Advertisement

காதல் 16

கனவில் வந்து கண் நிறைந்த
உன்னை அடையாளம் கண்டு…
மனம் கவர்ந்த உன்னை
மணம் முடிக்கும் நாளிற்காய்
ஏங்கி நிற்கும் பாவை…
இவளின் எண்ணம் ஈடேற
எத்தவம் புரிகுவேனோ…?
என் கண்ணா…!

“யாருக்காகவும் ஒரு குண்டூசி கூட வாங்கிட்டு வந்து தரமாட்டான். இன்னைக்கு பாத்தியா?” என லலிதாவும் சிரித்தபடி சொன்னாள். “என்ன பாத்தா சிரிப்பா இருக்கா? இத மொதல்ல வாங்கு” என்றபடி அவசரமாக ராதாவின் கைகளில் பொங்கலை வைக்க அப்போதுதான் இறக்கிய பொங்கல் போலும் கைகளை பொசுக்கியது.

அவசரமாக அதை கீழே வைத்தவள் “கைய காட்டுங்க” என “ஒன்னுமில்ல.. நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு வாங்க.. நான் போய் கார எடுத்துட்டு வர்றேன்” என்றபடி நகர பார்த்தவனை இழுத்து பிடித்து “கைய காட்டுங்கன்னு சொன்னேன்” என்றாள் ராதா.

அவன் நீட்டிய கைகள் சிவந்து இருக்கவும் “லூசா நீங்க… சூடா இருந்தா வந்திருக்க வேண்டியது தான?” என கோபமாக அவள் கேட்கவும் “என்கிட்ட இருந்து இதுவரைக்கும் நீ எதுவுமே வாங்கிக்கல.. நான் குடுத்த சேலையை கூட நீ கட்டல. அப்புடி இருக்கும்போது இந்த பொங்கலையாச்சும் குடுக்கலாமேன்னு நெனச்சேன்” என அவன் உணர்ச்சியுடன் சொல்ல ராதாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவனை நிமிர்ந்து பார்த்தவள் “என்ன பேசுறீங்க..? இந்த சேலை நகை கூட உங்க அம்மா குடுத்ததுதான்” என

“எங்கம்மான்னு தான சொல்ற… அத்தன்னு இல்லையே” என வருத்தமாக சொன்னான்.

ராதா அமைதியாக அவனையே பார்க்க “சரி நான் போய் கார எடுத்துட்டு வர்றேன்” என்று சென்றுவிட அவன் பின்னோடே லலிதாவும் சென்றுவிட்டாள்.

ராதாவிற்கு தெரியும் என்றாவது ஒருநாள் இதெல்லாம் சந்தித்துதான் ஆக வேண்டும் என்று.. சந்திக்க மட்டும் இல்லாமல் இதெல்லாம் ஏற்றுக் கொண்டாகவும் வேண்டும் தான். ஆனால் அந்த நாள் இவ்வளவு சீக்கிரம் வரும் எனத்தான் அவள் எதிர்பார்க்கவில்லை. என்ன தான் நியாய தர்மம் புரிந்தாலும் ராதாவால் பழைய நிகழ்வுகளை மறக்க முடியவில்லை. ராதாவின் எண்ணம் பழைய நினைவுகளை நோக்கி சென்றது.

ஆறு வருடங்களுக்கு முன்பு…

“ராதா.. உன் வாழ்க்கையில நீ பிறந்ததில இருந்து காத்திருந்தது எனக்காக தான். உன் வாழ்க்கையில எல்லாவுமா ஒருத்தர் வரமுடியும்ன்னா அது நானாக மட்டும் தான் இருக்க முடியும். அதே போல என் வாழ்க்கையில எல்லாவுமா ஒரு பொண்ணு இருக்க முடியும்ன்னா அதுவும் நீயாக மட்டும் தான் இருக்க முடியும். நீ அந்த கண்ணனோட பக்தையா இருக்கலாம். ஆனால் நான் அந்த ஸ்ரீராமன் மாதிரி. என் வாழ்க்கையில வர்ற முதலும் கடைசியுமான பெண்ணா நீ மட்டும் தான் இருப்ப.. உன்ன எனக்கு எவ்ளோ பிடிக்கும்ன்னு உனக்கு தெரியாது. நான் உன்ன அந்த அளவுக்கு காதலிக்கிறேன். நீ மட்டும் தான் என் வாழ்க்கையை முழுமையாக்க முடியும். அந்த உரிமையும் உனக்கு மட்டும் தான் இருக்கு. எனக்கு இப்போ இந்த உலகத்துல ஒரே ஒரு ஆசைதான். அது.. நீ தான். நீ எனக்கு வேணும் ராதா. ஆல்வேஸ்.. எனக்கு எல்லாமுமா நீ வேணும்” என தன் கண்களை பார்த்து காதலுடன் சொன்னவனை பிரம்மிப்புடன் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதா.

