Advertisement

ஆதன் முதல் நாள் ராஜாவைச் சென்று சந்தித்து வந்த பிறகு அவனுக்குத் தெரியாமல் அவனை நான்கு நாட்கள் கண்காணித்தான். அந்த நான்கு நாட்களில் ராஜா செய்தது அவனது படையுடன் காலையில் அலப்பறையாக ஏதாவது ஒரு உணவகத்திற்குச் சென்று நன்றாகச் சாப்பிடுவது. பின்னர் அங்கு வருவோர் போவோரை வம்புக்கு இழுப்பது. அதன் பின்னர் மதுக்கடைக்குச் சென்று விடுவார்கள். அங்கு ஒரு ஒருமணி நேரம் இருந்து விட்டு அவர்கள் வீட்டிற்குச் சென்று விடுவார். அதன் பின் அவர்கள் கண்ணில் படவே இல்லை. அதே தான் அடுத்தடுத்து நாட்களும் நடந்தது. ஆதனுக்குத் தான் என்ன செய்வதெனப் புரியவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் அடுத்த நாள் எப்போதும் போல் அவனைப் பின் தொடர அவன் வர, அவனே எதிர்பாராதவிதமாக மாசாணி ஆதனை சந்திக்க அந்தப் பகுதிக்கு வந்தான். அங்கு மாசாணியை பார்த்த ஆதன் ஆச்சரியமாக அவனைப் பார்க்க, மாசாணி சிரித்துக் கொண்டே ஆதனிடம் வந்து,”தல உங்களுக்கு உதவத் தான் நான் வந்தேன்.” என்றான் அவன். அதைக் கேட்ட ஆதனிற்கு என்ன பதில் கூறுவதெனப் புரியவில்லை.

“டேய் அதலாம் ஒன்னும் வேண்டாம். நானே பார்த்துக்கிறேன். நீ முதல்ல இங்க இருந்து கிளம்பு.”

“சும்மா இரு தல!! நான் ஒன்னும் இந்தத் தொழிலுக்குப் புதுசு கிடையாது. நீ கவலையை விடு. என்ன செய்யனும்னு மட்டும் சொல்லு மத்ததை நான் பார்த்திக்கிறேன்.” என்று அவன் கூற, ஆதன் சடுதியில் ஒரு திட்டத்தை வகுத்தான். அதன்படி மாசாணி ஒரு அடியாள், அவனிடம் உதவி கேட்கவே அங்கு அழைத்து வந்தான் என்று அவர்களிடம் சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்து மாசாணியை அழைத்துக் கொண்டு அன்று சென்ற அதே மதுக் கடைக்குச் சென்றான்.

இன்னும் ராஜாவும் அவனது ஆட்களும் வரவில்லை. அதனால் அவர்கள் வருவதற்கு முன்பு மாசாணியிடம் கூற வேண்டுமென முடிவெடுத்து மாசணியிடம் திரும்பி,”மாசாணி நான் இப்போ அவன்கிட்ட ஒரு கதையைச் சொல்ல போறேன். நீ எதுக்கும் வாயைத் திறக்காத. கொஞ்சம் கெத்தா உட்கார். நான் சொல்லும் போது அந்த ராஜாவோட ஈகோவ கொஞ்சம் தூண்டி விடு அப்புறம்….” என்று மெதுவாக ஆதன் அவன் என்ன பேச வேண்டுமெனக் கூறினான்.

“தல அதெல்லாம் எனக்குச் சர்வ சாதராணம். நீங்கக் கவலையை விடுங்க.” என்று அவன் சொல்லி முடிக்கவும் ராஜாவும் அவனது ஆட்கள் வரவும் சரியாக இருந்தது.

ராஜா உள்ளே வந்தவுடனே ஆதனைப் பார்த்து விட்டான். நேராக அவனிடம் சென்றவன்,”என்ன நீ இன்னைக்கும் வந்துருக்க? உன் பொண்டாட்டி இன்னைக்கும் டார்ச்சர் பண்ணாளா?” என்று கேட்டான்.

“ப்ச் அதுல என்ன சந்தேகம்? இந்தக் குடிப் பழக்கம் வந்ததுக்கு காரணமே அவள் தான்.” என்று கூறிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்து,”அண்ணே உன் ஆளுங்களை கொஞ்சம் தள்ளிப் போகச் சொல்லுங்களேன்.” என்று அவன் கூறவும், ராஜா பதில் பேசாமல் பார்வையாலே எதற்கு அப்படிக் கூறுகிறாய் என்று கேட்டான்.

