இப்படி இனி வேறு வகையறா ஆட்களோடு சம்மந்தம் என்றால், இவர்களையும் சேர்த்து ஒதுக்கி விடுவர்.

மனம் விரைவாக எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தது.

அவனின் முகம் அதீத அதிர்ச்சியைக் காட்டியது நன்கு ராஜாராமிற்கு புரிந்தது.

அவனின் முகம் காட்டிய பாவனையில் எப்படியாவது இந்த திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்ற உந்துதலில், “எவ்வளவு பணம்னாலும் தர்றேன், நீ திரும்பக் கூட கொடுக்க வேண்டாம், ரஞ்சனியை பத்மநாபனுக்கு கல்யாணம் செய்து கொடுத்தா போதும்” என்ற வார்த்தையை விட,

ஒரு நிமிடம் நின்று துடித்தது ஈஸ்வரின் இதயம், “என் தங்கையை ஒருவர் பணத்தைக் கொண்டு பேசுவதா?”. அதிர்ச்சியில் இருந்து கோபத்திற்கு அவனின் முகம் அப்படியே மாறியது.

“என் தங்கையின் பிறப்பென்ன. இவர் யார் அம்மா என்று கூட சொல்ல முடியாமல், பணம் இருந்தால் எல்லா மரியாதையும் தானாக வந்து விடும் என்பது போல சொத்துக்களை பெண்ணின் பெயரில் வைத்து,  என் பெண் என்று வீட்டில் வைத்திருக்கும் வர்ஷினியைப் போல நினைத்து விட்டாரா” என்ற எண்ணம் ஆங்காரமாக மனதில் ஓங்கியது.

சில நொடிகள் இங்கிருந்தால் கூட மிகவும் கீழிறங்கி பேசும் அபாயம் இருப்பதை உணர்ந்தவன் கோபத்தையெல்லாம் கண்களில் தேக்கி அவரைப் பார்த்தான், பேச துடித்த மனதை அடக்கி வெளியே வந்தான்.

முரளி ஹாலில் இருந்தவன் இவன் வெளியே வந்ததும் அருகில் வர,

“இதுக்கு தாண்டா ஆளுங்களைப் பார்த்து பழகணும்னு சொல்றது! புத்தியைக் காமிச்சிட்டீங்க இல்லை” என்று சொன்னவனின் முகம் கோபத்தில் இருந்து மாறி, “சே! என்னால் இப்படி நடந்து விட்டதே” என்ற பாவனையைக் காட்டியது.

“என்னடா? என்ன விஷயம்?” என்றான் முரளி பதை பதைத்து புரியாதவனாக

“பழகிட்டேன்னு விட்டுட்டுப் போறேன்! இதே வேற எவனாவது இருந்தான் நடக்கறதே வேற!” என்றவனின் கண்களில் அவ்வளவு சீற்றம். குரல் சற்று சத்தமாகவும் ஒலிக்க வீட்டின் மற்ற உறுப்பினர்கள் அங்கே வர ஆரம்பித்தனர். கமலம்மா, தாத்தா, வர்ஷினி, ஷாலினி.

பத்மநாபன் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தவன் அப்பா கேட்டுவிட்டார் போல என்றுணர்ந்தான். பெண் கேட்டார் அதற்கு எதற்கு இவன் இவ்வளவு பெரிய வார்த்தைகளைப் பேசுகிறான் என்று கோபம் தான் வந்தது பத்மநாபனுக்கு. இந்த அப்பா சொன்னாலும் ஏன் கேட்கவில்லை என்று எரிச்சலாக வந்தது.

வார்த்தைகளின் சாராம்சம் பத்மனாபனுக்கு புரியவில்லை.

“எதுக்குடா இவ்வளவு கோபம்” என்று முரளி பதைக்க,

ஈஸ்வர் பார்வை வட்டத்தில் நின்ற பத்மநாபனை முறைத்தான்.

“அப்பாக்கிட்ட கேட்க வேண்டாம் சொன்னேன்” என்று பத்மநாபன் இதற்கு எதற்கு இவ்வளவு கோபம் என்ற பாணியில் பேச,

முரளி “என்னடா? என்ன பேசற? எனக்கு புரியல்லை!” என்று இன்னும் பதை பதைத்தான்,

சுற்றிலும் பார்த்தான், அப்போதுதான் வர்ஷினியும் அங்கே நிற்பது தெரிய,

“இங்கே வா” என்றான் அவளைப் பார்த்து,

எதற்கு என்று புரியாத போதும் வர்ஷினி சற்றும் தயங்கவில்லை, அருகில் வந்தாள்.