“மணி ஏழே முக்கால் ஆச்சு.. ஃபர்ஸ்ட் டே காலேஜ் போகனும்ன்னு நினைப்பு இருக்கா..? எழுந்து கிளம்புடி முதல்ல” என சுகந்தி ராதாவின் முதுகில் ஒன்று வைக்க “ஆ…” என அலறியபடி எழுந்து அமர்ந்தாள் ராதா. “ச்சே.. கனவா..?” என தலையில் அடித்துக் கொண்டவளை பார்த்து “ஆமா. காலையில ஏழே முக்காலுக்கு கனவு கண்டா தான வீடு விளங்கும். போய் காலேஜ்க்கு ரெடியாகுடி” என திட்டிவிட்டு சுகந்தி செல்ல ராதாவும் கனவை நினைத்து சிரித்தபடி கல்லூரிக்கு கிளம்பினாள். வழக்கம்போல பூஜையறைக்கு வந்தவள் “கண்ணா.. இன்னைக்கு சூப்பரா ஒரு கனவு கண்டேன் தெரியுமா..?” என ரகசியம் பேசியவள் கிளம்பி கல்லூரிக்கு சென்றுவிட்டாள்.

முதல் நாள் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தவளை வரவேற்றது “ஏய்.. பிங்க் சுடி. இங்கே வா” என்ற சீனியர் மாணவனின் அதட்டல் தான். அமைதியாக சென்று அவன் முன்னால் நின்றவளை பார்த்தவன் “ஃபர்ஸ்ட் இயரா?” என கேட்டவனை பார்த்து தலையாட்டினாள் ராதா.

“தலையாட்டுனா என்ன அர்த்தம். வாயைத் திறந்து பதில் சொல்லு” என அவனருகில் அமர்ந்திருந்த இன்னொருவன் சொல்ல “ம்.. ஆமாம்” என்றாள்.

“எந்த டிபார்ட்மெண்ட்”

“பி.பி.ஏ”

“மச்சி.. உன் டிபார்ட்மெண்ட்டா..” என இன்னொருவனிடம் சொன்னவன் “இவன் அசோக். உன் டிபார்ட்மெண்ட் தான்” என அறிமுகப்படுத்தினான்.

“டேய் விடுடா..” என அந்த அசோக் சொல்ல

“பாருடா.. உன் டிபார்ட்மெண்ட்ன்னு சப்போர்ட் பண்றியா?” என கலாய்த்தவன் “சரி.. விட்டுறலாம். நீ என்ன பண்ற..?” என்றவன் சுற்றிமுற்றி பார்த்துவிட்டு “ம்.. அங்க நிற்கறாரு பாரு.. அந்த பிளாக் பேண்ட் அவருகிட்ட போய் உன் கிளாஸ் ரூம் எங்க இருக்குன்னு விசாரிச்சு உன் கிளாஸ்க்கு போற.. சரியா?” என கேட்க

“எனக்கே கிளாஸ் ரூம்க்கு வழி தெரியும்” என்றவளை நக்கலாக பார்த்தவன் “தெரிஞ்சாலும் பரவாயில்லை. நீ போய் விசாரிச்சுட்டு போ” என விதியே என சென்றாள் அவன் காட்டிய நபரிடம்.

தனக்கு முதுகு காட்டி நின்றவனிடம் “எக்ஸ்க்யூஸ் மீ..” என அழைக்க “ம்..” என்றபடி திரும்பினான் அவன். தன் கண் முன்னால் நிற்பவனை இமை அசைக்காமல் பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தாள் ராதா. “மச்சான்..” என அழைத்த இன்னொருவன் அவனிடம் பேச ஆரம்பிக்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளை கவனிக்க மறந்தான் அவன். “மச்சி.. அங்க பாரேன். சூப்பரா இருக்காடா மச்சி.. என்ன ஸ்ட்ரக்சர்?” என்ற குரலில் தன்நிலை அடைந்தவள் அவனை வெறித்துப் பார்க்க “ஏய்.. ஒரு பொண்ணோட சம்மதம் இல்லாம அவ முகத்தை தாண்டி பார்க்க கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்” என சொன்னவன் நகர்ந்து செல்ல ராதாவின் காதுகளில் “நீ அந்த கண்ணனின் பக்தையா இருக்கலாம். ஆனால் நான் அந்த ஸ்ரீராமன் மாதிரி” என்ற வார்த்தைகளே ஒலிக்க அவன் சென்ற திசையையே பார்த்தபடி நின்றவளை வகுப்பிற்கான அழைப்புமணி கலைத்தது. கனவில் கண்டவனை நேரில் கண்ட ராதா அந்த கண்ணனே அவனை தனக்காக அனுப்பியதாக எண்ணி மனதினுள் நன்றி சொல்லிக் கொண்டாள்.

