Advertisement

அத்தியாயம் பன்னிரண்டு :

தடையின்றி செல்வது வாழ்க்கையல்ல! தாண்டுதல் அவசியம்! நம்மை நாமே!!! 

ரஞ்சனி செல்லவும் அவர்கள் ஸ்கேன் முடித்து வரவும் சரியாக இருந்தது.

வந்தவுடனே பத்மநாபன், “எங்கேம்மா வர்ஷினி” என்று கமலம்மாவைக் கேட்டான்.

“வெளில இருப்பா”

“காணோமே காரிடர்ல”

“எங்கேன்னு பாரு” என்று கமலம்மா சொல்ல, பத்மநாபன் செல்லும்முன்னே முரளி சென்றான்.

எல்லாம் பார்த்திருந்த ரஞ்சனி, பத்துவிடம், “வீட்டுக்குப் போயிட்டா” என்றாள்.

“என்ன வீட்டுக்குப் போயிட்டாளா? யார்க் கூட? அவளாப் போயிட்டாளா?”” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினான்.

“ஏதோ தாசண்ணான்னு யாரையோக் கூப்பிட்டா”

“அப்போ சரி” என்று விட்டான்.

ஆனாலும் ரஞ்சனி பதில் சொன்ன விதத்தில் ஏதோ வித்தியாசம் தெரிய, அம்மாவும் அப்பாவும் இருப்பதால் அமைதியாக இருந்தான்.

“ரிசல்ட் வர டைம் ஆகும் அம்மா, நான் ஈவ்னிங் வரேன்” என்று ரஞ்சனி கிளம்ப, முரளிக்கு ஃபோன் செய்து கொண்டே, “நான் அனுப்பிட்டு வர்றேன் அம்மா” என்று அம்மாவிடம் சொல்லி பத்துவும் கிளம்பினான்.

“வர்றேன் மா, வர்றேன் பா” என்று தனித்தனியாக கமலாவிடமும் ராஜாராமிடமும் சொல்லி ரஞ்சனி கிளம்பினாள்.

“வர்ஷினி வீட்டுக்குப் போயிட்டாளாம்” என்று முரளியிடம் சொல்ல, “ஈஸ்வர் எங்கே” என்றான் ரஞ்சனியிடம்.

“அண்ணா கிளம்பிட்டான்” என்று அவள் சொல்ல,

“கிளம்பிட்டானா, நீ எப்படிப் போவ ரஞ்சனி?”

“விஷ்வா கார் அனுப்புவான், ஓகே அண்ணா பை” என்று சொல்லிச் சென்றாள்.

பத்து அவள் பின்னோடு சென்றவன், சிறிது தூரம் சென்றதும், “ஏன் டல் ஆகிட்டீங்க”

அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று ரஞ்சனிக்கு அவசியமில்லை, ஆனாலும் வர்ஷினி தன்னை எல்லோரும் தள்ளி நிறுத்துவது போன்ற மனப்பான்மையில் இருப்பதால் வீட்டினர் யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தவள்,

“வர்ஷினியோட கொஞ்சம் ஆர்கியுமன்ட், அதுல கொஞ்சம் அவ அப்செட், அதான் வீட்டுக்குப் போயிட்டா”

“என்ன அப்செட்டாகி வீட்டுக்கு போனாளா? என்ன அர்கியுமென்ட்?” என்றான் கவலையாக.

“நான் உங்கப்பாவோட உடல்நிலை பத்தி சொல்லும் போது உள்ள போன்னு அவளை சொன்னேன் இல்லையா, அவளை ஏதோ தள்ளித் தள்ளி நிறுத்தற மாதிரி பேசறா”

“என்ன?” என்று விழித்தவன், “இவ்வளவு உங்ககிட்ட பேசினாளா” என்றான்.

“ஆம்” என்றவள், “என்னை மட்டும் சொல்லலை, உங்களையெல்லாம் கூட. அப்பாக்கு உடம்பு சரியில்லாததுல இருந்து யாரும் அவர் எப்படி இருக்கார்ன்னு கிளியரா சொல்லலை, எல்லோரும் தள்ளி நிறுத்தராங்கன்னு ஃபீல் பண்றா”

“என்ன?” என்று இன்னும் அதிர்ந்தான் பதமநாபன், அதையும் விட மனதிற்கு கஷ்டமாக இருந்தது. ரஞ்சனியிடம் இப்படி ஏன் சொல்ல வேண்டும்? என்ன நினைப்பார்கள் வீட்டினரைப் பற்றி என்று அவன் முகம் சிறுத்து விட்டது.

