Advertisement

பரத் வீட்டினரிடம் கூறியபடியே உடனே சென்னை செல்ல தயாராகினான். ஒரு வேளை இளமுகில் ஈரோடு வர ஒத்துக் கொண்டால் பேருந்திலோ அல்லது இரயிலிலோ கூட்டிக் கொண்டு வர முடியாது. அதற்கு இளமுகிலனும் ஒத்துக் கொள்ள மாட்டான். என்ன செய்வது என்று யோசித்த போது தான் அவர்களது வீட்டில் மகிழுந்து இருப்பது ஞாபகத்துக்கு வந்தது.

நேராக அவனது அப்பாவிடம் சென்று,”அப்பா நான் கார் எடுத்துட்டு போகட்டுமா?”

“நானே சொல்லனும்னு இருந்தேன் பரத். நீயே கேட்டுட்ட. எடுத்துட்டு போ பரத்.”

“புதுசு ஒன்னு வாங்குனா கேட்கிறியா?” என்று அவனது அம்மா கேட்க,

“அம்மா பாருங்க இன்னும் ஆறு மாசம் தான் இருக்கப் போறேன். அதுக்கு புதுசா ஒரு கார் வாங்கனுமா? எப்படி இருந்தாலும் லண்டன் போய் வாங்கத் தான் போறேன். அதுக்கு அப்புறம் இந்தியா வந்ததும் பார்த்துக்கலாம்.”

“ம் போ என்னமோ சொல்ற.” என்று கூறிவிட்டு அவனது அம்மா சென்று விட்டார்.

அடுத்த நாள், பரத் அவனது பொருட்களை எல்லாம் காரில் வைத்து விட்டு அவனது அப்பா, அம்மா மற்றும் தங்கையிடமும் கூறிவிட்டு சென்னை நோக்கிப் பயணித்தான்.

இளமுகில்கு பரத் வருவது தெரியாது. அதனால் எப்பொழுதும் போல் எழுந்து அவனது அன்றாட வேலையைச் செய்து கொண்டிருந்தான். பரத் வரும் நாளிற்குத் தான் இவனும் காத்திருந்தான். அவன் வரும் வரை மனதைத் திடப் படுத்திக் கொண்டான். அவனது மனம் மாறாமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை வேறு.

காலையில் ஆறு மணிக்குக் கிளம்பியவன் காலை சாப்பிட மட்டுமே நிப்பாட்டினான். ஒரு வழியாக மதியம் இரண்டு மணிக்குச் சென்னை வந்து விட்டான். வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இவனது காரை நிறுத்தி விட்டு அவனது வீட்டிற்குச் சென்றான்.

இளமுகில் அப்பொழுது தான் சமைக்கவே ஆரம்பித்து இருந்தான். அவன் ஒருத்தனுக்கு மட்டுமே சமைக்க வேண்டும், அதனால் வரும் எரிச்சலில் சில நேரங்களில் சமைக்கவே மாட்டான். அன்றும் அவன் காலையில் சாப்பிட வில்லை. அதான் மதியம் சமைக்கிறான். சரியாக வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, இளமுகிலனுக்கு பயம். இந்த விநாடி வரை தைரியமாக அவர்களை எதிர்கொள்ள வேண்டும் என்று அவன் நினைத்தது எல்லாம் மாறி சட்டென்று பயம் அவன் மனதை ஆக்கிரமித்தது.

இளமுகில் அப்படியே நின்றிருக்க, கதவு மூன்று முறை தட்டப்பட்டு அழைப்பு மணி அடிக்க, அப்பொழுது தான் இளமுகில் சற்று ஆசுவாசம் அடைந்தான். வந்தது பரத் என்று கண்டு கொண்டான். இது தான் அவர்களது குறிப்பு. கதவை மூன்றை முறை தட்டிவிட்டு அழைப்பு மணி அடிக்க வேண்டும்.

இளமுகில் வேகமாக வந்து கதவைத் திறக்க, பரத் சிரித்த முகமாக நின்றிருந்தான்.

“ஏய் பரத் என்ன நாளைக்குச் சாயந்தரம் தான் வருவனு பார்த்தேன். இன்னைக்கே வந்துட்ட?”

“ஆமா இளா ஒரு ஹாப்பி நியூஸ் அதைச் சொல்ல தான் சீக்கிரம் வந்தேன்.”

“அப்படி என்ன ஹாப்பி நியூஸ் பரத்?”

