Advertisement

அத்தியாயம் பதிமூன்று :

எதிரியை என்றுமே குறைத்து மதிப்பிடக் கூடாது! அதுவும் நம்முடன் இருந்து எதிரியானர்வகளை! நமது பலம் அவர்களுக்கு தெரிவது போல நமது பலவீனமும் தெரியும்!  

“என்ன செய்து விடுவான் பார்த்துக் கொள்ளலாம்” என்ற அலட்சியத்தோடு தான் இருந்தான் ஈஸ்வர்.

முரளிக்கு அழைத்து அப்பாவைப் பார்க்க வருவதாக சொல்லவும் “வாடா” என்றான்.

ரஞ்சனியை “வருகிறாயா” என்று அழைக்க,

“இத்தனை நாளா முகத்தைத் திருப்பிக்கிட்டுப் போன இப்ப ஏன் கூப்பிடற வர முடியாது! போ!” என,

“வராத போடி!” என்று மீண்டும் முறுக்கிக் கொண்டான்.

அப்பாவிடம் பணம் கேட்க இருப்பதை சொல்லவும், “கேட்டே ஆகணுமாடா நம்மாள சமாளிக்க முடியாத” என்றார் அம்மா.

“முடிஞ்சா கேட்பேனா”

பணம் கேட்பதை விடுத்து நமசிவாயம் “அஸ்வினை ஏண்டா பகைச்சிக்குற! இன்னும் ஏதாவது பிரச்சனை இழுத்து விடப்போறான்” என்றார் பயந்தவராக.

“என்ன வேணா இழுத்து விடட்டும், நாமளா போனோம்! அவங்களால தானே இவ்வளவும்! என்ன செய்யச் சொல்றீங்க? திரும்ப நல்ல மாதிரி பேசச் சொல்றீங்களா! போங்கப்பா பார்த்துக்கலாம்!” என்றான் சலிப்பாக.

இப்படி சலிப்பவன் அல்ல அவளின் அண்ணன்! சலிப்பை பார்த்த ரஞ்சனி, “நானும் வரட்டுமா விஷ்வா!” என்றாள். ஒற்றை ஆளாக எல்லாப் பொறுப்பையும் தூக்கித் தலையில் போட்டுக் கொண்டான் தானே. யாரோ? எதற்கோ? நான் ஏன் என் அண்ணனிடம் சண்டையிட வேண்டும்! அவனுக்காக எதையும் பொறுத்துக் கொள்வேன்!

“அதான் வரலை சொன்னதானே! இப்ப என்ன? வேண்டாம் போ!” என்று விட்டுச் சென்றான்.

எதற்கு தான் இவனுக்கு இவ்வளவு கோபமோ என்று தோன்றியது. இந்த ஜகன் அண்ணா யோசிக்காமல் செய்த விஷயம் எல்லோரையும் எப்படி சிக்கலில் மாட்டி விட்டது.

இவள் யோசிக்கும் போதே, “அத்தை” என்று மழலையில் அழைத்து பிரணவி தளிர் நடையிட்டு வர, “இவர்களுக்காகவாவது எல்லாம் சரியாக வேண்டும்” என்று நினைத்து குழந்தையை கையில் தூக்கினாள்.

ஈஸ்வர் முரளியின் வீட்டிற்கு செல்ல, ஹாலில் அவனின் தாத்தா மட்டுமே, மரியாதை நிமித்தம் அவரோடு பேசிக் கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து பத்மநாபன் ராஜாராமை கை தாங்களாக அழைத்து வந்து ஹாலில் அமர வைத்தான்.

“எப்படி இருக்கீங்க அப்பா” என்று பேச ஆரம்பித்தான். அதுவரையிலும் முரளிக்கு இவன் வந்ததே தெரியவில்லை. “முரளி” என்று பத்மநாபன் குரல் கொடுத்த பிறகே முரளி வந்தான்.

பின்பு சிறிது நேரம் பேசியிருந்தார்கள். “அப்பா! நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று ஈஸ்வர் நேரடியாக சொல்ல,

“என்கிட்டயா?” என்றார்.

“ஆமாம் பா!” என்று ஈஸ்வர் மீண்டும் சொல்ல.