“என்ன பண்ற ராதா? நேரமாச்சு. போகலாமா?” என திரும்பி வந்து கண்ணன் கேட்க தன் நினைவுகளிலிருந்து மீண்டவள் அவனை பார்த்து மலங்க மலங்க விழிக்க “ஆர் யூ ஓ.கே?” என கேட்டான்.

அந்த ஒற்றை வார்த்தை அவளை உடைக்க போதுமானதாய் இருக்க சட்டென நீர் நிறைந்தது கண்களில். “ஏய்.. என்னாச்சு?” என பதறியவனை பார்த்து மெலிதாக சிரித்தவள் “ஒன்னுமில்ல” என்றபடி எழுந்து “போகலாம்” என்றபடி முன்னால் நடந்து சென்றுவிட அவளை குழப்பத்துடன் பார்த்தவன் ‘என்னாச்சு இவளுக்கு?’ என்று எண்ணியபடியே பின்தொடர்ந்து சென்றான்.

லலிதாவை திருமணத்திற்கு ஒத்துக்க வைக்க இவள் போட்ட திட்டம் இவள் கோகுலை ஏற்றுக் கொள்ள வைப்பதற்கான சந்தர்பமாக தன்னால் அமைந்துவிட்டது. அந்த பயணம் முழுவதும் அமைதியில் கழிய அதில் பயணம் செய்தவர்களின் மனம் மட்டும் அமைதியின்றி தவித்தது. லலிதாவிற்கு ராதா கூறியது சரியாகத்தான் பட்டது. ஆனாலும் இன்னொரு திருமணம் என்பது எந்தளவிற்கு சரியானதாக அமையும் என்பதுதான் அவளுக்கு புரிபடவில்லை. ராதாவிற்கோ திருமணம் செய்ய வேண்டும்; என்ற நிலை வரும்போதே தெரியும் இதை என்றாயினும் எதிர்கொள்ள வேண்டும் என்பது. ஆனாலும் இந்த சந்தர்பத்தில் இவ்வளவு சீக்கிரம் இது நடக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. கோகுலிற்கு ராதா தன்னையும் தன் குடும்பத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வருத்தத்தை தருவித்தாலும் வெறுக்கவில்லை என்பது என்றாவது ஒருநாள் எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையை தந்தது.

நாட்கள் விரைவாக ஓடிச் சென்றது…

இரண்டு மாதங்கள் கழித்து கமலுக்கு பிசியோதெரபி செய்யலாம் எனக் கூறினார்கள். அதேபோல பிசியோதெரபி செய்ய ஆரம்பிக்க முதலில் வலியில் அழுத குழந்தை பிறகு சிறிது நாளில் பழகிக் கொண்டான்.

ராதாவிற்கும் லலிதாவிற்கும் இடையில் இருந்த நட்பு நல்லபடியாக வளர்ந்திருந்தது. இன்று லலிதாவை பார்க்க மாப்பிள்ளை வருகிறார். கோகுல் ராதாவின் உறவு தௌ;ளிய நீரோடையாக அமைதியாக சென்றது. ஏதோ ஒரு மாயத்திரை இருவர் நடுவிலும் இருந்து கொண்டே இருந்தது. அதை இருவருமே விலக்க முயற்சிக்கவில்லை. எங்கே திரையை விலக்கப்போய் பிரச்சனை பெரிதாகிவிடுமோ என்ற பயம் இருவரிடமுமே இருந்தது. இருவரும் சேர்ந்து செய்வதற்கு பல விசயங்கள் இருந்தது. எனவே இருவரிடமும் தன்னை அறியாமல் சிறு நெருக்கமும் ஏற்பட்டு இருந்தது.

“ஏன் இவ்ளோ டென்சனா இருக்க?” பதற்றத்துடன் வாசலையே பார்த்துக் கொண்டிருந்த ராதாவை பார்த்து கோகுல் கேட்டான்.