“எனக்கு ப்ரோமோஷன் கிடைச்சுருக்கு டா. அதோட ட்ரான்ஸ்ஃபரும் பேங்க்ளூர்கு.”

“ஏய் கங்க்ராட்ஸ் பரத். ரொம்ப சந்தோஷமா இருக்கு. எப்போ பேங்க்ளூர் போகனும்?” மகிழ்ச்சியாகவே இளா கேட்க,

“டென் டேஸ்ல போகனும் இளா.”

“சூப்பர் பரத். ரொம்ப ஹாப்பி.”

“அப்புறம் ஆறு மாசத்துக்கு அப்புறம் லண்டன் போனாலும் போவேன் டா. இப்போதைக்கு கன்ஃபார்ம் இல்லை. ஆனால் நைன்டி நைன் பெர்சென்ட் சான்ஸ் இருக்கு டா.”

“வாவ் சூப்பர் பரத். கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்று கூறிய இளா, மனதிற்குள் தான் எடுத்த முடிவு சரியானது என்று தீர்க்கமாக நம்பினான்.

“எனக்குச் சந்தோஷம் தான் இளா ஆனால் உன்னை இந்த நிலைமையில் விட்டுட்டு போக எனக்குக் கஷ்டமா இருக்குது டா. நீ நான் சொன்னதை யோசிச்சியா?”

“நீ என்னைப் பத்திக் கவலைப்படாத பரத். நான் யோசிச்சு நல்ல முடிவு எடுத்துட்டேன். நீ உன் வேலைல மட்டும் கான்சன்ட்ரேட் பண்ணு சரியா. என்னைப் பத்தி நீ கவலைப்பட்டது போதும் பரத். இனி உன் லைஃப்பை பார்.”

“என்ன சொல்ற இளா? நிஜமாவா? என்ன முடிவு எடுத்துருக்க?”

“ப்ச் அதெல்லாம் எதுக்கு. எல்லாம் நல்ல முடிவு தான்.”

“இல்லை நீ சொல்றதே சரியில்லை. ஒழுங்கா சொல்லு இளா, இல்லாட்டி நான் என்னோட ட்ரான்ஸ்ஃபரை கேன்சல் பண்ணிடுவேன். என்னைப் பத்தி உனக்கு நல்லா தெரியும்.”

“அய்யோ என்ன பரத் நீ? லூசா நீ? நான் தான் நல்ல முடிவு எடுத்துருக்கேன்னு சொல்றேன்ல என்னை நம்பு. எந்த தப்பான முடிவும் நான் எடுக்கலை. எனக்கு ரொம்ப வருஷம் வாழனும்னு ஆசை இருக்கு. சோ நான் அந்த மாதிரி முடிவெல்லாம் எடுக்கலை. ஓகே வா.”

“அப்போ என்னன்னு சொல்லு இளா. நீ சொல்லாம உன்னை விடப் போறது இல்லை.”

“ப்ச் லூசு மாதிரி பேசாத.”

“அப்போ நான் கேட்டதுக்குப் பதில்.”

“ஊஃப்!! நான் திருச்சிக்கே போகலாம்னு முடிவு பண்ணிட்டேன் பரத்.” இளா கூற, பரத் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தான்.

“உனக்கு மர கழண்டு போச்சா? நான் இல்லாத போது என்ன நடந்துச்சு? ஏன் இந்த விபரீத முடிவு இளா?”

“அதெல்லாம் ஒன்னும் நடக்கலை. எனக்கு என்னோட நிலை பிடிக்கலை அது தான் உண்மை. நான் காலேஜ்ல எப்படி இருந்தேன்னு உனக்குத் தெரியும்ல? நான் ரொம்ப தைரியமானவன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனால் அந்தச் சம்பவம் என்னை இப்படிப் புரட்டி போடும்னு கனவுல கூட நான் யோசிக்கலை. இவ்ளோ நாள் பயந்து நடுங்கினது போதும்னு தோனுச்சு அதான் வேற எந்த காரணமும் இல்லை.”

“இளா நீ சொல்றது எல்லாம் சரி தான். ஆனால் அங்கப் போனா என்ன நடக்கும்னு யோசிச்சியா?”

“யோசிட்டேன் டா. என்னைத் தூக்கி ஜெயில்ல போடுவாங்க. இட்ஸ் ஆல்ரைட் பரத். இப்படிப் பயந்து சாகிறதுக்கு ஜெயில் எவ்ளோவோ மேல்னு தோனுது.”

“லூசு மாதிரி பேசாத இளா. அதெல்லாம் ஒன்னும் நீ அங்கப் போக வேண்டாம்.”

