Advertisement

அத்தியாயம் நூறு :

கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே
கன்னியென்றேனடி கைகளைப் பிடித்தான்
காதலியென்றென்னை கொஞ்சியே அழைத்தான்
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே..

இன்னுமே காதில் கேட்டுக் கொண்டிருந்தான், “உனக்கு ப்ளசன்ட் மெமரீஸ் இருக்கா?” என்று. படுத்திருந்த மனைவியின் அருகில் சரிந்து கேட்டுக் கொண்டிருந்தான்.

“ம்ம்! இருக்கு! ஆனா பத்தாது!” எனக் கண்திறக்காமல் வர்ஷினி சொல்ல, 

என்ன என்று தெரியாமலேயே, “பத்தாது, பத்தாது” என்று அம்மா சொல்லியதை, சர்வேஸ்வரன் அப்படியே திருப்பிச்  சொன்னான்.

இன்னும் வாகாக சரிந்து “என்ன பத்தாது என் ப்ளூ பாய்க்கு?” என்று மகனை தூக்கி தன் மேல் போட்டுக் கொண்டான் ஈஸ்வர். 

ஈஸ்வர் மேல் படுத்தபடியே அம்மாவைப் பார்த்து யோசித்தான், என்ன பத்தாது என்பது போல், “மா, என்ன பத்தாது?” என அப்பாவைப் போலவே அம்மாவின் காதில் ரகசியம் பேசினான்.

மகனின் புறம் திரும்பிப் படுத்தவள், அவளின் கன்னத்தில் யோசிப்பது போல தட்டி “தெரியலையே, என்ன சொல்லலாம்? நீ சொல்லு!” என,

அம்மாவைப் போலவே கன்னத்தில் தட்டி “சர்வாக்கும் தெரியலை!” என்று உதடுப் பிதுக்க.

ஈஸ்வர் மேலிருந்த மகனை அப்படியே வாரி அணைத்துக் கொண்டாள். முறைத்து பார்த்திருந்தான் ஈஸ்வர் “என்ன லுக்கு, போங்க!” என அதட்ட..

“இருடி உன்னை” என்று மகனின் முன் வாயை மட்டும் அசைத்துக் கட்டினான். பின்னே மகனின் முன் வாடி போடி என டி எல்லாம் போட்டு பேச மாட்டான். ஆனால் வர்ஷினிக்கு அதெல்லாம் கிடையாது, சொல்லுடா டால்டா பேச்சு தான்!

அம்மாவும் மகனும் மதிய உறக்கத்தில் இருந்தார்கள். ஈஸ்வர் அப்போது தான் ஆஃபிசில் இருந்து வந்திருந்தான். “நீ வாடா செல்லம்” என்று மகனை அம்மாவிடம் இருந்து பிரித்து, இதமான மாலை நான்கு மணி வெயிலில், மகனின் உடைகளைக் களைந்து, அவனும் களைந்து, இருவரும் ஷார்ட்ஸில் அவர்களின் பெட் ரூமின் உள் இருந்த நீச்சல் குளத்தில் இறங்கினார்கள்!

மூன்று வயது மகன்! பெயரைப் போலவே சர்வமும் அவனே சங்கீத வர்ஷினிக்கு. மகன் பிறந்த பிறகு எந்த குறைகளும் அவளுக்குள் இல்லை.  

சர்வேஷ் நிறைய மாற்றங்களை வர்ஷினியுள் கொண்டு வந்திருந்தான். மிக மிக நல்ல மாற்றங்கள். தனிமை போயிருந்தது. பொறுப்புக்கள் தானாக வந்திருந்தது! எதற்கு இந்த வாழ்க்கை என்ற எண்ணம் போய், இந்த வாழ்க்கை எனக்காக, என் மகனிற்காக, என் ஈஸ்வருக்காக, என் குடும்பத்திற்காக என்பது மட்டுமல்லாது என் நாட்டிற்காக என்ற எண்ணம் வந்திருந்தது.

“ஆம், மூன்றொருவருக்கு தெரியாமல் நிறைய சமுதாய பணிகள், உதவிகள். ஒரு போதை விடுபடும் மையம் நிறுவி, அதற்கு எல்லாம் செய்தாள்! ஆனால் அவளின் பேர் எங்கும் கிடையாது. ஈஸ்வர்! ஈஸ்வர்! ஈஸ்வர் மட்டுமே!  