பத்மநாபனிடம் ஈஸ்வர் பேசவில்லை,

“நான் உங்களுக்கு பணம் கொடுக்கறேன், நீங்க எனக்கு திருப்பிக் கொடுக்க வேண்டாம்! இவளைக் கல்யாணம் பண்ணிக்குடுங்கன்னா அதுக்கு என்ன அர்த்தம்டா?”

முரளி “என்ன பேசுகிறான்?” என்று அதிர்ந்து பார்த்தான், வர்ஷினியை இவன் கேட்கிறானா என்று சில நொடி புரியவில்லை.

வர்ஷினியும் இவன் என்னை திருமணம் செய்ய கேட்கிறானா என்று புரியாத பாவனையில் விழித்தாள். என்ன விஷயம், எதற்கு என்று புரியாத போது இவன் ஏதோ சொல்லிக் காட்டுவதற்காக தன்னை இழுத்திருக்கிறான் என்று மனது சொன்ன போதும், ஒரு சிறு சலனம் அந்தப் பெண்ணின் மனதில், பார்த்த நாளில் அவனை வியந்து ஆர்வமாகப் பார்த்தவள் தானே! அதன் பிறகு எப்படியோ?

வர்ஷினியை குறித்து யாரும் அறியாமல் மனதில் பல தவறுகளை ஈஸ்வர் தெரிந்து செய்த போதும், அப்பொழுது தெரியாமல் நிச்சலனமான அந்த சிறு பெண்ணின் மனதில் ஒரு கல்லெறிந்தான்.

“பொண்ணு கேட்கறது தப்பில்லை. ஆனா குடுக்கறதும் குடுக்காததும் எங்க விருப்பம், நான் பணம் கொடுக்கறேன். நீங்க திரும்ப குடுக்கவேண்டாம், பொண்ணைக் கல்யாணம் செய்து கொடுங்கன்னா எங்க பொண்ணை என்ன நாங்க விக்கறோமா?” என்று கேட்டு விட,

“ரஞ்சனியையா?” அப்படியே வாய் மேல் கைவைத்து முரளி பின் நகர்ந்தான். “அச்சோ!” என்று மனம் பதைக்க அனைவருமே நின்றனர். ராஜாரமிற்கு இதில் இப்படி ஒரு அர்த்தமா என்று செய்வதறியாது அவரும் பார்த்து நின்றார்.

கமலம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

ரஞ்சனியை முன்னிட்டு தன்னை உவமைக்கு இழுத்திருக்கிறான் என்பது புரிய, இப்படி ஒரு அர்த்தத்தில் அப்பா பேசியிருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில், “ஏன் இப்படிப் பேசறீங்க?” என்று வர்ஷினி வாய் விட்டே கேட்டுவிட்டாள்.

பதிலுக்கு ஈஸ்வர் அவளைப் பார்த்த பார்வை அங்கிருந்த எவருக்கும் என்றும் புரியாது. அதன் பரிமாணம், “உன்னைப் பார்த்த நாளாக அலைபாயும் என் மனதை அடக்க முயன்று தோற்றாலும், அதனை வெல்ல நான் பிரயர்த்தனப்பட்டுக் கொண்டிருக்க, உன் வீட்டினர் பேசி விட்ட பேச்சு, இனி என்னை நான் அடக்க முயல மாட்டேன்” என்றது.

“உனக்காக நான் உன் தந்தையிடம் பேச அவர் என்ன கேட்டிருக்கிறார்” என்று குற்றம் சாட்டியது.

சில நொடிகள் என்ன செய்வது என்று தெரியாத முரளி, வேகமாக ஈஸ்வரின் கைப் பற்றியவன், “உன்னைத் தெரிஞ்ச நாளா எனக்கு ரஞ்சனியைத் தெரியும்டா! எனக்கும் அவ ஒரு தங்கை தான், ஒரு நொடி கூட அது மாறினது இல்லை”

“அப்பா! ஏதோ பேசப் போய் ஏதோ தப்பா பேசிட்டார்ன்னு நினைக்கிறேன், ப்ளீஸ் நீ தப்பா எடுக்காத, அப்பா நீ சொல்ற மீனிங்ல பேசியிருக்க மாட்டார். எங்களுக்கு எப்பவுமே உங்க வீட்டைப் பார்த்து பிரமிப்பு தான். அது பணத்துனால இல்லை! உங்க பழக்க வழக்கம், உங்க எல்லாமுமே!”