“அண்ணே ஒரு மேட்டர் சொல்லனும் அதுக்கு தான். எனக்கு உங்களைத் தவிர வேற யாரையும் நான் நம்பத் தயாரா இல்லை.” என்றான் ஆதன்.

அதில் மனம் குளிர்ந்த ராஜா தன் பார்வையாலே அவனது ஆட்களைத் தள்ளிப் போகச் சொல்ல, அவர்களும் ஆதனை முறைத்துப் பார்த்து விட்டுத் தள்ளிச் சென்று அமர்ந்து விட்டனர்.

ராஜா இப்போது ஆதனைப் பார்த்து,”சரி இப்போ சொல்லு.” என்றான் அவன்.

“அண்ணே இதோ இவர் பேர் மாசி. இவரை வைச்சு என் பொண்டாட்டி கதையை முடிச்சுடலாம்னு இருக்கேன். அதைப் பத்திப் பேசத் தான் இங்க வந்தேன். வேற எங்க போனாலும் நாளைக்கு விஷயம் தெரியும் போது நான் போலிஸ்கிட்ட மாட்டிக்குவேன்.” என்று மெதுவாக அவன் கூற, ராஜா மாசாணியை மேலிருந்து கீழ் வரை பார்த்தான். என்ன நினைத்தானோ சட்டென்று சிரித்து விட்டான் ராஜா.

மாசாணி முகத்தைக் கோபமாக வைத்துக் கொண்டு,”இப்போ எதுக்கு நீங்க சிரிச்சீங்க சொல்லியே ஆகனும்.” கட்டளையாக அவன் குரல் ஒலித்தது.

“ஆழாக்கு சைஸ்ல இருந்துட்டு இவன் மட்டைப் பண்ணப் போறானா? உனக்கு வேற ஆள்ளே கிடைக்கலையா நிவாஸ்?” நக்கலாக ராஜா கேட்டான்.

“அப்படியா சொல்றீங்க அண்ணே? இவரு பெரிய ரவுடினு சொன்னாங்க அதான் நான் கூப்பிட்டு வந்தேன். அய்யோ இப்போ நான் என்ன பண்றது?” முகத்தைப் பயந்த மாதிரி வைத்துக் கொண்டு கேட்டான் ஆதன்.

“யோவ் என்ன விளையாடுறியா? இங்கப் பார் ஆளுக்கும் செயலுக்கும் சம்மதமே கிடையாது. இவனை நம்புற ஆனால் என்னை நம்ப மாட்டிங்கிறியா? நான் இதுக்கு முன்னாடி எத்தனை சம்பவம் பண்ணிருக்கேன் தெரியுமா? இவன் ஒரு ஆள்ளுனு இவன் சொல்றதை கேட்கிற நீ?” ராஜாவின் குரலிலிருந்த நக்கலை விட ஜாஸ்தியாக மாசாணி நக்கல் குரலில் கூற, ராஜாவிற்கு கோபம் வந்து விட்டது.

“ஏய் யாரைப் பார்த்து இவன் எல்லாம் ஒரு ஆள்ளானு கேட்ட? நான் எத்தனை சம்பவம் பண்ணிருக்கேன் தெரியுமா? இப்போ கூட ஒரு பெரிய கொலை பண்ணிட்டு தான் இங்கத் தலைமறைவா இருக்கேன்.” என்று அவன் வாயாலே ராஜா கூறினான்.

“என்னது கொலை பண்ணிட்டு தலைமறைவா இருக்கிறியா? சும்மா காமெடி பண்ணாத. உடம்பை வளர்த்து வைச்சா மட்டும் போதாது. சம்பவம் செய்ய தில்லு வேணும். அதெல்லாம் உன்ட்ட இல்லை. சும்மா மட்டைப் பண்ணேன், தலைமறைவா இருக்கேன்னு பொய் சொல்லாத.”

“டேய்!! உன் கண்ணு முன்னாடியே நான் கொலை பண்றேன் டா. அதுக்கு அப்புறம் உனக்குச் சம்பவத்தைப் பண்றேன் டா.”

“இங்கப் பார் அதோ உன் அல்லக்கை அவங்களை எல்லாம் கூப்பிட்டுப் போகக் கூடாது. நீ மட்டும் தனிமா மட்டைப் பண்ணு நான் ஒத்துக்கிறேன் நீ பெரிய பிஸ்தானு.” அவனைத் தூண்டி விடுவது போல் மாசாணி பேசினான்.

