Advertisement

               கணபதியே அருள்வாய்

               சங்கீத ஜாதி முல்லை

அத்தியாயம் ஒன்று :

யாருக்காகவும் எவருக்காகவும் நிற்பதில்லை                                       காலமும்…. நேரமும்……                                                                         தனி மனித வாழ்க்கைப் பயணமும்!

காரை ஓட்டிக் கொண்டிருந்த ஈஸ்வர் என்கின்ற விஷ்வேஸ்வரனின்  மனதில் தோன்றிக் கொண்டிருந்த வரிகள் இவை. தோன்றிய நேரம் அவனையறியாமல் ஒரு பெருமூச்சு எழுந்தது. அதற்குள் மண்டபம் வந்திருந்தது. நெருங்கிய நண்பன் முரளிதரனின் திருமணம்.  விண்ணுலகை மண்ணுலகத்திற்கு கொண்டு வந்தது போல அலங்காரம்.

முரளியின் தாத்தா முன்பொரு காலத்தில் மத்திய, மாநில அமைச்சராக இருந்தவர். இப்போது இல்லை. ஆனாலும் அரசியலில் தான் இருக்கிறார். அதனால் அரசியல் பிரமுகர்கள் நிறைய பேர். அவனின் அப்பா முன்பு ஹைவேஸ் ரோடு காண்ட்ராக்ட், இப்போது ஹைவேஸ் டோல் டெண்டர் எடுதிருக்கிறார். சோ பணம் கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்கிறது.

அவனுடைய ஜாகுவாரை நிறுத்த இடமே இல்லை.  இடம் பார்த்து நிறுத்தி வந்தான். அதுவரை இருந்த சீரியஸ் முக பாவனை மாறியது. உள்ளே நுழைந்ததும் முகத்தை மலர்ச்சியாக வைத்துக் கொண்டான்.

அவனைப் பார்த்ததும் முரளியின் வீட்டில் பலத்த வரவேற்ப்பு.  எத்தனை பிரமுகர்கள் இருந்தாலும் ஈஸ்வருக்கு ஸ்பெஷல் வரவேற்ப்பு. அவனின் குடும்ப பாரம்பர்யம் அப்படி. பெரிய மனிதர்கள்.

முரளியின் தாத்தாவைப் பார்த்து ஒரு வணக்கம் வைக்க “அப்பா அம்மா வரலையா ஈஸ்வர்” என்றார்.

“காலையில வருவாங்க என்றான் புன்னகை முகமாக. மேடையில் இருந்து முரளி “மேலே வா” என்பது போலக் கையசைக்க, “வர்றேன் இருடா” என்பது போல சைகை காட்டி அப்படியே தான் அமர்ந்திருந்தான்.

அந்தப்புறம் வந்த முரளியின் அப்பா ராஜாராம் இவனைப் பார்த்ததும் நின்றவர் “ஈஸ்வர், நீ மட்டுமா வந்த, அப்பா அம்மா வரலையா” என்றார் அவரும்.

“காலையில வருவாங்க அங்கிள்” என்றான். பிறகு அவரும் கடந்து விட்டார். வருவோர் போவோரை வேடிக்கைப் பார்த்து அமர்ந்திருந்தான். அதிலும் அழகான பெண்கள் சற்று அதிகம் அவனை கவர்வர். வஞ்சனையின்றி அவர்களை ரசித்து அமர்ந்திருந்தான்.

அவனின் எண்ணத்தில் ஓடியது ஒன்று தான் அப்பொழுது, சினிமாவில் வருபவர்களைக் கவர்ச்சியாக வருகிறார்கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயம். மினி ஸ்கர்ட், பிகினி எல்லாம் கவர்ச்சி இல்லை என்றே தோன்றியது.

பலர் அழகாக உடையணிந்திருந்த போதும், சிலர் தங்களைப் பார் பார் என்று எடுத்துக் காட்டுவது போல அணிந்திருப்பதாக தோன்றியது. “எப்படி இவங்க வீட்டுக்காரங்க எல்லாம் இவங்களைக் கேட்கவே மாட்டாங்களா” என்று அவர்களை விட அவர்களின் ஆண்மக்களை சாடியது.  

