Advertisement

அத்தியாயம் பத்து :

எதுவும் கட்டுக்குள் இல்லை… எல்லாம் நம்மை மீறிய செயலே! 

இரண்டு நாட்களில் ஜகன் ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு வந்தான். ஈஸ்வர் அவனுடன் பேச எந்த முயற்சியும் செய்யவில்லை.

ஈஸ்வருடனும் யாராலும் பேச முடியவில்லை. எப்போதும் இறுகிய முக பாவனையுடன் இருக்க, அப்பா அம்மா யாராலும் பேச முடியவில்லை. மகனுடன் பேச அவர்களுக்கு ஒரு தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.

அவனுடன் பேசியது இரண்டு பேர் மட்டுமே! பாட்டி சௌந்தரி அம்மாள், தங்கை ரஞ்சனி. பெரியம்மா ஒரு வகையான கழிவிரக்கத்தில் இருந்தார். ஜகன் இப்படி செய்ததை அவரால் தாள முடியவில்லை.  ஐஸ்வர்யா ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறையாவது அழைப்பாள், ஆனால் ஈஸ்வர் எடுக்கவேயில்லை.

மிகவுமே மனம் உடைந்து போனாள். சாதரணமாக இருந்தால் கூட அவனின் ஞாபங்கள் அதிகம் இருக்காதோ என்னவோ? ஆனால் ஈஸ்வர் இப்படி செய்யச் செய்ய எப்போதும் அவன் நினைவுகளே.

ஈஸ்வருக்குக் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. அவனின் அப்பாவிற்கு ஒன்றும் தெரியவில்லை, எவ்வளவு லாப நஷ்டம் என்று தெரிந்தது. ஆனால் லாபத்தை வரவழைக்க தெரியவில்லை.

நன்றாக இருக்கும் வண்டியை ஓட்டும் டிரைவர் போல அவர், அதில் ஏதாவது பிரச்சனை என்றால் அவரால் ஓட்ட முடியாது.

முரளியையும் மூன்று நான்கு நாட்களாகப் பிடிக்க முடியவில்லை. இன்னம் அவன் தந்தை ஐ சீ யு வில் தான் இருந்தார், இந்த நிலையில் அவனிடம் பேச முடியவில்லை.

செய்யும் வகை தெரியாது, செய்ய வேலையில்லாத நிலை.

படுக்கையில் படுத்திருந்தவன் மொபைலை எடுத்துப் பார்க்க, அதில் ஐஸ்வர்யாவிடம் இருந்து சில கால்கள், அவள் மீது கோபம் தான் நிலையைப் புரிந்து கொள்ளவில்லை என்று, ஆனால் அவள் மீது எந்த தவறுமில்லை என்று தெரியும். அவளோடு பேச மனம் விழையவில்லை, தனிமையைத்தான் நாடியது.

வீட்டிற்கு வந்து மூன்று நாட்கள் கழித்து ஈஸ்வர் உறங்கும் சமயம் பார்க்க வந்தான் ஜகன் ரூபாவோடு.

இருவரும் வர, உறங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தவன் அமர்ந்தான்.

அவர்கள் பேசட்டும் என்று இவன் இருக்க, இவன் கேட்கட்டும் என்று ஜகன் இருக்க, ரூபா நீங்கள் பேசிக்கொள்ளுங்கள் என்று அமைதியாக இருந்தாள்.

ஐந்து நிமிடங்கள் இப்படியே கழிய, ஈஸ்வர் பொறுமை இழந்தவனாக, “எதுக்குடா இப்படிப் பண்ணின” என்றான்.

“அது பணம்…” என்று ஜகன் ஆரம்பிக்க….

“நான் அதை சொல்லலை, நீ தூக்க மாத்திரை சாப்பிட்டியே அதை சொன்னேன், அண்ணியை விடு, உன் குழந்தைங்க முகம் கூடவா ஞாபகம் வரலை” என்று கேட்க.

அந்நிகழ்வின் நினைவைத் தாள முடியாமல் ரூபா ரூமை விட்டு வெளியே சென்று விட்டாள்.

“சொல்லுடா! ஏன் இப்படிப் பண்ணின?”