அது நன்றாக வேலை செய்தது. ராஜா வேகமாக ஆதன் புறம் திரும்பி,”இங்கப் பார் உன் பொண்டாட்டிய நான் போட்டு தள்ளுறேன். நீ எனக்கு எந்தத் துட்டும் தர வேண்டாம்.” என்று ஆதனிடம் கூறிவிட்டு மாசாணியிடம் திரும்பி,”இப்போ என்ன சொல்ற நீ?” என்று கேட்டான்.

“ப்ச் முதல்ல சம்பவத்தைப் பண்ணு அப்புறம் பேசலாம்.” என்று அப்போதும் ராஜாவை துச்சமாக எண்ணி மாசாணி பேச, ராஜாவுக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது,”டேய் உன் சாவும் என் கையில தான்.” என்று தீவிரமாக ராஜா கூறினான்.

“அண்ணே அண்ணே விடுங்க அவர் ஏதோ தெரியாமல் பேசிட்டார். நீங்க நம்ம விஷயத்துக்கு வாங்க. என் பொண்டாட்டிய எப்போ போட்டு தள்ளுவீங்க?” ஆர்வமாக ஆதன் கேட்டான்.

அவனது ஆர்வத்தைப் பார்த்த ராஜாவிற்கு சிரிப்பு தான் வந்தது. அவன் உடனே,”அந்த அளவுக்கு உன் பொண்டாட்டி உன்னை ரொம்ப டார்ச்சர் பண்றாளா?”

“அட ஆமா அண்ணே. அவளை மட்டும் போட்டு தள்ளிட்டா போதும் நான் என் ஜிகிலிய கல்யாணம் பண்ணிப்பேன்.” கண்களில் கனவு மின்ன ஆதன் கூறினான்.

“அது யாரு ஜிகிலி?”

“என் ஆபிஸ்ல கூட வேலைப் பார்க்குது. பார்க்க அப்படியே தக்காளி பழமாட்டம் இருப்பா. எனக்கும் அவளுக்கும் லவ்ஸ் போயிட்டு இருக்கு. என் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணச் சொல்லிட்டு இருக்கா. டைவர்ஸ் பண்ண என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா. அதான் அவளைத் தீர்த்து கட்டலாம்னு ப்ளான் பண்ணிட்டேன். ஆனால் என் மேல சந்தேகம் வராமல் பண்ணனும். அவள் செத்தது தற்கொலை போல இருக்கனும்.” என்று ஆதன் கூறினான்.

“அதெல்லாம் நமக்குக் கை வந்த கலை. சரி சொல்லு உன் பொண்டாட்டிக்கு உன்னைப் பிடிக்குமா?”

“ம் அதெல்லாம் ரொம்ப பிடிக்கும். அதனால தான் அவள் என்னை விட்டுப் போக மாட்டிங்கிறா!!” எரிச்சலாகக் கூறுவது போல் கூறினான் ஆதன்.

“அப்போ கதை ரொம்ப சுலபமா முடிஞ்சிடும். சரி எப்போ வேலையைச் செய்றது?”

“அண்ணே எதுக்கு நாள் எல்லாம் தள்ளிப் போட்டுட்டு? இன்னைக்கு இராத்திரியே அவள் கதையை முடிச்சுடுங்க. நான் ஆபிஸ் விஷயமா ஊருக்குப் போறேன்னு சொல்லிட்டு என் ஜிகிலியோட வீட்டுக்குப் போயிடுவேன். நீங்க அமைதியா அவள் கதையை முடிச்சுடுங்க.”

ராஜாவிற்கு நேரம் கொடுத்தால் எங்கு அவனது திட்டம் பாழாகிடுமோ என்று தான் உடனே செயல்படுத்தத் திட்டமிட்டான் ஆதன்.

“ம் சரி சரி. அப்போ என் பசங்ககிட்ட சொல்லிட்டு வரேன்.” என்று ராஜா எழுந்திருக்க, ஆதன் அவனைத் தடுத்தான்.

“அண்ணே அவங்களுக்கு இந்த விஷயம் எதுவும் தெரிய வேண்டாம். அப்புறம் நாளைக்கு போலிஸ் சந்தேகப்பட்டு விசாரிச்சா நம்ம மாட்டிக் கிட்டா என்ன பண்றது?” என்று ஆதன் கேட்க, அது ராஜாவுக்கும் சரியாகப் பட்டது.

“ம் நீ சொல்றதும் சரிதான். அடி தாங்க மாட்டாங்க. ஏதாவது உளறிடுவாங்க.”

“அண்ணே எப்படி மட்டைப் பண்ணப் போறீங்க?” என்று ஆர்வமாகக் கேட்டான் ஆதன்.

