Advertisement

இரவு நேரம், தெரு விளக்கின் ஒளியில் வண்டி ஓட்டிக் கொண்டு அந்தச் சாலையில் வந்து கொண்டிருந்தான் அவன். அவனது முகத்தில் வேர்வையின் தடங்கள். அதைத் துடைத்துக் கொண்டே வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான். தீடிரென பின்னால் ஏதோ சத்தம் கேட்க, வண்டியின் கண்ணாடி வழியாக அவன் பார்க்கச் சரியாக பின்னால் வந்த அந்த லாரி வேகமாக வந்து அவனைத் தூக்கி வீசிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

வண்டியின் முன்னே அவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, அவனைக் காப்பாற்ற அங்கு ஒரு உயிரும் இல்லை. போராடித் துடிதுடித்து அவன் அந்த இடத்திலே இறந்துவிட்டான்.

இன்றையச் செய்திகள்,

இந்தியாவுடன் நீண்டகால அமைதியை விரும்புகிறோம். ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷாரிஃப் பேச்சு.

தீபாவளிக்குச் சொந்த ஊருக்குச் செல்ல அரசுப் பேருந்துகளில் பதினைந்தாயிரம் பேருக்கு மேல் முன்பதிவு.

சென்னை புறநகர்ப் பகுதியில் விபத்து. வண்டியில் வந்த இளைஞன் மீது குடிபோதையில் லாரி ஓட்டிக் கொண்டு வந்த ஓட்டுநர் இடித்துள்ளார். சம்பவ இடத்திலே அந்த இளைஞன் உயிரிழந்தார். லாரி ஓட்டுநரை போலிஸ் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இறந்து கிடத்த இளைஞன் கழுத்திலிருந்த செயின், கையிலிருந்த வாட்ச், மோதிரம் மற்றும் அந்த இளைஞனின் கைப்பேசி உட்பட்ட பொருட்கள் திருட்டு. மனிதம் தொலைந்தது எனச் சமூக ஆர்வலர்கள் ஆவேசம்.

காலைச் செய்தியைக் கேட்டுக் கொண்டே வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான் ஆதன் நிவாஸ், எண்ணூர் பகுதியின் உதவி ஆணையர். சட்டையின் முதல் பட்டனைப் போட்டு முடித்து, தொலைக்காட்சியை அணைத்து விட்டு வீட்டிலிருந்து வெளியே வந்தான்.

அவனது ஓட்டுநர் செல்வம் ஜீப்பை துடைத்து தயாராக வைத்திருக்க, அவருக்கு வணக்கம் கூறிவிட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்தான். செல்வம் வண்டியை எடுத்தார்.

“நியூஸ் பாத்தீங்களா செல்வம்?”

“எதைப் பத்தி கேட்கிறீங்க சார்?”

“அதான் நேத்து ஒரு ஆக்சிடென்ட் ஆகி அந்த பையன் அதே இடத்துல இறந்துட்டானே. அந்த நியூஸ் தான்.”

“பார்த்தேன் சார். உலகம் எங்க போகுதுனு ஒன்னும் புரியலை!! அந்தப் பையன் இறந்து சடலமா இருக்கான். அந்த திருடன் அவனைக் கூட விடாம கொள்ளை அடிச்சுருக்கான் பாருங்க. எனக்கு அதைப் பார்க்கும் போது அப்படியே கோபமா வந்துச்சு சார். அப்படித் திருடி சாப்பிடுறது அவன் உடம்புல ஒட்டுமா சார்? சை மனுஷ தன்மையே இல்லை.” செல்வம் குமுற,

“ஆமா செல்வம் அதை நினைச்சா தான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்த மாதிரி ஆளுங்க எப்போ தான் திருந்த போறாங்களோ தெரியலை!! மனசுல ஈரமே இல்லாத ஆளுங்க. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்.”

“என்ன சந்தேகம் சார்?”

“திருடுறவன் ஏன் பைக்கை எடுத்துட்டு போகலை? அந்த பைக்கை வித்தா இன்னும் நிறைய வருமே!”

“அட ஆமா சார்! இதை நான் யோசிக்கலை!”

“இதுல வேற ஏதோ இருக்குமோ?”

“தெரியலையே சார். ஒரு வேளை இருக்குமோ?”

“பார்க்கலாம் செல்வம். அப்படி ஏதாவது இருந்தா அந்த ஏரியா போலிஸ் சும்மா விடுவாங்களா என்ன? சரி அந்த வீடியோ, சேன்னலுக்கு எப்படிக் கிடைச்சது? அங்க இருக்கிற சீசீடிவி கேமேரா தான் வேலை செய்யலையே!!”