ஆனால் இப்படி பேசும் பெண் இல்லையே! அவள் ஏன் பேசினாள் என்ற கேள்வியும் எழ, “இப்படி எப்பவுமே பேச மாட்டாளே! ஏன் பேசினா?” என்றான்.

“என் அண்ணனோடு பேசிக் கொண்டு இருந்தாள், நான் அண்ணனை கேள்வி கேட்டேன்” என்று எப்படிச் சொல்ல முடியும், ரஞ்சனி மெளனமாக தான் இருந்தாள்.

கார் வந்து விட்டதா என்று பார்க்க, அது வரவில்லை, அவளின் கண்கள் காரைத் தேடுவதை உணர்ந்தவன் “இன்னம் வரலையா?”

“இல்லை போல” என்றவள் அதற்காகக் காத்திருக்க,

“நான் டிராப் பண்ணட்டுமா”

“இல்லை, வேண்டாம், வந்திடும்”

“நான் வீட்டுக்குப் போகிற வேலை இருக்கு, உங்க ஏரியா ஜஸ்ட் கொஞ்சம் தள்ளி தான் விட்டுடுவேன்” ஆம் அவனுக்கு வர்ஷினியை பார்க்க வேண்டி இருந்தது.

“அப்படியெல்லாம் யாருடனும் சட்டென்று போக முடியாது, வீட்டினர் அனுமதிக்க மாட்டர்” என்று இவனுக்கு எப்படிச் சொல்வது என்று விழித்தாள்.

“இல்லை, கார் வந்துடும்” என்றாள் திரும்ப, கூடவே “நீங்க போங்க” என்றும் சொல்ல,

“என்னுடன் இருப்பது பிடிக்கவில்லையோ” என்று பத்மநாபனிற்கு தோன்ற, அவனும் பேசாமல் உள்ளே வந்தவன், அம்மாவிடம் “நான் வீட்டுக்குப் போயிட்டு வர்றேன் மா” என்றான் வர்ஷினியைப் பார்க்க வேண்டி.

திரும்ப அவன் வெளியே வந்த போதும் ரஞ்சனி அப்போதும் காத்திருக்க, “ஏன்? என்னோட வந்தா என்னவாகிடும். இப்படி வெயிட் பண்ணுவீங்க, ஆனா வரமாட்டீங்களா” என்றான்.

அப்போதுதான் இந்த ஈஸ்வர் அவளுக்காகக் காத்திருக்காமல் விட்டு சென்ற எரிச்சலில் இருந்தவள், “சரி வர்றேன்” என்று எழுந்தாள்.

பத்மநாபன் கார் எடுத்து வர, முன் அமர்வதா பின் அமர்வதா என்று ஒரு குழப்பம், பின்புறமே அமர்ந்தாள்.

சிறிது தூரம் சென்றதும் “வேற ஏதாவது பேசினாளா வர்ஷினி” என்று கேட்டான், அவன் கேட்ட விதமே அவன் சிந்தனை முழுவதும் வர்ஷினி என்று தெரிந்தது,

இல்லை என்றவளுக்கும் மனது ஏதோ மாதிரி இருந்தது, இப்படி நேரடியாக வர்ஷினி பேசியது ரஞ்சனிக்கும் கஷ்டமாக இருக்க,

“உங்க வீட்டு வழியா போறோம்னா, நான் வர்ஷினியைப் பார்த்துட்டு போகட்டா, ஜஸ்ட் ஒரு பத்து நிமிஷம்”

எதற்குப் பார்க்க வேண்டும் என்று வாய்மொழியாக பத்மநாபன் கேட்காத போதும் கண்களில் அந்தக் கேள்வியைத் தாங்கி பின் புறம் திரும்பி ரஞ்சனியைப் பார்த்தான்.

“தப்பா நினைச்சிட்டா என்னைப் பத்தி. ஆனா அதை விட அவ எல்லோரும் அவளை ஒதுக்குற மாதிரி நினைக்கிறா, நான் அப்படி இல்லைன்னு சொல்லணும்னு ஒரு இன்டியுஷன், சொல்லாமயும் இருக்கலாம், ஏனோ சொல்லணும்னு தோணுது”

“வாங்களேன்” என்று வீட்டை நோக்கி விட்டான்.