“அப்புறம் என்னை என்ன பண்ணச் சொல்ற? உன்னோட நிழல்ல நான் எத்தனை நாள் இருக்க முடியும்னு நினைக்கிற பரத்?”

“நான் அப்படிச் சொல்லலை இளா. உனக்குத் தெரியும்ல என்னோட தங்கச்சி ஒரு அகாடமில வொர்க் பண்றானு, அங்க அவங்களோட வெப்சைட்ட மேனேஜ் பண்ண ஒரு ஆள் வேணுமாம். நீ அந்த ஜாப்க்கு போறியா? உனக்குத் தான் வெப்சைட் க்ரியேட் பண்றது ஆப் டெவலப் பண்றது எல்லாம் தெரியும்ல? இது உனக்கு ஒரு நல்ல மாற்றமா இருக்கும். என்ன சொல்ற?”

“நீ சொல்றது ஓகே தான் டா. ஆனால் எத்தனை நாள்கு நான் இப்படி ஓடி ஒளிய நீயே சொல்லு?”

“இப்போதைக்கு நீ அங்கப் போடா, அதுக்கு அப்புறம் நாம என்ன பண்றதுனு யோசிப்போம். இத்தனை நாள் நீ ஒளியத் தான் நினைச்ச அதனால நாம உன்னோட ப்ராப்ளம்கு எந்த சொல்யூஷனும் யோசிக்கலை. ஆனால் இப்போ வெளிய வரனும்னு ஆசைப்படுற, கண்டிப்பா நாம என்ன பண்றதுனு யோசிப்போம் இளா. இப்போதைக்கு அங்குப் போய் அந்த ஜாப்பை பார்.” பரத் கூற, இளா யோசித்தான்.

‘எப்படி இருந்தாலும் நம்ம பிரச்சனைக்கு எந்தத் தீர்வும் இருக்கப் போறது இல்லை. ஜெயிலுக்கு போனால் வெளி உலகைப் பார்க்க எத்தனை வருஷமாகுமோ!! அதுக்கு கொஞ்ச நாள் சுதந்திரமா இருந்தா தான் என்ன?’ என்று மனதில் இளா யோசிக்க,

“என்ன இளா அமைதியா இருக்க?”

“இல்லை பரத் யோசிச்சுட்டு இருந்தேன். நீ சொல்றதே சரியா வரும்னு தோனுது. நாம ஈரோடு போகலாம் பரத். பட் இந்த ஜாப் எனக்குக் கிடைக்கும்னு எந்த நம்பிக்கையில சொல்ற?”

“அதெல்லாம் தங்கச்சி பேசிக்கிறேன்னு சொல்லிட்டா இளா. நீ அதைப் பத்தி எதுவும் வொர்ரி பண்ணிகாத. இப்போ எனக்குப் பசிக்குது என்ன சமைச்சுருக்க?” என்று பரத் கேட்க,

“டேய் நான் இன்னும் சமைக்கவே இல்லை. இரு சீக்கிரம் போய் சமைச்சுடுறேன்.” என்று இளா கூற,

“இவ்ளோ நேரம் சமைக்காமலா இருந்த?”

“ப்ச் ஆமா டா. எனக்கு மட்டும் தான அதான் லேட்.”

