Advertisement

“என்ன பாக்குறீங்க..? காபி எடுத்துக்கோங்க” என மீண்டும் ராதா சொல்லவும் தன்னிலைக்கு வந்தவன் காபியை வாங்கிக் கொள்ள “சீக்கிரமா கிளம்புங்க.. கோவிலுக்கு போகனும்” என்றுவிட்டு சென்றவள் திரும்பி நின்று “வேஷ்டி சட்டை போடுங்க” என்று கூறிவிட்டு சென்றாள்.

ராதா அறையைவிட்டு சென்றபின் கோகுலின் நிலைதான் அந்தோ பரிதாபம் “ஆ… சும்மாவே இங்க எரியிது.. இதுல இவவேற வந்து வந்து உசுப்பேத்துறா.. அழகா வேற இருக்காளே..” என்று புலம்பியபடியே தன் வேலைகளை எல்லாம் முடித்து ராதா கூறியது போலவே வேஷ்டி சட்டை அணிந்து கம்பீரமாக வெளியே வந்தான்.

கோகுல் கீழிறங்கி வருவதை பார்த்த சிவகாமி தன் மருமகளிடம் “அவன் ரெடியாகி வந்துட்டாம்மா.. நீ போய் நகையை போட்டுட்டு வா” என நகைப்பெட்டியை அவள் கையில் கொடுக்க அதை வாங்கியபடி மேலேறியவளிடம் “கொக்கிய நல்லா அழுத்தி விடும்மா..” என்றார்.

நகையை அணிந்தவளால் கொக்கியை அழுத்த முடியவில்லை. சரி அப்படியே விட்டுவிடலாம் என்றாலும் கொக்கியை யாரோ அகலப்படுத்தியது போல லேசாக அசைந்தால் கீழே விழுந்துவிடும்படி இருந்தது. எவ்வளவோ முயற்சித்தும் சரிசெய்ய முடியாமல் “ஆன்ட்டி… கொக்கி போட முடியல.. கொஞ்சம் வர்றீங்களா?” என அழைத்தாள்.

சிவகாமி “கோகுல்.. போய் உன் பொண்டாட்டிக்கு ஹெல்ப் பண்ணு. நான் போய் கமலுக்கு சாப்பாடு குடுக்குறேன்” என்றுவிட்டு கமலிடம் சென்றார்.

கோகுல் மேலே செல்ல அங்கே நெக்லஸை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள் ராதா. அதை பார்த்தவன் “என்னாச்சு?” என கேட்க…

கொக்கியை சுட்டிக் காட்டியவள் “இது இப்புடி இருந்தா எப்புடி மாட்டுறது?” என்றாள். அந்த நெக்லஸை வாங்கி சரிசெய்து கொடுத்தவன் “இப்ப போட்டு பாரு” என… கழுத்தில் மாட்டியவள் “இன்னும் லூசா இருக்கு” என்றபடி கழட்டப் போனாள்.

“இல்ல.. கழட்டாத” என்றவன் அவள் கைகளை எடுத்துவிட்டு கொக்கியை அழுத்த அது நகரமாட்டேன் என அடம் பிடித்தது. அழுத்தி அழுத்தி பார்த்தவன் சட்டென்று குனிந்து தன் பற்களால் கடிக்க கூச்சம் தாளாமல் எழுந்தவள் கழுத்தில் நெக்லஸ் இறுக்கியது.

“ஆ… என்ன கொலை பண்ண பாக்குறீங்களா?” என சினத்துடன் சீற…

“யாரு…? நான் உன்ன கொலபண்ண பாக்குறேனா? உன் அதிர்ஷ்டம் நெக்லஸ் பழைய காலத்து உருட்டு மாடல்.. கூர்மையா மட்டும் இருந்துச்சு” என்றவன் “ஏன்டி… உனக்கெல்லாம் ஏதாவது அறிவு கிறிவு இருக்குதா என்ன..? எந்த லூசாவது இப்புடி எந்திரிக்குமா? ஏதாவது ஆகிருந்தா என்ன பண்றது? மெண்டல்.. மெண்டல்” என கத்த ஆரம்பித்தான்.