“நீ ஊருக்குப் போறேன்னு சொன்னது ரொம்ப சவுகரியமா போச்சு. ஆனால் நீ உன் ஜிகிலி வீட்டுக்குப் போக வேண்டாம். நான் சொல்ற இடத்துல இரு சரியா.” என்று ஆதனிடம் கூறிவிட்டு மாசாணியிடம் திரும்பி,”அப்புறம் நீயும் இவன் கூட இரு. நான் வீட்டுக்கு உள்ள போனதும் உனக்கு ஃபோன் போடுவேன். நீ என்ன பண்ற இவன் கழுத்துல கத்திய வைக்கிற. அப்புறம் மத்ததை நான் பார்த்துக்கிறேன்.”

“சரி அண்ணாத்தே நீ சொல்ற மாதிரியே செஞ்சுடுவோம். இன்னைக்கு நைட் நானே உன்னை வந்து கூப்பிட்டுப் போறேன். என் வீடு இருக்கிற ஏரியாவுல இருந்து கொஞ்சம் தள்ளி உன்னை இறக்கிவிட்டு போறேன். நான் கார்ல தான் அண்ணாத்தே வருவேன். நம்பர் ப்ளேட் முதற்கொண்டு மாத்தி எடுத்துட்டு வரேன் தலை.” என்று கூறினான் ஆதன்.

“ம் அப்போ எல்லாம் பக்கா. நைட்டு சந்திப்போம்.” என்று கூறிவிட்டு ராஜா அங்கிருந்து எழுந்து சென்று விட்டான்.

அவன் சென்றதும் மாசாணியும் ஆதனும் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். போகும் முன்னர் ஆதன் ராஜாவை பார்த்து தலையசைத்து விட்டே சென்றான். அவர்கள் சென்றதும் ராஜாவின் ஆட்கள் அவனிடம் விஷயத்தைக் கேட்க, அவன் ஒன்றுமில்லை என்று கூறி சமாளித்து விட்டான். பின்னர் அவர்களும் நன்றாக மூக்கு முட்டக் குடித்து விட்டு அங்கிருந்து கிளம்பினர்.

ராஜா கூறியது வைத்தே நன்றாகப் புரிந்தது ஆதனுக்கு ரம்யாவை அவர்கள் எப்படிக் கொலை செய்திருப்பார்கள் என்று. அவளது கணவனைப் பிணைக் கைதியாக வைத்துக் கொண்டு ரம்யா மேல் தங்கள் கைப்படாமலே அவளே தூக்கிட்டு தற்கொலைச் செய்தது போல் சித்தரித்து உள்ளனர் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அதற்குத் தகுந்த சாட்சி வேண்டும். அந்தச் சாட்சி ராஜா தான். இன்று அவனை எப்படியாவது பிடித்து விட வேண்டுமென உறுதி எடுத்து என்ன செய்ய வேண்டுமென மனதிற்குள் திட்டத்தை வகுத்துக் கொண்டான். அதன்படி அவனிற்கு ஒரு மகிழுந்து வேண்டும். அதை ஏற்பாடு செய்ய மாசாணியுடன் சென்று விட்டான். அன்று முழுவதும் மாசாணி ஆதனுடன் தான் இருந்தான். அவர்கள் தேவையான அனைத்தையும் தயார் செய்து விட்டனர்.

இரவு நேரம் வந்தது. ராஜா யாருக்கும் தெரியாமல் அவனது ஏரியாவில் இருந்து மெதுவாக வந்தான். ஆதன் மற்றும் மாசாணி மகிழுந்துடன் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்தார்கள். ராஜா வருவதைப் பார்த்த ஆதன் கீழே இறங்கி அவனை நோக்கிக் கை காட்ட, ராஜா வேகமாக அவர்கள் அருகில் ஓடி வந்தான்.

“அண்ணே உள்ள உட்காருங்க.” என்று கதவைத் திறந்து விட்டான் ஆதன். ராஜா உள்ளே உட்கார்ந்தவுடன் ஆதன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து மகிழுந்தை எடுத்தான். சில தூரம் தான் சென்றிருப்பார்கள் மாசாணி அமைதியாகத் திரும்பி அவன் கையிலிருந்த ஸ்ப்ரேவை ராஜா முகத்தில் அடிக்க, அவன் அப்படியே மயங்கிப் பின்னால் சாய்ந்து விட்டான்.