“சரி நானும் வரேன். இரண்டு பேர் சேர்ந்து செஞ்சா சீக்கிரம் முடியும்.” என்று கூறி பரத்தும் இளாவுடன் சென்றான்.

~~~~~~~~~~

அஸ்வத் அவனது விருப்பத்தைக் கூறி, அதற்குப் பெரியவர்கள் தனக்குச் சாதகமாகப் பதில் கூறவில்லை என்ற வருத்தத்துடனே இருந்தான். ராகவனும் ஹரிதாவும் அவனைக் கண்டு கொள்ளாமல் இருக்க, தாத்தாவிற்கும் பாட்டிக்கும் அஸ்வத் அவ்வாறு இருக்கிறது பிடிக்காமல், அவனைத் தனியாகத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.

“சொல்லுங்க எதுக்கு கூப்பிட்டீங்க?” கொஞ்சம் பட்டும் படாமல் அவன் கேட்க,

“இங்கப் பார் அஸ்வத் நீ பண்ணது உனக்குத் தப்புன்னு தோனலையா?”

“தப்பா? எனக்குப் புரியலை என் தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கை அமையனும்னு நான் நினைக்கிறது தப்பா?” கோபத்துடன் அஸ்வத் கேட்க,

“அஸ்வத் தாத்தா அதைச் சொல்லலை. நீ உன் தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கை அமையனும்னு ஆசைப்படுறது எல்லாம் ஓகே. ஆனால் உன் தங்கச்சிக்கு அதுல சம்மதமானு கேட்க வேண்டாமா? அவள் தான கல்யாணம் பண்ணிக்க போறவா!! அவளுக்கு தனக்கு வரப் போற கணவன் எப்படி இருக்கனும்னு ஆசை இருக்கும்ல? அதை நாம கேட்க வேண்டாமா?”

“பாட்டி நீங்க சொல்றதை நான் ஒத்துக்கிறேன். அவளுக்கும் ஆசை இருக்கும். அவளோட ஆசைக்கு ஏற்ப தான் ஆகாஷ் இருக்கான். அப்புறம் உங்களுக்கு என்னப் பிரச்சனை?”

“எப்படி நீ இவ்ளோ உறுதியா சொல்ற அஸ்வத்? ப்ரனுவோட ஆசை என்னன்னு உனக்குத் தெரியுமா?” அவனது தாத்தா கேட்க,

“ப்ச் தாத்தா என்ன பேசுறீங்க? எல்லாருக்கும் இருக்கிற மாதிரி நல்லவனா, படிச்சவனா, வசதியானவனா இருக்கனும்னு தான ப்ரனுவும் ஆசைப்பட்டிருப்பா. இதெல்லாம் ஆகாஷ்கிட்ட இருக்கே.” அசால்டாக அஸ்வத் கூற,

“என்ன பேசுற அஸ்வத் நீ? இதெல்லாம் பெத்தவங்களோட எக்ஸ்பெக்டேஷன், ஆனால் கல்யாணம் பண்றவங்களுக்குனு ஒரு எக்ஸ்பெக்டேஷன் இருக்கும். அதை நாம யோசிக்க வேண்டாமா?”

“சரி இப்போ என்ன நான் ஆகாஷ்கிட்ட என் ஃபேமிலல யாருக்கும் உன்னைப் பிடிக்கலை, இந்தக் கல்யாணம் நடக்காதுனு சொல்லனும் அவ்ளோ தான?”

“அப்படியே அடிச்சேனா பார்.” என்று பாட்டி அடிக்க கை ஓங்க, அஸ்வத் திகைத்துப் பார்த்தான். இதுவரை யாருமே அவனை அடித்தது இல்லை. ஏன் கை ஓங்கியது கூட இல்லை.

“மரகதம் இரு, இங்கப் பார் அஸ்வத் நாங்க யாரும் ஆகாஷ் வேண்டாம்னு சொல்லவே இல்லை. அதை முதல்ல நீ புரிஞ்சுக்க. நாங்க சொல்றது ப்ரனுவுக்கு ஆகாஷை பிடிக்கனும். அப்படி அவளுக்குப் பிடிச்சுட்டா நாங்க எந்த மறுப்பும் சொல்ல போறதில்லை.” சாந்தமாக தாத்தா அவனுக்கு எடுத்துரைக்க,

“அப்போ அவளுக்குப் பிடிச்சா உங்களுக்கு ஓகே வா?”

“நேத்துல இருந்து நாங்க இதைத் தான் சொல்றோம் அஸ்வத். ப்ரனுக்கு பிடிக்கனும். அவளுக்குப் பிடிச்சா வி ஹேவ் நோ அப்ஜெக்ஷன். அதுக்காக நீ அவளை எந்த விதத்துலயும் கம்பெல் பண்ணக் கூடாது சொல்லிட்டேன்.”

“ப்ராமிஸாவா தாத்தா?” சிறுபிள்ளை போல் அவன் கேட்க,

“ஏய் கண்ணா என்ன இது ப்ராமிஸ் அது இதுனு!! எங்களுக்கும் ஆகாஷைப் பிடிச்சுருக்கு. என்ன அந்தப் பையன் உன்கிட்ட பேசாமல் அவனோட பேரேன்ட்ஸ் வந்து பேசிருக்கலாம். அது மட்டும் கொஞ்சம் உறுத்தலா இருக்கு அவ்ளோ தான். மத்தபடி ப்ரனுவுக்கு ஆகாஷை பிடிச்சு இருந்தா எங்களுக்கும் சந்தோஷம் தான்.” என்று தாத்தா கூற,

“தாங்க் யூ தாத்தா. கண்டிப்பா அவளுக்கு ஆகாஷை பிடிக்கும். சரி நான் கிளம்புறேன்.” என்று கூறிவிட்டு அவனது ஹோட்டல்லுக்கு கிளம்ப, பெரியவர்கள் இருவரும் கவலையாகப் பார்த்தனர்.

“என்னங்க இந்தக் கல்யாண பேச்சால நம்ம குடும்பத்துல எந்தச் சண்டையும் வராமல் இருக்கனும். ப்ரனுக்கு அந்தப் பையனைப் பிடிக்கனும். கடவுளோ நீ தான் எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சு வைக்கனும்.”

“மரகதம் நீ மனசைப் போட்டு எதுவும் குழப்பிக்காத. கீதைல கிருஷ்ணன் சொன்ன மாதிரி எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். நாம என்ன நினைச்சாலும் மாத்த முடியாது. ப்ரனுவுக்கு ஆகாஷ்னு கடவுள் எழுது வைச்சுருந்தா அதை நம்மாள மாத்தவே முடியாது. என்ன நடந்தாலும் நாம பார்த்துக்கலாம். நீ கவலைப்படாத.” என்று மரகதத்திற்கு ஆறுதல் கூறினாலும் நம்பியப்பனுக்கு மனம் நெருடலாகவே இருந்தது.