“உனக்கு என்னடா? காட்டுறவங்களை ரசி, காட்டாதவங்களை எதிர்பார்க்காத, என்சாய் டா மச்சான்” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.  

அவனை அங்கு வந்த பிரமுகர்கள் பலருக்குத் தெரிந்திருந்தது, பலரும் ஒரு ஹாய் ஹலோ சொல்லியே சென்றனர்.

இரு கண்கள் ஆர்வத்துடன் தாத்தா அவனிடம் பேச ஆரம்பித்ததில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தது. ஓரமாக அமர்ந்து அனைவரையும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். எல்லோரையும் பார்த்தாலும் கண்கள் ஈஸ்வரிடத்தில் அதிக நேரம் நிலைத்தது.

விருந்தினர்கள் சூழ்ந்து இருந்த போதும் அவளின் அருகில் வந்த ராஜாராம் “ஜூஸ் குடிச்சியாம்மா” என்றார்.

“எஸ் பா! கொண்டு வந்து கொடுத்தாங்க” என்றவள், “யு கேரி ஆன், நான் இந்த கிரௌவுட் ரொம்ப என்ஜாய் பண்றேன். அது யாருப்பா அது” என்றாள் ஈஸ்வரை காட்டி.

திரும்பிப் பார்த்தவர் “அது ஈஸ்வர் டா! முரளி பிரிண்ட், ஹேன்சம்மா இருக்கான்ல” என்று கூடவே பிடித்திருக்கிறதா என்று மகளை ஆராய்ந்தபடி சொன்னார்.

அப்போது தான் அவனின் தோற்றத்தையே கவனித்தாள் “எஸ் பா லுக்கிங் ஹேண்ட்சம்” என்றாள் அதை அமோதிப்பது போல,

ஈஸ்வரின் தோற்றத்தை அப்போது தான் கவனிக்கிறாள் என்றுணர்ந்தவர் “அப்போ என்னடா அவன் கிட்டப் பார்த்துட்டு இருந்த”

“அதுப்பா, எல்லோரும் அவர்கிட்ட பேசறாங்க, சிலர் பவ்யமா, சிலர் மரியாதையா, பலர் ஃபிரண்ட்லியா, இங்க நம்ம ரிலேடிவ்ஸ் நிறைய பேருக்கு என்னைத் தெரியும், ஆனா என்னைப் பார்த்தா சிரிக்க வேண்டி வந்திடுமோன்னு கவனமா பார்க்காம சுத்திட்டு இருக்காங்க”

“அதான் கேட்டேன் யார் அவர்ன்னு, இந்த மாதிரி பிறக்கறது லக்கி இல்லை” என்றாள்.

“வருத்தப்படுகிறாளோ?” என்பது போல கவலையாகப் பார்த்தார் ராஜாராம். முகத்தில் இருந்து ஒன்றும் தெரியவில்லை. மிகுந்த பக்குவம் கொண்டவள் அவரின் மகள்.

“யாரு பார்த்து பார்க்காதது மாதிரி போனது” என்று கோபப்பட,

“அப்பா எனக்கு யார் பேசலைன்னாலும் வருத்தம் இல்லை, எனக்கு பேச நிறைய பேர் இருக்காங்க, நீங்க போங்க” என்று சமாதானம் செய்து அனுப்பினாள்.

போக ஆரம்பித்தவரிடம் “யார்கிட்டயும் சண்டை போடாதீங்க ப்ளீஸ்! என்னை வெச்சு இங்க ஒரு பிரச்சனையும் வரக் கூடாது. நீங்க எந்த கலாட்டாவும் செய்யக் கூடாது. கல்யாணத்தை நல்லபடியா முடிங்க” என்றாள் சிறு கண்டிப்புடன்.

சரி என்பது போல தலையசைத்துக் சென்றார். மீண்டும் தனியாக அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். இதனிடையில் கமலா வந்து அவள் என்ன செய்கிறாள் என்பது போலப் பார்த்துப் போனார். ஆனால் பேசவெல்லாம் இல்லை. அவளும் அதை பார்த்து தான் இருந்தாள், அவளும் பேச முயற்சி செய்யவில்லை.