அதையெல்லாம் விட தன் உணர்வுகளை எந்த தயக்கமுமின்றி ஈஸ்வரிடம் பகிர ஆரம்பித்து இருந்தாள். ராஜாராம் இறந்த போது கூட தனிமையைத் தேடியவள், இப்போது சிறு சிறு விஷயத்திற்கும் ஈஸ்வரை தேடினாள். தனிச்சையாய் எந்த முடிவுகளும் எடுப்பதில்லை.  

சர்வா அப்பாவின் பின் கழுத்தை கட்டிக் கொள்ள, மகனுடன் நீரில் இறங்கிய ஈஸ்வர், நீந்த ஆரம்பிக்க, சர்வா அவனின் முதுகில்.

சர்வாவிற்கு மிகவும் பிடித்த விளையாட்டு, அப்பாவின் அகன்ற முதுகில் சவாரி செய்து தன் பிஞ்சுக் கைகளால் அந்த தண்ணீரைத் தள்ளி, என்னவோ அப்பாவை அவனே நீந்தச் செய்வது போல ஆக்ஷன் செய்வான்.

மகனுடன் கிட்டத்தட்ட கால் மணிநேரத்திற்கும் மேல் நீந்தினான். மனைவி வருவதாகக் காணோம்! திரும்ப உறங்கியிருப்பாள் எனப் புரிந்து, மகனுடன் தண்ணீர் விட்டு வெளியே வந்து, மகனுக்கு துவட்டி, அவன் ஈரத்துடன் அப்படியே வந்து தலையை சிலுப்ப, அந்த தண்ணீர் துளிகள் பட்டு வர்ஷினி விழிக்கவும், “போ! இவனைக் கொண்டு போய் அம்மா கிட்ட விட்டுட்டு வா!” என,

“தோடா! முடியாது!” என,

ஈஸ்வர் எதுவுமே பேசாமல் அப்படியே நின்றான். ஆம், இப்போது மலரும் நமஷிவாயமும் அவர்களுடன் தான். வர்ஷினி கர்ப்பம் தரித்த உடனே இனிமேல் அம்மாவை இங்கே தான் இருக்க வேண்டும் என்று அழைத்து வந்திருந்தான். அது ஈஸ்வரின் முடிவு அல்ல, வர்ஷினியின் முடிவு! அதில் ஈஸ்வருக்கு வெகுவாக சந்தோஷம் அவ்வளவே!     

அவனை முறைத்தவாறே எழுந்து வெளியில் வந்து, “அத்தை” என.. மலரிடம், சர்வேஷை விட்டு ரூமின் உள் வர.. கதவை தாளிட்ட ஈஸ்வர்.. அப்படியே வர்ஷினியை கையினில் தூக்கியிருந்தான்.

“இப்போ நானா?” என சலிப்பது போலப் பேசினாலும், அவளுக்குமே இது மிகவும் பிடித்தமானது.  

“நீதான் நீதான்” என்று ஈஸ்வர் தூக்கிச் சென்றவன், “பாரு, நான் என் பையன் எல்லாம் ஸ்விம் ட்ரெஸ் தான் போட்டோம்!” என,

“அதெல்லாம் என்னால முடியாது!” என கறாராகப் பேசினாள்.

“ஓகே, ஸ்விம் ட்ரெஸ் வேண்டாம், ஒரு டீ ஷர்ட், ஷார்ட்ஸ், இல்லை மினி, இல்லை மிடி என அடுக்கி, அட்லீஸ்ட் ஒரு புடவை!” என்று வந்து நிற்க, 

“அடேய் கிராதகா” என்ற ஒரு லுக் வர்ஷினி விடவும்,

“பின்ன இந்த சுரிதார்ல நீ தண்ணீல இறங்கினா, நான் எதைப் பார்க்க” என்று பாவம் போல சொல்லாமல் சீரியசாகவே சொன்னான்.

“என்னது?….. எதைப் பார்க்கவா? என் கண்ணைப் பாருங்க!” என்று மிரட்ட,

“உன் கண் சீசன் எல்லாம் முடிஞ்சு போச்சு” என்று அவளை கடுப்பேற்றியவன், “அதெல்லாம் என் பையன் கிட்டப் பார்த்துக்குவேன். நீ எனக்கு வேற காட்டு” என்றான்.