~~~~~~~~~~

ப்ரனவிகா எப்பொழுதும் காலையில் எழுந்து அவளது வேலைகளைப் பார்த்து விட்டு அகாடமி செல்ல தயாரானாள். தினமும் காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் அரை மணி நேரம் தான் அவள் அகாடமி செல்வது. மற்ற நேரங்களில் வீட்டில் தான் இருப்பாள். இல்லை என்றால் ஹரிதாவுடன் வெளியில் செல்வாள்.

இன்றும் எப்பொழுதும் போல் கிளம்ப, அப்பொழுது தான் ஞாபகம் வந்தது அவளது வாகனம் இல்லை என்று. நேற்றே அஸ்வத் கண்டிப்புடன் கூறியிருந்தான் தனியாக ஆட்டோவில் வரக் கூடாது என்று. தேவையில்லாமல் அவனை டென்ஷன் படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்து ஓட்டுநருடன் போகலாம் என்று வெளியே வர, ராகவன் காரில் அமர தயாராக இருந்தார்.

“அப்பா வெளில போறீங்களா?”

“ஆமா டா. எதுவும் வேணுமா?”

“இல்லை அப்பா. என்னோட கார் மெக்கானிக் ஷெட்ல இருக்கு. நேத்தே அஸ்வத் கத்தினான் ஆட்டோல வந்ததுக்கு. என்னை அகாடமில ட்ராப் பண்ணிடுங்க அப்பா.”

“அதுக்கு என்ன வா. நானே உன்னை ட்ராப் பண்ணிடுறேன்.” என்று ராகவன் கூற, ப்ரனவிகா காரின் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்தாள்.

எப்பொழுதாவது தான் ராகவன் ஓட்டுநர் வைத்துக் கொள்வார். பெரும்பாலான நேரங்கள் அவர் தான் ஓட்டுவார். இன்றும் அவரே காரை எடுக்க, தன் செல்லப் பெண்ணுடன் பேசிக் கொண்டே ஓட்டினார்.

“என்ன டா நேத்து அஸ்வத் பேசுனது எதுவும் கஷ்டமா இருந்ததா?”

“சை சை அதெல்லாம் இல்லை அப்பா. அவன் என்ன சொன்னாலும் என்னை மீறி எதுவும் நடக்காதுனு எனக்கு நம்பிக்கை இருக்கு அப்பா. அதை விட நீங்களாம் விட்டுருவீங்களா என்ன?”

“அப்படிச் சொல்லு ப்ரனு. நீ அவன் சொல்றதை எதுவும் மனசுல வைச்சுக்காத. உனக்குப் பிடிச்சா தான் நாங்க ப்ரோசீட் பண்ணுவோம். So don’t think about anything சரியா.”

“அப்பா நீங்க இதைச் சொல்லனுமா என்ன?”

“நேத்தே பேசிருப்பேன் உன்கிட்ட, அப்புறம் அதுக்கும் அஸ்வத் ஏதாவது சொல்லுவான். உன்னைப் பத்தியும் எனக்குத் தெரியும். அதனால தான் அமைதியா இருந்துட்டேன்.”