ஜகன் பதில் பேசாமல் அமர்ந்திருக்க, “சொல்லுடா! வாயைத் திறந்து ஏதாவது சொல்லு”, என்றான் கட்டுப்பாட்டை இழந்து ஈஸ்வர்.

“பணத்தை….” என்று மீண்டும் பணத்தைப் பற்றித் தான் பேசினான்.

சரி! அவனே அவனின் தற்கொலை முயற்சியை பற்றிப் பேச விழையாத போது, தான் ஏன் அதைப் பிடித்து தொங்க வேண்டும் என்று விட்டுவிட்டான்.

“பணம்! என்ன பண்ணின?”

“bokkie கிட்டக் கொடுத்தேன்” என்று ஜகன் சொல்லவும்,

ஈஸ்வரின் இதயத் துடிப்பு எகிறியது… “என்ன?” என்று அதிர்ச்சியில் கத்தியே விட்டான்.

ஜகனுக்கு எப்போதும் கிரிகெட் மீது ஒரு மோகம் தெரியும், எல்லோருக்கும் தெரியும், ஆனால் அதற்காக இப்படியா! என்ன ஒரு முட்டாள் தனம்.

ஈஸ்வர் அப்படியே அமர்ந்து விட்டான்,

கிரிகெட் பெட்டிங்!!!!

ஐயோ என்று இருந்தது.

“எப்படி எனக்குத் தெரியாமல் போனது! என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்!” தன் மீதே ஈஸ்வருக்குக் கோபம் பெருகியது.

“போட்ட பணம் எல்லாம் போச்சு” என்றான் ஜகன் தளர்வாக.

“அவ்வளவு பணத்தையுமா அதுல போட்ட?”

“டீ ட்வென்டி ல தான் முதல்ல போட்டேன்! அஞ்சு லட்சம், பத்து லட்சம்ன்னு ஆரம்பிச்சு, பத்து கோடி வரை இங்க போட்டேன், எல்லாம் லாபம் தான் பார்த்தேன். ஈசி மணி, பணம் ரொம்ப சுலபமா பெருகிச்சு, அது என்னை மேல மேல இதுல பணம் போட வெச்சது!”

ஜகன் நிறுத்தவும், மேலே சொல்லு என்பதுப் போல ஈஸ்வர் பார்த்தான்!

“இந்தியா பாகிஸ்தான் மேட்ச்! அதுல ஒரு புக்கி கிட்டக் கொடுத்தேன்! பெரிய அமௌன்ட்! லாஸ்ட் மினிட்ல அவன் காணாம போயிட்டான்! என்னால பின் வாங்க முடியலை! ஒரு வெறி அந்த சமயம்! பணம்ன்றதை விட என் நாடு கண்டிப்பா ஜெயிக்கும்! அதுக்கு நான் பணம் கட்டாம விடறதான்னு! இப்ப தெரியுது முட்டாள் தனம்னு! ஆனா அப்ப தெரியலை!”

“திரும்பவும் நெக் ஆஃப் தி மொமென்ட்ல டபுளா பண்ணினேன்! எல்லாம் போச்சு! நான் பெட் வெச்சது தோத்துப் போச்சு!”

“இதுல அஸ்வினும், உன் மாமனாரும் எங்க இருந்து வந்தாங்க”

“முதல்ல ஒருத்தன் கிட்ட பணம் போட்டேன் இல்லையா அவன் எனக்கு அஸ்வின் மூலமா தான் பழக்கம். அவன் காணோம் எங்கேன்னு கேட்டா இவன் காணாம போயிட்டான்”

“நீ சொல்றதுபடி பார்த்தாலும் இன்னும் பணம் இருக்கே”,

“அது ஷேர்ஸ்ல இன்வெஸ்ட் பண்ணியிருக்கேன்”

“என்ன ஷேர்ஸ்ல?”

ஜகன் சொல்லவும், உடனே ஈஸ்வர் ஆன்லைனில் ஸ்டாக் எக்ஸ்சேஞ் செக் செய்தான்.

ஜகன் பணம் செலுத்தியிருந்த போது அது ஏறுமாகத் தான் சென்று கொண்டிருந்தது, இப்போது சற்று இறங்கியிருந்தது. கிட்ட தட்ட அரை மணிநேரம் அதில் மூழ்கினான்.