“அது ஏதோ கடையோட சீசீடிவில இருந்த வீடியோ சார். எப்படியோ அந்த சேன்னல் காரன் தெரிஞ்சுகிட்டு வாங்கிட்டான் போல சார். உங்களுக்கு எப்படிச் சார் அங்க சீசீடிவி ஒர்க் ஆகலைனு தெரியும்?” ஆச்சரியமாகச் செல்வம் கேட்க,

“அது அன்னைக்கு ஒரு கேஸ் விஷயமா நாம அந்த ஏரியா ஸ்டேஷன் போகும் போது அங்க பேசிட்டு இருந்தாங்க. அப்போ கேட்டது. ஒரு வேளை சரி பண்ணிட்டாங்களோனு தான் உங்ககிட்ட கேட்டேன்.”

“இல்லை சார். இன்னும் சரி பண்ணலை போல!” என்று செல்வம் கூற,

“ம்!” அத்துடன் ஆதன் முடித்துக் கொள்ள, வண்டி எண்ணூர் காவல் நிலையத்தில் போய் நின்றது. உள்ளே வந்தவன் அவனது வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாலும் ஏனோ இந்த விபத்து அவனை ஏதோ ஒரு விதத்தில் பாதித்து.

~~~~~~~~~~

சென்னையின் அடையார் பகுதியில், அந்த பிரம்மாண்ட வீட்டின் கூடத்தில் உள்ள சாய்விருக்கையில் ஒருவர் அமர்ந்திருக்க, அவருக்கு முன்னால் ஒருவன் நின்றிருந்தான்.

“எப்படி அந்த வீடியோ அந்த சேன்னல் காரனுக்கு கிடைச்சது? அந்த ஏரியால சீசீடிவி கேமேரா வொர்க் ஆகலைனு தான்ன அந்த ஏரியால ப்ளான் பண்ணோம்! இப்போ அவனை போலீஸ்ல புடிச்சா என்ன பண்றது?”

“அந்த வீடியோ அங்க இருந்த கடையோட சீசீடிவில இருந்து எடுத்துருக்காங்க. அவனோட முகம் அந்த வீடியோல இல்லை. கண்டிப்பா அவன் மாட்ட மாட்டான். அப்படியே மாட்டினாலும் திருட்டு கேஸ்ல தான் மாட்டுவான். நம்ம பெயர் எந்த இடத்துலயும் வெளில வராது. நீங்க கவலைப்படாதீங்க.”

“ம் அவன்கிட்ட சொல்லி வை. கூடுதலா கொஞ்சம் பணம் அவனுக்கு கொடுத்திரு. என்னோட பெயர் எங்கயும் அடிப்படக் கூடாது. இனிமேல் இந்த மாதிரி கவனம் இல்லாமல் வேலை செஞ்சா அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. ஞாபகம் வச்சுக்கோ!” என்று அவர் சொல்ல,

“இனிமேல் இந்த மாதிரி தப்பு நடக்காம நான் பார்த்துக்கிறேன்.” என்று இவன் கூறி விட்டு அங்கிருந்து சென்றான்.

~~~~~~~~~~

ஆதன் வேலை முடித்து விட்டு தன் வீட்டிற்கு வந்து உடை மாற்றிக் கொண்டு சாவகாசமாக உட்கார, அவனது கைப்பேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தான், அவனது அம்மா ருக்மணி தான் அழைத்தார்.

“சொல்லுங்க அம்மா.”

“வீட்டுக்கு வந்துட்டியா ஆதன்?”

“இப்போ தான் மா வந்தேன்.”

“சாப்பிட்டியா ஆதன்?”

“முடிச்சாச்சு மா. நீங்க சாப்பிட்டீங்களா? அப்பா, பாலாஜிலாம் வந்தாச்சா?”

“ம் அவங்க வந்துட்டாங்க. நாங்களும் சாப்பிட்டோம். சரி நான் நாளைக்குக் கூப்பிடுறேன். ரொம்ப நேரம் முழுச்சு இருக்காம போய் தூங்கு.” என்று கூறிவிட்டு வைத்துவிட்டார்.

ருக்மணி எப்பொழுதும் இப்படித் தான். பிள்ளைகளிடம் கொஞ்சம் தள்ளியே தான் இருப்பார். அவருக்கு அவர்கள் மேல் பாசம் நிறையவே இருக்கிறது, ஆனால் அதை அவர் என்றுமே காட்டியதில்லை. எங்கு அதிகமாகப் பாசம் வைத்து பிள்ளைகள் கெட்டுப் போய்விடுவார்களோ என்ற பயம். அதனால் அவர் அளவாகத் தான் பேசுவார் பிள்ளைகளிடம்.

