Advertisement

காதல் 12

எது நம்மிடம் இருக்கிறதோ
அதை பற்றி நாம் அதிகம்
சிந்திப்பதும் இல்லை…
ஏற்றுக்கொள்வதும் இல்லை…
எது நம்மிடம் இல்லையோ
அதை பற்றி சிந்தித்தே நம்
வாழ்க்கையை வீணாக்குகிறோம்.

“யோசிச்சு பாரும்மா.. உன் விருப்பு வெறுப்ப தாண்டி எது சரின்னு யோசி” என்றுவிட்டு சென்றார் கண்ணன்.

ராதாவுக்கு என்ன செய்வதென்று புரியாமல் கண்ணன் சென்ற திசையை பார்த்தபடி நின்றாள்.

சுகந்தி தன் வீட்டைவிட்டு கிளம்பும் போது தன் மருமகனிடம் கண்ணனை பற்றியும் கோகுலை பற்றியும் விசாரிக்கக் கூறியிருந்தார். அதைப்பற்றி கேட்கத்தான் சுரேஷிற்கு அழைத்தார்.

“ஹலோ… ஊருக்கு போய் சேந்துட்டீங்களா? ராதா எப்புடித்த இருக்கா?” என கேட்க…

“ராதா நல்லா இருக்கா. நான் சொன்ன வேல என்னாச்சு மாப்ள” என்றார் சுகந்தி.

“நல்லா விசாரிச்சுட்டேன் அத்தை.. நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவர்கிட்டயே விசாரிச்சுட்டேன். அவர் சொன்னதெல்லாம் உண்மைதான். இப்ப அந்த பையன் திருந்தி அவங்க கம்பெனிய டேக்ஓவர் பண்ணி நல்லபடியா நடத்துறார்” எனக் கூற…

“நல்லா விசாரிச்சீங்களா? இன்னொரு தப்பு நடக்கக் கூடாது” என கண்டிப்புடன் சுகந்தி சொல்லவும்

“நடக்காது அத்த. நல்லா விசாரிச்சுட்டேன். என்ன நீங்க நம்பலாம்”

“சரி மாப்ள. ராதாவும் நல்லபடியாதான் சொன்னா. அடுத்து நடக்க வேண்டியத பாக்கலாம்” என்றவர் அழைப்பைத் துண்டித்துவிட்டு ராதாவிடம் வந்தவர் “என்னம்மா… கல்யாணத்த எப்போ வச்சுக்கலாம்?” எனக் கேட்டார்.

அவரது கேள்வியில் திகைத்தவள் “அம்மா…” என்றாள்.

“வா” என அழைத்துச் சென்றவர் செல்வத்திடம் “அந்த பையனுக்கே கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு நெனைக்கிறேன்” என்றார்.

“நல்லா விசாரிச்சு தானே முடிவு பண்ணியிருக்க?”

“ஆமாங்க.. மாப்பிளை கிட்ட சொல்லி நல்லா விசாரிச்சுட்டேன்”

“அப்ப சரிம்மா. உன் இஷ்டப்படி செய்” என செல்வம் அனுமதி அளித்துவிட கண்ணனை அழைத்த சுகந்தி “இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கண்ணா” என்றார்.

கண்ணனுக்கு கேட்கவும் வேண்டுமா…? சுகந்தி கூறியதை கேட்டதும் மகிழ்ச்சியில் “சரிம்மா.. நான் போய் எல்லா ஏற்பாட்டையும் பாக்க சொல்றேன்” என்றவர் சென்றுவிட

ராதாவிடம் திரும்பியவர் “உன் விருப்பு வெறுப்ப எல்லாத்தையும் விட்டுட்டு பாரும்மா. எதார்த்தம் இதுதான்” என்றுவிட்டு சுகந்தி செல்ல…

செல்வம் வந்து தன் மகளருகில் அமர “என்னால ஏத்துக்க முடியலப்பா. நான் தப்பு பண்றேனாப்பா…? அன்னைக்கே நான் போராடி அவர கல்யாணம் பண்ணியிருக்கனுமாப்பா?” என அவர் தோளில் சாய்ந்தபடி கேட்டாள்.

“தப்பும்மா.. அன்னைக்கு நீ அவர கல்யாணம் பண்ணியிருந்தா அவர் திருந்த வாய்ப்பு கிடச்சுருக்காது. ஆனா அதே சமயம் இன்னைக்கு இருக்குற கோகுல நீ கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்றதும் தப்புதாம்மா” எனவும்

“எல்லாரும் இதயே சொல்றீங்க என்னோட இடத்துல இருந்து யாருமே யோசிக்கலப்பா” என்றாள் ராதா வருத்தத்துடன்.