ஆம்! சர்வேஸ்வரனுக்கு நீல நிறக் கண்கள், அம்மாவைப் போலவே!

“அப்போ சரி, பார்க்காதீங்க” என்று வர்ஷினி கண்களை மூடிக் கொள்ள..

அவளை இழுத்துக் கொண்டு அப்படியே தண்ணீரில் குதித்தான் அவள் எதிர்பாராத போது, “நீயே இதெல்லாம் கழட்டி போடறவரை, உன்னை தண்ணிக்கு மேல விட மாட்டேன்” என தண்ணீருக்குள் அழுத்த,

அவள் தள்ள, இவன் தள்ள, என ஒரு யுத்தமே அங்கு நடந்தது. வேறு வழியில்லாமல் ஈஸ்வரை அணைத்துப் பிடித்து மேலே வந்தாள்.

அவனோடு நீந்தி, சுவரின் ஓரம் பிடித்து நின்று, “உனக்கு ரொம்ப ஓவரா தெரியலை” என மூச்சு வாங்கப் பேச,  

“என்ன ஓவர், இதுக்கு பேர் தான் வர்ஷ் ஜலக்ரீடை” என கண்ணடித்து ஒரு விரிந்த சிரிப்புடன் சொல்ல,

“ஜலக்ரீடை! டர்மினாலாஜி நல்லா இருக்கான்னு சர்வாகிட்ட கேட்கறேன்!” என,

“அம்மா தாயே, செஞ்சிடாதடி செஞ்சிடாத. என் பையன் கிட்ட எல்லாம் நீ பேசக் கூடாது. அவனுக்கு நல்ல வார்த்தைகள் மட்டும் தான் கத்து தரணும்!” என,

“அவன் உங்க பையனா? அப்போ எனக்கு யாரு?”  

“பங்கெல்லாம் போடாத, நீ ஒரு பொண்ணை பெத்து அவளை என்கிட்டே குடுத்துட்டு இவனை சொல்லிக்கோ”  

“எப்படி, இப்படி” என வர்ஷினி ஆச்சர்யப்படுவது போல ஈஸ்வரை கிண்டல் செய்ய,

இப்படி என அவளை இழுத்து மீண்டும் தண்ணீருக்குள் சென்று, அவன் சொன்ன வார்த்தையின் அர்த்தத்தை காட்ட,

வர்ஷினி திணறியவள், “ஆபிஸ் போகணும், வேலையிருக்கு, அப்புறம் பார்ட்டி டைம் ஆகிடும், இப்போ சர்வா தேடுவான்” என காரணங்களை அடுக்கி ஈஸ்வரிடம் கெஞ்ச,

“அப்போ நைட் ஸ்விம் சூட்ல வரணும், ஓகே வா!” எனக் கேட்டு.. அவள் “ஓகே” என்ற பிறகே விட்டான்.

ஆம்! ஈஸ்வரின் நீல நிறக் கண்களின் மீது காதல் சிறிதும் குறையவில்லை. அதுவும் அவளின் கண்களின் நீலத்தை வானத்தின் நீலத்தோடும், தண்ணீரின் நீலத்தோடும் அனுபவிக்க முற்படுவான்.

ஈஸ்வர் இன்னும் நீந்திக் கொண்டிருக்க, வேகமாக சென்று குளித்து, வேறு உடை அணிந்து, தலையை டிரையரில் காய வைத்து, என மின்னலாய் தயாரான போதும் அரை மணிநேரம் ஆகிவிட, அவள் கதவை திறக்கவும் சர்வேஷ் கதவை தட்ட கை வைக்கவும் சரியாக இருந்தது.

“வாங்க, வாங்க, அண்ணா, அக்கா, எல்லாம் வந்துடுவாங்க!” என மலரிடம் விட்டு, வீட்டின் முன் இருந்த ஆஃபிசிற்கு ஓடினாள். “சாரி கைய்ஸ், ரெண்டு நிமிஷம் லேட் ஆகிடுச்சு” என சொல்லி ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் செய்து கொண்டிருந்த அவளின் டீமோடு இணைந்து கொண்டாள்.

ஆம்! தன் ஸ்டுடியோ, தன் விருப்பப்படி அமைத்துக் கொண்டிருந்தாள். அவள் செய்யும் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் போல பிரமாண்டம். இப்போது ஹாலிவுட் படங்கள் இல்லை. கர்ப்பமான போதே தவிர்த்து விட்டாள். அலைச்சல் ஆகாது என..