ஆதன் கண்ணாடி வழியாக யாரும் தங்களை பின் தொடர்ந்து வருகிறார்களா என்பதை நன்றாகப் பார்த்து விட்டே அவர்கள் ஏற்பாடு செய்து வைத்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அந்த இடம் சற்று ஒதுக்குப்புறமான இடம். ஒரு பழைய கட்டிடம் ஒன்று இடிந்து கிடந்தது. அங்கிருந்து எவ்ளோ சத்தம் போட்டாலும் பக்கத்தில் கேட்காது. ஏன் என்றால் பக்கத்தில் எந்த கட்டிடமும் இல்லை ஆட்களும் இல்லை. அது பல காலங்களாக உபயோகப் படுத்தாமல் இருப்பதால் அங்கு மக்கள் வரச் சிறிது அச்சப்படுவர். அதனாலே அந்த இடத்தைத் தேர்ந்து எடுத்தான் ஆதன்.

ஆதனும் மாசாணியும் அவனைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தனர். அங்கு ஒரு அறை இருந்தது. அதை ராஜாவிடம் காலையில் பேசிவிட்டு வந்ததும் மாசாணியுடன் சேர்ந்து ஆதன் தயார்ப்படுத்தி இருந்தான். அவனை நாற்காலியில் உட்கார் வைத்து ஒரு தடிப்பமான கயிறு கொண்டு வந்து அவனைக் கட்டி வைத்து விட்டு டேப் எடுத்து அவனது வாயில் ஒட்டிவைத்து விட்டு இருவரும் வெளியே வந்தனர்.

“தல நான் பார்த்துக்கிறேன். நீ வீட்டுக்குப் போய் கொஞ்சம் தூங்கி எந்திரிச்சுட்டு வா.” என்றான் மாசாணி.

“இல்லை மாசாணி இவன் வாயில இருந்து உண்மை வர வரைக்கும் என்னால தூங்க முடியாது. இந்த கேஸ் ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆகப் போகுது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் சுத்திட்டு இருக்கேன். இவன் வாயைத் திறந்தால் தான் அடுத்தடுத்து வேலை பண்ண முடியும்.”

“புரியுது தல. ஆனால் அதுக்கு இவன் முதல்ல எழுந்திருக்கனும். அதுக்கு நேரமாகும். அதனால தான் சொல்றேன், நீங்க போய் கொஞ்சம் தூங்கி எந்திரிச்சுட்டு வாங்க.” என்று மாசாணி கூற, ஆதனிற்கு அது சரியென்று பட்டது.

“சரி மாசி நீ பார்த்துக்க, அவன் தப்பிக்க முடியாது இருந்தாலும் கவனமா இரு சரியா.” என்றான் ஆதன்.

“ம் நீ கவலைப்படாமல் போ தல. நான் பார்த்துக்கிறேன்.” என்று மாசாணி கூற, ஆதன் அங்கிருந்து கிளம்பினான்.

அடுத்த நாள் சீக்கிரமே கிளம்பி ராஜாவை அடைத்து வைத்த இடத்திற்கு வந்தான் ஆதன். மாசாணி ஒரு புறம் தூங்கிக் கொண்டிருந்தான். இவன் வரும் அரவம் கேட்டுச் சட்டென்று முழித்து விட்டான் மாசாணி.

“என்ன தல அதுக்குள்ள வந்துட்ட?”

“ப்ச் வீட்டுல இருக்க மனசு இல்லை மாசி. அதான் நான் வந்துட்டேன். நீ கொஞ்ச நேரம் தூங்கு மாசி. நான் பார்த்திக்கிறேன்.” என்று ஆதன் கூற, மாசாணிக்கும் தூக்கம் கண்களைச் சுழற்றியதால் சரியென்று அவன் அங்கிருந்து சென்று விட்டான்.

ஆதன் ராஜாவைக் கட்டிப் போட்டு இருந்த இடத்திற்குச் சென்று ஒரு முறை பார்த்தான். அவன் இன்னும் மயக்கத்திலே தான் இருந்தான். கிட்டச் சென்று அவனை ஆட்டிப் பார்த்தான் ஆதன், ஆனால் ராஜா கண்ணைத் திறக்கவே இல்லை. சரியென்று அவன் அங்கிருக்கும் இன்னொரு நாற்காலியில் சென்று அமர்ந்தான்.

சரியாக ஒருமணி நேரம் கழித்து லேசாகக் கண்ணை முழித்தான் ராஜா. அதுவும் அவனால் முடியவில்லை. கஷ்டப்பட்டு இமைகளைப் பிரித்துப் பார்த்தான் ராஜா. அவன் எங்கு இருக்கிறான் என்று ஒன்றும் புரியவில்லை. அப்போது தான் கவனித்தான் அவனது கைகள் மற்றும் கால்கள் கட்டுப்பட்டு இருப்பதை. சுற்றி யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க, ஆதன் கால் மேல் கால் போட்டு அங்கு உட்கார்ந்து இருந்தான். அவனைப் பார்த்ததும் தான் அனைத்தும் ஞாபகத்திற்கு வந்தது ராஜாவிற்கு.