“தப்பு செஞ்ச எல்லாரும் அத திருத்திக்க முன்வர்றதில்லம்மா.. ஆனா கோகுல் முன்வந்துருக்காரு. அத புரிஞ்சுக்கிட்டு நல்ல முடிவா எடும்மா” என்றவர் அவளுக்கு தனிமையை கொடுத்து செல்ல ராதா அமைதியாக அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தாள்.

“கோகுல் நீ போய் ராதாகிட்ட பேசு” என கண்ணன் கூற

“அப்பா அவளுக்கு கடவுள் நாக்குக்கு பதிலா தேள் கொடுக்க வச்சு படச்சுருக்காரு. என்ன பாத்தாலே எரிஞ்சு எரிஞ்சு விழறாப்பா”

“அதோட விட்டாளே.. மரியாதையா போய் பேசு” என அதட்டவும் கோகுல் ராதாவை தேடி சென்றான்.

“ராதா” திரும்பி பார்த்தவள் மீண்டும் திரும்பிக்கொள்ள “ராதா… ஆபரேசனுக்கு ஏற்பாடு பண்ணியாச்சு.. கமலுக்கு சரியாகிடும்ன்னு டாக்டர் சொன்னார்” என்றவன் சிறிது நேரம் அமைதியாக இருக்க ராதா பதிலேதும் கூறாததால் “ராதா… ப்ளீஸ்.. ஐம் ரியலி சாரி” என தயங்கியபடி கூற… ஆத்திரத்துடன் எழுந்தவள் “எதுக்கு? நீ வரலைன்னா உன் பையன் செத்துருவான்னு சொன்னதுக்கா? நீ ஊரான் பிள்ளைய வச்சு மிரட்டுனதுக்கு தான் இன்னைக்கு உன் பிள்ளை இப்புடி ஹாஸ்பிடல்ல படுத்துருக்கான்” என வார்த்தைகளை வாரி இறைக்க கோகுலின் முகம் வாடிவிட்டது.

அவன் முகம் வாடியதை கண்டவள் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு “இனி இதபத்தி பேச வேண்டாம். ப்ளீஸ் இப்போ நான் கொஞ்சம் தனியா இருக்கனும் நீங்க கொஞ்சம் போறீங்களா?” என்றவள் அமர்ந்துவிட கோகுல் சென்றுவிட்டான்.

இரண்டு வருடங்களுக்கு முன்…

டாக்டர் இருபத்தைந்து லட்சம் செலவாகும் எனக் கூறவும் “சரி நீங்க ஆபரேசனுக்கு ரெடி பண்ணுங்க..” என செல்வம் கூறினார்.

“நீங்க கொஞ்சம் என்னோட அறைக்கு வாங்க” என டாக்டர் ராதாவை அழைக்க ராதாவும் சென்றாள். ஆனால் அங்கே அமர்ந்திருந்தது கோகுல்.

அவனது முகத்தை மறக்காமல் இருந்தாள் ராதா இமைக்காமல் அவன் முகத்தையே பார்த்திருந்தாள் அவள். அவளை பார்த்து சிரித்தவன் “ஹேய் டார்லிங்… உன் பையனுக்கு ஆபரேசனா?” என நக்கலாக கேட்க அதில் தெளிந்த ராதா எதுவுமே பேசாமல் கோகுலையே கூர்மையாக பார்த்தபடி இருந்தாள்.

அதையெல்லாம் அவன் கண்டுகொள்ளவே இல்லை “வா வா.. வந்து இப்படி உட்காரு” என்று சாவதானமாக கூற ராதாவோ அசையாமல் நின்றாள். அதைக் கண்டு புன்னகைத்தவன் “ஓ.கே டார்லிங். நான் சுத்தி வளச்சு பேசமாட்டேன். நீ நாளைக்கு என் வீட்டுக்கு பன்னென்டு மணிக்குள்ள வரலைன்னா உன் பையனுக்கு நடக்குற ஆபரேசன் ஃபெய்லியர் ஆகி உன் பையன் இறந்துடுவான்” என கூறியவன் “போலீஸ் உன் அம்மா அப்பா யார்கிட்ட சொன்னாலும் உன் பையனுக்கு நடக்குற ஆபரேசன் ஃபெய்லியர் ஆகிரும். அதுமட்டுமில்ல.. இந்த ஹாஸ்பிட்டல விட்டு உன் பையன ஷிப்ட் பண்ணனும்ன்னு நீ நெனச்சேன்னா கூட உன் பையன இல்ல அவன் பிணத்தைதான் கொண்டுட்டு போகனும். ஒருவேளை… நீ செத்துப் போகலாம்ன்னு யோசிச்சேன்னு வையேன்” என நிறுத்தியவன் “அப்பக்கூட உன் பையன் உன்னவிட்டு இருக்க முடியாம உனக்கு துணையா உன் பின்னாடியே வந்துடுவான்” என்று இறக்கமின்றி வார்த்தைகளால் அவளை வதைத்தவன் தன் சட்டைப் பையிலிருந்து அட்டையை எடுத்தவன் “இது என் விசிட்டிங் கார்டு. என் வீட்டுக்கு… நாளைக்கு பன்னென்டு மணிக்கு… பாய் டார்லிங்” என்றவன் சென்றுவிட எல்லா திசையும் மூடப்பட்டுவிட அன்று முழுவதும் யாரிடமும் தன் வேதனையை வெளிக்காட்டவும் முடியாமல் தன்னையே நொந்து கொண்டவள் வேறு வழியில்லாமல் அவன் அனுப்பிய காரில் ஏறி சென்றுவிட்டாள்.