ஷேர்ஸில் இன்வெஸ்ட் செய்திருந்தை எடுக்க முடியுமா என்று பார்த்தால், இப்போது அது மிகவும் டவுன்னாக இருந்தது. அதில் கைவைத்தால் உள்ளதும் போய் விடும். லாபமில்லாத நிலை போய் நஷ்டமாகி விடும். இன்னுமே பணத் தேவைகள் அதிகரித்து விடும்.

கடைசியாக அவன் மனது சொன்னது ஏறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்பது போல. அதனால் அப்படியே விடு என்று.

“ஏன் என்கிட்டே நீ ஷேர்ஸ் பத்தி சொல்லை?”

“இந்த பணம் அதுல வந்துடும், வந்ததும் சொல்லலாம்னு நினைச்சேன், இப்ப அதுவும் கீழ இறங்கிடுச்சு”

ஒரு தப்பை மறைக்க மேலும் மேலும் தப்பு செய்திருந்தான். ஆனாலும் இந்த ஷேர்ஸ் பற்றி ஜகன் சொல்லவும், ஈஸ்வருக்கு போன உயிர் திரும்ப வந்தது. இப்போது பிரச்சனை என்றாலும் எதிர்காலத்தில் சமாளிக்க ஒரு வாய்ப்பு இந்த ஷேர்ஸ்.

“பரவாயில்லை, அதை எடுக்காம விட்டியே, இப்ப குறைஞ்சிருந்தாலும் அதிகமாக வாய்ப்புகள் இருக்கு… எதுன்னாலும் என்கிட்டே சொல்லுடா! என்கிட்டே மறைக்காத, ஷேர்ஸ் இருக்கு தான, கொஞ்சம் பணம் புரட்டலாம்! சொத்தெல்லாம் விக்கலாம்! ஓரளவுக்கு சமாளிக்க முடியும். இதை ஏண்டா என்கிட்டே முன்னமே சொல்லலை!”

“அது வேல்யு குறைஞ்சிடுச்சே!”

“ப்ச்! அதிகமாகும் நம்புவோம்! இதுக்கு முன்ன இந்த நம்பிக்கைக் கூட எனக்கு இல்லாம இருந்ததேடா” என்று சொன்ன ஈஸ்வரின் முகத்தில் புன்னகையின் கீற்று நம்பிக்கை மனதினில் ஊற்றாக பெருகியது.

“ஷேர்ஸ் இருக்குள்ள, இதை வெச்சு முரளி அப்பாக் கிட்ட பணம் வாங்கலாம்! கண்டிப்பா உதவி செய்வார்”

“இன்னும் என்ன என்ன பண்ணின?”, என்று ஜகனிடம் பேச ஆரம்பித்து, அவனின் பண பரிவர்த்தனைகள் நடந்த விதம், அதில் திரும்ப ஏதாவது சிக்கலில் ஜகன் மாட்டிக் கொள்வானா என்று பார்த்தான்.

அக்கு வேறு ஆணி வேறாக எல்லா விவரத்தையும் கேட்டான், பெட்டிங் பற்றி, பணம் எப்படி பரிமாறியது, எல்லா விவரங்களும், அவனின் ட்ரான்ஸ்சேக்ஷன்ஸ் எல்லாம் பார்த்தான்.

ஏனென்றால் கிரிகெட் பெட்டிங் சட்டத்துக்கு புறம்பானது. பண இழப்போடு, அதில் பெயர் அடிபட்டு ஜகன் ஏதும் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்வானா என்றும் ஆராய்ந்தான். ஆராய்ந்த வரை சேஃப் டீலிங் எங்கும் பிடிபட வாய்ப்பில்லை. ஆதலால் பணத்தை திரும்ப கைப்பற்றவும் வாய்ப்பில்லை.

பிரச்சனைகள் வரும் வாய்ப்பு குறைவாக தோன்ற மனம் இன்னும் ஆசுவாசப்பட்டது.  பத்து மணிக்கு ஆரம்பித்தவர்களின் பேச்சு பன்னிரண்டு மணிக்கு முடிந்தது.

கிட்ட தட்ட ஒரு வருடமாக ஜகன் தீவிரமாக இதில் இருந்திருக்கிறான் என்று தெரிந்தது.