“அந்த மாதிரி வீட்ல இருந்து பொண்ணு எடுக்குற ஆர்வத்துல ஏதாவது வார்த்தை தெரியாம தப்பாப் போட்டிருப்பார்! ப்ளீஸ்!” என்று கை பிடித்து நின்றான்.

“விடுடா” என்று கையைப் பிடிங்கியவன், “அவர் பேசின வார்த்தைகளைக் கேளு! அவரோட ஆர்வம் அதுவா கூட இருக்கலாம்! ஆனா சொன்ன வார்த்தைக்கு அதைத் தவிர வேற அர்த்தம் கிடையாது!”

“என்னால பணம் ஏற்பாடு செய்ய முடியாதுன்னு நினைச்சியா! கண்டிப்பா முடியும்! ஆனா எப்படி யோசிச்சாலும் முதல்ல என் ஞாபகத்துல நீதானேடா வந்த… எனக்கு வேற யோசனை ஓடவேயில்லை. ஆனா நிச்சயம் நான் இதை எதிர்பார்க்கலை” என்ற ஈஸ்வரின் குரலில் அவ்வளவு வருத்தம் வெளியே சென்று விட்டான்.

அப்பாவிடம் வேண்டாம் என்று சொன்னாலும், மனதின் ஓரம் ஒரு எதிர்பார்ப்பு, இது நடக்க வேண்டும் என்பது போல, இப்படியாகும் என்று பத்மநாபன் எதிர்பார்க்கவேயில்லை. இனி இது நடக்கவே நடக்காது என்று தோன்ற அப்படியே அமர்ந்து விட்டான்.

அதுவரையிலும் வர்ஷினி என்ன பார்வை ஈஸ்வரினது என்ற ஆராய்ச்சியில் தான் இருந்தாள். “என்னை எதற்கு அழைக்க வேண்டும்! என்னை வைத்து ஏன் பேச வேண்டும்! சில நொடிகள் என்றாலும் என்ன பார்வை அது?” மனதை ஒரு பயம் கவ்வியது. ஏன் என்று தெரியவில்லை.

“என்கிட்டே சொல்லாம ஏன்பா பேசினீங்க?” என்றான் முரளி.

“இப்படி தப்பாகும்னு நான் நினைக்கலை” என்றார். அவருக்கும் வருத்தமே! அதில் இப்படி ஒரு அர்த்தம் வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

“யார் கிட்ட என்ன பேசறோம்னு யோசிச்சுப் பேச வேணாமா” என்றார் ராஜாராமின் தந்தை.

அப்போதும் ராஜாராம் பார்த்தது பத்மநாபனின் முகத்தை தான். அதை கவனித்த முரளி “நீ இஷ்டப்பட்டியா?” என்றான்.

பத்மநாபன் எதுவுமே பதில் பேசவில்லை…

அவனருகில் வந்த முரளி “சொல்லு” என்று அதட்ட,

அந்த அதட்டலில் தான் வர்ஷினி சுற்றுபுறம் கவனிக்க ஆரம்பித்தாள்.

“உனக்கு ரஞ்சனியைப் பிடிச்சதா கல்யாணம் பண்ண இஷ்டப்பட்டியா?” என்று கோபமாக கேட்க,

“தெரியாது” என்றான்.

முரளி கேட்ட விதத்தில் அவன் மனைவி ஷாலினி பயந்து போனாள். ராஜாரமிற்கு உடல் நிலை சரியில்லாத போது, திருமணமாகி இரண்டு நாட்களிலும் பிறந்த வீட்டிற்கு அனுப்பினான் முரளி, அவள் வந்த நேரம் என்று யாரும் ஒரு வார்த்தை சொல்லிவிடக் கூடாது என்பதற்காக, அவர் ஹாஸ்பிடலில் இருந்து வந்த பிறகு தான் அழைத்து வந்தான். இந்த நான்கைந்து நாட்களாக தான் ஷாலினி வீட்டில் பழக ஆரம்பித்து இருந்தாள்.