சேலம் மாவட்டத்தில் தான் ஆதன் நிவாஸ் பிறந்து வளர்ந்தது எல்லாம். ருக்மணி ஸ்ரீனிவாசனிற்கு இரண்டு புத்திரர்கள். ஸ்ரீனிவாசன், நகைக் கடையில் வேலைச் செய்கிறார். அவரது வருமானத்தில் தான் சிக்கனமாக ருக்மணி குடும்பம் நடத்தினார். இப்பொழுது பிள்ளைகள் வளர்ந்து அவர்களே சம்பாதிக்க ஆரம்பித்ததால் கொஞ்சம் சிக்கனத்தைக் குறைத்துள்ளார்.

ருக்மணி தான் பிள்ளைகளிடம் தள்ளி இருப்பார். ஆனால் ஸ்ரீனிவாசன் அவரது பாசத்தை அப்பட்டமாகவே காட்டுவார். ஆனால் அவருக்கு நேரம் தான் இருக்காது பிள்ளைகளுடன் பேச. காலையில் ஒன்பது மணிக்குக் கிளம்பினால் இரவு ஒன்பதரை மணிக்குத் தான் வீட்டிற்கு வருவார். சில வாரங்களில் ஞாயிற்றுக் கிழமையும் அவருக்கு முழு நேரம் கடையில் வேலை இருக்கும். அதனால் அவருடனும் பிள்ளைகளால் ஒட்ட முடியவில்லை.

பெற்றோர் இருவரும் பிள்ளைகளிடம் தள்ளியே இருக்க, அண்ணன் தம்பி இருவரும் நகமும் சதையும் போல் ஒன்றாகத் தான் இருந்தனர். இருவருக்கும் நடுவில் எந்த ஒளிவும் மறைவும் இல்லை. பாலாஜி பற்றி எல்லாமே ஆதனுக்கு தெரியும். அதே போல் ஆதனை பற்றியும் பாலாஜிக்கு எல்லாம் தெரியும்.

பாலாஜி பி.காம் முடித்தவுடன் வங்கி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இப்பொழுது சேலத்தில் உள்ள வங்கியில் மேலாளராக பணிபுரிகிறான். ஸ்ரீனிவாசனின் தங்கை மகள் அக்ஷ்யாவை தான் பாலாஜி திருமணம் செய்து கொண்டான்.

ஆதனின் சிறு வயசு கனவு காவல் துறை அதிகாரியாக வேண்டும் என்று. ஆனால் குடும்ப சூழ்நிலை அவனால் கோச்சிங் சென்டர் போய் படிக்க முடியவில்லை. அதனால் முதலில் எஸ்.ஐ. தேர்வு தான் எழுதினான். முதல் முறை தோற்று பின் இரண்டாவது முறை வெறித்தனமாக படித்து தேர்ச்சி பெற்று விட்டான். வேலை பார்த்துக் கொண்டே யூபிஎஸ்சி பரீட்சைக்கு அவனால் சரியாகப் படிக்க முடியவில்லை. இரண்டு வருடம் வேலை பார்த்தவன் வேலையை விட்டு விட்டான். அவனுக்குக் கிடைத்த சம்பளத்தைச் சேமித்து வைத்தும் ஸ்ரீனிவாசனும் கொஞ்சம் பணம் கொடுக்க நல்ல கோச்சிங் சென்டரில் சேரந்தான். பின் ஒரு வருடத்தில் கடுமையாக யூபிஎஸ்சி பரீட்சைக்குப் படித்துத் தேர்வில் வெற்றியும் பெற்று இப்பொழுது எண்ணூர் பகுதியின் உதவி ஆணையராக இருக்கிறான்.

அன்று ஞாயிற்றுக் கிழமை, சாப்பிட வெளியில் செல்லலாம் என்று முடிவெடுத்த ஆதன் குளித்து விட்டுக் கிளம்பி வெளியே வந்தான். அவனது சொந்த உபயோகத்துக்கு என்று பழைய இருசக்கர வாகனம் ஒன்று வாங்கி வைத்திருந்தான். அதை எடுத்துக் கொண்டு ஒரு உணவகத்துச் சென்றான்.

உணவகத்தின் உள்ளே காலியாக இருந்த மேஜையில் அமர்ந்தான். பேரர் வந்து அவனிடம்,”என்ன சாப்பிடுறீங்க சார்?”