முதலில் நல்ல லாபம் பார்த்திருக்கிறான். பின்பு தான் சறுக்கி விட்டது புரிந்தது. அதுதானே சூதாட்டம். இதில் யாரும் மாஸ்டர் என்பது கிடையாது.

ஜகனிடம் கடைசியாக சொன்னது “எதுன்னாலும் சொல்லுடா! தப்பு செஞ்சாலும் சொல்லு! நம்ம சாதாரண மனுஷங்க! தப்பு செய்வோம்! நம்ம கடவுளோ மகாத்மாவோ கிடையாது”

“ஆனா செய்யற தப்பை ஒத்துக்கணும், அந்த தைரியம் வளர்க்கணும்! எந்த சூழ்நிலையிலும் கோழையாகக் கூடாது! அதுக்காக வேணும்னு தெரிஞ்சு தெரிஞ்சு தப்பு செய்ன்னு சொல்லலை, நம்மை மீறி நடந்துட்டா ஒத்துக்கோ! அதை சரி பண்ண பார்”

ஈஸ்வருக்கு புரியவில்லை, வாழ்க்கையில் சரி செய்ய முடியாத தப்புக்கள் பல இருக்கின்றன என்று…

அந்த சுழலில் அவன் கூடிய விரைவில் மாட்டப் போகிறான் என்று அவன் கண்டானா என்ன?

அவர்கள் பேசி முடித்து ஜகன் வெளியே வர, ஈஸ்வர் ரூம் கதவை மூட வர, இருவருமே அதிர்ந்து தான் போனார்கள்.

ரூபா ரூமிற்கு வெளியில் கீழே சுவரில் சாய்ந்த வாக்கில் அமர்ந்து அப்படியே உறங்கி இருந்தாள். அவளின் மேலே பிரணவி உறக்கத்தில் இருக்க, சரண் அவளின் மடியில் உறக்கத்தில். அவர்களின் உறக்கம் ஒரு நிராதரவான நிலையை பிரதிபலித்தது.

தங்களின் வீட்டில் ஒரு பெண் இப்படி இருப்பதா? என்ன பெரிய பாரம்பர்யம் தங்களுக்கு என்று தான் ஈஸ்வருக்கு தோன்றியது. “ஒருவேளை உனக்கு ஏதாவது ஆகியிருந்தா இவங்க நிலைமை?” என்று ஈஸ்வர் கேட்க, ஜகனால் பதில் சொல்ல முடியவில்லை.

வீட்டினர் யாரும் பார்க்கவில்லையா என்பது போல வீட்டை சுற்றி பார்வையை ஓட்ட, யாருமில்லை! எல்லோரும் உறங்க சென்ற பிறகு இவர்கள் இங்கே அமர்ந்திருக்க வேண்டும்! அப்படியே உறங்கி இருக்க வேண்டும்.

ஜகன் சரணை தூக்க, “கொடு” என்று ஈஸ்வர் வாங்கினான். பின்பு ஜகன் பிரணவியை தூக்க, அதில் உறக்கம் கலைந்தவளாக எழுந்தவள், சரணை வாங்க கை நீட்ட,

“அவன் என்னோட தூங்கட்டும்”

“ராத்திரில முழிப்பான்”

“நான் தூங்க வெச்சிக்கறேன், இவங்கப்பனே உன்னோட கல்யாணம் ஆகற வரை என்னோட தான் இருந்தான்”

ரூபாவிற்கு சிரிப்பு வர,

“ஐ மீன் நாங்க தான் ரூம் மேட்ஸ்” என அசடு வழிந்தான்.

“குட் நைட்” என அவர்கள் செல்ல, சரணை தூக்கி உள்ளே சென்று படுக்கையில் கிடத்தினான். இந்தக் குழந்தைகளுக்காகவாவது நாங்கள் நிமிர்ந்து நிற்க வேண்டாமா? எல்லாம் சரியாகும்! சரி படுத்துவேன்!” என்று உறுதி எடுத்தான்.

படுத்து எழுந்தவன் காலையிலேயே முரளிக்கு அழைக்க, அவன் ஹாஸ்பிடலில் இருந்தான். ஏன் இத்தனை நாட்கள் என்று கேள்வி எழ உடனே ஈஸ்வரும் அங்கே கிளம்பினான்.

அங்கே சென்றால் ரூமில் முரளி மட்டுமே இருந்தான். சோர்வாக அமர்ந்திருந்தான்.