ஆனால் இந்தியப் படங்களில் ஒரு நிலையான இடம், இந்த சொற்ப வருடங்களில்! அவளிற்கு என ஒரு பிராண்ட் நேம் க்ரியேட் செய்துக் கொண்டிருந்தாள். ஹாலிவுட் படங்களின் தரத்தை இங்கே கொடுக்க.. இதோ அடுத்த வருடம் செய்யப் போகும் படத்திற்கு இந்த வருடமே புக் செய்திருந்தனர்!

ஆனால் வெளிநாட்டு பட வியாபாரம் அப்படியே இருந்தது. அதில் நல்ல லாபம் கூட!   

தன் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் மூலம் புதிது புதிதாக ஒரு மாய உலகை படைத்தாள். அவளுக்கு புதிது புதிதாய் ஒரு மாய உலகை காட்டிக் கொண்டிருந்தான் ஈஸ்வர்.    

அவளின் கசப்பான நினைவுகள் எல்லாம் போன ஜென்ம நிகழ்வுகளாய் ஒரு தோற்றம் கொடுத்தது.  

ஏழு மணி ஆகவும் இடத்தை விட்டு எழுந்தவள், “இந்த வொர்க் முடிச்சிட்டு, எங்களை வந்து ஜாயின் பண்ணிக்கங்க” என அழைப்பு விடுத்து உள்ள செல்ல,  

ஐந்து வயது ரிஷி, பதினொரு வயது பிரணவி, பதினான்கு வயது சரண், எட்டு வயது நிஷாந்த், நான்கு வயது அத்வைத் என எல்லோரும் இருந்தனர்.

ரிஷி “அத்தை” என வந்து கட்டிக் கொண்டான். 

“இட்ஸ் பார்டி டைம்” என்ற ஒரு கூச்சல்! ஆம், சர்வேஸ்வரனுக்கு இன்று தான் மூன்றாவது பிறந்த நாள். அதற்காக பார்டி செய்ய எல்லா குழந்தைகளும் வந்திருந்தனர்.

பார்ட்டி எட்டு மணிக்கு, எல்லோரும் சேர்ந்து எல்லாம் ரெடி செய்ய..

ஒரு ஒருவராக எல்லோரும் வந்தனர். யார் வருவர்? தாத்தா, கமலம்மா, முரளி, பத்து, ரஞ்சனி ஷாலினி .. பாட்டி, பெரியம்மா, ரூபா, ஜகன், சித்ரா அக்கா அவளின் குடும்பத்துடன் என எல்லோரும்!

ஈஸ்வர் எல்லாம் பார்த்து தான் அமர்ந்திருந்தான். ஆனால் வர்ஷினியின் பக்கத்தில் எல்லாம் வரவில்லை, அவனின் கொஞ்சல்களும் குலாவல்களும் எல்லாம் அவனின் படுக்கை அறைக்குள், அதனுக்குள் இருக்கும் ஸ்விமிங் பூல் உள் மட்டுமே!

வர்ஷினியின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர், “நீங்க பக்கத்துல வந்தா என்னால எந்த வேலையும் ஒழுங்கா செய்ய முடியாது” என்பது போல. அதனால் தள்ளியே நிற்பான்.  

வெளியில் எதுவுமே தெரியாது. எல்லாம் கெத்தாக அமர்ந்து வேடிக்கை மாட்டும் பார்த்துக் கொண்டிருக்க.. முரளி அவன் அருகினில். 

ஈஸ்வர் உதவாவிட்டால் என்ன? பத்து தான் இருக்கின்றானே! அவன் சென்று வர்ஷினிக்கு உதவ, குழந்தைகளின் சத்தம் காதை பிளக்க, “சரண்” என்ற ஈஸ்வரின் ஒற்றை அதட்டல், எல்லா குழந்தைகளையும் அடக்கியது.

“உங்கண்ணா செமையா டெர்ரர் பீஸ் லுக் குடுக்கறாங்க அண்ணி!” என்று ரஞ்சனியை வர்ஷினி வம்பு இழுக்க,

“என்னை விட்டுடு, நான் இந்த விளையாட்டுக்கு வரலை!” என்று ரஞ்சனி ஒதுங்க,

“அண்ணி, வாட் இஸ் திஸ்” என வர்ஷனி சிணுங்க,

“அம்மா தாயே, என்னை விடு! உன்கிட்ட பேச ஆரம்பிச்சாவே, எங்கண்ணன், உங்கண்ணன்னு ஒரு படையே என்னை வாட்ச் பண்ணும்” என சிரிப்போடு சொன்னாள்.