கண்ணன் ராதாவை கூட்டிச்சென்று கோயமுத்தூரில் விட்டுவிட்டு சென்றபின் ஒருவாரம் கழித்து ராதா அவள் தோழி செல்விக்கு அழைத்து பேசினாள்.

“ஹலோ”

“ராதா பேசுறேன்”

“ஏய்… எங்கடி போன?” பதற்றத்துடன் கேட்டாள் செல்வி.

“அதைவிடு. மகி எப்புடி இருக்கான்?”

“அவன் நல்லாருக்கான். ஏதோ ரிப்போர்ட் மாறிருச்சாம். அவனுக்கு சாதாரண மயக்கம் தான்னு அவன வீட்டுக்கு அனுப்பிட்டாங்க” என செல்வி சொல்லவும் கோகுல் கூறிய சர்ப்ரைஸ் புரிய… என்ன செய்ய முடியும்? அமைதிதான் ஆயுதமானது.

அவள் மூலம்தான் ராதாவை அவளது வீட்டினர் தேடுவதும் தெரியவந்தது. அதன்பிறகு ராதா சுகந்திக்கு கால் செய்து தான் காதலித்தவனுடன் ஓடிவந்து விட்டதாகவும் தன்னை தேடி நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் சொல்ல தன் கௌரவத்தை பாழாக்கிய மகளை செல்வமும் சுகந்தியும் தேவையில்லை என முடிவெடுத்து விட்டனர். அதன்பின் ராதாவை தேடி வந்தவர்களிடமும் அவள் இறந்துவிட்டதாக கூறி திருப்பி அனுப்பினார்கள்.

இரண்டு நாட்களில் திருமணம் என்றவர்கள் கோவிலில் பேச திருமணப்பட்டு நகை என அனைவரும் பிசியாகிவிட இதற்கிடையில் கண்ணன் தன் குடும்பத்தையும் வரவழைத்தார். அனைவரும் அவரவர் பங்கிற்கு ஏதோ ஒன்று செய்ய எதிலும் கலந்து கொள்ளாதவர்கள் லலிதாவும் ராதாவும்தான். ராதா எதிலும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் மறுப்பேதும் சொல்லாதவரை சந்தோசம் என விட்டுவிட்டனர். ஆனால் லலிதாவை எவ்வளவு முயற்சி செய்தும் அவள் எதிலும் கலக்காமல் இருக்கவே அவளை பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் சிவகாமி.

சிவகாமியின் அமைதியும் சுகந்தியின் ஆளுமையும் ஒருவருக்கொருவர் பிடித்துப்போய்விட இருவரும் நெருங்கி பழகினர்.

அனைவரும் ராதாவிற்கு எடுத்துச் சொல்ல நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் எதிர்க்காமல் இருந்துவிட்டாள் அவள்.

மறுநாள் ராதா மருத்துவமனை குளியலறையில் குளித்துக் கொண்டிருக்க கமலுக்கு துணையாக அமர்ந்திருந்த லலிதா அறையில் இருந்த தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நீ நடக்கும் புல்வெளியில்
பனித்துளிகள் துடைத்து வைப்பேன்
நீ பேசும் தாய்மொழியில்
வல்லினங்கள் களைந்து வைப்பேன்

நீ கடந்த தெருவில் உந்தன் வாசம் தேடுவேன்
நீ குளித்த நதியில் மூழ்கி மோட்சம் காணுவேன்
உன் ஜன்னல் ஓரம் நான் காற்றாக வருவேன்
நாள் ஒன்று வீதம் நான் பூக்கொண்டு தருவேன்

கண்கள் தீண்டும் கனவைப் போலே
நீ அறியாமல் நான் தொடுவேன்
நீ என் காதலியானால்…

ராதா குளியலறையிலிருந்து வெளியில் வரும்நேரம் பாடல் ஓடிக்கொண்டிருக்க அப்படியே தரையில் தொய்ந்து அமர்ந்துவிட்டாள். சத்தம் கேட்டு திரும்பிபார்த்த லலிதா “ராதா..” என்றபடி எழுந்துவர அப்போதுதான் உள்ளே வந்த கோகுலும் ராதாவை நெருங்கி “என்னாச்சு..? ராதா.. ராதா..” என்றழைத்தான்.