ராஜாராம் சில உபகரணங்களின் பிடியில், “என்னடா என்ன சொல்றாங்க?”

இவ்வளவு நாள் ஒரு மனஉளைச்சலில் இருந்ததினால் முரளியின் அப்பா நிலையை சரியாக கவனிக்கவில்லை, இப்போது சமாளித்து விடலாம் என்று தெளிவு பிறக்க சுற்றி உள்ளவர்களும் கவனத்தில் பதிய கேட்டான்.

“சொல்லுடா?”

“கிணறு வெட்ட பூதம் கிளம்புது”

“என்னடா?”

“ரொம்ப ஆடிட்டார்! என்ன சொல்ல சொல்ற?” என்ற வார்த்தையை சொல்லி விட்டவன், அவசரமாக ராஜாராம் கேட்டு விட்டாரோ என்று பார்க்க, அவர் உறக்கத்தின் பிடியில்.

தொலைபேசிய எடுத்து தாஸை அழைத்தான், வெளியில் நின்றிருந்த அவன் உள்ளே வர “பார்த்துக்கோ” என்று சொல்லி வெளியில் வந்து அமர்ந்தனர்.

“அம்மாவும் பத்துவும் எங்க?”

“இப்ப தான் அம்மாவைக் கட்டாயப்படுத்தி கொஞ்ச நேரம் வீட்டுக்குப் போய் தூங்கிட்டு வாங்கன்னு அனுப்பிச்சேன்”

“என்ன பிரச்சனை”

“ஹார்ட் அட்டாக் இல்லாம, லிவர் சிர்ரோசிஸ், கூடவே கேன்சர்”, சொல்லும் போதே குரல் கமறியது.

“என்ன” என்று அதிர்ந்தவன், “அதெல்லாம் ஒன்னுமில்லை இப்பல்லாம் ட்ரீட்மென்ட் எவ்வளவோ அட்வான்ஸ்ட் ஆகிடுச்சு”

“ஃபோர்த் ஸ்டேஜ். ஆறு நாளோ! ஆறு மாசமோ! இல்லை ஒரு வருஷமோ! சொல்ல முடியாதுன்னு சொல்றாங்க, ஏன்னா இவ்வளவு நாளா ஒரு அறிகுறியும் இல்லை அப்போ முதல்ல இருந்தே இருந்ததா இல்லை கொஞ்ச நாள்ல இப்படி வேகமா பரவிடுச்சா தெரியலைன்னு சொல்றாங்க”

அங்கே ஒரு கனமான மௌனம்

“அம்மாவுக்குத் தெரியுமா?”

“தெரியாது… நானும் பத்துவும் சொல்ல வேண்டாம்னு முடிவு செஞ்சிருக்கோம்.. திடீர்னு சாவு வந்தா அது தாங்க முடியாததுதான்னாலும் அது கடந்து போகும்! எப்படியோ சமாளிக்கலாம்! ஆனா சாகப் போறார்ங்கறது தெரிஞ்சு தெரிஞ்சு அதையே யோசிச்சிட்டு இருக்குறது கஷ்டம்”

“அதுவும் எங்கம்மால்லாம் சொல்லவே வேண்டாம். எங்கப்பா எது சொன்னாலும் தலையாட்டுவாங்க, எத்தனை பெண்களோட தொடர்பு எப்படி இதை அனுமதிக்கறாங்கன்றதை விட, ஒரு சின்ன வித்தியாசமும் காட்டமா எங்கப்பா தான் உலகத்துல பெஸ்ட் ஹஸ்பன்ட் மாதிரி பார்த்துக்குவாங்க. வர்ஷினியை எப்படி பார்த்துக்கறாங்க”

“அவரை கண்ட்ரோல் பண்ணவே இல்லை. இப்போ தம்மு, தண்ணி பொண்ணுங்கன்னு வாழ்க்கையை ஏகத்துக்கும் அனுபவிச்சு சாகப் போறார்”

“நீயேன் அப்படி நினைக்கிற முரளி, அவரை கண்ட்ரோல் பண்ண முடியாதுன்னு நினைச்சிருக்கலாம். இல்லை கண்ட்ரோல் பண்ணா இன்னும் அதிகமா பண்ணுவார்ன்னு இருக்கலாம். ஏதோ ஒன்னு தான் தடுத்திருக்கும், உங்களுக்கு தெரியாம இருக்கலாம். பசங்களோட ஷேர் பண்றதுக்கு லிமிட்ஸ் இருக்கு தானே” என்றான் நண்பனை தேற்றும் விதமாக.