ஹாலின் ஒரு புறத்தில் இருந்த அவர்களின் அலுவலக அறைக்கு செல்லலாம் என்று கூறி அங்கே சென்றார். அவரை முரளி அழைத்து சென்றவன், “இருப்பதா? செல்வதா?” என்பது போல ஈஸ்வரைப் பார்க்க,

“நீ போ! நான் பேசிக்கறேன்!” என்று அவரின் முன்னே தான் ஈஸ்வர் சொன்னான்.

முரளியும் வெளியே வந்துவிட, பத்மநாபன் என்ன பேச்சாக இருக்கும் என்று யோசனையாக பார்த்து, முரளியிடம் “நீயேன் வந்துட்ட?” என்று கேட்க,

“தனியா பேசணும்னு சொன்னான்”

“உனக்குத் தெரியாதா?”

“பண விஷயம்” எனவும்,

“ஃபைனான்ஸ் ஆட்கள் நம்மிடம் ஏன் பணம் கேட்க வேண்டும்” என்று யோசனை ஓட, அதை முரளியிடம் கேட்க நினைக்கும் முன் முரளி அந்த இடத்தை விட்டு சென்றிருந்தான்.

கிட்ட தட்ட அரை மணிநேரம் பேசினார்கள், ஈஸ்வர் உள்ள நிலைமையை எதுவும் மறைக்காமல் அப்படியே உரைத்தான்.

பின்பு பண உதவி கேட்க,

பெரிய தொகை! ஆனால் ராஜாராமல் முடியாதது அல்ல, ஈஸ்வரையும் நிறைய வருடங்களாகத் தெரியும். அவர்களின் நிறுவனமும் நியாயமானதே.

பணம் தாமதமானாலும் வந்துவிடும் என்று தெரியும். தலையை அடகு வைத்தாவது கொடுத்து விடுவர்! ஆனால் அந்த நிலைமைகெல்லாம் அவசியமில்லாமல் ஈஸ்வர் திறமையானவன்! ஜெயிப்பான்! உள் மனது சொன்னது! அவரின் உள்மனது என்றுமே பொய்த்தது இல்லை.

முன்பெல்லாம் மக்களிடம் கேட்காமலோ சொல்லாமலோ கொடுத்து விடுவார். ஆனால் இன்றைய சூழலில் தனக்கு எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நேரலாம் என்ற நிலையில் மக்களிடம் கலந்து ஆலோசித்து கொடுப்பதே சிறந்தது என்று நினைத்தவர்,

“பசங்க கிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு நல்ல பதிலா சொல்றேன்” என்றார்.

அந்த நேரம் கதவை தட்டும் ஒலி கேட்க,

“யாரது?” என்ற சத்தத்திற்கு, “அப்பா” என்ற வர்ஷினியின் சத்தம்.

கண்கள் ஆர்வமாக வாயிலின் புறம் திரும்பியது,

என்னடா உள்ள வா ,

வர்ஷினி உள் நுழைந்ததும் ஈஸ்வருக்கு வந்த நோக்கம் மறந்தே விட்டது. வந்தவளும் ஈஸ்வரைப் பார்த்து புன்னகைக்க, அந்த இதழ்களின் புன்னகையை விட கண்களின் புன்னகை! அதில் தெரிந்த சிரிப்பு! முகத்தை விட்டு பார்வையை அகற்ற முடியவில்லை!

“உங்களுக்கு கமலம்மா கஞ்சி கொடுத்தாங்க!” என்று அப்பாவிடம் கொடுத்து அவனின் புறம் திரும்பி, “அப்புறம் இந்த சர்க்கு ஜூஸ்!” என்று கொடுக்க, அந்த பாவனைகளில் மனதில் ஒரு அலைபுருதல், அவளைப் பார்த்து புன்னகைத்தவன். அதன் பிறகு அவள் அங்கு இருந்து செல்லும் வரை கண்களை அவள் புறம் செல்ல விடவில்லை.

ஏதாவது பேசுவானோ என்று ஒரு சில நொடிகள் தயங்கிய வர்ஷினி அவன் பார்வையைக் கூட திருப்பாததை உணர்ந்து சென்று விட்டாள்.

அவள் சென்ற பின் ராஜாராமை பார்த்து புன்னகைத்த ஈஸ்வர், “அப்பா! இன்னும் ஒரு விஷயம்!” என்றான்.