“அப்பா நீங்க இவ்ளோ எக்ஸ்ப்ளனேஷன் கொடுக்கனும்னு அவசியமே இல்லை அப்பா. I understand.” என்று ப்ரனவிகா கூற, ராகவனுக்கு நிம்மதியாக இருந்தது.

அஸ்வத்தை பொறுத்த வரை தான் சொல்லும் விஷயங்களுக்கு மற்றவர் சரியென்று கூற வேண்டும் என்று நினைப்பவன். சற்று ஆண் என்ற கர்வமும் அவனுக்கு உண்டு. இத்தனைக்கும் அவன் வீட்டில் ராகவனுக்கோ இல்லை நம்பியப்பனுக்கோ அந்த கர்வம் இல்லை. இவனுக்கு மட்டும் எப்படி வந்தது என்பது புரியாத புதிர்.

அவர்களது அகாடமி வர, ப்ரனவிகாவை இறக்கி விட்டு ராகவன் அங்கிருந்து கிளம்பினார்.

ப்ரனவிகா அவளது அறைக்கு வந்து அமர்ந்த சில நிமிடங்களிலே ரேஷ்மி உள்ளே வந்தாள்.

“சொல்லுங்க ரேஷ்மி.”

“மேம் இதுவரைக்கும் மூணு பேரை இண்டர்வியூ பண்ணிருக்கோம். யாரை செலக்ட் பண்றதுனு நீங்கச் சொல்லவே இல்லை மேம்.”

“அப்படினா எனக்கு மூணு பேரும் பிடிக்கலைனு அர்த்தம். அவங்க நம்ம அகாடமிக்கு சரிப்பட்டு வர மாட்டாங்க. வேற ஆள் பாருங்க.”

“எஸ் மேம். நேத்து கூட ஒருத்தர் ஃபோன் பண்ணிக் கேட்டாங்க. இன்னைக்கு வரேன்னு சொன்னாங்க.”

“ஓகே தென்.” என்று ப்ரனவிகா கூற, சரியாக அதே நேரம் அவளது அறைக் கதவை யாரோ தட்ட,

“எஸ் கம் இன்.” என்று ப்ரனவிகா கூற,

பரத்தின் தங்கை ஓவியா உள்ளே வந்தாள்.

“சொல்லுங்க ஓவியா.”

“மேம் நம்ம அகாடமில வெப்சைட் மேனேஜர் ரோல்கு ரெக்ரூட்மென்ட் போயிட்டு இருக்குல மேம்.”

“ஆமா அதுக்கு என்ன இப்போ? உங்களுக்கு யாராவது தெரிஞ்சவங்க இருக்காங்களா?”

“எஸ் மேம். என்னோட அண்ணாவோட ப்ரண்ட் மேம். அவங்களுக்கு இது எல்லாம் நல்லா தெரியும் மேம்.”

“ரெக்கமென்டேஷன் எனக்குப் பிடிக்காது ஓவியா. அவங்களை வந்து இண்டர்வியூ அடென்ட் பண்ணச் சொல்லுங்க. அவங்க நல்லா பண்ணா கண்டிப்பா நான் வேலைக்குச் சேர்த்துக்கிறேன்.”

“மேம் நானும் ரெக்கமென்டேஷனுக்கு வரலை மேம். அவங்க இப்போ சென்னைல இருக்காங்க மேம். நாளைக்குத் தான் மேம் வருவாங்க. அதான் கொஞ்சம் டைம் கேட்க வந்தேன் மேம்.”

“ஓ!! இன்னைக்கு ஒருத்தர் வராங்க இண்டர்வியூக்கு!” என்ற ப்ரனவிகா சற்று யோசித்து விட்டு ரேஷ்மியிடம் திரும்பி,”சரி அப்போ இன்னைக்கு வரச் சொன்னவங்களை நாளைக்கு வரச் சொல்லுங்க. இரண்டு பேருக்கும் சேர்ந்தே இண்டர்வியூ கண்டெக்ட் பண்ணலாம். யார் நல்லா பண்றாங்களோ அவங்களை செலக்ட் பண்ணிக்கலாம்.” என்று ப்ரனவிகா கூற, ஓவியாவுக்கு சந்தோஷம்.

“ரொம்ப தாங்க்ஸ் மேம்.” என்று கூறிவிட்டு அவள் சென்று விட, ரேஷ்மியும் ப்ரனவிகாவிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

நாளையிலிருந்து அவளது வாழ்க்கையே மாறப் போகிறது என்பதை அறியாமல் அவளது வேலையில் ஆழ்ந்தாள் ப்ரனவிகா.

Advertisement