“இருக்கலாம், அம்மா அதிகம் படிக்கலைன்னாலும் புத்திசாலி”

“அப்பாக்கு தெரியுமா”

“தெரியும், மனுஷன் ஆனா அசரவேயில்லை, டாக்டர் கிட்ட அவரே விஷயத்தை வாங்கிட்டார்! அதுக்கப்புறம் ஓரே யோசனை!”

“பயந்திருப்பார்”

“பயப்படலைடா இருக்குற காலத்துக்குள்ள முடிக்க வேண்டிய விஷயங்களை யோசிக்கிறார், நானும் பத்துவும் நேத்து ரொம்ப பயந்துட்டோம். எங்களுக்கு தேறுதல் சொல்றார்”,

“அவரோட இந்த உல்லாச வாழ்க்கையை விடுத்துப் பார்த்தா, அவர் மாதிரி ஒரு ஆசாமியை பார்க்கிறது ரொம்ப கஷ்டம், என்ன வயசு அவருக்குன்னு நினைக்கிற அம்பது தான்”.

“நேத்து நானும் பத்துவும் அப்படியே உட்கார்ந்துட்டோம், எங்களை கூப்பிட்டு அவரோட மொபைலை எடுத்து வரச் சொல்லி. நாங்க வட சென்னையில ஒரு ஒண்டுக் குடுத்தன வீட்ல இருந்தோம், நாங்க சின்ன பசங்களா இருக்கும் போது அங்க இருக்குற தெருல புழுதில விளையாட்டி இருந்தோம்”.

“அந்த மாதிரி இப்ப விளையாடுற பசங்களை காட்டி, நாங்க அங்க இருந்த வீட்டைக் காட்டி, இங்க இப்ப இருக்குற வீட்டைக் காட்டி, இங்க இருந்து நான் உங்களை இங்க கொண்டு வந்து விட்டுடேன்! இனி உங்க வாழ்க்கையைப் பார்த்துகங்க, என்னோட கடமையை நான் நல்லா செஞ்சிருக்கேன்னு சிரிக்கிறார்”

“நீங்க இங்க இருந்து இப்ப இருக்குற வீட்டுக்கு வந்திருக்கீங்கன்னா என்னோட பாப்பா தான் காரணம்! அவளை எக்காரணம் கொண்டும் விடக் கூடாது சொல்றார்! இப்பவும் வர்ஷினி ஞாபகம் தான் அவருக்கு! என்னவோ என்னோட குல சாமின்னு பேசறார்” என்றான் சற்று எரிச்சலாக.

“நல்லா தானேடா பேசுவ! இப்ப எதுக்குடா அவ மேல கோபம் உனக்கு”

“அவ மேல கோபம் இல்லை! எங்கப்பா மேல” மனதின் ஆற்றாமையை முழுவதுமாக கொட்டத்துவங்கினான்.

“எங்களோட எல்லா பிசினெஸ்சும் ரெண்டு பேர் பேர்ல தான் இருக்கு, ஒன்னு எங்கம்மா, இன்னொன்னு வர்ஷினி. அவ பொறந்த உடனே ஸ்டார்ட் பண்ணினது தான் எங்களோட இந்த நிறுவனம்”.

“அதுக்கு முன்ன பலது முயற்சி செஞ்சிருப்பார் போல, எதுவுமே சக்சஸ் ஆகலை! இவ பொறந்த உடனே மூணு மாசமா இருக்கும் போதே அவளோட பேர்ல மட்டும் செய்ய முடியாதுன்னு அவளையும் எங்கம்மாவையும் போட்டு ஆரம்பிச்சது”

“அதுக்கு அப்புறம் இந்த பதினட்டு வருஷத்துல எங்கயோ போயிட்டோம் நாங்க, ஆனா இப்ப எல்லாம் அவங்க ரெண்டு பேர் பேர்ல. எல்லாம்ன்னா சொத்துக்கள் இல்லை தொழில்”