பேச வேண்டும் என்று நினைத்து வரவில்லை! திடீரென்று தான் தோன்றியது! பேசாமல் செல்ல முடியவில்லை!

“சொல்லுப்பா”

“என் விஷயம் இல்லை, உங்க விஷயம்!” என்று இடைவெளி விட்டவன்…..

“ரொம்ப சென்சிடிவ், எனக்கு இது பேசக் கூடாதுன்னு தெரியும், பேசாம போக மனசு வரலை. கண்டிப்பா இது முரளிக்காக இல்லை உங்க பொண்ணுக்காக என்று பீடிகையோடு ஆராம்பித்தவன்,

“பேசட்டுமா! வேண்டாமா!” என்றான் மீண்டும் அவரைப் பார்த்து.

ராஜாராமின் முகம் சற்று சீரியசாக ஆரம்பித்தது.

“நான் பேசினது உங்களுக்கு எப்படி பட்டாலும் சரி! நான் பேசினது யாருக்கும் தெரிய வேண்டாம்! கண்டிப்பா முரளிக்கு இது தெரியவே கூடாது! அவன் என்னை நம்பி சொன்ன விஷயம் பா!”

ராஜாராம் அமைதியாக மேலே சொல் என்பது போல பார்த்திருந்தார்.

முரளி தன்னிடம் அம்மாவுக்கு பாதி வர்ஷினிக்கு பாதி என்று தொழில் இருப்பதையும், எதிர்காலத்தில் அம்மாவிற்கு பிறகு மகன்களுக்கு என்று இருப்பதாக சொன்னதை சொன்னவன்,

“இது சரியிலைப்பா” என்றான்.

“என்ன சரியில்லை?” என்ற சற்று கோபமாக வார்த்தை வந்தது.

“யாருக்கும் குடுக்கலைன்னா ஒன்னுமில்லை. வர்ஷினிக்கு குடுக்கறீங்க…. ஆனா உங்க நேரடி வாரிசுகளுக்கு இல்லைன்னா!” என்று சொல்லியே விட,

ராஜாராமின் முகம் கோபத்தைத் தாங்கியது. “என்ன பேசறேன்னு தெரியுதா ஈஸ்வர்” என்றார்.

“கோபப்படாதீங்க” என்றான் அவரின் கண்களை நேரடியாக பார்த்து. அந்தப் பார்வை “நான் தப்பாய் சொல்லவில்லை” என்று நூறு சதவிகிதம் அவருக்கு உணர்த்தியது.

“முரளி எல்லார்கிட்டயும் வர்ஷினியை தங்கைன்னு தான் சொல்வான், சில சமயம் என்கிட்டே எங்கப்பாவோட பொண்ணு சொல்வான்”

“அதை மீறி ஒரு வார்த்தைக் கூட எப்பவும் வந்ததில்லை! ஆனா இந்த விஷயம் தெரிஞ்சு என்கிட்டே பேசும்போது இந்த தங்கைன்ற வார்த்தை வரலை! அது தப்புன்றதை விட அவனோட கோபம் பா! சொத்து வரலைன்றது கூட இங்க பிரச்சனையில்லை!”

“வர்ஷினிக்குக் குடுத்திருக்கார்! எங்களுக்குக் குடுக்கலை! அப்போ எல்லோரும் என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க! எங்க மாமனார் வீட்ல என்ன நினைப்பாங்க! இப்படி நினைக்கறான்!”

“அவன் நினைக்கறது சரி தப்புன்றது இங்க பேச்சில்லை! நான் கூட சொன்னேன், அது அவளோடது அவளோட பேர்ல ஆரம்பிச்சது! அவளுக்கு யாரும் குடுக்கலைன்னு!”

“என்ன சொல்ல வருகிறான்” என்று கவனித்துப் பார்த்தார்.

“இங்க நம்ம பார்க்க வேண்டியது எந்த வித்தியாசமும் இல்லாம பார்த்துக்குறவங்க மத்தியில, இந்த சொத்துனால நம்ம வித்தியாசத்தை உருவாக்கக் கூடாது!”

“ஏற்கனவே வர்ஷினி இந்த வீட்டுக்கும் அவளுக்கும் இருக்குற பாண்டிங், இணைப்பு நீங்க மட்டும் தான்னு நினைக்கிறா!” என்று சொல்லவும்,

“என்ன சொல்கிறான்?” என்பதுப் போல அதிர்ச்சியாகப் பார்த்தார்.