கமலா ராஜாராமின் மனைவி, முரளியின் தாயார். பின்பு மீண்டும் உறவினர்களை கவனிக்க சென்று விட்டார்.  அவளைத் தெரிந்த யாரும் அவளுடன் பேசவில்லை தான். ஆனாலும் என்ன செய்கிறாள் என்பது போல கவனித்தே இருந்தனர்.

மூன்று மணிநேரம் இடத்தை விட்டு அசையாது அமர்ந்தே இருந்தாள். ஓரளவு கூட்டம் குறைந்து மணமக்கள் வீட்டினர் சற்று ஆசுவாசப்பட, அப்போது தான் இடத்தை விட்டு எழுந்தாள்.

கமலாவிடம் சென்று “நான் எப்போ வீட்டுக்குப் போகட்டும் பெரியம்மா” என்று கேட்க,

“நீ இன்னும் அண்ணாவோட போட்டோ எடுக்கலை”

“பரவாயில்லைம்மா” என்றாள் இதற்காக மேடை ஏற வேண்டுமா மணப்பெண் வீட்டினர் எப்படியோ என்பது போன்ற யோசனைகள் ஓட,

“அப்பா வருத்தப்படுவாங்க” என்ற கமலாவின் வார்த்தை மறுபேச்சு பேசாமல் மேடை ஏற வைத்தது.

அவள் ஏறவும் அவளோடு கமலாவும் ஏறினார். அப்போதுதான் ஈஸ்வர் நண்பனோடு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான்.

அதனால் அவர்கள் நெருகாமல் தள்ளி நிற்க,

அப்போதுதான் ஈஸ்வர் அவர்களைப் பார்த்தான். அவளைப் பார்த்தும் முரளியைப் பார்க்க “வளர்ந்துட்டா அடையாளம் தெரியுதா உனக்கு”

ஸ்கூல் நாட்களில் இருந்து முரளியும் ஈஸ்வரும் நண்பர்கள். இருவருக்கும் இடையில் அவர்களின் ரகசியங்கள் என்று எதுவும் கிடையாது. அடுத்தவர்களின் ரகசியங்கள் மட்டுமே பகிர மாட்டார்கள்.

“உங்கப்பாவோட பொண்ணா” என்றான் மெல்லிய குரலில்.

“ஆம்” என்பது போல ஒரு சிறு சைகை செய்தவன் “பிளஸ் டூ முடிச்சிட்டா, இப்ப காலேஜ் சேர வந்திருக்கா” என்றான் மெல்லிய குரலில்.

போட்டோ எடுத்து விட்டார்கள் என்றதும் கமலாவும் அவளும் நெருங்கினர்.

அப்போது தான் மணமகள் ஷாலினிக்கு முரளி அவளை அறிமுகப்படுத்த நினைத்து, அவளைப் பற்றி சொல்லியிருக்கிறான் என்றாலும் ஒரு சில நொடி தயங்க “ஹலோ அண்ணி! நான் சங்கீதவர்ஷினி, அண்ணா என்னைப் பத்தி சொல்லியிருப்பாங்க” என்று புன்னகைத்தாள்.

முரளி சொல்லி அவளைப் பற்றி ஈஸ்வருக்கு தெரியும், சில வருடங்களுக்கு முன் அவளை ஒரு முறை பார்த்தும் இருக்கிறான். அறிமுகமில்லை. அப்போது சிறு பெண். இப்போது வளர்ந்து விட்டாள். உயரமாக பூசின உடல் வாகோடு கொழுக் மொழுக் என்று இருந்தாள். குழந்தைத்தனமான முகம். அமுல் பேபி என்று தோன்றியது.

ஷாலினி என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க, பதிலை எல்லாம் வர்ஷினி எதிர்பார்த்த மாதிரியே தெரியவில்லை, ஷாலினியின் பக்கத்தில் நின்றாள்.

என்ன பேசுவது என்று தெரியாமல் “என்ன படிச்சிருக்க வர்ஷினி” என்று சம்ப்ரதாயதிற்கு ஷாலினி கேட்க,

“இப்ப தான் அண்ணி ப்ளஸ் டூ எழுதியிருக்கேன், நேத்து தான் எக்ஸாம் முடிஞ்சது, இன்னைக்கு தான் இங்க வந்தேன்” என்றாள் சகஜமாக.