கோகுல் திட்ட ஆரம்பித்தவுடன் அமைதியாகி தன் விழிகளை இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ராதா. அவனை கண்ட முதல் நாளிலிருந்து என்னென்னவோ நடந்துவிட்டது அவர்கள் வாழ்வில்.. ஆனாலும் அவன் இந்தளவு கோபப்பட்டு அவள் பார்த்ததேயில்லை. அவள் புறம் திரும்பியவன் “ஏன்டி இப்படி செஞ்ச?” என கோபமாக கேட்கவும்

“அது… அது…” என அவள் திணறவும் “ஏன்னு கேட்டேன்” என்றாள் அவள் தோள்கள் இரண்டையும் பற்றியபடி “கூசுச்சு” என அவள் கூற

“ஹாங்…” என புருவத்தை சுளித்து கண்களில் புரியாத பாவத்தை வைத்து திரும்பவும் அவன் கேட்க

“கூசுச்சு… அதான் எழுந்துட்டேன்” என்றாள் மீண்டும். அதை கேட்டவன் அவள் முகத்தையே சிறிது நேரம் பார்த்திருந்துவிட்டு திடீரென சிரிக்க ஆரம்பித்தான்.

அவன் சிரிப்பதை பார்த்து முதலில் குழம்பியவள் பிறகு தன்னை தான் கிண்டல் செய்து சிரிக்கிறான் என்பதை உணர்ந்து “நான் இங்க உக்காந்து ஜோக் அடிச்சுட்டு இருக்கல” என்றாள் கடுப்புடன்.

கோகுல் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு மீண்டும் “ஏன் எழுந்த” என கேட்க…

மீண்டும் அவள் கூறியவுடன் சிரிக்க ஆரம்பித்துவிட்டான். அவன் சிரிப்பதை பார்த்து கடுப்பானவள் “நான் போறேன்” என கிளம்ப எத்தனிக்க அவள் கரங்களை பற்றி தடுத்தான் கோகுல்.

“இங்க பாருங்க.. ஒன்னு சிரிப்ப நிறுத்துங்க… இல்லயா ஏன் சிரிக்கிறீங்கன்னு சொல்லிட்டாவது சிரிங்க” என சொன்னாள். அதை கேட்டவன் “ஏன் சிரிக்கிறேன்னு சொன்னா அடிக்க வருவ.. சரி வா போகலாம்” என்றவனை பார்த்து “அப்புடிலாம் அடிக்க மாட்டேன். சொல்லுங்க” என்றாள் ராதா.

“சரி… நீ எதுக்காக அப்புடி எந்திருச்ச” என கோகுல் மறுபடியும் கேட்க கோபமாக திரும்பியவளின் கரங்களை பிடித்தபடி “உனக்கு இந்த முறையும் புரியலைன்னா நான் சொல்றேன்.. ஆனா அதுக்கு முன்னாடி ஒரே ஒரு தடவ ஏன்னு நீ சொல்லு” என்றான் மாயம் போன்ற குரலில்.

“கூசுச்சு”

“ஏன்?”

“ஏன்னா…? உங்க உதடு கழுத்துல பட்டதும் கூசி…” என்றவள் நிறுத்திவிட்டு அவன் முகம் பார்க்க அவளை பார்த்து சிரித்தவன் அவள் கன்னங்கள் இரண்டையும் தன் கைகளில் ஏந்திக் கொண்டு “நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்” என்றவன் அவள் கன்னத்தில் தன் இதழை பதித்துவிட்டு கீழே செல்ல ராதாவிற்கு தான் என்ன நடந்தது என உணர இயலாமல் போனது.

தன்னை நிதானப்படுத்தியவள் கீழிறங்கி வர “போகலாமா?” என்றபடி முன்னால் வந்து நின்றான் கோகுல்.

“ம்… ஒரு நிமிஷம் நீங்க கார் ஸ்டார்ட் பண்ணுங்க வந்துடறேன்” எனவும் காரை எடுக்கச் சென்றான் கோகுல்.