“ஏய் நீ தான் என்னைக் கட்டிப் போட்டிருக்கியா? இது மட்டும் என் ஆளுங்களுக்குத் தெரிஞ்சது நீ செத்த டா.” என்று அவன் கத்தினான்.

ஆதன் அலட்டிக் கொள்ளாமல் மெதுவாக எழுந்து வந்து அவனது கண்ணத்தில் சப்பென்று ஒரு அறை விடுத்து,”ஷ், அமைதியா இருக்கனும். ஏய் கத்தின…” என்று கூறி அவனது துப்பாக்கியை எடுத்து ராஜாவின் நெற்றியில் வைத்து,”அப்படியே அழுத்திடுவேன்.” என்றான் ஆதன்.

ஆதன் துப்பாக்கியை எடுத்து அவனது நெற்றியில் வைத்ததுமே ராஜாவிற்குச் சர்வமும் அடங்கியது. பயத்துடனே,”உனக்கு என்ன வேணும்? முதல்ல யார் நீ?” பயத்துடனே அவன் கேட்டான்.

“நான் யாருனு உனக்குப் போகப் போகத் தெரியும். அப்புறம் என்ன கேட்ட? எனக்கு என்ன வேணும்னு தான? சொல்றேன் அதுக்கு தான உன்னை இப்படித் தூக்கிட்டு வந்துருக்கேன்.” என்று ஆதன் கூற, அதற்குள் மாசாணி சத்தம் கேட்டு உள்ளே வந்து விட்டான்.

“தல எழுந்திருச்சிட்டானா? சந்தோஷம். இப்போ என்ன பண்றது தல?” என்று அவனிடம் கேட்டான் மாசாணி.

“நம்ம பேசியபடி தான் பண்ணனும் மாசி. நான் சொன்னது ரெடியா?” என்று கேட்டான் ஆதன்.

“நான் எடுத்துட்டு வரேன் தல. அதுக்குள்ள இவனைத் தயார் பண்ணி வை.” என்று கூறிவிட்டு வெளியேறி விட்டான் மாசாணி.

அவன் சென்றதும் ஆதன் ராஜாவிடம் வந்து அவனை மறுபடியும் ஓங்கி அறைந்து,”இங்கப் பார் நான் கேட்கிறதுக்குப் பதில் சொல்லிட்டா நீ இங்க இருந்து போகலாம். இல்லாட்டி இங்கேயே உனக்குச் சமாதி கட்டிடுவேன்.”கடுமையாகக் கூறினான் ஆதன்.

அவனது கடுமை சற்று பயமுறுத்தியது ராஜாவை. நடுங்கிக் கொண்டே,”நான் என்ன சொல்லனும்?” என்று கேட்டான் அவன்.

“ரம்யாவ கொலை பண்ணது நீங்க தானா?” என்று கேட்டான் ஆதன். ராஜாவிற்கு ரம்யா யார் என்று தெரியவில்லை.

“யாரு ரம்யா?” என்று கேட்டான் அவன்.

ஆதன் மீண்டும் ஒரு அறை அறைந்து,”ஏய் ரம்யா யாருனு உனக்குத் தெரியாதா?” கோபமாகக் கேட்டான் ஆதன். அந்தக் கோபத்தில் ராஜா யோசிக்க, அப்போது தான் அவனது புத்தியில் உரைத்தது. ஆனால் அவன் வாயைத் திறந்து ஏதாவது கூறினால் கண்டிப்பாக அவனைப் பாண்டி முடித்துவிடுவான். அதனால் எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டான் ராஜா. அவனது அமைதி ஆதனை கடுப்பாக்க ராஜாவை ஓங்கி அறைந்தான். ஆனால் அவன் எதுவும் கூறவில்லை. அதன் பிறகு ஆதன் எவ்ளோ அடித்தாலும் அவன் வாயைத் திறக்காமல் அமைதியாகவே இருந்தான்.

கடுப்பாகிய ஆதன் அவனை அப்படியே விட்டு விட்டு வெளியே வந்தான். மாசாணி ஆதனிடம் வந்து,”என்ன தல உண்மையைச் சொன்னானா?”