“அம்மா வாங்கம்மா” என்று முரளி கண்ணசைக்க மகனின் பக்கத்தில் கமலா நிற்க, அதை கீழிருந்து பார்த்த ராஜாராம் மேலே வர , கூடவே அவரின் இன்னொரு மகன் பத்மநாபன் தாத்தாவை அழைத்துக் கொண்டு வந்தான்.

குடும்ப சகிதம் நின்று போட்டோ எடுக்க, எல்லோரும் அவர்களை முக்கியமாக சங்கீதவர்ஷினியை பார்த்தனர். தன் மகள் என்று அவர் யாரிடமும் மறைத்தது இல்லை, ஆனாலும் இது போல குடும்ப நிகழ்வுகளில் வர்ஷினி முன் நிற்க மாட்டாள் ஒதுங்கி தான் நிற்பாள். சிறு வயதில் இருந்தே அறிவாளிக் குழந்தை.

இந்த முறை ராஜாராம் அவளை ஒதுங்கி நிற்க விடவில்லை. அவரை மீறி யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விட்டனர்.

ஈஸ்வர் அவர்களின் குடும்ப போட்டோ வைபவத்தை பார்த்துக் கொண்டுதான் இருந்தான். எப்படி தான் இப்படி இவர்களால் முடிகின்றதோ என்றுதான் தோன்றியது. ஒரு இல்லீகல் சைல்ட், அதை எப்படி கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் நிற்க வைக்கிறார். அந்தப் பெண்ணும் எப்படி நிமிர்வோடு நிற்கிறது என்று தான் அவனின் நினைப்பு ஓடியது. காசு பணம் இருந்தால் எல்லாம் சரியாகி விடுமா. சமூக அமைப்பு என்று ஒன்று இல்லையா என்று ஏகத்திற்கும் நினைப்புகள்.

முரளியின் அப்பா பெரிய ப்ளேபாய் என்பது ஊரறிந்த ரகசியம். ஆனாலும் அப்படி பிறந்த மகளை இப்படி எப்படி நடு சபையில் மகள் என்று சொல்லாமல் மகள் என்று ஒரு அங்கீகாரம் கொடுக்கிறார் என்று பார்த்து நின்றான். அவருக்கு தைரியமா இல்லை குடும்ப உறுப்பினர்கள் யாரும் கேள்வி கேட்பது இல்லையா, கமலா அம்மா பாவம் என்று தோன்றியது.

நமக்கு எதற்கு அவர்களின் கதை, கவலைப்பட நமக்கு என்ன பிரச்சனையா இல்லை என்று மனதிற்குள் கொண்டுவந்தவன் முரளியைப் பார்த்து கண்ணசைத்து கிளம்பினான்.

காலம் எவ்வளவோ மாறிவிட்டது என்பதை அவன் மனம் உணரவில்லை. அவருடைய இன்னொரு மனைவிக்கு பிறந்த மகள் என்று நினைக்கத் தோன்றவில்லை. மிகவும் பழமையில் ஊறிய குடும்பம் அவனது. அதனால் எண்ண ஓட்டங்கள் எப்பொழுதும் அதனை ஒட்டியே இருக்கும்.  

ராஜாராம் மட்டும் தான் அவரின் வீட்டில் அப்படி மற்றபடி அவரின் மகன்கள் சொக்கத் தங்கங்கள், ஒழுக்கத்தில் மட்டுமல்ல எல்லா வகையிலும். அதனால் தான் வர்ஷினியை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிந்தது.

வெளியே வந்து கார் கதவை திறக்கும் வரை தான் முரளியின் வீட்டைப் பற்றிய நினைவு. அதன் பின் அவனின் கவலைகள் சூழ்ந்து கொண்டன. முகமும் தீவிரம் காட்டியது.

அவனின் கார் ஹாரன் கேட்டதும் செக்யுரிட்டி கதவை திறந்தான். உள்ளே சென்றால் வீடு இன்னும் உறங்க ஆரம்பிக்கவில்லை.