ஹாலில் யாருமில்லை, “தாத்தா இப்போல்லாம் காலையில கொஞ்சம் தூங்கறார், அண்ணி அப்பாக்கு உடம்பு சரியில்லாத போதே அவங்க அப்பா வீட்ல விட்டுட்டான் முரளி. மேல அவ ரூம், நான் போய்க் கூப்பிடறேன்” என்று சென்றவன், கதவை தட்ட அது திறக்கவேயில்லை,

“வர்ஷினி” என்று கத்தி மீண்டும் மீண்டும் தட்ட, அப்போதும் திறக்க வில்லை.

என்னவோ ஏதோவென்று வேலையாட்கள் வந்து நின்று பார்த்தனர், தாத்தாவும் எழுந்து வந்து விட்டார்.

ரஞ்சனி பயந்து விட்டாள். நான்கைந்து நிமிடங்கள் தட்டியவன் கதவை உடைக்கலாமா என்று யோசிக்க ஆரம்பித்தான். அது தேக்கு மரக் கதவு, எதை கொண்டு உடைப்பது என்று நினைத்த நேரம் கதவு திறந்தது.

வர்ஷினி வெளியே வந்தவள் “என்ன அண்ணா” என்றாள் பதட்டமாக.

“ஏன் கதவை திறக்க இவ்வளவு நேரம்” என்று அதட்டினான்.

“நான் ரெஸ்ட் ரூம்ல இருந்தேன், நீங்க ஏன் இப்படித் தட்டுறீங்க” என்றாள் கலவரமாக.

“ஊப்ஸ்” என்றவன், “நீ திறக்கலையா பயந்துட்டேன்” என்றான்.

அப்போதுதான் சுற்று புறம் பார்த்தாள், வேலையாட்கள், தாத்தா எல்லோரும் பார்த்து நிற்பதை, கூடவே ரஞ்சனியும் இருப்பதை.

“ரஞ்சனிக்கா”

“ம், உன்னைப் பார்க்க வந்தாங்க! நீ அவங்களோட சண்டை போட்டியா”

அவனுக்கு பதில் சொல்லாமல் ரஞ்சனியைப் பார்க்க கீழே விரைந்தவள், “என்னைப் பார்க்க வந்தீங்களா”

“பின்ன, நீ தான் என்னோடா சண்டை போட்டியே, அப்புறம் நான் அதையே யோசிச்சிட்டு இருப்பேன்”

“you are so sweet” என்று ரஞ்சனியை அமர்த்தி அருகமர்ந்தவள் “என்ன சாப்பிடறீங்க” என்று வீட்டினளாக உபசரித்தாள்.

தாத்தா யார் என்பது போலப் பார்த்து நிற்க, பத்மநாபன் “இவங்க முரளிண்ணா ஃபிரண்ட் ஈஸ்வர்ரோட தங்கை” என்று சொல்ல,

ரஞ்சனியும் எழுந்து நின்று மரியாதையாக ஒரு வணக்கம் வைக்க, “ஈஸ்வர் தங்கையா” என்று அவரும் மரியாதையாகப் பார்த்தார்.

“இவங்க டாக்டர், அப்பாவைப் பார்க்க வந்தாங்க” என்று சொல்ல, “ஓஹ்” என்றவர் ரஞ்சனியிடம் தன் மகனின் உடல்நிலைக் குறித்துக் கேட்க, என்ன சொல்வது? உள்ளதை உள்ளபடி சொல்வதா? இல்லை சொல்ல வேண்டாமா? என்று திணறினாள்.

கூட வர்ஷினி வேறு “நான் இருக்கட்டுமா! போகட்டுமா!” என்று கேட்க, ரஞ்சனி வர்ஷினியை முறைத்துப் பார்க்க, அமைதியாக அமர்ந்து கொண்டாள் வர்ஷினி.

முன்னம் இருந்ததற்கு இப்போது உடல்நிலை பரவாயில்லை என்பது போல சொல்லி “நான் கிளம்பறேன்” என்று ரஞ்சனி எழ,

“சாரி அக்கா! கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்!” என்று வர்ஷினி விளக்க ஆரம்பிக்க,

“மேலே பேசாதே” என்று உதடுகளின் மேல் ஒற்றை விரல் வைத்து வர்ஷினியிடம் காட்டியவள், “you are alright now na” என்றாள்.

“எஸ்” என்பதுப் போல வர்ஷினி சொல்லவும், “ஓகே நான் கிளம்பறேன்” என்று சொல்லிச் செல்ல முற்பட,

அதற்குள் ஜூஸ் வந்திருந்தது, அதைக் குடித்த பிறகே வர்ஷினி விட்டாள்.