“என்கிட்ட இல்லை, ரஞ்சனி கிட்ட! உங்க உடல் நிலை பத்தி கேட்டிருப்பாப் போல! அவ சொல்லலைன்னதும் இப்படி ஒரு வார்த்தை!”

ராஜாராமின் முகம் அதீத கவலையைக் காட்டியது.

“எதுவா இருந்தாலும் பணத்துக்காக அப்படின்னு ஒரு நிலை கொண்டு வராதீங்க, அவங்க அண்ணனுங்க அவளை தங்களோட தங்கையா நினைச்சுத் தான் பார்த்துக்கணும்”

“தொழில் அவளுக்கு இருக்கு அவங்களுக்கு இல்லைனா?”

“நல்ல பசங்க தான்! ஆனா சூழ்நிலை எப்படி வேணா மாறலாம்! சொல்லணும்னு தோணிச்சு சொல்லிட்டேன்! கண்டிப்பா இது உங்க பசங்களுக்காக இல்லை! பொண்ணுக்காகவும் அம்மாவுக்காகவும்தான்!”

“அம்மாக்கு எப்படியும் ஒரு நாற்பத்தஞ்சு வயசு தான் இருக்கும், இன்னும் பல வருஷம் அவங்க நல்லா இருக்கணும்! சொத்துக்காக அம்மா எப்போ போவாங்கன்னு பசங்க நினைக்கலைன்னாலும், நாளைக்கு அவங்க மனைவி அவங்க பசங்க நினைக்க வாய்ப்பிருக்கு!”

“சொல்லணும்னு தோணிச்சு சொல்லிட்டேன்! அப்புறம் உங்க விருப்பம் பா!” என்று முடித்தான்.

ஒரு வகையில் ஈஸ்வரின் தைரியம் ராஜாராமிற்கு பிடித்தது.

பணம் கேட்டிருக்கிறான்! பணம் கொடுக்க வேண்டுமே என்பதற்காக பயந்து நினைத்ததை சொல்லாமல் விடவில்லை. நீங்கள் செய்வது தவறு என்று நேரடியாக சொல்கிறான்! எந்த பூச்சு மின்றி தைரியமாக அவன் பேசியது அவரை கவர்ந்தது.

“யோசிங்கப்பா நான் பேசினது உங்க பொண்ணுக்காகத்தான்! நான் உங்க பொண்ணுக்கிட்ட ஒரு ரெண்டு மூணு தடவை தான் பேசியிருக்கேன்! பேசின வரை ரொம்ப ரோஷம்ன்னு தெரியுது!” என்றான் திரும்பவும்.

அவரின் முகம் யோசனையைத் தாங்க…

“சரிப்பா நீங்க ரெஸ்ட் எடுங்க” என்று சொல்லி முரளியை அழைத்தான்.

“நான் பசங்களோட பேசிட்டு சொல்றேன்” என்று அவரும் திரும்பவும் வாக்குறுதி கொடுத்தார்.

வெளியே வந்த ஈஸ்வரின் கண்கள் ஹாலை நோட்டம் விட்டது. அவளுக்காக பேசினது ஒரு திருப்தி. அங்கே வர்ஷினி இருந்ததற்கான அடையாளமே இல்லை. “என்ன ட்ரெஸ் போட்டிருந்தா” என்ற யோசனையும் ஓடியது.

அந்தோ பரிதாபம்! அவளின் முகம், கண்களைத் தவிர இன்று எதுவுமே அவனின் கவனத்தில் இல்லை.

அதை யோசித்து வாயிலை நோக்கி நகர்ந்தவன், அங்கே பத்மநாபன் இருந்தான், அவனிடம் ஒரு தலையசைப்பாவது கொடுக்க வேண்டும் என்பது நினைவில் இல்லவே இல்லை.

ஈஸ்வர் சென்று விட்ட பிறகு மகன்களிடம் அப்போதே பேச நினைத்தார். எந்த விஷயத்தையும் ஆரப் போடும் பழக்கமில்லை அவருக்கு. எல்லாம் உடனுக்கு உடனே செய்ய வேண்டும்.