“மினி டிஃபன் கொண்டு வாங்க.” என்று ஆதன் கூற, பேரர் அங்கிருந்து சென்று விட்டார். அவர் சென்றதும் ஆதன் அங்கு வேடிக்கை பார்க்க, அவனது பார்வை ஒரு இடத்தில் நின்றது.

அவன் பார்வை சென்ற இடத்தில் ஒரு பையனும் பெண்ணும் அமர்ந்திருந்தனர். அந்தப் பையனின் நடவடிக்கையில் ஏதோ தவறாகப் பட்டது ஆதனுக்கு. ஆதன் அந்தப் பையனை ஊன்றிக் கவனித்தான். அந்தப் பையன் செல்ஃபி எடுப்பது போல் கைப்பேசியை வைத்திருந்தாலும் அவன் செல்ஃபி எடுக்கவில்லை. எதிரில் இருக்கும் ஒருவரை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான். அதை ஆதனும் கவனித்து விட்டான். ஏதோ தவறு நடப்பது போல் பட்டது அவனுக்கு. அவசரப் படாமல் அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

அந்தப் பையன் வீடியோ எடுக்கும் நபர் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து எழுந்து வெளியே செல்ல, அந்தப் பையனும் அவனுடன் இருந்த பெண்ணும் எழுந்து பின்னே செல்ல, ஆதன் இப்பொழுது சும்மா இருக்காமல் அவர்கள் பின்னே வேகமாகச் சென்றான்.

அந்த உணவகத்தின் பக்கத்திலிருந்த சந்தின் உள்ளே செல்லவும், ஆதன் சற்றும் தாமதப்படுத்தாமல் வேகமாக அந்தப் பையன் அருகே சென்று அவன் பின் கழுத்தைப் பிடித்து அப்படியே சுவர் ஓரம் அவனைச் சாய்த்து, அவனது ஒரு கையை எடுத்து அப்படியே முறுக்கி சுவர் ஓரம் அழுத்த, நிமிடத்தில் நடந்த இந்த நிகழ்வு அந்தப் பையனையும் பெண்ணுயும் அதிர்ச்சிக்கியுள்ளாக்கியது.

“ஏய் என்ன டா பண்ற? யாரு டா நீ? கையை எடு டா.” பக்கத்தில் நின்றிருந்த பெண் கோபமாகக் கூற,

“நீங்க பண்ற வேலைக்குப் பிடிச்சு உள்ள வைக்காம விட்டேன்னேன்னு சந்தோஷப் பட்டுக்கங்க. என்ன வீடியோ எடுத்து ப்ளாக் மெயில் பண்றீங்களா?” சத்தமாக ஆதன் கேட்க, இருவருக்கும் ஆதன் போலிஸ் என்பதில் பக்கென்று ஆனது.

“சார் அய்யோ அவளை விடுங்க சார். நாங்க எந்த ப்ளாக்மெயிலும் பண்ணலை. ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க.” என்று அந்தப் பெண் கூற,

“அப்புறம் எதுக்கு வீடியோ எடுத்தீங்க? சும்மா எடுத்தேன்னு பொய் சொல்லாதீங்க. அதை நம்ப நான் தயாரா இல்லை. நடங்க ஸ்டேஷனுக்கு.” என்று ஆதன் கூற,

“சார் நாங்க சும்மாலாம் ஒன்னும் வீடியோ எடுக்கலை. எங்களை முழுசா பேச விடுங்க சார். நாங்க வீடியோ எடுத்ததுக்கு காரணம் இருக்கு. அதுக்கு முன்னாடி அவளை விடுங்க சார்.” மீண்டும் அந்தப் பெண் கூற, அப்பொழுது தான் ஆதனுக்கு தான் பிடித்துள்ளது ஆண் இல்லை பெண் என்று புரிய வேகமாகக் கையை எடுத்தான்.

அந்தப் பெண் கையை உதறிக் கொண்டு திரும்ப, ஆதன் அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான். சுவரில் அவளை அழுத்திப் பிடித்ததில் அவள் முகத்தில் ஒட்டியிருந்த மீசை மற்றும் குறுந்தாடி சற்று நழுவியிருந்தது.