“இல்லைன்னா மட்டும், எங்கண்ணா உங்களை வாட்ச் பண்றது இல்லையா” என பத்துவை கிண்டல் செய்து,  “ஷாலினி அண்ணி” என கத்திய வர்ஷினி, “இங்க ஒரு பஞ்சாயத்து வாங்க!” என..

பத்து ஒரு புன்னகையோடு ரஞ்சனியை பார்த்திருந்தான். இப்போது நிறை மாத கர்ப்பிணி ரஞ்சனி. இரண்டாவது பெண் குழந்தைக்காக பத்துவும் அவளும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.  

“ஷாலினி” என்ற பேர் கேட்டதும், “அம்மா, அவ வந்தா என்னை ஓட்டியே எடுத்துடுவா, நான் எஸ்கேப்!” என்று ரஞ்சனி சென்று ஈஸ்வருடன் அமர்ந்து கொண்டாள்.  

இப்படியாக நேரம் ஓட, உறவுகளிடம் குறைகளே தெரியவில்லை, குறை சொல்ல மாட்டாதவளாகி நின்றாள் வர்ஷினி!

ஈஸ்வருக்கு எல்லாம் எல்லாம் ஏறுமுகம் தான்! தொட்டது துலங்கியது! ஐ பீ எல் லில் கடந்தவருடம் சேம்பியன்ஷிப் வென்றிருந்தனர்! கபடியும் ஸ்பான்சர் செய்தனர். ஈஸ்வர் பைனான்சும் அமோகம், கூடவே இன்னும் சில தொழில்கள்! எல்லாம் லாபம் கொழித்தன.    

எல்லோரும் வந்து நிற்க, ஈஸ்வர் சர்வாவின் கை பிடிக்க போக, “வேண்டாம் விடுங்க, அவனே பண்ணட்டும்” என வர்ஷினி சொல்லி, அவர்களின் மகன் வெட்டியது கேக்கை அல்ல, அவனின் மலர் பாட்டி செய்திருந்த மைசூர் பாகை!  

வர்ஷினி அருகில் நின்று, “ஒரு பீஸ் எடு சர்வா” என, எடுக்கவும்.. “நீ சாப்பிடு” என சர்வாவின் கை பிடித்து அவனின் வாயினில் வைக்கப் போக,

“இல்லை, நீ வா!” என்பது போல மகன் குனிய சொல்ல,

“நீ சாப்பிடு கண்ணா!” என, அப்போதும் பிடிவாதமாய் குனிய வைத்து, வர்ஷினி வாயில் வைக்கவும், அவள் ஒரு கடி கடித்தவுடன், பின்பு அதனை சர்வேஸ்வரன் வாயினில் வைத்தான்.

ஈஸ்வரை ரகசியமாக முறைத்தாள். சர்வா அம்மாவிற்கு கொடுக்கிறான் என்பது போல தோன்றினாலும், உண்மையில் அது ஈஸ்வரின் பழக்கம். யாரும் அறியாமல் ஈஸ்வரின் கையினில் ஒரு கிள்ளுக் கிள்ள, “ரத்தக் காட்டேரி” என முணுமுணுத்து, “நைட் பார்த்துக்கறேன் வாடி” என்று ரகசியம் பேசினான்.  

எல்லோருக்கும் கொடுத்து முடித்திருந்தாலும், “ம்மா அஸ்வின் மாமா எங்கே?” என,

“அதானே எங்கே?” என அவள் யோசித்து மொபைல் எடுக்கும் போது, “தோ வந்துட்டாங்க” என, அஸ்வின் ஐஸ்வர்யாவின் மூன்று வயதுப் பெண் ஆருத்ராவை பிடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான்.

“நானும் வருவேன்னு ரகளை” என,

வர்ஷினி “எதுக்கு இவ்வளவு எக்ஸ்ப்லனேஷன்” என முறைத்து பார்க்க.. அதற்குள் அவளின் பெரியம்மா ரூபா வந்து “வாங்க குட்டி பொண்ணு” கையினில் தூக்கி இருந்தாள்.