எல்லாவற்றையும் பார்வையாளனாய் பார்த்திருந்தான் பத்மநாபன், யாரிடமும் அதிகம் பழகாத வர்ஷினி, ரஞ்சனியிடம் இயல்பாக பழகுவதை. ஏன் ஈஸ்வரிடம் கூட அப்படித்தானே! அதைத் தானே வேண்டாம் என்று அவன் தடுத்திருந்தான்.

அவன் பார்த்த நாளிலிருந்து ரஞ்சனி எல்லோரிடமும் நடந்து கொண்ட விதம், பழகும் தன்மை அதிலும் வர்ஷினியிடம் பழகும் விதம், தன் அண்ணன் ஈஸ்வரைப் போல திமிர் இல்லாமல் நடந்து கொள்வது,

இவற்றை அறிந்து அவனின் நெஞ்சம் ஆர்வமாக ரஞ்சனியைப் பார்த்தது.

“நான் விட்டுட்டு வர்றேன்” என்று பத்மநாபன் கூட சென்றான். கார் ஏறும்வரை வந்து உடன் இருந்தாள் வர்ஷினி, கூடவே மீண்டும் ஒரு சாரி.

“இட்ஸ் ஓகே” என்று சொல்லி ரஞ்சனி காரில் ஏற, செல்ல ஆரம்பித்த சில நேரத்தில் “உங்க வயசு என்ன?” என்றான் பத்மநாபன்.

“ஆங்! இவன் என்ன கேட்கிறான்?” என்று ரஞ்சனிப் பார்க்க,

“சொல்லுங்களேன்!” என்றான் திரும்ப.

“இதேதடா வம்பு?” என்று கலவரமான ரஞ்சனி “எதுக்கு கேட்கறீங்க”  என்றாள்.

“இப்பதான் காலேஜ் முடிச்சிருக்கீங்க. நானும் இப்பதான் முடிச்சேன்! நீங்க என்னை விட பெரியவங்களா சின்னவங்களான்னு தெரிய”.

“தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க! அதெல்லாம் சொல்ல முடியாது!” என்று கறாராக ரஞ்சனி சொல்ல, அவள் சொன்ன பாவனையில் “ம்ம்மம்மம்ம்ம்ம், சைட் அடிக்கதான் கேட்கறேன்” என்றான்.

“சொல்லிட்டு அடிச்சா அதுக்கு பேர் சைட் இல்லை”

மனதின் இறுக்கம் தளர, புன்னகை அரும்பியது அவன் முகத்தில். “சரி! வயசு சொல்லாதீங்க! உங்க பிறந்த தேதி வருஷம் மட்டும் சொல்லுங்க!” என்றான்.

“ஏங்க? என்னைப் பார்த்தா லூசு மாதிரி தெரியுதா உங்களுக்கு! வயசு சொல்ல மாட்டேன்னா இப்படியா கேட்பீங்க” என்றாள் சீரியசாக.

இதற்கு மேல் எப்படிக் கேட்பது என்று தெரியாதவனாக அமைதியாகி விட்டான்.

அதற்குள் அவர்களின் வீட்டிற்குப் போகும் திருப்பம் வர, “இப்படியே விட்டுடுங்க நான் போயிடுவேன்”

“ஏன்? வீட்ல விடறேன்!”

“இல்லை! வேண்டாம்!” என்று பிடிவாதமாக மறுத்து இறங்கினாள்.

“ஏன் இவ்வளவு பிடிவாதம்”

“முரளிண்ணாவைத் தெரியும், உங்களை வீட்ல யாருக்கும் தெரியாது, ஐ மீன் பழக்கம் இல்லை அதுதான்” என்று சொல்லிவிட்டாள்.

உண்மையில் ரஞ்சனிக்கு சற்று எரிச்சலாக வந்தது, வயதை கேட்கிறான் என்பது போல, ரஞ்சனி விளக்கம் கொடுத்தால் வீட்டினர் யாரும் எதுவும் சொல்லப் போவது இல்லை. ஆனால் இவன் லிமிட் க்ராஸ் செய்கிறானோ என்பது போல ஒரு எண்ணம்.

“ஏன்? என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது?” என்று கேட்க வந்தவன், வார்த்தைகள் இந்த முறையில் வளர்க்க விருப்பமின்றி விட்டு விட்டான்.

தானும் வர்ஷினிக்கு இப்படித்தான் ஜாக்கிரதைகள் சொல்கிறோம் என்பதே அவனுக்கு மறந்து போனது.