குழந்தைகள் உறங்கியிருந்தனர். மற்றபடி எல்லோர் ரூமும் திறந்து தான் இருந்தது. அவனது கூட்டுக் குடும்பம், அதாவது அவனது பெரியப்பாவும் அப்பாவும் ஒரே கூரையின் கீழ். அவர்களை இந்தத் தமிழ் நாட்டில் தெரியாத ஆண்மக்கள் குறைவு,  ஏனென்றால் அவர்களது தொழில் அப்படி, ஈஸ்வர் ஃபினான்ஸ் இந்தியா ப்ரைவேட் லிமிடெட்.

இப்போது பெரியப்பா இல்லை. அப்பா தான் குடும்பத் தலைவர். பெரியப்பாவிற்கு ஒரு ஆண், ஒரு பெண். இவனின் அப்பாவிற்கும் ஒரு ஆண், ஒரு பெண்.  இன்னமும் சிறு வேலை என்றாலும் அந்த வீட்டில் பூஜைகளும்…… புனஸ்காரம், ஆச்சார்யம், ஐதீகம் என்று எல்லாம் அணி வகுக்கும், காரணம் அவனின் பாட்டி சௌந்தரி அம்மாள்.

வெளி உலகிற்கு அவன் ஈஸ்வர் ஆனால் வீட்டில் விஷ்வா, “ஏண்டா இவ்வளவு நேரம் விஷ்வா” என்ற பாட்டியின் குரல் ஓங்கி ஒலிக்க,

“நீங்க தூங்காம என்ன பண்றீங்க பாட்டி, முரளி கல்யாணம் நாளைக்கு காலையில ஞாபகமில்லையா அங்க போயிட்டு வர்றேன்”,

“பட்டு வேஷ்டி சட்டையில போயிருக்கக்கூடாது”

“பாட்டி கல்யாணம் அவனுக்கு, எனக்கு இல்லை”

“நீ சரின்னு சொல்லு, இப்ப பொண்ணுங்களை வரிசையா நிறுத்தறேன்”

அவர் அப்படி சொன்னதும் தான் சைலண்டில் இருந்த மொபைலை எடுத்துப் பார்த்தான், ஐஸ்வர்யாவிடம் இருந்து பல மிஸ்ட் கால்கள், “தோ வந்தர்றேன் பாட்டி” என்று ரூமிற்கு விரைந்தவன், போனை எடுத்து அவளை அழைத்தான்,

“சாரி ஐஷ், கவனிக்கலை, முரளி மேரேஜ்ல இருந்தனா, போன் எடுத்துப் பார்க்கவேயில்லை” என்றான்.

எதிர்புறம் ஒரு பதிலும் இல்லை “அதான் சாரி சொல்றேன் இல்லை”

“நீங்க சாரி சொல்லலைன்னா தான் அதிசயம். டெய்லி சொல்றது தானே! எப்பவாவது நான் கூப்பிட்டு ஃபோன் உடனே அட்டென்ட் செஞ்சு இருக்கீங்களா! கிடையவே கிடையாது! அந்த ஃபோனை தலையில சுத்தி விட்டது ஏதோன்னு தூக்கிப் போடுங்க” என்றாள் கோபமாக.

“அதைத் தூக்கிப் போட்டா அப்புறம் கால் பார்த்து உன்னை எப்படி கூப்பிடறதாம்”,

“கூப்பிட வேண்டிய அவசியமேயில்லை! கூப்பிட்டு மட்டும் என்ன பண்ணப் போறீங்க, படிச்சியா, சாப்பிட்டியா, தூங்குனியா கேட்பீங்க” என்றாள் கடுப்பாக.

“ஹலோ டாக்டரம்மா! கூல் இப்படிக் கோபப்படக்கூடாது புரிஞ்சதா! எப்படி போகுது பீ ஜி என்டரன்ஸ் ப்ரிபரேஷன்”

“எங்கயோ போயிடுச்சு, அதான் தேடிட்டு இருக்கேன்”

“இரு, நான் கண்டுபிடிச்சு குடுக்கறேன்” என்று பேச ஆரம்பித்தவன், பத்து நிமிடமாக பேசி, அவளின் மூடை சற்று சரியாக்கி “என்னை நினைக்கறதை விட்டு ஒழுங்கா படிங்க” என்று சொல்லி வைத்தான்.