“அடி வாங்கப் போற நீ” என்ற பார்வை இன்னம் வர்ஷினி அஸ்வினை பார்க்க.. “தெரியாம சொல்லிட்டேன், தெய்வமே விட்டுடுங்க” என சொல்லிக் கொண்டே, சர்வேஸ்வரனின் அருகினில் சென்று அவனைத் தூக்கி கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்னான்.

“எங்கே என் கிஃப்ட்?” என சர்வா கேட்க.. “ங்கே” என விழித்தவன், “சீக்கிரம் கொடுத்துடறேன்” என,

“அதெல்லாம் முடியாது, இன்னைக்கு தர்றேன் சொன்னீங்க” என,

வர்ஷினியை பரிதாபமாகப் பார்த்தான்.. அவள் சொன்னாலன்றி சர்வா நிறுத்த மாட்டான்.  இத்தனையும் ஒரு புன்னகையோடு ஈஸ்வர் பார்த்திருந்தான்.

“கேட்கறான்ல குடுங்க” என்று வர்ஷினியும் நிற்க, “சீக்கிரம் கொடுக்கறேன்” என்று அவளிடமும் வாக்குறுதி கொடுக்க,

“இப்படித் தான் போன பர்த்டேல இருந்து சொல்றீங்க” என,

“நானும் பார்த்துட்டே தான் இருக்கேன், எனக்கு யாரையும் பிடிக்கலை” என்று பரிதாபமாச் சொன்னான்.

ஆம்! சர்வா கேட்ட கிஃப்ட் .. “அத்தை”.. அஸ்வின் திருமணம் செய்து அவனுக்கு அத்தை கொண்டு வரச் சொல்ல,

அஸ்வினும் மாட்டேன் என்பது போல எல்லாம் சொல்லவில்லை, ஆனால் எப்படிப் பார்த்தாலும் யாரையும் பிடிக்கவில்லை. “கண்டிப்பா பண்ணிக்குவேன்” என வர்ஷினியிடம் கெஞ்ச, “சரி, பிழைத்துப் போ” என்பது போலப் பார்த்தவள்,

“மாமாக்கு அத்தை ஆன் தி வே கண்ணா” என மகனை சமாதானம் செய்ய,  பின்பு அஸ்வினுக்கு கொடுத்து முடித்தவன் தாஸை தேடி ஓடினான். “தாஸண்ணா” என அம்மாவைப் போலவே அழைத்து, சர்வாவே தாஸின் வாயினில் ஊட்டி விட்டான்.

ஆம்! எல்லோருடனும் இறங்கி, இணங்கி பழகும் வகையில் தான் சர்வேஸ்வரனை வளர்த்தாள். ஈஸ்வர் போல கெத்து காட்டி, பெரிய ஆள் என்ற தோரணை எல்லாம் வரவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தாள் வர்ஷினி.      

மகனும் அவளைப் போல எல்லோருடனும் எளிமையாய் பழகினான். வர்ஷினியின் இந்த எண்ணங்கள் புரிந்தாலும், ஈஸ்வர் எதிலும் தலையிடுவது இல்லை.  தன்னை விட நன்றாய் வளர்ப்பாள் என்ற நம்பிக்கை இருந்தது.

பார்ட்டி முடிந்து, எல்லோரும் வீடு சென்று விட.. மகனை உறங்க வைத்து கொண்டிருந்தாள் வர்ஷினி. ஈஸ்வர் அதனை வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்தான்.

இமைக்காது தன்னைப் பார்த்து அமர்ந்திருந்த ஈஸ்வரை அவளால் முறைக்கக் கூட முடியவில்லை. அவனைப் பார்த்தாலே ஒரு வெட்கம் வந்து தொலைத்தது, அப்படி ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

“எதுக்கு இந்த பார்வை” என வர்ஷினி அவனின் காதில் விழும்படி முணுமுணுக்க, எதையும் ஈஸ்வர் காதினில் வாங்கவில்லை பார்ப்பதையும் நிறுத்தவில்லை.

சர்வா உறங்கி விட்டான் எனத் தெரிந்ததும், அவளை அப்படியே தூக்கிக் கொண்டு நீச்சல் குளம் போனவன், அதில் இறக்கி எல்லாம் விடவில்லை.