விட்டால் போதும் என்று அவள் விரைந்து சென்று விட்டாள். அவனுக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டும் என்று கூட நினைவில் இல்லை. அவளின் எண்ணம் எல்லாம் இப்போது ஈஸ்வரை சுற்றி, “இவன் ஃபிரண்ட்னா இவன் போக வேண்டியதுதானே, என்னைக் கூட்டிக்கொண்டு சென்று தேவையில்லாமல் எனக்கு எவ்வளவு டென்ஷன், எனக்கு இது தேவையா?” என்பது போலத்தான் எண்ணம்.

“இந்தப் பெண் எப்படி ஓடுகின்றது! நான் என்ன செய்து விடுவேன். இவர்கள் எல்லோருக்கும் திமிர் தான், இவள் அண்ணனின் திமிர் இவளிடமும் இருக்கிறது” என்று நினைத்தவனாக அப்பாவைப் பார்க்க மீண்டும் ஹாஸ்பிடல் திருப்பினான்.

பத்து நாட்கள் ஹாஸ்பிடலில் இருந்த பிறகு வீட்டுக்கு திரும்பினார் ராஜாராம், உடல் நிலையில் முன்னேற்றம் என்று சொல்லும்படி ஒன்றுமில்லை, இப்போதைக்கு நடை இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் மோசமடைய  வாய்ப்புகள் உள்ளன என்பதுதான் நிலை.

வீட்டில் முரளிக்கும் பத்மநாபனுக்கும் தான் தெரியும். வேறு யாருக்கும் தெரியப்படுத்தவில்லை ஆனால் தெரிய வேண்டியவருக்கு தெரிந்தது, அதாவது ராஜாராமிற்கு.

தன்னுடைய மக்கள் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை முன் நிறுத்தி தான் அவரின் சிந்தனை இருந்தது.

ரஞ்சனி அன்று பேசியதில் இருந்து ஈஸ்வர் ரஞ்சனியிடம் முறைத்துக் கொண்டு தான் திரிந்தான். ரஞ்சனியிடமே அப்படி எனும் போது ஐஷிடம் சொல்லவா வேண்டும். சில முறை ஐஸ்வர்யா அழைத்த போது தொலைபேசி எடுத்தாலும் என்ன? ஏது? என்ற வகையில் பேச்சுக்கள் இருக்க, அவனிடம் என்ன பேசுவது என்றே அவளுக்கு தெரியவில்லை.

ஐஷ் ஒரு பக்கம் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தாள். யாரிடமும் பகிரவும் முடியவில்லை.

ஈஸ்வருக்கு இருந்த நினைப்பெல்லாம் நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இதில் இன்னும் பண விஷயம் அப்படியே இருக்கின்றது.  இந்தப் பிரச்சனைகள் முன் நிற்க, இதில் வர்ஷினியின் நினைவு இல்லை என்பது தான் உண்மை. அவளும் கண்ணில் படவில்லை, ஆதலால் அவளின் நினைவுகள் முன் நிற்கவில்லை.

ராஜாராம் வீட்டிற்கு வந்து விட்டார் எனத் தெரிந்ததும் அவரை நேரில் சென்று பார்க்கலாம், யாரும் தேவையில்லை, தானே பேசலாம் என்ற முடிவுடன் இருந்தான்.

அன்று காலையில் எழுந்ததில் இருந்து அதே சிந்தனையுடன் இருந்தவன், குளித்து, உணவு உண்டு, அங்கே செல்ல ஆயத்தமாகி கொண்டிருந்தான்.

தயாராகி கீழே வந்த போது அங்கே அவன் கண்ட நபர்!!!

அஸ்வின்!!!

ஹாலில் இருந்தான். அவனைப் பார்த்ததும் மெல்ல மெல்ல ஈஸ்வருள் ரௌத்திரம் ஏறத் துவங்கியது.

ரூபா அஸ்வினிடம் அப்போதுதான் கோபமாகப் பேசிக் கொண்டு இருந்தாள். “என்ன செஞ்சிருக்க நீ, எவ்வளவு தைரியம் ஏமாத்தி இருக்க!” என்று சத்தம் போட,

“என்ன ஏமாத்தினேன்? மாமா என்ன சின்ன பையனா! அவருக்குத் தெரியாம ஏதாவது நடக்கறதுக்கு, எவ்வளவு தைரியம் இருந்தா அப்பாவை கடத்தி இருப்பாங்க, நீ இன்னும் இந்த வீட்ல இருக்க” என்று கேட்க, வீடே அங்கே குழும ஆரம்பித்தது.