இப்படி எந்த சத்தங்களும் இல்லாத வீட்டில் இருந்து வந்தவள். பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

வர்ஷினி என்ன நடக்கிறது என்ன பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கவனிக்க ஆரம்பித்தாள். “என்ன ரஞ்சனி அக்காவை பத்து அண்ணா இஷ்டப்பட்டாங்களா?” என்பது போல கவனித்துப் பார்க்க,

“சொல்லுடா?”

“நிஜமா தெரியாது! நான் அப்பாகிட்ட கல்யாணத்துக்குப் பேசவேண்டாம் அவங்க பொண்ணு குடுக்க மாட்டாங்கன்னு தான் சொன்னேன்”

“என்னடா பேசற நீ? இஷ்டப்படலைன்னா இப்படி ஒரு பேச்சு ஏன் வரணும்? அப்படியே பொண்ணு கேட்டாலும் அதை நிற்பந்திக்கிற மாதிரி அப்பா ஏன் பணத்தை நடுவுல கொண்டு வரணும். அதனால இப்ப அவன் தப்பா புரிஞ்சிகிட்டான்”

“நாம அப்படி இல்லைன்னு சொல்லிப் புரியவைக்கலாம்” என்று தாத்தா சொல்ல,

“அப்படி எல்லாம் அவனுக்குப் புரிய வைக்க முடியாது தாத்தா! அவனாப் புரிஞ்சா தான் உண்டு. ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லியிருக்க வேண்டாமா! அப்படியே பொண்ணு கேட்கறதுன்னாலும் நான் பக்குவமா கேட்டிருப்பேன் அவன் மூட் பார்த்து, அது நடக்குமா நடக்காதன்னு தெரிஞ்சிருக்கும்! அதுக்கு பிறகு வீட்ல இருந்து முறையா பேசியிருக்கலாம். அதைவிட்டு என்ன பண்ணியிருக்கீங்க நீங்க?” என்று கத்தினான்.

முரளி இப்படிக் கோபப்பட்டு கத்தி பார்ப்பது அபூர்வம், எல்லோருமே ஏதோ தப்பு செய்து விட்டது போன்ற ஒரு மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

ஈஸ்வர் போன்ற ஒருவனிடம் நிஜத்திலும் பேசின வார்த்தைகள் தவறு தான்.

வர்ஷினிக்கு ஏதோ ரஞ்சனி அக்காவை திருமணதிற்கு பேசின விஷயம் வார்த்தைகள் தப்பாகி விட்டது என்று மட்டும் புரிந்தது. வேறு சாராம்சம் புரியவில்லை. ஈஸ்வர் வீட்டினரின் பணத் தேவைகள் புரியவில்லை.

யாரிடம் கேட்பாள், பத்துவை பார்த்தால் அவன் அமர்ந்திருந்த தோற்றம் அவளை நெருங்க விடவில்லை, முரளியை பார்த்தால் அவன் அவ்வளவு கோபமாக இருந்தான். கமலம்மாவும் தாத்தாவுமே ஒரு புரியாத பாவனையில் நின்றனர். ஷாலினி அண்ணி எல்லோரையும் பயந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்பா, அவரின் முகம் தீவிர யோசனையில் இருந்தது. ஆம்! அவரின் யோசனை ஈஸ்வரின் வருத்தம் பற்றி எல்லாம் இல்லை. ஏதோ தவறாக அர்த்தம் வந்துவிட்டது, அதைப் போக்க என்ன செய்ய? எப்படி இந்த திருமணத்தை நடத்த என்று தான்.

இவர்களின் யோசனைகள் எல்லாம் இப்படி இருக்க, ஈஸ்வரின் மனதில் இந்த திருமண விஷயமே இல்லை. எல்லாம் பின்னுக்கு சென்றிருந்தன. அஸ்வின் தன்னுடைய வேலையைக் காட்ட ஆரம்பித்து இருந்தான்.

அன்று மாலை ஒரு புகழ் பெற்ற செய்தி சேனலில் ஈஸ்வர் ஃபைனான்ஸ் லிமிடட் கடும் நிதி சிக்கலில் மாட்டி இருப்பதாக செய்தி படிக்கப் பட, அது ஸ்க்ரோலிலும் ஓட, அங்கே முதலீடு செய்தவர்களினிடத்தில் தீப்போல பரவ ஆரம்பித்து இருந்தது.

          பட்ட காலிலேயே படும். கெட்ட குடியே கெடும்!!!

 

 

Advertisement