“வர்ஷினியோடது அவளுக்கு மட்டும் தான்னு சொல்லிட்டார், எங்கம்மா பேர்ல இருக்குறது எங்கம்மாக்கு அப்புறம் எங்களுக்காம். அதாவது எனக்கும் பத்துக்கும்… என்ன பைத்தியக்காரத்தனம்”

“எனக்கும் அவனுக்கும் எதுவுமே இல்லை இப்போ. எங்க போய் சொல்ல இதை”

“அம்மா உங்களுக்கு தானேடா குடுப்பாங்க”

“அதுல சந்தேகமில்லை! இப்போ யாருக்கும் சொத்து வரலைன்னா ஓகே! வர்ஷினிக்கு வரும் ஆனா எங்களுக்கு இல்லையா”

“வர்ஷினிக்கு எங்கடா வருது! ஏற்கனவே அவ கிட்ட தான் இருக்குடா!” என்று உண்மையை எடுத்துசொன்னான்.

“அது எங்களுக்கு தெரியும்! ஆனா வெளி உலகத்துக்கு, இவ்வளவு சொத்து இருக்குன்னு தான் எனக்கு பொண்ணு குடுத்தாங்க! ஆனா இப்ப ஒன்னுமேயில்லை! எல்லாம் எதிர்காலத்துலன்னா எனக்கு என்ன மரியாதை இருக்கும் அவங்க வீட்ல”

“சங்கீதவர்ஷினி டு பீ ஃபிரான்க், இஸ் அன் இல்லீகல் சைல்ட். அவளுக்கு இருக்கு எங்களுக்கு இல்லையா” என்று சொல்லிவிட்டான்.

பிறகு முரளியே “இப்படி பேசறது தப்புதான்! ஆனா உண்மை அதுதானே!” என்றான். எல்லாம் அவனுக்கு அவனே சொல்லிக் கொள்வது போல… இப்படி ஒரு வார்த்தை வர்ஷினியை பற்றி முரளி என்றுமே சொன்னது இல்லை. மிகுந்த குழப்பத்தில் இருக்கின்றான் என்று ஈஸ்வருக்கு புரிந்தது.

“அப்பாக்கிட்ட பேசேண்டா”

“என்னால இதை எப்படி பேச முடியும்! நல்லா இருக்குற மனுஷர் கிட்ட பேசலாம்! இப்படி இருக்கும் போது எப்படி சொத்தை பத்தி பேசறது..  நாங்க எங்க இருந்து எங்க வந்திருக்கோம்னு எங்க அப்பா அக்கு வேறு ஆணி வேறா பேசறாரு. நான் எப்படி இதை பேச! என்னவோ ஒரே நாள்ல எங்க வீட்ல இருந்து நான் தள்ளி போன மாதிரி ஆகிடுச்சு. இன்னும் எங்க தாத்தாக்கு இவருக்கு இப்படின்னு தெரியாது”

“இல்லை நான் தான் தப்பா நினைச்சு தப்பா பேசறனா” என்றான் ஈஸ்வரை பார்த்து…

ஈஸ்வர் அவனின் பிரச்னையை விடுத்து நண்பனின் பிரச்னையை ஆராய்ந்தான்.

பிரச்சனைகள் எப்படி திசை திரும்புகின்றன என்று விந்தையாக இருந்தது. நன்றாக இருந்த மனிதர் சாகப் போகிறார். அதன் வருத்தங்கள் சூழ்ந்த போதிலும் சொத்துக்கள் எல்லாம் பின்னுக்குத் தள்ளி விடுகின்றது.

உலக விந்தைகளுள் இது தான் மிகப் பெரிய விந்தை! பணம் என்று ஒன்று நடுவில் வரும்போது தாய் தந்தை மகன் மகள் எல்லாம் ஆளுக்கொரு திக்காகிப் போவர்.

ஒரு பிள்ளை இருக்கும் போது அம்மா விதிவிலக்கு! ஆனால் இரண்டு மூன்று மக்கள் இருக்கும் போது அவரும் பின்னுக்கு போய்விடுவார். அவருக்கு எல்லா மக்களும் சமம் தானே!

இதில் விதிவிலக்கு மனைவி மட்டுமே, பல சமயங்களில்! சில சமையங்களில் அதுவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது!

 

Advertisement