அவர்கள் அழைப்பது காதில் விழுவதற்கு அவள் பூலோகத்தில் இருந்தால்தானே. மூடிய கண்களில் இருந்து நீர்வழிய அவள் எண்ணங்கள் எங்கோ நிலைத்திருந்தது. “இந்த கண்ணனுக்காகவே பிறந்த ராதாடி நீ..” நெற்றியில் முட்டி காதல் கண்களில் வழிய சொன்னான். “இது வேண்டாம். இதை வைச்சுக்கோ. இனி போட்டோல கூட நாம தனியா இருக்கக்கூடாது” என ராதாவின் கையிலிருந்த அவனது புகைப்படத்தை வாங்கிக்கொண்டு அவன் கைகளில் இருந்ததை கொடுத்தான். “எனக்காக ஒரு கவிதை சொல்லேன்” என அவன் கேட்க “எனக்காக ஒரு பாட்டு பாடுங்களேன்” என அவள் கேட்டாள். “நீ என் காதலியானால்…” கண்களோடு கண்கள் கலந்து பாடிய பாடல்..

“ராதா..” என தன் தோள்களை உலுக்க அதில் தன்னுணர்வு பெற்று எதிரில் நின்றவனை பார்த்தவளுக்கு ஒரு கணம் ஒன்றும் புரிபடவில்லை. நிழலுருவாக இருந்த அவளது காதலன் மறைந்துபோக இன்று வருங்கால கணவன் என கைகாட்டப்பட்டவனை நிஜமாக காண அவளுக்கு உள்ளமெல்லாம் கொதித்தது. இழந்தாச்சு.. அனைத்தையும் இழந்துவிட்டாள். ‘நான் ஏன் இவனை ஏன் மறுபடி பார்த்தேன்?’ பல வருடங்களாக தனக்குள் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விதான். ஆனால் இன்று அவளை கட்டுப்படுத்த இயலவில்லை.

“ஆர் யூ ஓகே” என்றபடி தண்ணீர் பாட்டிலை நீட்டியவனை ஆத்திரத்துடன் முறைத்துப்பார்த்தவள் அதனை தட்டிவிட்டுவிட்டு “ஏன்டா என் வாழ்க்கையில மறுபடியும் வந்த? ஏன் என் நிம்மதிய கெடுத்த” என்று கத்த “ராதா..” என அழுத்தமாக அழைத்தபடி உள்ளே வந்தார் சுகந்தி. அவரின் பின்னே சிவகாமி கண்ணன் செல்வம் என அனைவரும் வர கோகுலை அழுத்தமாக பார்த்தவள் அமைதியாக வெளியேறிவிட்டாள். எப்படியும் அங்கேயே நின்றிருந்தால் வெடித்துவிடுவோம் என்பது அவளுக்கு திண்ணமே. அதனால் தான் அவள் அமைதியாக வெளியேறி சென்றாள்.

இரண்டு நாட்களுக்கு பின்…

கோவை அரங்கநாதர் பெருமாள் கோவிலில் திருமணம் நல்லபடியாக நடந்தேறியது. ஆசிர்வாதம் வாங்க கண்ணனிடம் சென்றபோது “மருமகளே இப்போவாவது என்ன மாமான்னு கூப்பிடுவியா” என நக்கலாக கேட்க நிமிர்ந்து பார்த்தவள் அவர் வார்த்தையில் இருந்த நக்கல் கண்களில் இல்லாமல் போய் எதிர்பார்ப்பு மட்டுமே இருக்க “என்னால இப்போ எதுவும் சொல்ல முடியல.. கொஞ்சநாள் ஆனால் சரியாகிடும்ன்னு நினைக்கிறேன். ப்ளீஸ்” எனவும் இயலாமையுடன் ராதாவை பார்த்தாலும் நிறைவான மனதுடன் ஆசிர்வாதம் செய்தார் கண்ணன்.

அன்றும் கமலுடன் துணை இருப்பதாக கூறி லலிதா மருத்துவமனையில் இருந்துவிட்டாள். அன்று ஒருநாள் மட்டும் ஹோட்டலில் தங்கும்படி அனைவரும் எவ்வளவோ வற்புறுத்தியும் முடியாது என மறுத்து மருத்துவமனை சென்றுவிட்டாள் ராதா.

தொடரும்…

Advertisement