லலிதாவிடம் சென்ற ராதா “போகலாமா?” என “ம்” என்றபடியே அவளும் வர இருவரும் கிளம்பி வந்து காரில் ஏறவும் கார் கிளம்பியது.

கோவிலிற்கு சென்று அர்ச்சனை சுவாமி தரிசனம் அனைத்தும் முடித்து வந்து ஒரு இடத்தில் அமர்ந்தனர் மூவரும். அப்போது ராதா கோகுலை பார்த்து “போய் பொங்கல் வாங்கிட்டு வாங்க” என்றவுடன் அவளை அதிர்ச்சியாக பார்த்தான். அவன் பார்வையை பார்த்தவள் “சும்மாதான இருக்கீங்க..? போய் வாங்கிட்டு வாங்க” என்றாள்.

அவளை பார்த்து முறைத்தவன் அவள் அசையாமல் பார்க்கவும் “எல்லாம் என் நேரம்” என புலம்பியபடி எழுந்து சென்றான்.

அவன் சென்றதும் “ஏய்… என்ன என் தம்பிய ரொம்பதான் வேலை வாங்குற..? நாங்க அவன எவ்ளோ செல்லமா வளத்தோம்ன்னு தெரியுமா?” என சண்டைக்கு வந்தாள் லலிதா.

“ம்… எவ்ளோ செல்லமா?” என நக்கலுடன் ராதா கேட்டதும் “அவன எதுக்கு இப்ப நீ அனுப்புன?” என்றாள் ராதாவின் கண்களை கூர்மையுடன் பார்த்தபடி

அவளை பார்த்து புன்னகைத்த ராதா “பரவாயில்ல.. நீங்க உங்க தம்பி மாதிரி சோடியம் வேப்பர் இல்ல” என பாராட்டு பத்திரம் வாசித்தவள் “நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாது?” என நேரடியாக கேட்டாள்.

அவள் கேள்வியை எதிர்பாராத லலிதா திணறினாலும் உடனே சமாளித்துக் கொண்டு “எனக்கு அதுல விருப்பமில்ல” என்றாள் தெளிவாக..

“விருப்பம் எப்பவுமே நம்ம மனசுக்கும் மூளைக்கும் இடையில நடக்குற போராட்டம் தான் தெரியுமா?” என்றவள் லலிதாவின் புரியாத பாவனையை பார்த்து “நெறய பேருக்கு இது ரெண்டுமே ஒரே பாதையில வர்றதே இல்ல. அது மாதிரிதான் விருப்பமும் நடைமுறையும்.. என்னைக்கும் ரெண்டுக்கும் ஒத்து வர்றதே இல்ல” என்றாள்.

“நீங்க இன்னொரு கல்யாணம் பண்றதுல தப்பில்லைன்னு தோணுது” என்றவளை பார்த்து “உனக்கும் கோகுலுக்கும் இடையில காதல் இல்ல… ஆனாலும் நீ ஏன் கோகுல விட்டு போனதுக்கப்பறம் வேற கல்யாணம் பண்ணிக்கல? ம்…?” என்றவள் அவள் முகத்தை பார்த்து “நானும் என் ஹஸ்பண்டும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. அந்த லவ் குறையாம கடைசி வரைக்கும் வாழ்ந்தோம்” என்றாள் கண்கள் பனிக்க..

அதை பார்த்த ராதா புன்னகையுடன் “என் வாழ்க்கையில காதல்..” என்றவள் சிரிப்புடன் தலையசைத்துவிட்டு “நீங்க உங்க லைப்ல காதலோட வாழ்ந்திருக்கீங்க.. அனு அனுவா அதை அனுபவிச்சிருக்கீங்க.. அதனால தான் நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு நான் சொல்றேன். எனக்கு காதல்ன்னா என்னன்னு தெரியாதுன்னு சொன்னீங்க ஓ.கே.. காதல்ன்னா என்னன்னு தெரியாத நான் தனியா இருந்தேன்னா எனக்கு பெருசா எந்த பீலிங்சும் இல்ல… நான் கமல கூட உங்க தம்பிய வெறுக்குற ஆயுதமா பிடிச்சு வச்சுருந்திருக்கேன்னு லேட்டா தான் புரிஞ்சது.