வைத்தவுடன் தோன்றியது ஒன்று தான் “யாருடா சொன்னது காதலிக்கறது ஈசின்னு, வேலையிருக்குன்னு அப்பா அம்மா எல்லோரையும் ஒரே வார்த்தைல கட் பண்றேன். இவளை முடியுதா?” என்று நினைத்தாலும் ஐஸ்வர்யாவின் முகம் கண்களில் தோன்றியதும், ஒரு புன்னகை தானாக முகத்தில் ஒட்டியது. மனதில் இருந்த கவலைகள் சற்று மட்டுப்பட்டது.

அது ரூமை விட்டு வெளியே வரும் வரை தான், வந்த க்ஷணம் அண்ணன் ஜகன்னாதனை கண்டதும் அப்படியே மாறியது.

“என்ன சொல்றான்” என்றான் உஷ்ணமாக.

“ஆளையே பிடிக்க முடியலை விஷ்வா! பிடிச்சா தானே பதிலை வாங்க முடியும்” என்றான் கவலையாக.

“இந்த பதிலை இன்னும் எத்தனை நாள் சொல்வீங்க” என்று அடிக் குரலில் சீறினான் வீட்டினர் யாரும் கேட்டு விடாதபடி,

ஜகன்னாதனின் முகம் முற்றிலும் இயலாமையைக் காட்டியது.

“என்கிட்ட விடுங்க, நான் பார்த்துக்கறேன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கறீங்க, தொழிலையும் சொந்தத்தையும் நட்பையும் குழப்பாதீங்க! அது வேற! இது வேற! நாளைக்குதான் உங்களுக்கு டைம், அவனைப் பிடிக்க முடியலையா என் கிட்ட விட்டுடுங்க, நான் பார்த்துக்கறேன்” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பிக் கொண்டு இருந்தான்.

அதற்குள் ஜகனின் மனைவி ரூபா வர… பேச்சு நின்றது. இருவரும் அப்படியே நிற்பதைப் பார்த்து “என்ன விஷ்வா” என்றாள்.

“ஒன்னுமில்லை ரூப்ஸ்” என்று சொல்லி ஈஸ்வர் அந்த இடத்தை விட்டுச் சென்று விட,

“என்ன?” என்றாள் கணவனைப் பார்த்து.

“அதான் அவன் ஒன்னுமில்லைன்னு சொல்றானே!” என்று ஜகன் சொல்ல,

“இல்லை, ஏதோ கண்டிப்பா இருக்கு, அவன் ரூப்ஸ் சொல்லிட்டு போறான். கண்டிப்பா கான்சியஸ்ல இருந்தா அண்ணி தான் சொல்வான். என்ன செஞ்சு வெச்சிருக்கீங்க” என்றாள் கணவனின் புத்திசாலித்தனத்தை அறிந்தவளாக.

ஒரு பார்வை மட்டுமே பதிலாய்க் கொடுத்தவன், வேறு பேசாமல் சென்று விட, ஏதாவது பிரச்சனையா என்னவென்று தெரியவில்லையே என்று கவலை எட்டிப் பார்த்தது. கூடவே எதுவாகினும் ஈஸ்வர் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் எழ, ஒரு ஆசுவாசப் பெருமூச்சோடு  ரூமை நோக்கி சென்றாள்.

அம்மாவையும் அப்பாவையும் தேடிக் கீழே இறங்கினான் ஈஸ்வர். அதற்குள் உறங்கப் போயிருந்தனர். வெகு நேரமாகிவிட்டது அப்போது தான் தெரிந்தது.

தன் ரூமிற்கு சென்று படுக்கையில் விழுந்தவனால் உறங்கத்தான் முடியவில்லை.

ஒரு மனிதனை நல்லவனாக்குவதும் தீயவனாக்குவதும் அவனின் சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்பது எழுதப்படாத உண்மை.

 

 

Advertisement