முரளியிடம் பேச அவன் உடனே சரி என்றான், பத்மநாபன் எதுவும் பேசவில்லை. ராஜாராம் அவனின் முகத்தைப் பார்க்க, அதில் என்ன என்றும் தெரியவில்லை.

“என்ன செய்யலாம்?” என்று கேட்க,

“உங்க விருப்பம்!” என்றான் பொதுவாக.

முரளி சென்ற பின் “என்னன்னு சொல்லுப்பா” என்றார்.

“எதுக்குப்பா நம்ம பணம் கொடுக்கணும், ரொம்ப திமிர்பா அவங்களுக்கு பணம் இருக்குன்னு எப்பவும்! இப்ப நம்ம எதுக்கு கொடுக்கணும்!” என்றான் கோபமாக

“ஏன் தம்பி? என்ன கோபம்?” என்றார் ஆச்சர்யமாக.

“அவங்களுக்கு எப்பவும் திமிர் பா! பணத்துக்கு மட்டும் எதுக்கு நம்மகிட்ட வரணும்!”

“திமிரா! என்ன திமிர்? ஏதாவது மரியாதை குறைவா நடந்தாங்களா!”

“அப்படி சொல்ல முடியாது! ஆனா என்னவோ பெரிய ஆளுங்கன்னு நினைப்பு! ஈஸ்வர் மட்டுமில்லை எல்லோரும் அப்படித்தான்! அவனோட தங்கை நமக்கு ஹெல்ப் பண்ண தான் அன்னைக்கு ஹாஸ்பிடல் வந்தாங்க! நான் கொண்டு போய் விடறேன்னு சொன்னா முடியவே முடியாது சொல்றாங்க! என்னவோ நம்ம எல்லாம் அவங்க வீட்டுக்கு வர தகுதியில்லாதவங்க மாதிரி! தெரு முனையிலையே காரை நிறுத்த சொல்லி இறங்கிட்டாங்க!”

“இவங்களுக்கு நாம ஏன் ஹெல்ப் பண்ணனும். நான் ஈஸ்வரை ரொம்ப நாளா பார்க்கிறேன். முரளிக்கு ரொம்ப க்ளோஸ் ஃபிரண்ட் தான்! ஆனாலும் எப்பவும் நம்ம அவங்களுக்கு கீழன்ற மாதிரி தான் நடந்துக்குவான்”

“கஷ்டப்படட்டும்! அப்போ தான் அந்த திமிர் கொஞ்சம் குறையும்! மனுஷங்களை மதிக்க தெரியும்!” என்று பொரிந்தான்.

பத்மநாபன் என்றுமே யாரையுமே இப்படி பேசினது இல்லை இப்போது ஈஸ்வர் பிரச்சனையா இல்லை அவன் தங்கை பிரச்சனையா? “உனக்கு அந்தப் பொண்ணை பிடிச்சிருக்கா” என்றார்.

“அப்பா என்ன பேசறீங்க? என்கூட பேசவே யோசிக்கறாங்க”  என்றான்.

“உனக்குப் பிடிச்சிருக்கா சொல்லு! நம்ம பொண்ணு கேட்கலாம்!”

“அப்பா எனக்கு அதுக்கான வயசு இன்னும் வரலைப்பா! என்னை விட அவங்க பெரியவங்களா கூட இருக்கலாம்! ஏன்னா இப்ப தான் அவங்களும் முடிச்சாங்க! நானும் முடிச்சேன்!” என்ற மகனின் வார்த்தை ரஞ்சனியை பற்றி கண்டிப்பாக யோசித்திருக்கிறான்! அதுவும் வயதெல்லாம் ஆராய்ந்திருக்கிறான் என்று புரிந்தது.

கண்டிப்பாக ஒரு ஈடுபாடு என்று புரிந்தது.

அவர் அமைதியாக இருக்க, “வேண்டாம்பா கேட்காதீங்க! நட்புன்றது வேற! உறவுன்றது வேற! கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்கப்பா” என்றான்.

குரலில் இது நடக்காது என்ற வருத்தம் இழையோடியது மறைக்க முடியவில்லை.

தன்னுடைய மகனின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாவிட்டால் இத்தனை பணம் சம்பாத்தித்து என்ன பயன் என்று தான் தோன்றியது.

ஆனால் அவருக்கு புரியவில்லை பத்மனாபன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை!

            நட்பு வேறு! உறவு வேறு!

 

Advertisement