“எங்க? எதுவும் சொல்லலை. அமைதியா இருக்கான. ப்ச் இதுக்கா இவனை இங்கக் கூட்டிட்டு வந்தேன்.” சலிப்பாகக் கூறினான் ஆதன்.

“தல போலிஸ் குடுக்கிற தர்ட் டிகிரிய குடு. தன்னால எல்லாத்தையும் கக்கிடுவான்.”

“இல்லை மாசாணி அது சரி வராது. இவனை வேற மாதிரி தான் உண்மையைச் சொல்ல வைக்கனும்.” என்று மாசாணியிடம் கூறிவிட்டு மீண்டும் உள்ளே சென்றான் ஆதன்.

ஆதனைப் பார்த்த ராஜாவிற்கு பயமாக இருந்தாலும், இவனை விடப் பாண்டி பெரிய ஆள் என்பதால் அந்தப் பயம் இந்தப் பயத்தை ஓவர்டேக் பண்ணி விட்டது.

ஆதன் ராஜாவைப் பார்த்த படியே,”மாசாணி இவனைப் பார்த்துக்க, நான் வெளில போயிட்டு வரேன். இவனுக்குத் தண்ணீர், சாப்பாடுனு எதுவும் கொடுத்துடாத சரியா. இவன் உண்மையைச் சொன்னால் சாப்பாடு கொடுப்போம். இல்லாட்டி அப்படியே பட்டினியா கிடந்து சாகட்டும். இங்கயே புதச்சுட்டு போயிடலாம். யாருக்கும் எந்தச் சந்தேகமும் வராது. இவன் உயிரோட இருந்தும் எந்தப் பிரியோஜனமும் இல்லை.” என்று கூறிவிட்டு வெளியே வந்து விட்டான் ஆதன்.

ராஜா எதை வேண்டுமானாலும் தாங்குவான். ஆனால் அவனால் பசியைத் தாங்கவே முடியாது. மூன்று வேளையும் நல்லா மூக்கைப் பிடிக்கும் அளவு உணவு உண்ண வேண்டும். இப்போது ஆதன் உணவுத் தர முடியாது என்று விளையாட்டாகச் சொல்கிறான் என்று நினைத்துக் கொண்டான் ராஜா. ஆனால் மாசாணியும் சரி ஆதனும் சரி அதன் பிறகு அவர்கள் அந்த அறைப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. வயிறு வேறு பசியில் பல ஒலியை எழுப்பிக் கொண்டு இருந்தது. சாப்பிடாமல் இருப்பது தலை சுற்றுவது போல் தோன்றியது. எப்படியும் இரவாவது உணவு தருவார்கள் என்று பார்த்த ராஜா இரவும் தரவில்லை. மயக்கம் வருவது போல் வேறு இருந்தது. தண்ணீர் கூடக் குடிக்கவில்லை. கொஞ்ச நேரத்திலே தலைப் பின் பக்கமாகச் சாய்ந்து விட்டது. அதன் பிறகு என்ன நடந்தது என்று ராஜாவிற்கு தெரியவில்லை. அவன் மயங்கி விட்டான்.

பல மணி நேரங்களுக்குப் பிறகு அவனாக முழித்துப் பார்க்க, அப்போது தான் அவனுக்குப் புரிந்தது பசியில் மயங்கியதே!! வாயைத் திறந்து ஆதனை அழைக்கக் கூட அவனுக்கு உடம்பில் தெம்பு இல்லை. இத்தனைக்கும் ஒரு நாள் தான் சாப்பிடாமல் இருந்தான்.

அவன் எப்போது தங்களை அழைப்பான் என்று வெளியே இருந்தவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக ராஜா முயற்சி செய்து ஆதனை அழைக்க, வேகமாகக் கதவைத் திற‌ந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

சைகையாலே தண்ணீர் வேண்டு்மென ராஜா கேட்க, ஆதன் தண்ணீர் பாட்டில் ஒன்றை எடுத்து வந்து கையில் வைத்துக் கொண்டு,”நான் தண்ணீ தரேன். ஆனால் நீ உண்மையைச் சொல்லனும். அப்போ தான் தருவேன்.” என்று அவன் கூற, ஒரு நொடி யோசித்தவன் வேகமாகத் தலையைச் சரியென்று அசைக்க, ஆதன் அவனுக்குச் சிறிது தண்ணீரை புகட்டினான்.

“ம் இப்போ சொல்லு.”

“அந்த சமூக ஆர்வலர் ரம்யா தானா?” என்று கேட்டான் ராஜா.