நீச்சல் குளத்தின் திட்டில் அவளை அமரவைத்து, தானும் அமர்ந்து கொண்டு, தண்ணீரில் கால் விட்டுக் கொண்டான், அவளையும் விட வைத்தான். வர்ஷினி அவனைப் பார்க்க பார்வையை புரிந்தவனாக, “நீச்சல் உடை தானே கொஞ்ச நேரம் போகட்டும்” என்று ஒரு மௌன சிரிப்போடு சொல்ல,

அதை கவனியாதவளாக, “முதல்ல எல்லாம் என்னோட பார்வை உங்களுக்குப் புரியாது. இப்போ நான் பார்த்தாலே ஓரளவுக்கு கெஸ் பண்ணிடறீங்க” என,

தோளோடு அணைத்துக் கொண்டவன், அப்படியே அந்த ஏகாந்தத்தை அனுபவித்து அமர்ந்திருந்தான். வர்ஷினியோடான வாழ்க்கையை ஒவ்வொரு நொடியும் அனுபவித்தான். வாழ்க்கை இதை விட யாருக்கும் சிறப்பாய் இருக்குமா என ஈஸ்வருக்கு தெரியவில்லை. 

சிறிது நேரம் பொறுத்தவள், “இன்னம் கொஞ்சம் நேரம் விட்டீங்க, நான் தூங்கிடுவேன்” என்று சிரிக்க,

“அதுக்கு தானே தண்ணிக்குள்ள கால் விட வெச்சிருக்கேன்” என,

“நாங்கல்லாம் தண்ணிக்குள்ளயே தூங்குவோம்” என,

“அப்போ வா” என அப்படியே இழுத்து, மீண்டும் தண்ணீருக்குள் மூழ்க, சிறிது நேரம் நீந்தியவர்கள், “நீங்க ஸ்விம் ட்ரெஸ் போட சொன்னீங்க” என ஞாபகப் படுத்தினாள்.

“நீ இந்த நைட் டிரஸ் குள்ள, ஸ்விம் ட்ரெஸ் போட்டிருப்ப. எனக்குத் தெரியும்” என காதலாகப் பார்க்க,

“எப்படி தெரியும்? ஒளிஞ்சு பார்த்தீங்களா?” என அதிபுத்திசாலித்தனமாகக் கேட்க, 

“அட லூசே” என்பது போலப் பார்த்தவன், “உன்னை ஒளிஞ்சு பார்ப்பாங்களாக்கும், போடி! உன் பையன் கூட ஹைட் அண்ட் சீக் விளையாண்டா இப்படி தான் யோசனை போகும்!” என சீண்டினான்.

“ஹி, ஹி” என வர்ஷினி சிரித்து வைக்க, 

“நான் கேட்டு நீ எதை மறுத்திருக்க” என்றவன், “தண்ணிக்குள்ள உன் நைட் ட்ரெஸ் எங்க இருக்கு பாரு” என விஷமமாக சிரித்தான்.

அசடு வழிந்தவள் வெட்கத்தில் அவனை அணைத்துக் கொள்ள,

“சர்வாக்கு மூணு வயசாகிடுச்சு வர்ஷ்” என்றவன், “எனக்கு ஒரு பொண்ணை பெத்துக் குடு, உன் மாதிரியே இந்த கண்ணோட” என,

“ம்ம்” என்ற முனகல் மட்டுமே வர்ஷினியிடம், மனைவியின் சம்மதம் ஈஸ்வரை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்ல, அவளையும் வேறு உலகத்திற்கு அழைத்து செல்ல ஆரம்பித்தான்.

ஈஸ்வரின் நெஞ்சில் எங்கும் அவளின் பிம்பம்! அவனில் சிந்தும் சந்தம் அவளின் சொந்தம்!

சங்கீத வர்ஷினி விஸ்வேஸ்வரனுடன் உடலால் மட்டுமல்ல, மனதால், சொல்லால், செயலால் என்று அனைத்திலும் ஒன்றிவிட்டிருந்தாள்.

கஷ்டங்கள், குறைகள் எல்லாம் அவளை விட்டுப் போயிருந்தன.

சங்கீத ஜாதி முல்லை மலர்ந்து மனம் வீசிக் கொண்டிருந்தது!

திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி… கன்னி நதி… ஜீவ நதி…

யாருக்காகவும் எவருக்காகவும் நிற்பதில்லை காலமும் நேரமும் தனி மனித வாழ்க்கை பயணமும்!          

            (நிறைவுற்றது)

 

Advertisement