“ம்… அது மாப்பிள்ளை வந்துட்டாரான்னு பாக்குறேன்” என்றவள் குரலில் படபடப்பு அதிகமாக இருந்தது. அதை கண்ட கோகுல் அவளருகில் சென்று கரத்தை பிடிக்க அவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

“ராதா… என்ன நடந்தாலும் சரி.. நாம லலிதாவ இந்தளவுக்கு மாத்துனதே பெரிய விசயம். அதுக்கும் மேல இந்த மாப்பிள்ள லலிதாவ பிடிக்கலைன்னு சொல்லிட்டா கூட வேற மாப்பிள்ள பாத்துக்கலாம்.. நீ ஏன் கவலைப்படுற?” என அவளை சாந்தப்படுத்த கூற அவளோ கண்களில் கலவரத்துடன் “மாப்பிள்ளைய பத்தி கவலைப்பட எனக்கு என்ன இருக்கு? என் கவலை உங்க அக்காவ பத்திதான். அவங்க மாப்பிள்ளைய பிடிக்கலைன்னு சொல்லிட்டா?” என கேட்டாள்.

ராதாவை சந்தேகமாக பார்த்தவன் “நீ மாப்பிள்ளைய பத்தி எதுவுமே சொல்லல. உன்ன நம்பி இவ்வளவும் பண்ணியாச்சு.. எது கேட்டாலும் அவர நேர்ல பாக்கும்போது கேட்டு தெரிஞ்சுக்கங்கன்னு சொல்ற… உண்மைய சொல்லு அவர உனக்கு எப்புடி தெரியும்?” என கேட்க

“ப்ளீஸ்.. எதுவும் கேக்காதீங்க. அவரே இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவாரு” என்றவள் சோபாவில் அமர்ந்து கண்களை மூடிக்கொள்ள “என்னவோ சரியில்ல” என்றபடி வந்து அவளருகில் அமர்ந்தான் கோகுல்.

“என் மருமக எது செஞ்சாலும் அது சரியாதான்டா இருக்கும்” என்றபடி வந்தார் கண்ணன். அவரை பார்த்து புன்னகை செய்தவள் “நான் செய்யறது சரியா தப்பான்னு எனக்கே இனிமேல் தான் தெரியும்” என்றாள்.

“எல்லாம் சரியாதாம்மா இருக்கும்” என நம்பிக்கையுடன் கண்ணன் சொல்ல “பயமா இருக்கு மாமா” என்றாள் ராதா தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு

“நீ வேணா பாரு இந்த சம்பந்தம் கண்டிப்பா முடிஞ்சுரும்” என கண்ணன் உறுதியாக சொல்லவும் அவரை சந்தேகமாக பார்த்த ராதா “எப்புடி இவ்ளோ கான்பிடன்ட்டா சொல்றீங்க?” என கேட்டாள்.

அவளை பார்த்து மர்மமாக புன்னகைத்தவர் “என் மருமக என்ன மாமான்னு கூப்பிட்டுட்டாளே” என “என்ன? ஆனா… நான் எப்போ?” என சந்தேகமாக இழுக்க

“உன்ன அறியாமலே நீ என்ன மாமான்னு சொல்லிட்ட” என சந்தோசமாக சொன்னவர் “இனிமே என்ன நீ மாமான்னு தான் சொல்லனும்” என கட்டளை போல கூறினார்.

“ம்…” என அவரை முறைத்தவள் “இப்போ இது ரொம்ப அவசியம்ல” என கடுப்புடன் சொல்ல

“ஆமாம்மா.. எனக்கு ரொம்ப ரொம்ப அவசியம்” என்றார் கண்ணன்.

அந்த நேரம் பார்த்து வாசலில் கார் வந்து நிற்க அனைவரின் கவனமும் அங்கு திரும்பியது. அனைவரும் எதிர்பார்த்த நபர் வந்துவிட்டார். ஆனால் வந்தவரை பார்த்ததும் அங்கிருந்த அனைவர் முகத்திலும் இருந்த புன்னகை மறைந்தது. ஏனெனில் வந்தவன் உடன் ஒரு பத்து வயது சிறுவனையும் அழைத்து வந்திருந்தான். முதலில் யார் அந்த சிறுவன் என்ற கேள்வி எழுந்தாலும் பெரிதாக உறுத்தியது பெரியவர்கள் யாரும் இல்லை என்பதுதான். அதுமட்டுமின்றி வாக்கிங் ஸ்டிக்குடன் நடந்து வந்தான் அந்த இளைஞன். அனைவரின் முகமும் புன்னகையை தொலைத்திருக்க அதை பார்த்தவுடன் கோபம் மிக கோகுல் ராதாவை தேட அவள் அந்த சோபாவை விட்டு எழுந்து வரவேயில்லை.

தொடரும்…

Advertisement