“என்ன செஞ்சாங்க உங்களை? ஒண்ணுமே செய்யலையே! எனக்காகத் தான் சும்மா விட்டுட்டாங்க, நீ இதுல வந்து சத்தம் போடறியா”

“ஆமாம், போடுவேன்! கேட்க ஆளே இல்லைன்னு எங்கப்பாவை கடத்துவீங்களா!” என்று அவன் கத்த,

“அஸ்வின் பார்த்து பேசு” என்று ஜகனும் கோபமாக பேச,

“நீ பேசாதே ஜகன்” என்ற அதட்டலோடு முன் வந்தான் ஈஸ்வர்.

அத்துணை நேரமாக ஈஸ்வரைக் கவனிக்கவில்லை அஸ்வின், ஈஸ்வரிடம் பார்வையை திருப்பினான்.

“நான் தான் கடத்தினேன்! என்கிட்டே பேசுடா” என்று முன் வந்து நின்ற ஈஸ்வரை கொன்று விடுபவன் போல அஸ்வின் பார்க்க,

“என்னடா பார்க்கற? ஓடி ஒளிஞ்ச! இப்ப என்ன புதுசா தைரியம்! முன்னாடி வந்து நிக்கற, சுருட்டுன பணத்தை திரும்பக் கொடுக்க போறியா”

“நான் ஒன்னும் எந்த பணமும் சுருட்டலை”

“அப்போ ஏண்டா பயந்து ஓடி ஒளிஞ்ச, குடுடா அந்த ஏஜென்ட் டிடெயில் நான் பார்த்துக்கறேன்”

“நான் ஒன்னும் ஒளியலை! டூர் போனேன்!” என்று சொல்லவும்,

“யார் வீட்டுக் காசுல யாருடா டூர் போறது! நீயும் உங்கப்பாவும் என்ன தொழிலா செய்றீங்க இல்லை வேலைக்குப் போறீங்களா! சும்மா இருக்குற வெட்டிப் ஆளுங்க” என

அதற்கு பதில் சொல்லாமல் “எங்கப்பாவைக் கடத்தி ரொம்ப தப்பு பண்ணிட்டீங்க”

“யாரும் உங்கப்பாவை கடத்தலை! நான் தான்! நான் மட்டும் தான்! என்ன பண்ணுவ?”

“நீ பெரிய ஆளா இருக்கலாம்! ஆனா என்னை வீணா பகைச்சிக்கிட்ட விஷ்வா! நான் என்ன பண்ணுவேன்னு உனக்குத் தெரியாது”

“என்னடா பண்ணுவ? என்னடா பண்ணுவ?” என்று ஈஸ்வர் இன்னும் அவனை நெருங்கி நிற்க,

“சொல்ல மாட்டேன்! செஞ்சிக் காட்டுறேன்!” என்று அவன் சொல்ல,

“எங்க வந்து என்னடா பேசற நீ? முதல் வெளிய போ?” என்று ரூபா கத்தினாள்.

“உன் புருஷன் வீடு, பணம்ன்னு வந்துட்டா அப்பா இல்லைன்னு ஆகிட்டாங்க இல்லை, அப்பாவைக் கடத்தி இருக்காங்க! நீ எதுவுமே பண்ணலை! என்னை வெளிய போன்னு சொல்ற! அனுபவிப்ப ரூபா!”

வீட்டினர் மொத்த பேரும் இதனைப் பார்த்து தான் இருந்தனர், ஆனால் அவர்களால் இதற்கு திரும்ப எல்லாம் பேச முடியாது. அவர்களின் பழக்க வழக்கங்களுள் இந்த பேச்சுக்கள் வராது! இப்படிப் பேச்சையும் இதுவரைக் கேட்டது இல்லை.

எல்லோரும் பயந்து பார்த்திருக்க ரூபாவும் ஈஸ்வரும் மட்டுமே பயமின்றி அஸ்வினைப் பார்த்து இருந்தனர்.

ஈஸ்வருக்கு தெரியவில்லை அஸ்வின் எவ்வளவு அபாயகரமானவன் என்று. அஸ்வின் பொருட்டு இன்னும் பல சிக்கல்களைத் தான் எதிர்கொள்ள நேரிடும் என்று அவன் கண்டானா என்ன?

நின்புகழ்! நின்னை மறைத்த நின் செயல்! நின்னைக் கொல்லும்!!!

 

 

 

Advertisement