“ஆமா அவங்க தான். இப்போ ஞாபகம் வந்துச்சா? சாப்பாடு போடாமல் இருந்தால் எல்லாம் ஞாபகம் வரும் போலயே!!”

“ம் ஞாபகம் வந்திடுச்சு. அவங்களை நான் எதுவும் பண்ணலை.” என்று அவன் கூற, ஆதன் மீண்டும் துப்பாக்கியை எடுத்து அவனது நெற்றிப் பொட்டில் வைத்தான்.

“அய்யோ நிஜமா தான் சொல்றேன். நான் எதுவும் பண்ணலை. அவங்க கூட சும்மா தான் நின்னேன் நான். பண்ணது எல்லாம் அவங்க தான்.” என்று கூறினான் ராஜா.

“பொய் சொன்ன யோசிக்கமால் போட்டுத் தள்ளிட்டுப் போயிட்டே இருப்பேன்.” என்று கூறினான் ஆதன்.

“இல்லை நிஜமா தான் சொல்றேன். அந்த ரம்யாவை கொன்னது அவங்க தான். நான் சும்மா தான் இருந்தேன்.”

“யார் அவங்க?”

“இல்லை நான் சொல்ல மாட்டேன். சொன்னால் அவங்க என்னைக் கொன்னுடுவாங்க.”

“பயப்படாத உனக்கு ஒன்னுமாகமல் நான் பார்த்துக்கிறேன். உண்மையை மட்டும் சொல்லு.” பொறுமையாகக் கூறினான் ஆதன். அப்போதும் எதுவும் பேசாமல் இருந்தான் ராஜா.

“இப்போ நீ சொல்லாட்டி நாங்க உன்னைக் கொன்னுடுவோம்.” என்று கூறிக் கொண்டே மாசாணி உள்ளே வர, அதில் ராஜாவின் முகம் வெளுத்து விட்டது. ஏற்கனவே சாப்பாடு கொடுக்காமல் சாவின் விளிம்பு வரைச் சென்றவன்(அவனைப் பொறுத்த வரை).

அதனால் வேறு வழியில்லாமல் ராஜா வாயைத் திறந்தான். அவன் கூறிய எல்லாவற்றையும் மாசாணி கையில் கொண்டு வந்த கேமராவில் பதிவு செய்து கொண்டான். மாசாணி பதிவு செய்தவுடன் ஆதனும் அவனும் வெளியே வந்தார்கள்.

ஆதன் அவனது கைப்பேசியை எடுத்து செல்வத்திற்கு அழைத்து அவன் இருக்கும் இடத்திற்கு அவரை வரச் சொன்னான். அவர் அங்கு வந்ததும் ராஜாவை கையில் விலங்கை மாட்டும் போது தான் ஆதன் காவலர் என்ற உண்மையே தெரிந்தது அவனுக்கு.

~~~~~~~~~~

இதை எல்லாம் ஆதன் எட்வினிடம் கூற, எட்வினிற்கு ஆச்சரியமாக அதே சமயம் அதிர்ச்சியாகவும் இருந்தது. இதை உடனே பாண்டியிடம் கூறி அவனை எச்சரிக்கைச் செய்ய வேண்டுமென யோசித்தான். எட்வின் யோசனையுடன் இருப்பதைப் பார்த்த ஆதன்,”என்ன எட்வின் பலமான யோசனையா இருக்கு?”

“அதெல்லாம் ஒன்னுமில்லை சார். நீங்க இப்படித் தனியா இவ்ளோ ரிஸ்க் எடுத்துருக்கீங்க!! என்கிட்ட சொல்லிருந்தா நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணிருப்பேன்னே!!” ஆதங்கமாக அவன் கேட்பது போல் கேட்டான் எட்வின்.

“இல்லை எட்வின், நான் ரிஸ்க் எடுக்கிறது ஓகே. ஏதாவது பிரச்சனையாகிடுச்சுனா உன்னையும் அந்தப் பிரச்சனைல இழுத்து விட எனக்கு மனசில்லை. அதான்.” என்று கூறிய ஆதன் மீண்டும்,”சரி அதை விடு, அவன் எதுவும் சாப்பிடலை. நான் செல்வத்துக்கிட்ட சொல்லிருக்கேன். அவர் வந்ததும் அந்தச் சாப்பாட்டை மட்டும் வாங்கி அவன்கிட்ட கொடுத்திரு.” என்று கூறினான். ஆதன்.

“ஓகே சார்.” என்று கூறிவிட்டு எட்வின் வேகமாகப் பாண்டியிடம் விஷயத்தைக் கூறச் சென்று விட்டான்.

Advertisement