நான் கமல் மேல பாசம் வைக்கலைன்னு சொல்லல.. ஆனாலும் அவன பாக்கும் போதெல்லாம் உங்க தம்பி மேல எனக்கிருந்த கோபம் அதிகமாகும். ஆனா நீங்க முழுசா ரெண்டு வருஷம் காதல அனுபவிச்சிருக்கீங்க.. அப்படி இருக்கும்போது அந்த காதல் இல்லாத வாழ்க்கைய உங்களால வாழ முடியாது. அத நீங்களே இந்த ஒன்றறை வருஷத்துல உணர்ந்திருப்பீங்க.. முடிவு உங்க கையில தான். அப்பறம்…” என தயங்கியவள் “நான் சொல்லலாமான்னு தெரியல.. ஆனாலும் சொல்றேன்… உங்க வயசு.. இளமை.. இதெல்லாம் உங்களால ஜெயிக்க முடியாது. பிடிவாதத்தால ஜெயிக்கலாம். ஆனா பிடிவாதத்தால நாம சாதிக்கப் போறது எதுவுமில்ல.. இழக்க வேணும்ன்னா செய்யலாம்” என்றாள்.

அவள் கூறியதை கேட்ட லலிதா “நீ சொல்ல வர்;றது புரியிது.. செக்ஸ் இல்லாம இருக்க முடியாதுன்னு சொல்ற… அது உண்மை தான். கஷ்டமாதான் இருக்கும் சில சமயம். ஆனாலும்…” என்றவள் அவள்புறம் நன்றாக திரும்பி அமர்ந்து “எனக்கு முன்னாடியே என் தம்பி பொண்ணுங்க பின்னாடி போனவன். அப்புடி இருக்கும் போது அவனே பொண்டாட்டி கட்டியும் தனியா இருக்க முடியும்ன்னா… என்னாலும் இருக்க முடியுமே” என்றுவிட்டு எழுந்து சென்றவள் திரும்பி வந்து “கஷ்டம் தான்.. உன் நெலமைல இருந்து பாத்தா நீ செஞ்சது எல்லாமே பெரிய விசயம்தான். ஆனாலும் அவன் நிலையில இருந்து பாக்கும்போது… நானும் அந்த நிலையில இருக்கேன்றத வச்சு சொல்றேன்.. அவன் ரொம்ப பாவம். உன்ன பக்கத்துலையே வச்சுக்கிட்டு அவன் தினமும் கண்டிப்பா நிம்மதியா தூங்க மாட்டான்.. நீ சொன்னத பத்தி நான் யோசிக்கிறேன். நான் சொன்னத பத்தி நீ யோசி” என்றாள்.

லலிதா கூறியது அனைத்தையும் கேட்டு அமைதியாக அமர்ந்திருந்தவளை பார்த்து “என் தம்பி தப்பு பண்ணினான் தான். ஆனாலும் நல்லவன். உனக்காகவும் குழந்தைக்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்வான். அங்க பாரு” என்று அவள் கண்காட்ட அவள் கண்ட திசையில் தன் பார்வையை பதித்த ராதாவின் இதழ்களில் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

கோகுல் எப்பொழுதுமே சூடான பொருளில் கை வைக்கவே மாட்டான். சாப்பாடு மட்டுமல்ல காபிகூட சூடு தணிந்த பின்தான் அருந்துவான். ஆனால் இன்று இரண்டு கரங்களிலும் சூடான பொங்கலை ஏந்திக் கொண்டு வாயால் கைகளில் ஊதியபடி வந்து கொண்டிருந்தான். அதை பார்த்த ராதா சிரிக்கவும் “யாருக்காகவும் ஒரு குண்டூசி கூட வாங்கிட்டு வந்து தரமாட்டான். இன்னைக்கு பாத்தியா?” என லலிதாவும் சிரித்தபடி சொன்னாள்.

தொடரும்…

Advertisement