“சாரி. நீங்க..” என்று ஆதன் தடுமாற,

“இட்ஸ் ஓகே சார். உங்களோட பார்வையில நான் பண்ணது தப்பு தான். எப்பவும் கேர்ஃபுல்லா இருப்பேன். இன்னைக்கு உங்ககிட்ட சிக்கிட்டேன்.” என்று அவள் கூற,

ஆதன் முறைத்துக் கொண்டே,”ஓ அப்போ இது முதல் முறை இல்லை. அப்படித் தானே? நீங்க பெண், உங்களை நான் ஹார்ஷா ஹேன்டில் பண்ணிட்டேன் அப்படிங்கிறதால மட்டும் தான் சாரி கேட்டேன். ஆனால் நீங்க பண்ண, பண்ற வேலை எதுவும் சரியில்ல போலையே! இரண்டு பேரும் முதல்ல ஸ்டேஷனுக்கு நடங்க.” என்று கோபமாக ஆதன் கூற,

“அய்யோ சார். இப்பவும் நீங்க தப்பா தான் புரிஞ்சுக்கிட்டீங்க. நாங்க எந்தத் தப்பும் செய்யலை. என் பெயர் சாத்விகா. இவள் சக்தி. நாங்க ஷாடோ(shadow) டிடெக்டிவ் ஏஜென்சி வச்சுருக்கோம். இப்போ நாங்க வீடியோ எடுத்தது கூட எங்க க்ளைன்ட்காக தான் சார்.” என்று சாத்விகா விளக்கி அவளது விசிட்டிங் கார்ட்டை நீட்ட, ஆதன் வாங்கிக் கொண்டான்.

“சாரி சார் நீங்க போலிஸ்னு தெரியாம டா போட்டு பேசிட்டேன்.” என்று சக்தியும் மன்னிப்பு கேட்க,

“இட்ஸ் ஓகே. பட் இது மாதிரி வீடியோ எடுக்கிறது தப்பில்லையா?”

“சார் நாங்க இப்போ வீடியோ எடுத்தவன் அவனோட கம்பெனி பணத்தைக் கையாடல் பண்ணிருக்கான் சார். ஆனால் அதுக்கான ஆதாரம் அவங்கிட்ட இல்லையாம். அதனால் எங்க உதவி கேட்டு வந்தாங்க சார். நாங்க வீடியோ எடுக்கிறது கூட ஒரு ஸேஃப்டிக்கு தான் சார். மத்தப்படி நாங்க அதைத் தப்பா கண்டிப்பா யூஸ் பண்ண மாட்டோம்.” உறுதியாக சாத்விகா கூற,

“ம் ஓகே. எதுக்கு இப்படி ஆண் வேஷம் போடனும்? அப்படியே வந்துருக்கலாமே!” என்று ஆதன் கேட்க,

“வந்துருக்கலாம் சார். ஆனால் ஒரு த்ரில்காக வேஷம் போட்டேன் சார்.” சாத்விகா சாதாரணமாகக் கூற,

“இதுல என்ன த்ரில் இருக்கு?”

“சார் இப்போ நான் அப்படியே வந்து இதே மாதிரி வீடியோ எடுத்துருந்தா உங்களுக்குச் சந்தேகம் வந்துருக்குமா?”

“ம் அது தெரியலை! வந்துருக்கலாம் வராமலும் போயிருக்கலாம்.”

“இதோ இதுக்கு தான் சார்.”

“டிடெக்டிவ்னு சொல்றீங்க அப்போ உங்களை யாரும் நோட் பண்ணக் கூடாதுனு தான்ன நினைக்கனும்? நீங்க என்ன இப்படிப் பேசுறீங்க?”

“சார் இவள் எப்பவும் இப்படித் தான். வித்தியாசமா தான் யோசிப்பா. சில இடத்துல எங்களோட உண்மையான ரூபத்தை மாற்றி போகனும். ஆனால் இங்க அவசியம் இல்லை. அதை மேடம் கேட்கனுமே!” சக்தி கூற,

“சார் அப்படி எல்லாம் இல்லை. இவனுக்கு என்னைத் தெரியும் சார். என்னோட அடையாளத்தை மறைக்கனும்னு தோனுச்து. அவ்ளோ தான்.” என்று சாத்விகா கூற,

“ஓ!! ஓகே. இதை நீங்க முதல்லயே சொல்லிருக்கலாம்.” என்று கூறிவிட்டு ஆதன் திரும்பி நடந்தான்.

“ஏய் என்ன டி இவர் வந்து இப்படி நம்ம வேலையை கெடுத்துட்டார். இப்போ அவன் போயிட்டானே!” என்று சக்தி வருத்தப்பட,

“ப்ச் விடு சக்தி, போனா போகட்டும். நம்ம நின்ஜா இன்னேரம் அவனை ஃபாலோ பண்ணி போயிருப்பான்.” சாதாரணமாக சாத்விகா கூற, சக்திக்கு அப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது.

Advertisement